Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்ணுங்கறதுக்காக மட்டுமே ஒருவரை ஆதரிக்கலாமா?

 ஹிருணிகா பிரேமச்சந்திர,  ஆலிஸ் வாக்கர்,  சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆலிஸ் வாக்கர், சாய் பல்லவி

சஹானா

வினு விமல் வித்யா: பெண்ணுங்கறதுக்காக மட்டுமே ஒருவரை ஆதரிக்கலாமா?

சஹானா

Published:Updated:
 ஹிருணிகா பிரேமச்சந்திர,  ஆலிஸ் வாக்கர்,  சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆலிஸ் வாக்கர், சாய் பல்லவி

விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை யில் அமர்ந்து வினுவும் விமலும் கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வித்யா அவர்களைத் தேடி வந்து சேர்ந்தார்.

“என்ன வித்யாக்கா, வரும்போதே டென்ஷனா இருக்கீங்கபோல...”

“எனக்கு ஒண்ணும் டென்ஷன் இல்ல விமல். அமெரிக்காதான் டென்ஷனா இருக்கு. எல்லாத்துலயும் முன்னேறியிருக் கிறதா நினைச்சிட்டிருக்கிற அமெரிக்கா, அப்படி இல்லைன்னு தோணுது.”

“என்னாச்சு... கருக்கலைப்புக்கு எதிரா அமெரிக்க உச்சநீதிமன்றம் கொண்டு வந்திருக்குற சட்டத்தைச் சொல்றீங்களா வித்யாக்கா...”

“ஆமா, விமல். அம்பது வருஷங்களுக்கு முன்னாடியே ஒரு வழக்குல கருக்கலைப்பு, பெண்களோட உரிமைன்னு சட்டம் கொண்டுவந்துட்டாங்க. அப்புறமும் அமெ ரிக்காவுல சில மாகாணங்கள் கருக்கலைப்பை ஏத்துக்கல. அதனால தடையிருக்கிற மாகாணத்துலேருந்து தடையில்லாத மாகாணத்துக்குப் போய், கருக்கலைப்பு செஞ்சிட்டு வருவாங்க. இப்ப பழைமை

வாதக் கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் கருக்கலைப்பு ஆதரவு சட்டத்தை ரத்து பண்ணியிருக்காங்க. இனி அந்தந்த மாகாணங்கள் கருக்கலைப்பு தொடர்பா முடிவெடுத்துக்கலாம்னு சொல்லிருக்காங்க. இப்பவே பாதிக்கும் மேலான மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆர்வம்காட்ட ஆரம்பிச்சிருச்சு.”

“ரொம்ப அநியாயம். மதத்தின் பிடி அதிகமா இருக்கிற லத்தீன் அமெரிக்க நாடுகள்லகூட, பல வருஷங்களா பெண்கள் போராடி, இப்ப குறிப்பிட்ட காலத்துக்குள்ள செய்யும் கருக் கலைப்பு சட்டப்படி குற்றமில்லைங்கிற நிலைக்கு வந்திருக்கு. ஆனா, அம்பது வருஷங் களுக்கு முன்னாடி அப்படியொரு சட்டம் கொண்டுவந்துட்டு, இப்ப மாத்தறதுல கொஞ்சம்கூட நியாயமில்ல. இதைக் கடுமையா எதிர்க்கணும்” என்றாள் வினு.

“இப்பவே சில மாகாணங்கள்ல அபார்ஷன் கிளினிக்குகளை மூட ஆரம்பிச்சிட்டாங்க. புது சட்டத்தை ரத்து செய்யச் சொல்லி பெண்கள் போராட ஆரம்பிச்சிட்டாங்க. ஜோ பைடனும் கமலா ஹாரிஸும் இந்தச் சட்டத்தால அதிர்ச்சி யடைஞ்சாலும், இது நிரந்தரமில்லைன்னு சொல்லியிருக்காங்க...” கூடுதல் தகவல் சொன்னார் வித்யா.

“ ‘தி கலர் பர்ப்பிள்’ நாவல் எழுதின ஆலிஸ் வாக்கர், ‘நான் கல்லூரியில படிச்சபோது குழந்தை உண்டாகிடுச்சு. பணமில்லாததால கருவைக் கலைக்கவோ, தற்கொலை செய்து கொள்ளவோ நினைச்சேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பணம் கொடுத்ததால அபார்ஷன் பண்ணிக்கிட்டேன். அபார்ஷன்ங்கிறது தற்காப்பு. கரு பாவம்னு சொல்றவங்க ஏன் பெண் பாவம்னு சொல்ல மாட்டேங்கிறாங்க? அன்னிக்குத் தற்கொலை செஞ்சுக்காம இருந்ததாலதான், இன்னிக்கு நான் சமூகத்துக்குப் பயன்படுற மாதிரி விஷயங்களைச் செஞ்சிட் டிருக்கேன். கருக்கலைப்பு பெண்களோட அடிப் படை உரிமை’ன்னு சொல்லியிருக்காங்க” என்றாள் விமல்.

“கரெக்ட். இந்தச் சட்டத் தால அதிகம் பாதிக்கப்படப் போறது வறுமையில் வாடுற ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்

தான். சட்டத்துக்குப் புறம்பா கருக்கலைப்பு செய்யுறது உயிருக்கே ஆபத்தாகிடும்.”

“ஆமா வித்யாக்கா... மத்த நாடுகள் என்ன செய்யப்போகுதோ?” கவலைப்பட்டாள் வினு.

 ஹிருணிகா பிரேமச்சந்திர,  ஆலிஸ் வாக்கர்,  சாய் பல்லவி
ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆலிஸ் வாக்கர், சாய் பல்லவி

“ம்... கொஞ்சம் இருங்க” என்று சொல்லி விட்டுச் சென்ற வித்யா, பருத்திப்பால் வாங்கி வந்தார்.

“உடம்புக்கு நல்லது. சுக்கெல்லாம் போட்டு டேஸ்ட்டும் செமயா இருக்கும். அப்புறம்... குடியரசுத் தலைவர் தேர்தல் பர பரப்பா போயிட்டிருக்கே... இந்த திரெளபதி முர்மு யாருப்பா?”என்றார் வித்யா.

“அவங்க ஒடிசாவுல பிஜேபி அமைச்சரா இருந்தவங்க. ஜார்க்கண்ட்ல முதல் பெண் ஆளுநரா போன வருஷம் வரை இருந்த வங்க. பழங்குடியிலேருந்து ஆளுநரா பொறுப்பேற்ற முதல் பெண்ணும் இவங்கதான்.”

“பெண் வந்தா நல்லதுதானே வினு...”

“குடியரசுத் தலைவர் தேர்தல்ல பெண்ணுங்கறதுக்காக மட்டும் ஒருத் தங்களை ஆதரிக்க முடியாது வித்யாக்கா. ஆணோ பெண்ணோ அவங்க கட்சி ஆதரிக்கிற விஷயங்களைத்தான் அமல் படுத்த முடியும். ஒரு பெண் குடியரசுத் தலைவரா வருவதால பெண்கள் முன்னேற் றத்துல, பழங்குடிகள் பாதுகாப்புல அக்கறை காட்டுவாங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது.”

“கரெக்ட் வினு. அமெரிக்க அதிபரா ஒபாமா வந்ததால, ஆப்பிரிக்க அமெரிக் கர்கள் பிரச்னைகள் தீர்ந்ததா? அந்த மாதிரிதான். அவங்கள சப்போர்ட் பண்ற கட்சி சொல்றதைச் செய்வாங்க. பிரதீபா பாட்டில் என்ன செஞ்சாங்க, அந்த மாதிரி தான்.”

“ம்... டீஸ்டா சேதல்வாட் மறுபடியும் கைது செய்யப்பட்டிருக்காங்க...”

“ஆமா விமல்... 2002-ம் வருஷம் நடந்த குஜராத் கலவரத்துல, அப்போதைய குஜராத் முதல்வரா இருந்த மோடி உட்பட பலருக்கும் தொடர்பு இருக்குன்னு பாதிக்கப் பட்டவங்க வழக்கு தொடுக்கறதுக்கு டீஸ்டா

வோட தன்னார்வ மையம் நிதி கொடுத்திருக்கு. டீஸ்டாவும் இணை மனுதாரரா வழக்கு தொடுத் தாங்க. இந்த வழக்குலயிருந்து மோடி உட்பட

63 பேர் விடுவிக்கப்பட்டாங்க. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடியாயிருச்சு. வழக்கை ஜோடிச்சதா சொல்லி, டீஸ்டா உட்பட இன்னும் சிலரையும் கைது பண்ணிருக்காங்க. டீஸ்டா மனித உரிமை ஆர்வலர். பாதிக்கப் பட்டவங்களுக்காகவே எப்பவும் களத்துல இருந் திருக்காங்க...” விளக்கமாகச் சொன்னாள் வினு.

“ம்... பாவம். இலங்கை முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமச்சந்திர ஒரு போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க. கூட்ட நெரிசல்ல அவங்களோட சேலை விலகிருச்சு. அதைப் படம் எடுத்து மீம்ஸ் போட்டுத் தள்ளிட்டாங்க. அதுக்கு அவங்க, ‘என் மார்பகம் வெளியில தெரிஞ்சதுல எனக்கு எந்த அவமானமும் இல்ல. அது என் மூன்று பிள்ளைகள் பால்குடிச்ச உறுப்பு. அதை நினைச்சு நான் பெருமிதப்படறேன். என் மார்பகம் பத்தி நீங்க மீம்ஸ் போட்டுச் சிரிச்சு மகிழறதுக்குள்ள எங்கோ ஒரு மனிதனோட வாழ்க்கை முடிஞ்சிருக்கும். நான் அந்த மனிதனைப் பத்தி கவலைப்படறேன்’னு சொல்லியிருக்காங்க.”

“நல்லவிதமா இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணிருக்காங்க. மீம்ஸ் கிரியேட்டர்கள் மட்டு மல்ல, சில ஊடகங்களும் பொறுப்பில்லாமதான் இருக்காங்க. மீனாவோட கணவர் இறந்ததுக்கு காரணம் அது இதுன்னு இஷ்டத்துக்குச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்று அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள் விமல்.

“ஆமா, ரஜினி அஞ்சலி செலுத்த வந்தார்னா அவர் போட்டோவைப் போடறது நியாயம். மீனாவும் ரஜினியும் நடிச்ச பட ஸ்டில்லைப் போடறாங்க... யோசிக்கவே மாட்டாங்க போல...” கோபமாகச் சொன்னாள் வினு.

“ம்... நம்ம ஊர் நடிகைகள் அரசியல் கருத்து களைச் சொல்றது ரொம்ப அபூர்வம். சாய் பல்லவி ரொம்ப போல்டா சொல்லியிருக் காங்க” என்றார் வித்யா.

“அப்படி என்ன சொன்னாங்க வித்யாக்கா?”

“ `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' சினிமாவுல பண்டிட்கள் கொல்லப்பட்டது கொடுமையான துனா, மாட்டுக்கறி வாங்கிட்டுப் போனவர் அடிச்சுக் கொல்லப்பட்டதும் கொடுமையானது தானே? இந்த நாட்டுல எல்லாரும் சமமா நடத்தப் படணும்’னு சொல்லியிருக்காங்க. நிஜமாவே போல்டான கருத்துதானே. ஆமா, ‘சுழல்’ வெப் சீரிஸ் பார்த்தீங்களா?”

“பார்த்துட்டேன் வித்யாக்கா. நீங்க பார்த் தாச்சா?”

“பார்த்தேன் விமல். புஷ்கர்-காயத்ரி எழுத்துல பிரம்மா, அனுசரண் முருகையன் இயக்கத்துல உருவான த்ரில்லர் தொடர். குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை மையமா வச்சு, நல்லா எடுத்திருக்காங்க. குற்றவாளி இவரா, அவரான்னு நாம

நினைக்கும்போது அவங்க இல்லைன்னு அடுத்தடுத்து போறது எதிர்பாராத

ஆச்சர்யம்... நல்ல சப்ஜெக்ட்” என்றார் வித்யா.

“ஒரு நியூஸ் கேள்விப்பட்டீங்களா... கேரளா வுல தீபிகா என்பவர், தன் கணவர் அவினாஷ் கிட்ட, பல் தேய்ச்சுட்டு குழந்தைக்கு முத்தம் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. சுகாதார அடிப்படையில அவங்க சொன்னது ரொம்ப சரி. ஆனா, அதைக் காதுல வாங்கிக்காம அவினாஷ் கொஞ்சியிருக்கார். அதை தீபிகா கண்டிச்சிருக்காங்க. உடனே கோபத்துல கத்தியால குத்திட்டாரு. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடிவந்து, ஹாஸ்பிட லுக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க. ஆனா, தீபிகாவோட உயிர் போயிருச்சு. இப்ப அவினாஷ், போலீஸ் கஸ்டடியில இருக்காரு. அந்தக் குழந்தைக்குப் பெத்தவங்க ரெண்டு பேரும் இல்ல” வருத்தத்துடன் சொன்னாள் வினு.

“ச்சே... சகிப்புத் தன்மை குறைஞ்சிருச்சு. சைக்கோ தன்மை அதிகமாயிருச்சு.”

“ஆமாம் வித்யாக்கா... டைம் ஆச்சு... கிளம்பலாம்” என்று வினு எழுந்தாள்.

அவரவர் வண்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

****

வினு தரும் வித்தியாசமான தகவல்!

அழைப்பாளர் ஐடி மற்றும் அழைப்பு காத்திருப்பு (காலர் ஐடி & கால் வெயிட்டிங்) வசதிகளைக் கண்டுபிடித்தவர் ஒரு பெண். பெயர் டாக்டர் ஷெர்லி ஆன் ஜாக்சன். இவர் ஓர் அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர். 1970-களில் இருந்து இவர் செய்துவந்த ஆராய்ச்சிகளின் பலனே நாம் தொலைபேசி மற்றும் மொபைல்களில் பயன்படுத்தும் இந்த வசதிகள். இது மட்டுமல்ல... தொலைத்தொடர்புத் துறையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாகத்தான், கையடக்க தொலைநகல், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் போன்றவற்றை மற்ற கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்க முடிந்தது. மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி மற்றும் உயர்தர ஆராய்ச்சி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி ஆகிய சிறப்புகளும் இவருக்குண்டு.

தனியார் ரயில் சேவை... சேவைகளை உயர்த்தவா? கட்டணத்தை உயர்த்தவா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

கோயம்புத்தூரிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறையில் தனியார் அனுமதிக்கப்படுவது சேவைகளை மேம்படுத்த உதவுமா அல்லது கட்டணங்கள் அதிகரிக்கப்பட இது ஒரு வழியாக மாறுமா? உங்கள் கருத்து என்ன?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

தனியார்மயமாக்குதல் எந்தத் துறையிலும் சில நன்மைகள் சில தீமைகள் இரண்டையும் உள்ளடக்கியது. தனியார்துறை சேவை நன்றாக இருக்கும்பட்சத்தில் சற்று அதிக கட்டணம் கொடுக்க முடிந்தவர்கள் கொடுத்துவிட்டுத்தான் போகட்டுமே...

இந்த ரயில்கள் அதிகப்படியாக ஓடும்போது இந்திய ரயில்வே ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலை மாறி பல பேருக்கு பயணம் செய்ய டிக்கெட் கிடைக்கலாம். அது பொது மக்களுக்கு கூடுதல் நன்மையாக அமையும். ஒரு துறையில் போட்டி இருந்தால் மட்டுமே சேவை நன்றாக அமையும். எனவே, தனியார்துறை ரயில்கள் ஓடுவது நன்மையானது என்பது என் கருத்து.

- தி.வள்ளி, திருநெல்வேலி

சமூக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மூத்த குடி மக்களுக்கான கட்டணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, ரயில்வே ஊழியர்களுக்கான போக்குவரத்துச் சலுகை ஆகியவை கூட தனியார் ரயில் சேவையில் மறுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்கள் எளிதாக பயணம் செய்து வந்த ரயில் பயணம் இனி எட்டாக்கனியாக மாறி விடும் என்பது வேதனைக் குரிய ஒன்று.

- எம்.பானுமதி, விழுப்புரம்

தனியார் ரயில் போக்குவரத்தும் அரசுத்துறை ரயில் போக்குவரத்தும், ஒரே வழித்தடத்தில் ரயிலை இயக்கும்போது லஞ்ச லாவண்ய முறைகேடுகள் தலைவிரித்தாடும் என்பது திண்ணம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்த பின்னர், படிப்படியாக பி.எஸ்.என்.எல்லின் சேவை குறைக்கப் பட்டு அது ஒழிக்கப்பட்டதைப்போல, ரயில்வே துறையில் தனியாரின் தலையீட்டால் அரசு ரயில்வே துறையும் படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பதே உண்மை.

- எம்.லட்சுமி, மாங்குப்பம்

இந்த இதழ் கேள்வி

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி விலக்குகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எளிய, நடுத்தர குடும்பங்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது நியாயமான வரிவிதிப்பு என்று நினைக்கிறீர்களா?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 12.7.2022