Published:Updated:

வினு விமல் வித்யா: சதுரங்க நகரத்தில் ஒரு செல்ஃபி!

 ஜென்னி ஹிப்பர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜென்னி ஹிப்பர்ட்

- சஹானா

வினு விமல் வித்யா: சதுரங்க நகரத்தில் ஒரு செல்ஃபி!

- சஹானா

Published:Updated:
 ஜென்னி ஹிப்பர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜென்னி ஹிப்பர்ட்

நேப்பியர் பாலத்தில் சதுரங்க வடிவங் களுக்கு மத்தியில் ஒரு செல்ஃபி எடுத்துவிட்டு, மூவரும் கடற்கரையில் வந்து அமர்ந்தார்கள்.

“விஷுவலா ரொம்ப அட்ராக்ட் பண்ணுச்சு இந்தப் பாலம். இப்ப வெயில்லயும் மழை யிலயும் கொஞ்சம் டல்லாயிருச்சு. மக்கள் இதைப் பார்க்கறதுக்காகவே வர்றதால, பாலத்துக்குக் காவல் இருக்கு போலீஸ்” என்றாள் வினு.

“சென்னையே விழாக்கோலம் பூண்டிருக்கு! தம்பி, தம்பி குடும்பம்னு அட்டகாசமா இருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார் வித்யா.

“காமன்வெல்த் கேம்ஸும் செஸ் ஒலிம்பியாடும் ஒரே நேரத்துல நடக்குது. கொரோனாவுக்கு அப்புறம் நடக்கற போட்டிகள்ங்கிறதால எல்லாருக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு.’’

``விமல், எனக்கு ஒரு சந்தேகம்... இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி, பிரபஞ்சத்தோட ஆரம்ப காலகட்டத்தைப் படம்பிடிச்சிருக்கிறதா சொல்றாங்களே, அது எப்படி? நானும் நியூஸ் எல்லாம் படிச்சுப் பார்த்தேன். சரியா புரியல.”

“வித்யாக்கா, சூரியனோட ஒளி பூமிக்கு வர்றதுக்கு சுமார் எட்டு நிமிஷங்கள் ஆகும்னு உங்களுக்குத் தெரியும்ல?”

“ஆமா...”

“அப்படின்னா நீங்க இப்ப பார்க்கிற சூரிய ஒளி, எட்டு நிமிஷத்துக்கு முன்னால இருந்த சூரிய ஒளி. அதே மாதிரிதான். ‘பிக் பேங்’க்கிற பெரு வெடிப்புலேருந்து பிரபஞ்சம் உருவாகி, முதல் விண்மீன்கள் தோன்றிய காலத்துல வந்த ஒளி, அபப்டியே டிராவல் ஆயிட்டே இருக்கு. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவுல நிலைநிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 1300 கோடி ஆண்டு களுக்கு முன்பு உருவான ஒளியைப் படம் பிடிச்சிருக்கு!”

  நஞ்சம்மா -  ரீனா வர்மா - ஜென்னி ஹிப்பர்ட்
நஞ்சம்மா - ரீனா வர்மா - ஜென்னி ஹிப்பர்ட்

“அதாவது எட்டு நிமிஷத்துக்கு முன்னால இருந்த சூரிய ஒளியை நாம பார்க்கிற மாதிரி, தொலைநோக்கி 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி தோன்றி, டிராவல் பண்ணிட்டி ருக்கிற ஒளியைப் படம்பிடிச்சிருக்கு, கரெக்டா?”

“கரெக்ட் வித்யாக்கா. பிரபஞ்சத்தோட ஆரம்பகால ஒளியைப் பார்க்கும்போது அதோட முற்காலத்தைப் பார்க்கிறோம் தானே?”

“ஆமா, ஆச்சர்யமா இருக்கு விமல். டெலஸ் கோப்புக்கு அவ்வளவு பவர் உண்டா?”

“கண்களுக்குப் புலப்படாத இந்த அகச் சிவப்புக் கதிர்களையும் பார்க்கக்கூடிய சக்தி, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிக்கு இருக்கு வித்யாக்கா!”

“செம்ம! சரி, வாங்க... சூடா பருத்திப் பால் குடிப்போம்” என்றார் வித்யா.

சுக்கு போட்ட சூடான பருத்திப்பாலை ருசித்தபடியே, ‘`வித்யாக்கா, நீங்க கேமரா வையே எடுக்கிறதில்லையா?” என்றாள் வினு.

“கையடக்க கேமரா இருந்தப்ப தீவிரமா எடுத்துட்டிருந்தேன். இப்ப நல்ல கேமரா வாங்கினதும் அந்த ஆர்வமே இல்லாம போயிருச்சு வினு...”

“உங்க வயசுக்கு இந்தப் புலம்பல் எல்லாம் டூ மச் வித்யாக்கா. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி ஹிப்பர்ட், 70 வயசுல உலகத்தையே சுத்திச் சுத்தி போட்டோ எடுக்கிறாங்க.

11 வயசுல அவங்களுக்கு ஒரு கேமரா கிடைச்சுதாம். அதுலயிருந்து போட்டோகிராபி மேல ஆர்வம் வந்திருச்சாம். கல்யாணம், குழந்தைங்கன்னு ஆன பிறகு போட்டோகிராபி மேல கவனம் செலுத்த முடியலை. டைவர்ஸ் ஆனப்ப அந்த வலியை ஜென்னியால தாங்கிக்க முடியல. அப்பதான் போட்டோ கிராபி கைகொடுத்திருக்கு. 60 வயசுல டிஜிட்டல் கேமரா வாங்கினாங்க. ஃபின்லாந்து, மங்கோலியான்னு பனிப்பிரதேசங்கள்ல பல மணி நேரம் காத்திருந்து படம் பிடிச்சிருக்காங்க. மங்கோலியாவுல ஒரு நாளைக்கு 19 மணி நேரம் நாடோடி மக்களோட தானும் சேர்ந்து நடுங்கும் குளிர்ல நடந்திருக்காங்க. ஆபத்து களையும் சந்திச்சிருக்காங்க. ஆனா, அந்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. ஒவ்வொரு படமும் அவ்வளவு அட்டகாசம்! படத்தைப் பார்க்கும்போதே உழைப்பு தெரியுது. இவங்களுக்கு விலங்குகளையும் பறவைகளையும் படம் எடுக்கறதுதான் பிடிச்சிருக்காம்.”

“ஓ... கிரேட் வினு... நானும் மறுபடி கேமராவை எடுக்கறேன், கலக்கறேன்’’ உற்சாகமாகச் சொன்னார் வித்யா.

‘`சூப்பர் வித்யாக்கா... 75 வருஷங்கள் கழிச்சு பாகிஸ்தான் ராவல்பிண்டியில உள்ள தன்னோட வீட்டுக்குப் போயிருக்காங்க

90 வயசு ரீனா வர்மா. அங்கே அவங்களுக்கு மேளதாளத்தோட வரவேற்பு கிடைச்சிருக்கு. ரீனாவும் செம ஹேப்பி... கேள்விப்பட்டீங்களா'’ என்றாள் விமல்.

“இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில இந்தியா வந்த குடும்பமா?”

“ஆமா, வினு. 15 வயசுல இவங்க குடும்பம் இந்தியாவுக்கு வந்துடுச்சு. ஆனாலும் ரீனா வுக்குத் தன்னோட பால்யகால வீடு பத்தின ஏக்கம் இருந்துட்டே இருந்திருக்கு. பல வருஷங்கள் கழிச்சு ஒரு இன்டர்வியூல இந்த விஷயத்தை அவங்க ஷேர் பண்ணிருக்காங்க. அதுக்குப் பிறகு அவங்க போறதுக்கான ஏற்பாடுகள் நடந்துச்சு. கோவிட்னால தள்ளிப்போய், இப்போ ஆசை நிறை வேறியிருக்கு. ஆனா, அந்த அனுபவங்களை ஷேர் பண்ணிக்கத்தான் அவங்ககூடப் பிறந்த ஒருத்தரும் இப்போ உயிரோட இல்லை. ‘எங்கப்பா கஷ்டப்பட்டு கட்டின வீடு. நாங்க எல்லாம் வருஷம் செல்லச் செல்ல பிரிவினையை ஏத்துக்கிட்டோம். அம்மாவால கடைசிவரை ஏத்துக்க முடியல. வீட்டுக்குப் போனதுல மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனிமையை உணர்ந் தேன்’னு சொல்லிருக்காங்க ரீனா.”

“ம்... அவங்க உணர்வை நம்மால ஈஸியா புரிஞ்சுக்க முடியாது. ‘விராட பர்வம்’ பார்த்தீங்களா நீங்க ரெண்டு பேரும்?” என்றார் வித்யா.

வினுவும் விமலும் இல்லை என்று தலையாட்டினர்.

“நான் இப்போதான் பார்த்தேன். வெண்ணிலாங்கிற கேரக்டர்ல சாய்பல்லவியும் நக்ஸல் ரவி கேரக்டர்ல ராணா டகுபதியும் நடிச்சிருக்காங்க. வெண்ணிலாகிட்ட யிருந்துதான் கதை ஆரம்பிக்குது. கவிதை களாலயும் புத்தகங்களாலயும் ரவியை நேசிக்க ஆரம்பிக்கிறாங்க வெண்ணிலா. தாழ்த்தப் பட்டதா கருதப்படுற மக்கள் வாழுற கிராமங்கள்ல காவல்துறையும் அதிகார வர்க்கமும் செய்யற அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கறாங்க நக்ஸல் இயக்கத்தினர். அதனால கிராமங்கள் நக்ஸல்கள் மேல ரொம்ப அன்பா இருக்காங்க.

ஒரு நாள் வெண்ணிலா குடும்பம் காவல் துறையினரால பாதிக்கப்படும்போது ரவியே வந்து காப்பாத்துறார். வெண்ணிலாவுக்குக் காதல் அதிகமாகுது. கல்யாணம் நிச்சயமாகும் போது ரவியைத் தேடிக் கிளம்பிடறாங்க. பல போராட்டங்களுக்குப் பிறகு, சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்) மூலம் ரவியைச் சந்திக்கிறாங்க. அவரோ தன் வாழ்க்கையில காதலுக்கு இடமில்லைன்னு சொல்லிடறார். தான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ ரவியைக் கூப்பிடலை, அவரோட லட்சிய வாழ்க்கையில தானும் இருக்க விரும்புறதா சொல்றாங்க. அதுக்காக இயக்கத்துல சேர்ந்து, அர்ப் பணிப்போட வேலை செய்யறாங்க. இந்த விதத்துல வெண்ணிலா கேரக்டரை ரொம்ப வித்தியாசமா செஞ்சிருக்காங்க. நக்ஸல்களோட நியாயம், அதிகார வர்க்கத்தோட அராஜகம்னு ரொம்ப நல்லா வந்த சினிமா, க்ளைமாக்ஸ்ல தடுக்கி விழுந்திருச்சு. அதை இன்னும் நல்லா பண்ணியிருந்தா, இந்தப் படம் இன்னும் பிரமாதமா வந்திருக்கும்” - விளக்கமாகச் சொன்னார் வித்யா.

“ஓ... பார்த்துடுவோம்... விராட பர்வம், கார்கினு அடுத்தடுத்து கலக்கறாங்க சாய் பல்லவி. அடுத்த வருஷம் சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைச்சா ஆச்சர்யமில்ல...'' என்றாள் விமல்.

“இந்த வருஷம் தேசிய விருது வாங்கின எல்லாப் பெண்களையும் வாழ்த்திடுவோம். குறிப்பா, `அய்யப்பனும் கோஷியும்’ படத்துல ‘கலகாத்தா’ பாடலை இருளர் மொழியில எழுதி, பாடின நஞ்சம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து. அவங்க ஆடு மேய்க்கும்போது தானே எழுதி பாடின பாட்டாம் அது. சூப்பர்ல' என்றாள் வினு.

``சரி, கிளம்புவோமா?” என்று விமல் கேட்கவும் வித்யாவும் வினுவும் எழுந்

தார்கள்.

தம்பி குடும்பத்துடன் குழந்தைகள் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி, மூவரின் வண்டிகளும் வெவ்வேறு திசைகளில் பறந்தன.

- அரட்டை அடிப்போம்...

***

வினு தரும் வித்தியாசமான தகவல்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் பைக்கில் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர், உத்தரப்பிரதேசத்தில், நரோரா என்ற சிறு நகரத்தைச் சேர்ந்த ரோஷினி ஷர்மா.

வினு விமல் வித்யா: சதுரங்க நகரத்தில் ஒரு செல்ஃபி!

சேமிப்புக்கு, தங்கம் வாங்குவீர்களா? மாற்றுவழிகளைத் தேடுவீர்களா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப் பட்டதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் நீங்கள் தங்கம் வாங்குவீர்களா? நகைச் சீட்டைத் தொடர்வீர்களா? நீங்கள் தங்கத்தை சேமிப்பாகக் கருதுகிறீர்களா அல்லது தங்கத்துக்கு பதிலாக சேமிப்புக் கான மாற்றுவழிகளைத் தேடுவீர்களா?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு இல்லாத மற்ற முதலீட்டுத்துறைகள் ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட், பண பத்திரங்கள் இவற்றைவிட எளிதில் காசாக்கக்கூடிய நிலையான சந்தை மதிப்பைக் கொண்டது, தங்கம். கடந்த கால வரலாற்றில் மற்ற துறைகளில் தலைகீழ் மாற்றம் வந்தபோதும் சிறிய ஏற்ற இறக்கங்களோடு பண மதிப்பில் எப்போதும் ஏறுமுகத்தில் இருப்பது தங்கம்தான். அதனால் மாற்றுவழியை யோசிப்பதற்கான வாய்ப்பே இல்லை.எனவே கண்டிப்பாக தங்கம்தான் வாங்குவேன், நகைச்சீட்டு உட்பட அனைத்து வழிகளையும் தொடர்வேன்.

- இந்துமதி இராஜகோபால், மன்னார்குடி

வரி உயர்வால் மட்டுமே தங்கம் விலை உயர்வதில்லை. பெரும்பணக்காரர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்வதால் தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வரும் நாள்களில் அதிகம் உயரும். எனவே அதிக வட்டி தரும் அஞ்சலகச் சேமிப்பு மற்றும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து உத்தரவாதத்துடன் திரும்பப் பெற்று தங்கம் வாங்கலாம். வங்கியில் தங்கப் பத்திரங்கள் வாங்கி வட்டியுடன் பணம் அல்லது அன்றைய மதிப்பிலான தங்கம் வாங்குவதும் சிறந்த பலன் தரும் சேமிப்பாகும்.

- தி.பேபி சரஸ்வதி, தாரமங்கலம்

இவ்வளவு விலை கொடுத்து தங்கம் வாங்கி அதை வீட்டில் வைக்க பயந்து லாக்கருக்கு செலவுசெய்து பத்திரப்படுத்தி, நம் நகைகள் தூங்குவதால் என்ன பயன்? அந்தப் பணத்தை போஸ்ட் ஆபீஸ் , வங்கி, மியூச்சுவல் ஃபண்டு, ஷேர் மார்க்கெட் என சேமித்து வீடு, மனை வாங்கலாமே.

- விஜயலட்சுமி விஜய், மும்பை

இந்த இதழ் கேள்வி

மொபைல் போன் உலகத்துக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கு செஸ், கேரம் போன்ற இண்டோர் கேம்ஸில் ஆர்வம் வரவழைக்க என்ன செய்யலாம்? இந்த விஷயத்தில் உங்கள் அனுபவம் பகிருங்களேன்!

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 9.8.2022