Published:Updated:

வினு விமல் வித்யா: விண்வெளிக்கே சென்று வந்தாச்சு... ஆனா, சாலையில் ஓர் ஆணை முந்தினால்..?

 மித்தாலி ராஜ்,  அஃப்ரீன் பாத்திமா,  இமான் வெல்லானி
பிரீமியம் ஸ்டோரி
மித்தாலி ராஜ், அஃப்ரீன் பாத்திமா, இமான் வெல்லானி

- சஹானா

வினு விமல் வித்யா: விண்வெளிக்கே சென்று வந்தாச்சு... ஆனா, சாலையில் ஓர் ஆணை முந்தினால்..?

- சஹானா

Published:Updated:
 மித்தாலி ராஜ்,  அஃப்ரீன் பாத்திமா,  இமான் வெல்லானி
பிரீமியம் ஸ்டோரி
மித்தாலி ராஜ், அஃப்ரீன் பாத்திமா, இமான் வெல்லானி

“ஒரு பொண்ணு விண்வெளிக்குப் போயிட்டு வந்து அறுபது வருஷங்களாச்சு... ஆனா, ரோட்ல இன்னும் நாம யாரையும் ஓவர்டேக் பண்ணிட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிறாங்க... வண்டி ஓட்டுற ஆணை முந்திட்டா, பின்னால வந்து மிரட்டறாங்கப்பா” என்று படபடப்பாகச் சொல்லிக்கொண்டு, பூங்கா பெஞ்சில் அமர்ந்தார் வித்யா.

“வித்யாக்காவையே டென்ஷனாக் கிட்டாங்களா... அது சரி, வாலன்டினா தெரஸ்கோவா விண்வெளிக்குப் போயிட்டு வந்து அறுபது வருஷமாச்சா!” என்று ஆச்சர்யப் பட்டாள் விமல்.

“ஆமாம், விமல். 1963-ம் வருஷம் ஜூன் 16 அன்னிக்கு சோவியத் ஒன்றியத்தோட பிரதி நிதியா, விண்வெளிக்கு அனுப்பப்பட்டாங்க. 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில இருந்து, 48 தடவை பூமியைச் சுத்தி வந்தாங்க. இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணுங்கிற சாதனையைப் படைச்சாங்க. மூணு நாளைக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி வந்தாங்க. இது அவங்க விண்வெளிக்குப் போயிட்டு வந்த அறுபதாவது ஆண்டு!”

“வாவ்... கிரேட்! இப்போ வாலன்டினாவுக்கு 85 வயசு. அவங்க சாதனையோட அறுபதாவது விழாவை அவங்களே பார்க்கிறாங்க!”

“ஆமாம்.. 2022 ஜூன்8-ம் தேதி இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியோட ஐம்பதாவது ஆண்டு!”

“என்ன நிகழ்ச்சி வினு?” என்று ஆர்வத்துடன் கேட்டார் வித்யா.

“நேபாம் கேர்ள்னு கேள்விப்பட்டிருக்கீங்களா வித்யாக்கா?”

“கேள்விப்பட்ட மாதிரிதான் இருக்கு...”

“வியட்நாம்ல நீண்ட காலம் போர் நடந்ததே... 1972-ம் வருஷம் ஜூன் 8 அன்னிக்கு டிராங் பேங் கிராமத்துல நேபாம் குண்டு விழுந்தது. குழந்தைகள் அலறியடிச்சுக்கிட்டு ஓடினாங்க. அதுல ஒன்பது வயசு சிறுமி பான் தி கிம் புக், எரியற டிரஸ்ஸை தூக்கி வீசிட்டு ஓடி வந்தாங்க. இந்தக் காட்சியை வியட்நாமிய அமெரிக்கரான அசோசியேட்டடு பிரஸ் போட்டோகிராபர் நிக் வுட் படம் பிடிச்சார். கிம்மையும் மற்ற குழந்தைகளையும் வண்டியில ஏத்திக்கிட்டுப் போய், சிகிச்சை கொடுக்கவும் ஏற்பாடு செஞ் சார். கிம் பிழைச்சுக்கிட்டாங்க. ஆனாலும், அவங்க உடல் குண்டு பாதிப்பால ரொம்ப மோசமாயிருச்சு. பல தடவை அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணியும் தோல் எரிச்சல் சரியாகல. அதோட கஷ்டப்பட்டுப் படிச்சு, கனடா போய் செட்டிலாயிட்டாங்க. நிக் வுட்டும் கிம்மும் ஐம்பது வருஷங்களா தொடர்புல இருக்காங்க. இந்த ஐம்பதாவது வருஷ நிகழ்ச்சிக்காக ஒரு விழாவுல ரெண்டு பேரும் மறுபடியும் சந்திச்சு நினைவுகளைப் பகிர்ந்துகிட்டாங்க. வியட்நாம் போரோட கோரத்தை வெளியே சொன்னது லயும் போர் முடிவுக்கு வந்ததுலயும் இந்தப் படத்துக்கு முக்கியப் பங்கு இருக்கு. இந்தப் படத்துக்காகத்தான் நிக் வுட் புலிட்சர் பரிசு வாங்கினார்’’ - விளக்கமாகச் சொன்னாள் வினு.

“அப்புறம் ஸ்வீடனைச் சேர்ந்த, மாதவிடாய் பொருள்கள் தயாரிக்கும் இன்ட்டிமினா நிறுவனம் கார்ன்ஃப்ளேக்ஸ் மாதிரியான காலை உணவை அறிமுகப்படுத்தியிருக்கு. இந்த உணவு, யூட்ரஸ் வடிவத்துல சிவப்பு கலர்ல ராஸ்பெர்ரி சுவையில இருக்கு” என்றாள் விமல்.

“எதுக்கு இது? பால்ல ஊத்தினா ரத்தம் மாதிரி இருக்காதா?”

“அப்படித்தான் இருக்கும் வித்யாக்கா. அந்த நிறுவனம் எடுத்த சர்வேயில 82 சதவிகிதம் பேருக்கு யூட்ரஸ் வடிவமே தெரியலையாம்.

 மித்தாலி ராஜ்,  அஃப்ரீன் பாத்திமா,  இமான் வெல்லானி
மித்தாலி ராஜ், அஃப்ரீன் பாத்திமா, இமான் வெல்லானி

48 சதவிகிதம் பேர் மாதவிடாய் பத்தி பேசறதுக்கு வெட்கப்படறாங்களாம். 77 சதவிகிதம் பேர் வீட்டுல உள்ளவங்ககிட்டயே மாதவிடாய் பத்தி பேசிக்கிறதில்லையாம். அதனால மாதவிடாய் பத்தி வெளிப்படையா பேசவும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் இந்த உணவை உருவாக்கியிருக்காங்க. தினமும் காலைல எல்லாரும் சேர்ந்து சாப்பிடும் போது, மாத விடாய் குறித்த உரையாடல் நடக்கும்னு இந்த நிறுவனம் நம்புது.”

“யூட்ரஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது... தமிழ்நாட்டுல கருவுல இருக்கிறது ஆணா, பொண்ணாங்கிறதை சட்டத் துக்குப் புறம்பா தெரிஞ்சுகிட்டு, கருவி லேயே அழிக்கறது தொடர்ந்துகிட்டுதான் இருக்கு. குறிப்பா, பெரம்பலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல அதிகமா நடக்க ஆரம்பிச்சிருக்கு. ‘பூ’ன் னா பெண், ‘தலை’ன்னா ஆண். இப்படி சங்கேத பாஷையிலதான் லேப்கள்ல பேசிக்கிறாங்க. இப்படி கருவைக் கலைக் கறதுக்குன்னே போலி மருத்துவர்கள் இந்தப் பகுதியில நிறைய பேர் இருக்காங்க. சமீபத்துல ஒரு பெண் நிறைய பணம் கொடுத்து கருக்கலைப்பு செஞ்சுக்கிட் டாங்க. ஆனா, அந்தப் போலி மருத்துவ ரால கருவை முழுமையா கலைக்க முடியல. அப்படியே வீட்டுக்கு அனுப்பிட் டார். கொஞ்ச நாள்ல உடம்பு மோசமாகவே அந்தப் பெண்ண ஹாஸ் பிட்டல்ல சேர்த்திருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த சங்கேத பாஷை விஷய மெல்லாம் வெளியல தெரிய வந்திருக்கு” என்றாள் வினு.

“கொடுமையாயிருக்கு. பெண் குழந்தை களை கருவிலேயே அழிக்கறதோட, தாய்மார்களோட உயிருக்கும் உலை வைக்கிறாங்களே... இப்போ கருத்தடை சாதனங்கள் எவ்வளவோ இருக்கே. அதை யூஸ் பண்ணி கருவே உருவாகாம பாத்துக் கலாமே...” கவலைப்பட்டார் வித்யா.

“அதையெல்லாம் யூஸ் பண்ண எல்லா ஆண்களும் அனுமதிக்கிறதில்லை வித்யாக்கா. அதோட, இது திடீர்னு ஏற்பட்ட கர்ப்பம் இல்ல. அடுத்த குழந்தை பெத்துக்கணும்கிற எண்ணத்துல உருவான கர்ப்பமாவும் இருக்கலாம்” - யதார்த்தம் சொன்னாள் விமல்.

தான் கொண்டுவந்திருந்த நெல்லிக்காய் ஜூஸை ஆளுக்கு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார் வித்யா. மூவரும் ஜூஸை ரசித்து ருசித்துக் குடித்தனர்.

“மிஸ் மார்வல் வெப் சீரிஸ் பத்தி கேள்விப் பட்டீங்களா? சூப்பர் ஹீரோ மிஸ் மார்வல் கேரக்டர்ல முதல் முறையா இஸ்லாமியப் பெண் நடிச்சிருக்காங்க. மிஸ் மார்வல் இமான் வெல்லானி, பாகிஸ்தான்ல பிறந்து, அமெரிக் காவுல வாழறவங்க. இந்த கேரக்டரை உருவாக்கி னதுலயும் கதை எழுதினதுலயும் சனா அமனாத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. இவங்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்கர். இஸ்லாமியர்கள் பத்தி பாசிட்டிவ் எண்ணங்களை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்கிற நோக்கத்துல இந்த கேரக்டரை உருவாக்கினதா சொல்லியிருக்காங்க. அடுத்த வருஷம் ரிலீஸாகப்போற மார்வல் 2 சினிமாவு லயும் இமான் வெல்லானிதான் நடிக்கிறாங்க” - புதிய தகவல் சொன்னாள் வினு.

“ஒருபக்கம் இஸ்லாமியப் பெண்ணை வெச்சு சூப்பர் ஹீரோவை உருவாக்கிட்டாங்க. இன்னொரு பக்கம் இந்தியாவுல ஆளும் கட்சியைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் பத்தி, மக்கள் மனம் புண்படுற மாதிரி பேசினாங்க. அதுக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிச்சு கூட்டங்களை நடத்தினாங்க. உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட்டுல வன்முறை உருவாச்சு. கடும் எதிர்ப்பு காரணமா, சர்ச்சைக்குரிய கருத்து களைச் சொன்னவங்களை ஆளும்கட்சி பதவியை விட்டுத் தூக்கிருச்சு. அதே நேரம் உத்தரப்பிரதேசத்துல ஆளுங்கட்சி, எதிர்ப்பு தெரிவிச்சவங்க மேல வன்முறையைத் தூண்டி னதா சொல்லி, வீடுகளை புல்டோசர் வச்சு இடிச்சிருச்சு” என வருத்தப்பட்டார் வித்யா.

“ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. உண்மையி லேயே வன்முறையைத் தூண்டியிருந்தாலும் கேஸ்தானே போடணும்... இது என்ன வீட்டை இடிக்கிறாங்க? சட்டப்படியோ தார்மிகப் படியோ இதுல எந்த நியாயமும் இல்ல.”

“வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியோட தலைவர் ஜாவேத் முகமதுவோட மகள் அஃப்ரீன் பாத்திமா. இவங்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துல படிச்சவங்க. மதவெறிக்கு எதிரான பல போராட்டங்கள்ல கலந்துக்கிடாங்க. இவங்க வீட்டையும் சட்டத்துக்குப் புறம்பா கட்டினதா சொல்லி, இடிச்சுத் தள்ளியிருக்கு யோகி அரசு.”

“இந்த உலகத்துல எதுவும் உயர்ந்ததும் இல்ல, தாழ்ந்ததும் இல்லைனு ரெண்டாயிரம் வருஷங் களுக்கு முன்னால வாழ்ந்த, பேரரசர் அசோக ருக்குத் தெரிஞ்சிருக்கு. இவங்களுக்குத் தெரியல” என்றார் வித்யா.

“ம்... இந்திய மகளிர் கிரிக்கெட் அணியோட கேப்டன் மித்தாலி ராஜ், ஓய்வு பெறுவதா அறி விச்சிட்டாங்க... 23 வருஷமா விளையாடிட்டு இருந்தாங்க. இந்திய மகளிர் கிரிக்கெட்டுல மித்தாலியோட பங்கு ரொம்ப முக்கியமானது. 232 ஒருநாள் போட்டிகள்லயும் 12 டெஸ்ட் போட்டிகள்லயும் 89 டி20 போட்டிகள்லயும் விளையாடியிருக்காங்க. 16 வயசுல சர்வதேச கிரிக்கெட்டுல விளையாட ஆரம்பிச்சு, 39 வயசுல ஓய்வை அறிவிச்சிருக்காங்க’ ’என்றாள் விமல்.

“அயர்லாந்துக்கு எதிரா விளையாடின முதல் போட்டிலயே 114 ரன்களைக் குவிச்சு, உலகத்தைத் திரும்பிப் பார்க்க வச்சாங்க மித்தாலி. ஒருநாள் போட்டிகள்ல 7,805 ரன்களை எடுத்திருக்காங்க. 155 போட்டிகள்ல கேப்டனா இருந்திருக்காங்க”- கூடுதல் தகவல் சொன்னாள் வினு.

“ஆண்கள் கிரிக்கெட் அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் பேசப்படறதில்ல. எதிர்காலத்துல பெண்கள் கிரிக்கெட் இன்னும் பிரபலமாகணும்” என்றார் வித்யா.

“ஓகே, நிறைய பேசியாச்சு... நேரம் போனதே தெரியல. கிளம்பலாமா?” என்று வினு கேட்க, விமலும் வித்யாவும் தலையாட்டினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

*****

வினு தரும் வித்தியாசமான தகவல்

மரம் உள்பட பல்வேறு தொழில் துறைகளில் இன்றும் அதிக அளவில் பயன்படும் வட்ட ரம்பத்தைக் (Circular saw) கண்டுபிடித்தவர் தபிதா பாபிட் என்ற அமெரிக்கப் பெண். 1779-ம் ஆண்டு முதல் 1853 வரை வாழ்ந்த தபிதா இன்னும் பல கருவிகளையும் உருவாக்கியுள்ளார். தான் நெசவாளராகப் பணிபுரிந்தபோது, ரம்பம் மூலம் விறகு வெட்டப் போராடும் மக்களைப் பார்த்தார் பாபிட். அந்த ரம்பத்தைப் பயன்படுத்த இரண்டு வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு உதவி செய்யத் தீர்மானித்த தபிதா, சுழலும் சக்கரத்தில் ஒரு வட்டக் கத்தியை இணைத்து, மிகவும் திறமையான வட்ட வடிவ ரம்பத்தை உருவாக்கினார்.

நீங்களும் சமூக ஊடகங்களும்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நம் அன்றாடச் செயல்பாடுகளில் சமூக ஊடகங்களும் இடம்பெற்றுவிட்டன. நீங்கள் எந்த அளவுக்கு இவற்றைப் பயன்படுத்துகிறீர்கள்? இவை எந்த விதத்தில் உங்களுக்குப் பயன்படுகின்றன?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

அவள் விகடன் குறுக்கெழுத்துப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க நிறைய முறை கை கொடுத்தது கூகுள் தோழன்தான். ஊரிலிருந்து அப்பா போன் பண்ணி, `கோமு, நாலடியார் எழுதியது யார்?' என்பார். நான் கண்டுபிடித்து கெத்தாய் பதில் சொல்ல, அந்த நேரம் மனசுக்குள் பூச்சட்டியே சொரியும். இன்னிக்கு ரெண்டே கத்திரிக்காயில் என்ன குழம்பு வைக்கலாம்? யோசித்த மறுநொடியே, யூடியூபை திறக்கும் விரல்கள். அன்று முதல் கூடுதலாக ஒரு குழம்பு இணையும் குழம்பு லிஸ்ட்டில். சமூக ஊடகம் எனக்கு சந்தோஷப் பெட்டகம்.

- என்.கோமதி, நெல்லை-7

வரலாறு காணாத வெள்ளம் சென்னையைச் சூழ்ந்தபோது பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், யூனுஸ் என்பவரால் காப்பாற்றப்பட்டார். அன்று தாயையும் சேயையும் காப்பாற்றியது சமூக ஊடகம்தான். சமீபத்திய உக்ரைன் - ரஷ்யா போர் உக்கிரத்தின்போது இந்திய மாணவர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவியது ஊடகம்தான். விபத்து நேரங்களில் அரிய வகை ரத்தம் தேவை என்றால் ஊடகத்தில் பதிவு செய்து அடிபட்டவர் பிழைக்க உதவலாம். தனிமையில் பயணம் செல்லும் பெண்கள் ஆபத்து நேரங்களில் காவல்துறையைத் தொடர்புகொள்ள உதவுவது ஊடகமே. முறையாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு ஊடகம் வரம்.

- வித்யா வாசன், சென்னை-78

நான்கு வருடங்களுக்கு முன் எனது மன அழுத்தத்தைக் குறைக்க இணையத்தில் சிறுசிறு பதிவுகளை எழுதிவந்தேன். இணையத்தில் அவற்றைப் படித்த கவிக்குழுமங்கள் விவாத மேடைக்கு நடுவராகும் வாய்ப்பு தந்தார்கள். அதற்காக 'அதியமான் விருது' கிடைத்தது. தனலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி யில் பேசும் வாய்ப்பு வந்தது. இன்று சமூக ஊடகத்தின் உதவியால் கிட்டதட்ட 32 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.

- ஜெ.விஜிவீரா, கோயம்புத்தூர்-15

****

இந்த இதழ் கேள்வி

கோயம்புத்தூரிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறையில் தனியார் அனுமதிக்கப்படுவது சேவைகளை மேம்படுத்த உதவுமா அல்லது கட்டணங்கள் அதிகரிக்கப்பட இது ஒரு வழியாக மாறுமா? உங்கள் கருத்து என்ன?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 28.6.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism