Published:Updated:

வினு விமல் வித்யா: நான் தீபிகாவின் கணவன்!

 ஜேன் குடால்,  பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜேன் குடால், பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்

சஹானா

வினு விமல் வித்யா: நான் தீபிகாவின் கணவன்!

சஹானா

Published:Updated:
 ஜேன் குடால்,  பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜேன் குடால், பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்

வித்யாவுக்கு மூட்டுவலி என்பதால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக வினுவும் விமலும் வந்தனர்.

“என்ன வித்யாக்கா?”

“வயசாகுதுல்ல வினு... அதான் மூட்டுவலி எல்லாம் வருது” என்று அலுப்பாகச் சொன்னார் வித்யா.

“உங்களுக்கு என்ன பகவானி தேவியைவிட வயசாயிருச்சா? 94 வயசுல பின்லாந்துக்கு போய், உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில கலந்துகிட்டு, ரெண்டு பதக்கங்களை வாங்கி யிருக்காங்க!”

“நிஜமாதான் சொல்றியா வினு?”

“ஆமா, வித்யாக்கா. ஹரியானாவைச் சேர்ந்தவங்க பகவானி தேவி. 100 மீட்டர் ஸ்பிரின்ட் ஓட்டத்துல 24.74 நொடிகள்ல ஓடி தங்கமும், குண்டு எறிதல்ல வெண்கலப் பதக்கங்களையும் வாங்கியிருக்காங்க!”

“பகவானி இப்படின்னா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் 25 வயசுலேயே ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ப்ரீடம்’ விருதைப் பெற்றிருக்காங்க. மிக இளம் வயசுல இந்த விருதை வாங்கும் முதல் நபர் சிமோன் தான்” என்றாள் விமல்.

“ஏழு ஒலிம்பிக் பதக்கங்கள், 25 உலக சாம்பியன் பதக்கங்களை வாங்கிக் குவிச்ச சிமோனுக்கு அமெரிக்காவோட மிக உயரிய விருது கொடுத்தது சரியான தேர்வுதான்” - சந்தோஷம் பகிர்ந்தார் வித்யா.

“சிமோனுக்கு வாழ்த்துச் சொல்றதோட, மரினாவுக்கும் வாழ்த்துகளைச் சொல்லிடு வோம்” என்ற விமல் தொடர்ந்தாள்.

“.உக்ரைனைச் சேர்ந்த கணிதமேதை மரினா வியசோவ்ஸ்கா. ஸ்விட்சர்லாந்துல இருக்காங்க. கணிதத்துல நோபல்னு சொல்லப் படற ஃபீல்ட்ஸ் மெடல், நாலு வருஷங்களுக்கு ஒரு தடவை, 40 வயசுக்குக் கீழே இருக்கற கணித மேதைகளுக்கு வழங்கப்படுது. இந்த வருஷம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த மூணு பேரோட மரினாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. 86 ஆண்டுக்கால ஃபீல்ட்ஸ் மெடல் வரலாறுல விருதுபெறும் ரெண்டாவது பெண் மரினா. இரானைச் சேர்ந்த மரியா மிர்ஸாகினிதான் இந்த விருதை வாங்கிய முதல் பெண். இப்ப அவங்க உயிரோட இல்ல, புற்றுநோய்க்கு பலியாயிட்டாங்க.”

“ம்... அது ரொம்பக் கொடுமையான விஷயம் விமல். மரினாவோட தாய்நாடான உக்ரைன் போர்ச்சூழல் பத்தி என்ன சொல்றாங்க?” என்றாள் வினு.

“போர் ஆரம்பிச்சதுலேருந்து ரொம்பவே மனக் கஷ்டத்துல இருந்தாங்களாம். அவங்களால எதையும் யோசிக்க முடியலை யாம். ஆனாலும், பாடம் சொல்லிக் கொடுக் கறதுதான் கொஞ்சம் ஆறுதலைத் தந்ததுன்னு சொல்லிருக்காங்க.”

“ம்... பாவம்” என்ற வித்யா, விமலுக்கும் வினுவுக்கும் மோர் கொண்டுவந்து கொடுத்தார்.

“பங்கஜ் திரிபாதி தெரியுமா வினு?”

“தெரியுமே...மிர்ஸாப்பூர்ல நடிச்சவர் தானே... இந்திப் படங்கள், வெப் சீரிஸ்ல பார்த்திருக்கேன் விமல்.”

“அவர் சொன்ன விஷயங்கள் ரொம்ப அழகா இருந்துச்சு. தன்னோட அக்கா கல்யாணத்துல மிருதுளாவை பார்த்திருக்

கார் பங்கஜ். பார்த்தவுடனே 17 வயசுல காதல். இந்தப் பொண்ணோடதான் தன் வாழ்நாளைச் செலவிடணும்னு முடிவு பண்ணிட்டாராம். இவங்க ரெண்டு பேரோட திருமணப் பேச்சு வந்தப்ப, வரதட்சணை வேணாம்னு சொல் லிட்டாராம். அவங்க ஊர்ல வரதட்சணை இல்லாம கல்யாணமே நடக்காதாம். மாமனார் கொடுத்த டிரஸ்ஸகூட வாங்கிக்கலையாம். கல்யாணத்துக்கு அப்புறம் மும்பைக்கு குடி வந்திருக்காங்க. இவருக்கு உடனே நடிக்க சான்ஸ் கிடைக்கலை. மிருதுளாவுக்கு டீச்சர் வேலை கிடைச்சிருச்சு. பல வருஷங்களாவே பங்கஜ் சம்பாதிக்கலைனாலும், அவங்க கொஞ்சம்கூட வருத்தப்படாம, குடும்பத்தைக் காப்பாத்தியிருக்காங்க. பங்கஜை கொஞ்சம்கூட சங்கடப்படவிடலை. இதை மத்தவங்ககிட்ட சொல்லும்போது, மிருதுளாவை பாராட்டாம என்னை ஏன் பாராட்டுறாங்கன்னு கேட்கறார் பங்கஜ். ‘ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வளர்க்கறதுல மக்கள் வித்தியாசம் காட்டறாங்க. ஆண்-பெண் சம உரிமைகளைப் பத்தி பேசக் கூடிய பெண்ணியம் சின்ன வயசுலயிருந்தே குழந்தைகளுக்குள்ள புகுத்தப்படணும். என் மனைவியும் நானும் எதை பத்தி வேணும்னாலும் எங்க மகள்கிட்ட பேசும் சூழலை உருவாக்கியிருக்கோம்’னு சொல்லிருக்கார்!”

“செம்ம... பங்கஜுக்கு ஒரு பொக்கே பார்சல்” என்றார் வித்யா.

“இன்னொரு பொக்கேயும் வேணும் வித்யாக்கா. அமெரிக்க பிரஸ்மீட்ல, ‘எனக்கு அறிமுகம் தேவையில்ல... நான் தீபிகாவின் கணவன்’னு சொல்லிருக்கார் ரன்வீர் சிங். மனைவி தன்னைவிடப் பேரும் புகழும் அதிகமா வாங்கியிருந்தாலும் எத்தனை ஆண்கள் இப்படிச் சொல்றாங்க? இதைக் கேட் டதும் தீபிகா முகத்துல அப்படி ஒரு காதல் பொங்கி வழிஞ்சது” என்றாள் வினு.

“அடடா... நடிகர் சிவாஜி கணேசனோட மகள்கள் சொத்து கேட்டு, கோர்ட்டுக்குப் போயிருக்காங்கன்னு நியூஸ் பார்த்தேன்...”

“ஆமா விமல், 33 வருஷங்களுக்கு முன்னாடியே பெண்களுக்கு சொத்துல பங்கு கொடுக்கணும்னு சட்டமே வந்துருச்சு. என்ன தான் சட்டம் கொண்டுவந்தாலும் மக்கள் மனசு மாறினாதானே அது நடைமுறைக்கு வரும்? இல்லைனா இப்படித்தான் நியாயம் கேட்டு கோர்ட்டுக்குப் போக வேண்டி வரும்” என்றார் வித்யா.

“ம்... எப்பதான் மக்கள் மாறுவாங்களோ... நெருங்கிய உறவுல கல்யாணம் பண்ணினா குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பாங்கன்னு முப்பது வருஷங்களுக்கு முன்னாடியிருந்தே சொல்லிட்டிருக்காங்க. ஆனாலும், அதைப் பலரும் ஒரு பொருட்டாகவே மதிக்கிறதில்ல. ரத்த உறவுல கல்யாணம் பண்றதால ஆண்டுக்கு 6-8 லட்சம் குழந்தைகள், கேட்கும் சக்தி இல்லாம பிறக்கிறாங்க. இதுக்கு காரணம், பெற்றோரின் வம்சாவளியில கடத்தப்பட்ட மரபணுதான்னு சொல்றாங்க மருத்துவர் நேஜோ வர்கி. இவங்க இதுக்காகவே ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்காங்க. தென் னிந்தியாவுலதான் ரத்த உறவுல கல்யாணம் பண்ணி வைக்கிறது அதிகமா நடக்குதுன்னு சொல்றாங்க. அதுலயும் கர்நாடகாவுல இந்தக் காரணத்தால குறைபாட்டோடு பிறக்கிற குழந்தைகள் அதிகமாம்’’ என்றாள் வினு.

 ஜேன் குடால்,  பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்
ஜேன் குடால், பங்கஜ் திரிபாதி, சிமோன் பைல்ஸ்

“குஜராத்துல உள்ள ராஜ்கோட்ல வந்தனா கட்டாரியான்னு ஒரு பெண் செரிபரல் பால்சிங்கிற பெருமூளை வாதத்தால பாதிக்கப்பட்டவங்க. இந்த நோய்க்கு இது வரை மருத்துவம் இல்ல. அவங்களால நடக்க முடியாது. அம்மா, அப்பாவும் இப்ப இல்ல. தனியாளா ஜெராக்ஸ் கடை நடத்தறாங்க. மொபைல் ரீசார்ஜ் பண்றாங்க. ஆன்லைன்ல ஷாப்பிங் செஞ்சு கொடுக்கறாங்க. கால்களால போன், ரிமோட்டை எல்லாம் ரொம்ப இயல்பா ஹேண்டில் பண்றாங்க. சமைச்சும் சாப்பிட்டுக் கறாங்க. இவங்க அப்பாவோட நண்பரும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பும் கொஞ்சம் உதவறாங்க. ஆனா, வந்தனாவோட தன்னம்பிக் கையைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்குது. சின்ன விஷயத்துக்கெல்லாம் இது என்ன வாழ்க்கைன்னு அலுத்துக்கிறவங்க, வந்தனா வைப் பார்த்தா இனிமே அப்படிச் சொல்ல மாட்டாங்க.”

“உடல் சவால்களோட தனியா ஒரு பொண்ணு வாழறதை நினைச்சா கஷ்டமா இருக்கு விமல்..” என்றார் வித்யா.

“வித்யாக்கா, தொல்லுயிரியல் ஆய்வாளர் ஜேன் குடால் தெரியும்ல?”

“தன்னோட வாழ்க்கையையே சிம்பன்சி களை பற்றிய ஆராய்ச்சிக்காக அர்ப்பணிச்ச வங்கதானே... தெரியும், சொல்லு விமல்.”

“88 வயசாயிருச்சு. இப்போ பார்பி பொம்மை நிறுவனம் ஜேன் குடால் பொம்மையை வெளியிட்டிருக்கு. தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்கள்லேருந்து மறுசுழற்சி முறையில இந்த பொம்மைகளை பண்ணிருக்காங்க. இந்த பொம்மைகளைப் பார்த்த ஜேன், ஹேப்பி ஆயிட்டாங்க. அவங்களை பத்தி பாடப் புத்தகங்கள்ல இருக்காம். படிக்கிற குழந்தை களுக்கு இந்த பொம்மை, இயற்கை பத்தின புரிந்துணர்வை உருவாக்கும்னு சொல்லி யிருக்காங்க. உங்களுக்கு ஒரு பொம்மை ஆர்டர் போட்டு வாங்கிக் கொடுக்கறேன் வித்யாக்கா.”

“ஓ, தேங்க்ஸ் விமல்!”

“ஒரே இடத்துல அரைமணி நேரத்துக்கு மேல உட்காராதீங்க வித்யாக்கா. நடங்க. டாக்டர் சொன்ன எக்ஸர்சைஸ் பண்ணுங்க. சரியாயிருவீங்க. அடுத்த தடவை வெளியே

மீட் பண்ணுவோம். பை...” என்றாள் வினு.

மகிழ்ச்சியோடு கையசைத்து இருவருக்கும் விடைகொடுத்தார் வித்யா.

- அரட்டை அடிப்போம்...

****

வினு தரும் வித்தியாசமான தகவல்!

வெப்பக் காற்று பலூன் பயணம் என்பது இப்போது துருக்கி போன்ற சில நாடுகளில் சுற்றுலாச் செயல்பாடாகவே மாறிவிட்டது. இதுபோன்ற பலூனில் முதன்முதலாகப் பயணம் செய்த பெண் எலிஸபெத் திபிள். 1784 ஜூன் 4 அன்று இந்த அனுபவம் அவருக்கு வாய்த்தது.

அது இருக்கட்டும்... அடுத்த 21 ஆண்டுகளிலேயே (1805) சோபி பிளான்சார்டு என்பவர் வெப்பக் காற்று பலூனை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுவிட்டார். சோபியின் கணவருக்கு பலூன் இயக்கும் பணிதான். கணவரின் இறப்புக்குப் பிறகு, சோபியே பலூன் இயக்கத் தொடங்கிவிட்டார்.

நியாயமான வரிவிதிப்பா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி விலக்குகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எளிய, நடுத்தர குடும்பங்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது நியாயமான வரிவிதிப்பு என்று நினைக்கிறீர்களா?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

புதியதாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்றும் வரி உயர்த்தப் பட்டுள்ள பொருள்கள் யாவும் நம் நாட்டில் உள்ள பெரும் பான்மையான உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருள்களே. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏற்கெனவே பலர் தொழில் வணிகத்தில் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வணிகர்கள் தொழிலை விடும் சூழலுக்குத் தள்ளப்படுவர் என்பதே நிதர்சனம்!

- எம்.நிர்மலா இராமதாஸ், விழுப்புரம்

வரிகள் இல்லை எனில் சமுதாயத்திற்கு தேவையான வற்றை செய்ய அரசால் இயலாது. வசூலிக்கப்பட்ட வரிப்பணம் நலவாழ்வு, கல்வி, ஆட்சி நிர்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது பொருள் மற்றும் சேவை வரியாகும். தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. பல பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், சில பொருள்களுக்கு வரி விலக்கு ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இதனால், இதை வாழ்வில் பெரும்பாதிப்பு ஏற்படுத்தாத நியாயமான வரி விதிப்பு என்று கூறலாம்.

- த.வந்தனா, சென்னை-126

வரி இருந்தால்தான் மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்ய முடியும். உண்மைதான்... ஆனால், இவர்கள் செய்யும் எல்லாமே நலத்திட்டங்கள்தானா? நாடு இருக்கும் நிலையில் பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்து நாடாளுமன்றத்துக்கு புதுக் கட்டடம் கட்டுகிறார்கள். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்று பலரும் நம் வரிப்பணத்தில் சொகுசு கார்களை வாங்கிக் குவிக்கிறார்கள். கட்சிக்காரர்கள் கான்ட்ராக்ட் பெற்று கொள்ளையடிப் பதற்காக தேவையே இல்லாமல் ஊர் முழுக்க பல விதமான கட்டடங்களைக் கட்டுகிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், இவர்களுடைய மக்கள் சேவையை.

- டி.சகுந்தலா, பூந்தமல்லி

இந்த இதழ் கேள்வி

தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்டதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் நீங்கள் தங்கம் வாங்குவீர்களா? நகைச் சீட்டைத் தொடர்வீர்களா? நீங்கள் தங்கத்தை சேமிப்பாகக் கருதுகிறீர்களா அல்லது தங்கத்துக்கு பதிலாக சேமிப்புக்கான மாற்றுவழிகளைத் தேடுவீர்களா?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 26.7.2022