Published:Updated:

வினு விமல் வித்யா: டைவர்ஸுக்கு காரணம் நூடுல்ஸ் மட்டும்தானா?

 பல்ஜீத் கவுர்,  எலிசபெத்,  ஆயுஷி
பிரீமியம் ஸ்டோரி
பல்ஜீத் கவுர், எலிசபெத், ஆயுஷி

- சஹானா

வினு விமல் வித்யா: டைவர்ஸுக்கு காரணம் நூடுல்ஸ் மட்டும்தானா?

- சஹானா

Published:Updated:
 பல்ஜீத் கவுர்,  எலிசபெத்,  ஆயுஷி
பிரீமியம் ஸ்டோரி
பல்ஜீத் கவுர், எலிசபெத், ஆயுஷி

சென்னை மெட்ரோவில் பயணம் செய்தபடியே வினு, விமல், வித்யா மூவரும் தங்கள் அரட்டையைத் தொடர்ந்தனர்.

‘‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சும் வெயில் கொளுத்துதே... ஸ்டேஷன் வர்றதுக்குள்ளே மயக்கமே வந்துடும் போலிருந்தது” என்றார் வித்யா.

“நீங்க சொல்றது சரிதான் வித்யாக்கா. அக்னி நட்சத்திரம்கறது ஜோதிட கணிப்பு. வெயில்ங்கறது சூரியனோட கணிப்பு. அதனால ஜூன் மாசத்தையும் நாம வெயிலோடதான் கழிக்கணும். இப்ப இந்த மெட்ரோதான் கொஞ்சம் ஆறுதலைத் தருது. அதனால இன்னிக்கு ஜில்லுனு ஒரு மலையேற்ற வீராங்கனை பத்திச் சொல்லப் போறேன்!”

“யார் வினு அது?”

‘‘இமாச்சலப் பிரதேசத்துல உள்ள பஞ்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவங்க பல்ஜீத் கவுர். சின்ன வயசுலேருந்தே அவங்க கிராமத்துக்குப் பக்கத்துல இருக்கிற குன்று மேல ஏரி இறங்கப் பிடிக்குமாம். ஏழாம் வகுப்புல இமயமலை மலையேற்றம் பத்தி படிச்ச உடனே, அவங் களுக்கு ஆர்வம் அதிகமாயிருச்சு. அவங்க அப்பா பஸ் டிரைவர். இப்போ ரிடையர்டு ஆயிட்டார். குடும்பமே விவசாயம் செஞ்சு தான் பிழைச்சிட்டிருக்காங்க. பல்ஜீத் அம்மா அதிகம் படிக்கலைனாலும் மகளோட ஆசைக்கு குறுக்கே நிக்காம, உறுதுணையா இருந்திருக்காங்க. மலையேற்றத்துக்கான பயிற்சி, ஆரோக்கியமான உணவுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. பல்ஜீத்தோட திறமையைப் பார்த்து நிறைய பேர் நிதியுதவி கொடுத்திருக்காங்க. 27 வயசுல எவரெஸ்ட், அன்னபூர்ணா, கன்ஜன் ஜங்கா, லோட்சேன்னு 8,000 மீட்டர் உயரத்துக்கு மேல இருக்கற நாலு மலைகள்லயும் ஒரு மாசத்துக்குள்ள ஏறிட் டாங்க. நாலு மலைச் சிகரங்கள்ல ஏறின ஒரே இந்தியப் பெண்ணுங்கிற சாதனையையும் படைச்சிட்டாங்க!”

“அடடா... கிராமமோ, நகரமோ முயற்சியும் கடின உழைப்பும் இருந்தா, சாதனை படைக்க லாம்னு பல்ஜீத் மூலம் தெரியுது.”

“ஆமா வித்யாக்கா, பல்ஜீத்தோட சாதனை யால இன்னும் பல பெண்கள் மலையேற்றத்துல ஆர்வம் காட்டுவாங்கன்னு இந்திய மலை யேற்ற அமைப்பு பாராட்டியிருக்கு.”

``ஆயுஷிக்கும் வாழ்த்து சொல்லணும் நாம...”

“அவங்க யாரு வித்யாக்கா?” ஆர்வமாகக் கேட்டாள் வினு.

“ஆயுஷிக்குப் பிறந்ததுலேருந்தே பார்வை இல்லை. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் படிப்புல படு சுட்டி. டெல்லியில முதுகலை படிச்சிட்டு, இப்போ ஹிஸ்ட்ரி டீச்சரா கவர்ன் மென்ட் ஸ்கூல்ல வேலை பார்த்துட்டிருக் காங்க. 2016-ம் வருஷம் யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதணும்னு ஆசை வந்திருக்கு. இவங் களுக்காக இவங்க அம்மா, தன்னோட வேலையை விட்டுட்டு மகளுக்கு உதவி பண் ணாங்க. அஞ்சு வருஷத்துல அஞ்சாவது தடவை 48-வது ரேங்க் வந்துட்டாங்க. டீச்சரா இருந்த ஆயுஷி, இனி ஐ.ஏ.எஸ்!”

“வாவ்... அட்டகாசம் ஆயுஷி...”

“ஆமா, இவங்க ஐ.ஏ.எஸ் ஆனதுல இவங்க பேரன்ட்ஸ், ஹஸ்பண்ட் மட்டுமில்லாம இவங்ககிட்ட படிக்கிற ஸ்டூடன்ட்ஸும் செம ஹேப்பி. இப்போ நாமளும் ஹேப்பி. பெண் கல்வி, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துல கவனம் செலுத்தப் போறதா சொல்லி யிருக்காங்க ஆயுஷி.”

 பல்ஜீத் கவுர்,  எலிசபெத்,  ஆயுஷி
பல்ஜீத் கவுர், எலிசபெத், ஆயுஷி

“செம்ம வித்யாக்கா! கீதாஞ்சலி ஸ்ரீக்கும் வாழ்த்தைச் சொல்லிடுவோம். இந்த வருஷத் துக்கான சர்வதேச புக்கர் பரிசு இவங்களுக்குக் கிடைச்சிருக்கு. கீதாஞ்சலி இந்தியில எழுதின நாவலுக்குத்தான் இந்தப் பரிசு. இந்திய மொழியில புக்கர் வென்ற முதல் எழுத்தாளர் கீதாஞ்சலி தான்...” - மகிழ்ச்சியாகச் சொன் னாள் விமல்.

“அப்படி என்ன கதை விமல்?”

“இந்தியப் பிரிவினையை மையமா வச்சு, 80 வயசு பெண் ணோட கோணத்துல அந்த நாவல் எழுதப்பட்டிருக்கு. ‘ரெட் சமாதி’ங்கிற பெயர்ல இந்தியில எழுதின நாவலை, இங்கிலீஷ்ல ‘டூம் ஆஃப் சாண்ட்’ங்கிற பெயர்ல மொழி பெயர்த்திருக்காங்க...”

“ம்... இவங்களோட அஞ் சாவது நாவல் இது. நிறைய சிறுகதைகளையும் எழுதி யிருக்காங்க. நிறைய விருது களையும் வாங்கிக் குவிச்சிருக் காங்க. அவங்க குழந்தையா இருந்தப்ப உத்தரப்பிரதேசத்துல ஆங்கிலப் புத்தகங்கள் அதிகமா கிடைக்காததால, இந்தியில இவ்வளவு தூரம் தன் திறமையை வளர்த்துக்க முடிஞ்சிருக்குன்னு சொல்றாங்க கீதாஞ்சலி...” என் றாள்.

“வித்யாக்கா... உங்களுக்குத் தெரியுமா? நம்ம வினு, இத்தனை நாளா மலையாள நடிகை பார்வதி திருவோத்துவோட ஃபேன். இப்ப அன்னா பென் னுக்கு மாறிட்டாளாம்!’’

“என்ன வினு திடீர்னு?’’

“திடீர்னுலாம் இல்லக்கா... மலையாள சினிமால பொதுவா எல்லாருமே நடிப்புல பின்னு வாங்க. அன்னா இன்னும் ஸ்பெஷல். ‘கும்பிளாங்கி நைட்ஸ்’ படத்துல ஆரம்பிச்சு, ‘ஹெலன்’, ‘கப்பேலா’, ‘சாரா’ஸ்னு எல்லா படங்கள் லயும் அன்னாவோட நடிப்புல தனித்துவம் தெரியும். லேட் டஸ்ட்டா வந்திருக்கிற ‘நைட் டிரைவ்’ படத்துலயும் அப்படித்தான். இதுல தெனாவட்டான மீடியா பர்சனா வர்றாங்க. அவங்க பிறந்தநாள் அன்னிக்கு பாய் ஃபிரெண் டோட ஒரு நைட் டிரைவ் போய் 12 மணிக்கு கேக் வெட்டறதா ப்ளான். வழியில போலீ ஸோட ஒரு பிரச்னை. அங்கேருந்து கிளம்பினா, அடுத்த சில நிமிஷத்துல ஒரு விபத்து. அது ரொம்ப பெரிய சிக்கலா மாறுது. இப்படி விறு விறுப்பா போகுது கதை. அரசியல் த்ரில்லர் கதைன்னாலும் வழக்கம்போல அன்னா அசத்தியிருக்காங்க’’ என்றாள் வினு.

“ஓ... வினு நீ பார்க்காம விட்ட ‘நாரதன்’ படத்தை நான் பார்த்துட்டேனே...’’ என்று தம்ப்ஸ் அப் காட்டினாள் விமல்.

“நீ அன்னாவுக்காக அதைப் பார்க்கலைன்னு எனக்குத் தெரியும். நீ பார்த்ததுக்கு காரணம் டொவினோ தாமஸ்’’ என்று சிரித்தாள் வினு.

‘‘அன்னா பென் நடிச்ச எல்லா படங்க ளையும் பார்க்கற ஆசையைத் தூண்டிட்டீங்க ரெண்டு பேரும்’’ என்று வித்யா சொல்லும் போது விமல் குறுக்கிட்டாள்.

‘‘இந்த விஷயம் கேள்விப்பட்டீங்களா... மைசூர் நீதிபதி விவாகரத்து வழக்குகள் பத்தி கவலைப்பட்டிருக்கார்.”

“மூணு வேளையும் நூடுல்ஸ் செஞ்சு போட்ட காரணத்துகாகவெல்லாம் டைவர்ஸ் கேட்கறாங்கன்னு சொன்னதுதானே? ஒரு வேளை வேற காரணம் சொல்ல வேணாம்னு இதைச் சொல்லிருப்பாங்களோ! இது மியூச்சுவல் டைவர்ஸ்ங்கிறதால எனக்கு அப்படித் தோணுச்சு” என்றார் வித்யா.

“அப்படியும் இருக்கலாம் வித்யாக்கா. நூடுல்ஸ்ங்கிறது இதுல மேட்டர் இல்ல. அற்ப விஷயங்களுக்கெல்லாம் டைவர்ஸ் கேட்கறாங் கங்கிறது உண்மை. முன்னாடியெல்லாம் 100 கேஸ்ல கவுன்சலிங் கொடுத்தா 30 கேஸ் மறுபடியும் சேர்ந்துடுவாங்க. இப்போ 800, 900 கேஸ்கள்ல 30 பேர்தான் சேர்ந்து வாழறதா சொல்றாங்களாம்.”

“சகிப்புத்தன்மை ரொம்ப குறைஞ்சிட்டு வருதுபோல விமல்... பிடிக்காத வாழ்க்கையி லேருந்து வெளியே வர்றதுக்கு பெண்களுக்கு டைவர்ஸ் ஒரு ஆறுதலா இருந்துச்சு... ஆனா, இப்போ அதுவே கூடுதல் சுமையாவும் மாறி ருச்சு. பெரும்பாலும் குழந்தைகளைப் பெண்கள்கிட்ட விட்டுட்டு, ஆண்கள் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆயிடறாங்க. சிங்கிள் மதரா பெண்கள் போராடிட்டு இருக்காங்க...” வருத்தம் பகிர்ந்தாள் வினு.

‘`நாம இறங்கறதுக்குள்ள வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திடுவோம்.’’

“யாருக்கா அவங்க...?’’

“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸோட இந்திய தேசிய ராணுவத்துல ஜான்சி ராணி படைப் பிரிவுல சேர்ந்து ரெண்டாம் உலகப் போர்ல ஈடுப்பட்டவங்கதான் இந்த அஞ்சலை. இப்போ 102 வயசுல மலேசியால காலமாகிட் டாங்க. இவங்க பிறந்ததும் வாழ்ந்ததும் இந்தியாவுல இல்லை... மலேசியாவுல. ஆனாலும், 21 வயசுலேயே நேதாஜி படையில சேர்ந்து இந்தியாவோட விடுதலைக்காகப் போராடியிருக்காங்க அஞ்சலை!’’

‘‘எவ்ளோ மன உறுதியும் துணிச்சலும் இருந் திருந்தா, ஒரு இளம்பெண்ணால கடுமையான போர்ச்சூழலுக்குள்ள விருப்பத்தோட வாழ்ந் திருக்க முடியும். நம்ம அற்புதம் அம்மா மாதிரி ஆச்சர்யப்படுத்தும் இன்னோர் அம்மா இவங்க!’’ என்று வினு வியப்புடன் சொல்லும் போது, விமல் குரல் கொடுத்தாள்.

“வித்யாக்கா, வாங்க நம்ம ஸ்டேஷன் வந்துருச்சு...” - அரட்டையை முடித்துக்

கொண்டு மூவரும் இறங்கினர்.

- அரட்டை அடிப்போம்...

******

வினு தரும் வித்தியாசமான தகவல்!

1952 முதல் இங்கிலாந்தை ஆட்சி செய்துவரும் ராணி இரண்டாம் எலிசபெத், பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்து வருபவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறார். இதன் மூலம், 1837 முதல் 1901 வரை 64 ஆண்டுகள் ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்திருக்கிறார் இரண்டாம் எலிசபெத். நவீன வரலாற்றில் உலகின் மூன்றாவது மிக நீண்ட கால ஆட்சியாளரும் எலிசபெத் ராணிதான். 1643-1715 வரை 72 ஆண்டுகள் முழுமையான மன்னராக ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னர் லூயிஸ் XIV நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னருக்கான சாதனையைப் படைத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில், தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (இராமா IX) 1946 முதல் 2016-ல் இறக்கும் வரை சுமார் 70 ஆண்டுகள் அரியணையில் இருந்தார். மிக நீண்ட காலம் ஆட்சி செய்த சாதனையை ராணி எலிசபெத் எட்டுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை.

****

குழந்தைகளை சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பினீர்களா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை சிறப்புப் பயிற்சிக்கு (நேரடி / ஆன்லைன்) அனுப்பினீர்களா? என்ன பயிற்சி? ஏன்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகிறோம். உடலின் அனைத்து பாகங்களுக்கு மான சிறந்த உடற்பயிற்சி நீச்சல் மட்டும்தான். நீச்சல் தெரியாததால் சிறியவர், பெரியவர் எனப் பலரும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் பரிதாபச் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். நீர்நிலைகள் அதிகம் உள்ள எங்கள் பகுதியில் ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நீச்சல் தெரிந்திருப்பது மிகவும் அவசியம் என்பதால் பதினோரு வயதாகும் எங்கள் இரட்டைப் பெண் குழந்தைகளையும் நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகிறோம்.

- பெ.கல்பனா ரவி, தஞ்சாவூர்

****

அடிக்கும் வெயிலில் ஆன்லைன் வகுப்புக்கு குழந்தைகளை கொண்டுவிட, கூட்டிவர மனமில்லை. என் நாத்தனார் குழந்தைகள் இருவர், அண்டை வீட்டுக் குழந்தைகளுடன் வீட்டிலேயே விளையாட்டுப் பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். அந்தக் காலத்தில் விளையாடிய, தாயம், பல்லாங்குழி, ஆடு, புலி ஆட்டம், புளியங்கொட்டையை ஊதி மூச்சு பிடிக்கும் விளையாட்டு, மணலில் சோழியை மறைத்து வைத்து கையால் பொத்த எதிராளி கண்டு பிடிக்கும் விளையாட்டு, மாலையில் பாண்டி, ஓடி விளையாடல் சங்கிலி, புங்கிலி கதவைத்திற போன்றன. நானே எதிர்பாராது எதிர்வீட்டு தாத்தா உதவிக்கு வந்தார். காசும் செலவழிக்காது ஓய்வையும் உபயோகமாக கழித்த பெருமை எங்களுக்கு.

- ஜனனிராம், சென்னை-78

*****

எனக்கு இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி. இருவரும் வருடா வருடம் அமெரிக்காவிலிருந்து இங்கு வருவர். இந்த வருடம் இரண்டு பேரன்களை `குக்கிங் கிளாஸ்’ நேரடி வகுப்பிலும், பேத்தியை ‘தற்காப்புக்கலை’ நேரடி வகுப்பிலும் சேர்த்தேன். ஆண் குழந்தைகளுக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. வேலைக்குப் போகும் தாய்மார்கள் வேலை யிலிருந்து வீட்டுக்கு வர சிறிது தாமதமானாலும் பசியோடு குழந்தைகள் காத்திராமல் ஏதேனும் செய்து சாப்பிடத் தெரிந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அந்த நிலைமையைச் சமாளிக்க குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பெரியவர்களான பிறகு எங்கு சென்றாலும் சமைத்துச் சாப்பிடலாம். திருமணம் ஆனபின் அவன் மனைவிக்கும் பேருதவியாக இருக்கும். ஒரு பெண்ணின் கூடவே எல்லா இடங்களுக்கும் பெற்றோர் செல்ல முடியாது. அந்த நிலையில் அவள் தன்னைத்தானே காத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதால் பேத்தியை தற்காப்பு வகுப்பில் சேர்த்தேன்

- சுகந்தாராம், சென்னை-59

*****

இந்த இதழ் கேள்வி

அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நம் அன்றாடச் செயல்பாடுகளில் சமூக ஊடகங்களும் இடம்பெற்றுவிட்டன. நீங்கள் எந்த அளவுக்கு இவற்றைப் பயன்படுத்துகிறீர்கள்? இவை எந்த விதத்தில் உங்களுக்குப் பயன்படுகின்றன?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 14.6.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism