Published:Updated:

வினு விமல் வித்யா: எவரெஸ்ட்டும் இந்தப் பெண்களுக்கு எட்டிவிடும் தூரம்தான்!

 லக்பா,  அன்னா கெபாலே,  ஷிரீன்
பிரீமியம் ஸ்டோரி
லக்பா, அன்னா கெபாலே, ஷிரீன்

- சஹானா

வினு விமல் வித்யா: எவரெஸ்ட்டும் இந்தப் பெண்களுக்கு எட்டிவிடும் தூரம்தான்!

- சஹானா

Published:Updated:
 லக்பா,  அன்னா கெபாலே,  ஷிரீன்
பிரீமியம் ஸ்டோரி
லக்பா, அன்னா கெபாலே, ஷிரீன்

மிதமான மழைக்கு நடுவே வித்யா வீட்டுக்கு வினுவும் விமலும் வந்தனர். அவர்களை வரவேற்று மேங்கோ புட்டிங் கொடுத்தார் வித்யா.

“வாவ்... பார்க்கவே ரொம்ப அழகாயிருக்கு. டேஸ்ட்டும் பிரமா தமாயிருக்கு. புதுசு புதுசா செஞ்சு பார்க்கறதுல உங்களை அடிச்சுக்க ஆள் இல்ல வித்யாக்கா” என்றாள் விமல்.

“வேர்ல்டு பெஸ்ட் நர்ஸுன்னு அவார்டு எல்லாம் வாங்கறாங்க. நான், புட்டிங் செஞ்சதைப் பெரிசா பேசறியே...”

“யார் வாங்கினாங்க அவார்டு?” ஆர்வமாகக் கேட்டாள் வினு.

“கென்யாவைச் சேர்ந்த அன்னா கெபாலே டூபாவுக்கு இந்த வருஷத்துக்கான ‘வேர்ல்டு பெஸ்ட் நர்ஸ்’ அவார்டு கொடுத் திருக்காங்க. 24,000 செவிலியர்கள் லேருந்து அன்னா கெபாலே செலக்ட் ஆயிருக்காங்க.”

“அப்படி அவங்க என்ன பண்ணாங்க வித்யாக்கா?”

“ தொற்றுநோயியல் துறையில முதுகலைப் படிப்பை முடிச்சிருக் காங்க. ரெஃபரல் ஹாஸ்பிடல்ல நர்ஸா வேலை செய்யறாங்க. அவங்க கிராமத்துல ஒரு ஸ்கூல் நடத்தறாங்க. அதுல மார்னிங் ஷிஃப்ட்ல குழந்தைகளும் மதிய ஷிஃப்ட்ல பெரியவங்களும் படிக்கிறாங்க. தன்னோட ‘கெபாலே டூபா ஃபவுண்டேஷன்’ மூலமா பெண் உறுப்புச் சிதைப்பு, குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக் கைகளை எடுத்துக்கிட்டிருக் காங்க. அன்னா கெபாலேவுக்கும் 12 வயசுல பெண் உறுப்புச் சிதைப்பு சடங்கு செய்யப் பட்டிருக்கு. 14 வயசுல கல்யாணம் பண்ணப் போறப்ப தப்பிச்சு ஓடிட்டாங்க. அப்புறம் படிச்சு, இந்த அளவுக்குப் பெரிய ஆளா யிட்டாங்க. இந்தப் பணத்தை எல்லாம் கென்யாவுல இருக்கற பள்ளிகளுக்குக் கொடுக்கப் போறதா சொல்லியிருக்காங்க!”- விளக்கமாகச் சொன்னார் வித்யா.

“ரியலி கிரேட்... ஷிரீன் அபு அக்லேயை இப்படி அநியாயமா கொன்னுட்டாங்களே...”

“அல் ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீனைத்தானே சொல்றே விமல்?”

“ஆமா, வினு. பாலஸ்தீனிய அமெரிக்கரான இவங்க 25 வருஷங்களா பத்திரிகையாளரா இருந்தாங்க. இஸ்ரேலால ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியில பாதுகாப்பு உடையில செய்தி சேகரிக்கப் போனாங்க. அவங்க டிரஸ்லகூட அடையாளம் தெரியணும்னு ‘பிரஸ்’னு எழுதியிருந்துச்சு. ஆனாலும், இஸ்ரேலியப் படை அவங்க தலை யில சுட்டதுல 51 வயசு ஷிரீன் உயிர் போயிருச்சு” என்றாள் விமல்.

“அடக் கொடுமையே... இவங்களைத் தெரியாம சுட்டுட்டாங்களா?”

“எனக்கு அப்படித் தோணல வித்யாக்கா. இவங்க தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவத்தோட மோசமான செயல்களை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அதனால திட்டமிட்டுக் கொல்றதுக்கான சாத்தியம் அதிகம் இருக்கு. கடந்த 22 வருஷங்கள்ல ஷிரீன் உட்பட 45 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்னுருக்கு. ஷிரீன் ஜெருசலேம்ல பிறந்து, ஜோர்டான்ல படிச்சு, அமெரிக்காவுல வசிச்சவங்க. மக்களோட நெருக்கமா இருக்க வும் மக்களின் குரலை உரக்கச் சொல்லவும்தான் பத்திரிகையாளரா ஆனவங்க. ஷிரீனின் மறைவு, பாலஸ்தீனியர்களை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கிருச்சு. இந்தத் தாக்குதலுக் கான காரணத்தைக்கூட இஸ்ரேலால சொல்ல முடியல.”

 லக்பா,  அன்னா கெபாலே,  ஷிரீன்
லக்பா, அன்னா கெபாலே, ஷிரீன்

“கொடுமை... இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னை எப்பதான் சரியாகுமோ?”- கவலை யாகச் சொன்ன வித்யா, லெமன் டீ கொண்டு வந்து கொடுத்தார்.

“வித்யாக்கா, நாம எவரெஸ்ட்டுல ஒரு தடவை ஏறலாமா?”

“ஏம்மா வினு, எவரெஸ்ட் என்ன உங்க வீட்டு மாடியா... ஏறி இறங்கறதுக்கு?”

“உங்களைவிட வயசு அதிகம். 48 வயசுல லக்பா, எவரெஸ்ட்டுல பத்தாவது தடவையா ஏறி, சாதனை படைச்சிருக்காங்க!”

“பத்து தடவையா, அம்மாடி!”

“ஆமாக்கா.... லக்பா, திபெத் மலைப்பகுதியில வாழுறவங்க. இவங்க பள்ளிக்கூடம் போன தில்ல. வீட்டுவேலை, விவசாய வேலைகளைச் செஞ்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்லயிருந்து பார்த்தாலே எவரெஸ்ட் தெரியுமாம். அது இவங்களைச் சின்ன வயசுலயிருந்தே ஈர்த்துக்கிட்டு இருந்துச்சாம். மலையேற்ற வீரர்களுக்கு உதவியா, சுமையைத் தூக்கிட்டுப் போற வேலையைச் செய்வாங்க ஷெர்பா இன ஆண்கள். அவங்களைப் பார்த்து, தானும் அந்த வேலையைச் செய்ய நினைச்சாங்க லக்பா. ஆனா, ‘அந்த வேலையைச் செஞ்சா மாப்பிள்ளை கிடைக்க மாட்டான், உயிருக்கு உத்தரவாதமில்லாத வேலை’ன்னு வீட்ல ஏத்துக்கல. ஆனாலும், லக்பா தன்னோட எண்ணத்துல உறுதியாயிருந்து, மலையேற ஆரம்பிச்சிட்டாங்க. மூணே வருஷத்துல மூணு தடவை எவரெஸ்ட்ல ஏறின முதல் பொண் ணுங்கிற சாதனையைப் படைச்சாங்க. பிறகு அமெரிக்க மலையேற்ற வீரரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு அமெரிக்கா போயிட்டாங்க. சில வருஷங்கள்ல விவாக ரத்தாகி, வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் சரி வராம, இப்போ தனியா குழந்தை களை வளர்த்துட்டிருக்காங்க” - மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள் வினு.

“அமெரிக்காவுல இருந்துகிட்டு அடுத்தடுத்து எவரெஸ்ட் ஏறிட்டு இருக்காங்களா...” என்றாள் விமல்.

“ஆமா, ‘நான் வீட்ல அடைஞ்சுகிடக்க வேண்டிய பெண் அல்ல. சாதிக்கும் பெண். இந்தச் சாதனைகளால நான் ஒண்ணும் பெரிசா சம்பாதிச்சிடல. செலவுதான் அதிகமா யிருக்கு. படிப்பும் வசதியும் இல்லைன்னாலும் சாதனையாளர்கள் பட்டியல்ல என் பேரும் இருக்குங்கிறது எனக்கு நிறைவைக் கொடுத் திருக்கு’ன்னு சொல்றாங்க லக்பா.”

“சூப்பர் லக்பா! இதைக்கேட்டதும், எனக்கும் எவரெஸ்ட் ஏறணும்கிற ஆர்வம் எட்டிப் பாக்குது. குறைஞ்சபட்சம் நம்ம ஊரு மலை களுக்கு ஒரு ட்ரெக்கிங்காவது போகலாமான்னு தோணுது” என்றாள் விமல்.

“வித்யாக்கா, அடுத்த மீட்ல நல்ல ஷவர்மா கடைக்குப் போய்ச் சாப்பிடறோம்!”

“ஷவர்மாவா! எல்லோரும் அலறுறாங்களே விமல்...?”

“கெட்டுப்போன பழைய உணவை யூஸ் பண்றதால வர்ற பிரச்னைகளுக்கு ஷவர்மாவோ பிரியாணியோ என்ன செய்யும்? சைவ உணவு கெட்டுப்போனா தூக்கிப் போட்டுட்டு பேசாம இருக்கோம். அசைவம்னா மட்டும் ஷவர்மா, பிரியாணிமேல பழியைப் போட றோம். இது ரொம்ப மோசமான போக்கு.”

“நீ சொல்றது சரிதான் விமல். உணவை விற்கிறவங்க உணவு விஷயத்துல அலட்சியம் காட்டினா உயிர்போற அளவுக்குக் கொண்டு போயிரும். அந்தப் பழியை தேவையில்லாம ஷவர்மாவும் பிரியாணியும் சுமக்கணும். நாம ஒரு நல்ல கடைக்குப் போறோம்; சாப்பிட றோம்!”

“வித்யாக்கா. ஏதாவது படம் பார்த்தீங்களா?”

“இது இயக்குநர் மிருணாள் சென்னோட நூற்றாண்டு. ‘ஏக்தின் பிரதிதின்’ படத்தை மறுபடியும் பார்த்தேன். 43 வருஷங்களுக்குப் பிறகும் அந்தப் படம் அப்படியே பொருந்துறது ஆச்சர்யமா இருக்கு.’’

“அப்படி என்ன கதை வித்யாக்கா?”

“ஏழு பேர் கொண்ட ஏழைக் குடும்பம். பல குடித்தனங்கள் இருக்கும் இடத்துல குடியிருக்கு. அதில சின்னுங்கிற முதல் பெண் மட்டுமே வேலைக்குப் போய், குடும்பத்தைக் காப்பாத்து றாங்க. ஒருநாள் வழக்கமான நேரத்துக்கு வீடு திரும்பல. நேரம் ஆக ஆக பதற்றம் அதிகமாகுது. ஆபீஸ்லயும் இல்ல. போலீஸ்ல புகார் கொடுக்கறாங்க. மார்ச்சுவரியில ஒரு பெண் இருக்காங்கன்னு வந்து பார்க்கச் சொல்றாங்க. நல்லவேளை அது சின்னு இல்ல. அதுக்கப்புறம் போலீஸ் சின்னுவோட வீட்டுக்கு வர்றாங்க. ஒரு பெண் வயித்துல குழந்தையோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால சின்னுவோட அடையாளத்தைக் கேட்கறாங்க. கடைசில அதுவும் சின்னு இல்லைன்னு குடும்பம் நிம்மதியடையுது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு விஷயம் தெரிஞ்சு, மோசமா பேசறாங்க. ராத்திரி முழுக்க அழுது, காலையில தூங்கும்போது, சின்னு வீட்டுக்கு வர்றாங்க. குடும்பமே அவங்கமேல கோபமா இருந்தாலும், காரணம் கேட்டு சின்னு வீட்டை விட்டுப் போயிட்டா என்ன பண்றதுன்னு அமைதியா இருக்கு. எல்லாரும் சின்னுவோட நடத்தை பத்தி பேசறாங்க. குடும்பம் சண்டைக் குப் போகுது. ஹவுஸ் ஓனர் வீட்டைக் காலி செய்யச் சொல்றார். காலைல வழக்கம்போல சின்னுவோட அம்மா சமையல் செய்ய ஆரம்பிக்கிறாங்க.”

‘`சின்னு எங்கே போனாங்க வினு?”

“நீங்களே இப்படிக் கேட்கறீங்களே வித்யாக்கா. மிருணாள் சென்கிட்ட இந்தக் கேள்வியைப் பல வருஷங்களா பலரும் கேட்டுட்டுதான் இருந்தாங்க. சத்யஜித் ரேகூட கேட்டிருக்காராம். அதுக்கு மிருணாள் சென், ‘சின்னு எங்கே போயிருப்பாங்கிறது எனக்கு முக்கியமா படல. ஒரு பொண்ணு ராத்திரி வீட்டுக்கு வரலைன்னா அந்த வீட்டுலயும் அக்கம்பக்கத்துலயும் என்ன நடக்கும்னு காட்ட நினைச்சேன். அவ்வளவுதான். பெண் குழந்தைகள், இளம் பெண்கள் பாதுகாப்புக்காக சரியான சட்டங்களைக் கொண்டு வந்தா அதுவே எனக்குப் போதுமானது. சின்னு எங்கே போனான்னு எனக்கே தெரியாது’னு பதில் சொல்லிருக்கார். கிரேட் டைரக்டர்!

சப் டைட்டில் இல்ல. ஆனா, கலைக்கு மொழி அவசியமா என்ன? நீங்களும் பாருங்க வித்யாக்கா. இப்ப நாங்க கிளம்பறோம்.”

வினுவும் விமலும் கிளம்ப, ஏக்தின் பிரதிதின் குறித்துத் தேட ஆரம்பித்தார் வித்யா.

- அரட்டை அடிப்போம்...

*****

வினு தரும் வித்தியாசமான தகவல்

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் இரண்டு அதிசயங்கள், பெண்களால் உருவாக்கப்பட்டவை. பாபிலோன் நகரில் அமைக்கப்பட்ட தொங்கும் தோட்டம், ராணி செமிராமிஸா என்பவரால் அமைக்கப்பட்டது. பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றான ஹாலிகார்னாசஸ் நகரில் மசோலியம் உருவாக்கப்பட்டது. இதை அமைத்தவர் கரியா ராணி ஆர்ட்டெமிசியா.

முதலீட்டு முடிவுகளில் பெண்களின் பங்கு!

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

வருமான வரி, அது சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் பற்றிய முதலீட்டு முடிவுகளில் நம் பெண்களின் பங்கு எந்த அளவு இருக்கிறது? குறிப்பாக இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் அதிகம் சேமிப்பது நகைச்சீட்டில்தான். விவரம் தெரிந்த பெண்கள். ஆர்.டி, எல்.ஐ.சி, மியூச்சுவல் ஃபண்டுகளிலும்,வருமானம் குறைந்த பெண்கள் ஏலச்சீட்டுகளிலும் சேமிக்கிறார்கள். என் மகள் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்தாள். குழந்தைகளுக்காக அவள் வேலையை விட்டதும், என்னுடைய வருமானத்தில் (விடோ பென்ஷன்) என் மகளுக்கு M.P.S. (Monthly Pension Schme) என்னும் திட்டத்தில் ஒரு தொகையைச் செலுத்திவருகிறேன். குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின், இதில் குறிப்பிட்ட தொகை பென்ஷனாக ஆயுள் முழுவதும் கிடைக்கும். அரசு வேலை பார்த்தால்தான் பென்ஷனா கிடைக்குமா... இப்படியும் வழி இருக்கிறது.

- ஜானகி பரந்தாமன், கோவை-36

வேலைக்குப் போகும் பெண்ணுக்கு ஓரளவுக்கு சேமிப்பு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கும். பெரும் பாலான இல்லத்தரசிகளின் உலகம் கணவரையே நம்பிதான் இருக்கிறது. இல்லத்தரசியான நான், வீட்டில் இருந்தபடியே டியூஷன் எடுக்கிறேன். எனக்கு சேமிப்பு பற்றி எதுவும் தெரியாது. கணவர் கைகாட்டும் இடத்தில் கையெழுத்து போடுவேன். அவர் சேமிப்பு குறித்து எழுதிவைத்திருக்கும் தகவல்களை அவ்வப்போது பார்த்துக் கொள்வேன். முதலீடு பற்றிய அறிவு பெண் களுக்கு குறைவாகவே உள்ளது.

- ப்ரீதா ரெங்கசுவாமி, சென்னை-4

ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வங்கி சேமிப்புக்கு 15 H படிவம் தருவதுதான் என் முதல் அனுபவ பாடம். என்னைப் போன்ற சீனியர் சிட்டிசன்களுக்கு கையாள்வதற்கு எளிதாக இருப்பவை என்.எஸ்.சி போன்ற அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்தான். அதை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் ஒரு பெண் ஏஜென்ட் தான். ஆண்கள் கொடுக்கும் வருமானத்தைச் சேமித்து அதற்கான வருமான வரியையும் நிர்வகிப்பதில் பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.

- என்.பாக்கியலட்சுமி, மதுரை-9

*****

இந்த இதழ் கேள்வி

இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை சிறப்புப் பயிற்சிக்கு (நேரடி / ஆன்லைன்) அனுப்பினீர்களா? என்ன பயிற்சி? ஏன்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 31.5.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism