Published:Updated:

வினு விமல் வித்யா: புல்லட் பெண்களும் இன்ஜினீயரிங் பாட்டியும்!

 மறியும்ம,  இந்திய வீராங்கனைகள்
பிரீமியம் ஸ்டோரி
மறியும்ம, இந்திய வீராங்கனைகள்

- சஹானா

வினு விமல் வித்யா: புல்லட் பெண்களும் இன்ஜினீயரிங் பாட்டியும்!

- சஹானா

Published:Updated:
 மறியும்ம,  இந்திய வீராங்கனைகள்
பிரீமியம் ஸ்டோரி
மறியும்ம, இந்திய வீராங்கனைகள்

புல்லட் ஓட்டிக்கொண்டு வந்த வினுவை விமலும் வித்யாவும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

“வாவ்! ரொம்ப நாளா புல்லட் ஓட்டக் கத்துக்கணும்னு சொல்லிட்டிருந்தே... கத்துக் கிட்ட விஷயத்தைச் சொல்லாம, இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கறே!” என்று சிரித்தார் வித்யா.

“போன மாசம் ரெண்டு நாள் பெண் களுக்காக புல்லட் பயிற்சி கொடுத்தாங்க. அதுல கலந்துக்கிட்டேன். நீங்க ரெண்டு பேரும் கத்துக்கறீங்களா?”

“ஐயோ... அதெல்லாம் என்னால முடியாதுப்பா... ‘கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் எ புல்லட்டு’ன்னு உன் பின்னால உட் கார்ந்துட்டு வர்றதுனா ஓகே!” என்றார் வித்யா.

“ புல்லட் யாருது வினு?”

“என் அண்ணனோடது விமல்... பொண் ணுங்களுக்கு எதுக்கு புல்லட்டுனு கத்துக் கொடுக்க மாட்டேனுட்டான். அதுக்காகவே கத்துக்கிட்டேன். அது என்ன ஆண்களால ஓட்ட முடியறதை நம்மால ஓட்ட முடியா தான்னு ஒரு ஆர்வம். அவ்வளவுதான்” என்றாள் வினு.

“சரி, சரி... வீட்டுக்குள்ளே போவோம். விமல் நமக்காக பலாப்பழப் பாயசம் பண்ணி வச்சிருக்கா” என்று விமல் வீட்டுக்குள் நுழைந்தார் வித்யா.

“இந்தாங்க உங்க ரெண்டு பேருக்கும் ரம்புட்டான் பழம். சென்னையில எங்கே பார்த்தாலும் குவிஞ்சு கிடக்கு. ஆனா, விலை தான் ரொம்ப அதிகம்” என்று ஆளுக்கு ஒரு பையைக் கொடுத்தாள் வினு.

மூன்று பேரும் பாயசத்தைக் குடித்துக் கொண்டே, காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

“இந்த தடவை காமன்வெல்த் போட்டிகள்ல இந்திய வீரர்கள் கலக்கிட்டாங்க! அதுக்குதான் இந்தப் பாயசமா?” என்று கண்ணடித்தாள் வினு.

“அப்படியே வெச்சுக்க... 61 பதக்கங்களை வாங்கிக் குவிச்சிருக்காங்களே... கிரேட். இதுல 22 தங்கங்களை வாங்கி, பதக்கப் பட்டியல்ல இந்தியா நாலாவது இடத்துல இருக்கு. 67 தங்கங்களோடு மொத்தம் 178 பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலியா முதலிடத்துல இருக்கு. மீராபாய் சானு, சாக்‌ஷி மாலிக், நீத்து கங்கா, நிகத் சரீன், வினேஷ் போகத், பி.வி. சிந்து... இப்படி நிறைய பேர் தங்கங்களை அள்ளியிருக்காங்க. வினேஷ்

போகத், காமன்வெல்த் போட்டிகள்ல தொடர்ந்து மூணு முறை தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ணுங்கிற பெருமையையும் பெற்றிருக்காங்க. பி.வி.சிந்து வாங்கினது, காமன்வெல்த் போட்டி கள்ல இந்தியாவின் இருநூறாவது தங்கமாம். இது தவிர, இந்தியப் பெண்கள் அணியும் பதக்கங்களை வாங்கியிருக்கு” என்றாள் விமல்.

“பிரமாதம்... இந்தப் பதக்க வேட்டை, பலரையும் உற்சாகப் படுத்தும்” என்றாள் வினு.

 மறியும்ம,  இந்திய வீராங்கனைகள்
மறியும்ம, இந்திய வீராங்கனைகள்

``நம்ம ஊர்ல பெண்கள் புல்லட் ஓட்டறாங்க... ஜார்கண்ட்ல என்ன நடந்துச்சு தெரியுமா? தஹுடோலி கிராமத்தைச் சேர்ந்தவங்க மஞ்சு ஓரான். அவங்க அம்மா நோயாளி. அப்பா வயசானவர். மனநலம் குன்றிய தம்பியும் ஒரு அண்ணனும் மஞ்சுவோட இருக்காங்க. இவங்களுக்கு விவசாயம் செய்யணும்கிறது நீண்டகால லட்சியம். அவங்க நிலத்தோட, இன்னும் சிலர்கிட்ட நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி, விவசாயம் செய்யறாங்க. போன வருஷம் கிடைச்ச வருமானத்தோட லோன் போட்டு ஒரு டிராக்டர் வாங்கினாங்க. இந்த வருஷம் பிரவீன் மின்ஜ் என்பவரோட வயலைக் குத்தகைக்கு எடுத்து உழுதாங்க. அப்பதான் பிரச்னை ஆரம்பிச்சது. ஓரான் சமூகத்துல பெண்கள் டிராக்டர் ஓட்டக் கூடாதாம், வயலை உழக் கூடாதாம். மஞ்சுவை ஒட்டுமொத்த கிராம மக்களும் சேர்ந்து எதிர்க்கிறாங்க. இன்னும் சிலர் பிரவீனை ஊரைவிட்டுத் தள்ளி வச்சிருக்கிறதால, அவரோட நிலத்துல உழக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா, ஊரைவிட்டுத் தள்ளி வைக்கிறதுக்கு முன் னாடியே நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துட் டேன். அந்தக் கட்டுப்பாடு எனக்கு வராதுங் கிறாங்க மஞ்சு. இப்ப விஷயம் இன்னும் முக்கியமானவங்ககிட்ட போயிருக்கு. அவங்க என்ன சொல்லப் போறாங்களோங்கிற கவலையில் இருக்காங்க மஞ்சு” என்றார் வித்யா.

“ஐயோ பாவமே... உழைச்சுப் பிழைக்கிற பெண்ணை இந்தப் பாடா படுத்துவாங்க? நம்ம கிராமங்கள் எல்லாம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ...” கவலையோடு சொன்னாள் விமல்.

“ஆந்திராவுல உள்ள கிமுடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோடா சின்னாளம்மா அதிகம் படிக்காதவங்க. ஆனா, புத்திசாலி. அந்த மலைக்கிராமத்துல மழைக்காலத்துல நீர் தேங்கி விவசாயம் பாதிக்கிறதைப் பார்த் துட்டு, ஒரு தடுப்பணை கட்டினா நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்னு ஒரு இன்ஜினீயர் மாதிரியே பிளான் சொல்லி யிருக்காங்க. அந்தக் கிராம மக்களும் அவங்க மேல நம்பிக்கை வச்சு, நிதி திரட்டி, ஒரு தடுப் பணையைக் கட்டிட்டாங்க. இப்ப தடுப் பணையால கிடைச்ச பலன்ல மகிழ்ச்சியா இருக்கும் அவங்களை ‘இன்ஜினீயர் சின்னாளம்மா’ன்னு கூப்பிடறாங்க. இதை எதையும் கண்டுக்காம தன் வேலையைப் பார்த்துட்டிருக்காங்க 75 வயசு கோடா சின்னாளம்மா” என்றார் வித்யா.

“சூப்பர் வித்யாக்கா... நானும் படிச்சேன். பாசனத்துக்காக ஒரு தடுப்பணை கட்டச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்டும் அது நடக்கல. சின்னாளம்மா தன்கிட்ட இருக்கிற பணத்தையும் போட்டு, யோசனையும் சொல்லி, நிதியும் திரட்டி கட்டிருக்காங்க. இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு. இப்போ அரசாங்க அதிகாரிகள் மீதி வேலையை முடிச்சுக் கொடுக்குறதாகவும் செலவு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யறதாவும் சொல்லி யிருக்காங்க. அரசு இதை முன்னாடியே செஞ்சிருக்க வேண்டாமா... தனி நபர்களால எப்படி இப்படி ஒரு பொதுக் காரியத்தைச் செய்ய முடியும்... சின்னாளம்மாவோட அறிவுத்திறன் சிலிர்க்க வைக்குது!” என்றாள் வினு.

“ஆமாம். கேரளாவுல 16 வயசு அஃப்ரா ரஃபீக் என்ற பெண், மஸ்குலர் அட்ராபிங்கிற அரிய மரபணு குறைபாட்டால பாதிக்கப் பட்டிருந்தாங்க. எவ்வளவு வலி இருந்தாலும் படிப்புலயும் பாட்டு பாடுறதுலயும் திறமை யைக் காட்டினாங்க. அஃப்ராவோட சின்ன தம்பிக்கும் இந்த நோய் வந்துருச்சு. இதை அஃப்ராவால தாங்க முடியல. தான் அனுபவிக் கிற வலியை தன் தம்பி அனுபவிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்க. போன வருஷம் தம்பியோட சிகிச்சைக்காக ஒரு வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவுல உதவி கேட் டாங்க. 47 கோடி ரூபாய் கிடைச்சது. சிகிச்சை போக மீதி உள்ள பணத்துல இன்னும் ரெண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்திருக்காங்க. மீதிப் பணத்தை அரசாங்கத்துகிட்ட கொடுத் துட்டாங்க. சில நாள்களுக்கு முன்னால நோய் தீவிரமாகி, அஃப்ரா இறந்து போயிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...” வருத்தமாகச் சொன்னாள் வினு.

``பாவம்... கேரளாவோட தலைச்சேரியில ஆங்கில மீடியத்துல படிச்ச முதல் இஸ்லாமியப் பெண் மறியும்மா மயானளி. அந்தக் காலத்துல இவங்க படிக்கிறதுக்கு நிறைய தடைகள் வந்துச்சு. அதையெல்லாம் தாண்டி படிச்சு முடிச்சாங்க. வரதட்சணைக்கு எதிரா பெண்கள் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி, பெண்களோட உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவங்க. 98 வயசுல உயிரிழந்திருக்காங்க. அவங்களுக்கும் நம்ம அஞ்சலி” என்றார் வித்யா.

“ம்.... இன்னொருத்தருக்கும் அஞ்சலி செலுத்திடுவோம். பானு இக்பால்னு ஒரு எழுத்தாளர் மார்பகப் புற்றுநோயால பாதிக்கப் பட்டிருந்தாங்க. சிகிச்சை எடுத்துக்கிட்டே, அதைப் பத்தின விழிப்புணர்வை சமூக வலை தளங்கள்ல போஸ்ட் பண்ணிட்டே இருந் தாங்க. ‘மனப்பொழிவின் மாய வாசனை’னு ஒரு புத்தகமும் வெளியிட்டாங்க. நோயால் இறந்துட்டாங்க. அதிர்ச்சியா இருந்துச்சு” என்றாள் விமல்.

‘`புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிச்சு, உறுப்புகளை நீக்கிட்டா தப்பிச்சிடலாம். கட்டியை மட்டும் எடுத்தா அது மறுபடியும் வர்றதுக்கு சான்ஸ் அதிகமா இருக்கு. உயிர் முக்கியம்னு நினைச்சா, உறுப்புகளை இழக்கிறது பெரிய விஷயமா தெரியாது. இன்னும் விழிப்புணர்வு கொடுக் கணும். சரி, டைம் ஆச்சு. என் அண்ணன் புல்லட் கேட்டு மெசேஜ் போட்டுட்டான். கிளம்பலாமா வித்யாக்கா?” என்றாள் வினு.

“ஓகே, பை விமல்” என்று சொல்லிவிட்டு, வினுவும் வித்யாவும் கிளம்பினார்கள்.

புல்லட் சத்தம் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தது.

- அரட்டை அடிப்போம்...

வினு தரும் வித்தியாசமான தகவல்

ஓவியக் கலைஞர் ராடா அக்பர் (இன்ஸ்டாகிராம்: radaakbar) தன் படைப்புகளின் வழியாக பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் காட்சிப்படுத்துகிறார். கலையை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தி, பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதே இவரது பாணி.

2019-ம் ஆண்டு முதல், சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கவும், தனது நாட்டின் வரலாற்றில் பெண்கள் ஆற்றிய முக்கிய பங்கைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் ‘சூப்பர் வுமன்’ கண்காட்சிகளை நடத்தி வருகிறார். பெண்கள் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கவும் முயற்சி செய்து வருகிறார். அரசியல், பொருளாதாரம் மற்றும் மத நம்பிக்கைகள் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் சமூகச் சட்டங்களைக் கண்டிக்க கலை உதவுகிறது என்று இவர் நம்புகிறார்.

ராடா அக்பர் வாழும் நாடு ஆப்கானிஸ்தான் என்பதுதான் முக்கிய செய்தி.

குழந்தைகளுக்கு இண்டோர் கேம்ஸில் ஆர்வத்தை வரவழைப்பது எப்படி?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

மொபைல் போன் உலகத்துக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கு செஸ், கேரம் போன்ற இண்டோர் கேம்ஸில் ஆர்வம் வரவழைக்க என்ன செய்யலாம்? இந்த விஷயத்தில் உங்கள் அனுபவம் பகிருங்களேன்!

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

என் பேரன் உணவு, உறக்கமின்றி எப்போதும் செல் போனில் கேம்ஸ் விளையாடுவான். வீட்டில் உள்ளவர் செல்போனை அழுது வாங்கிக் கொண்டு அறைக் கதவை மூடிக்கொண்டு செல்போனில் மூழ்கி இருப்பான். அதட்டல், மிரட்டல், பட்டினி... எதுவும் அவனிடம் எடுபடாது.கொரோனா லாக்டௌன் அவனுக்கு வசதியாகிவிட்டது.பார்வை பாதிக்கப்பட்டதால் கண் மருத்துவர் அவனைப் பரிசோதித்துக் கண்ணாடி அணிவித்து கவுன்சிலிங் கொடுத்தார். அவனை ஓரளவுக்கு ஒழுங்குபடுத்தி உள்ளோம். அவனுக்கு காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம், படிப்பதற்கு மேலும் ஒரு மணி நேரம் என செல்போனுக்கு நேரம் ஒதுக்கியுள்ளோம். அவன் மாலையில் ஒரு மணி நேரம் கட்டாயம் வெளியே சென்று விளையாட வேண்டும். குழந்தைகளை அதிகம் கண்டிக் காமல் அவர்கள் போக்கிலேயே சென்று திருத்த வேண்டும்.

- பி.கீதா, திருச்சி-21

மொபைல் கொடுத்தால் எந்தச் சேட்டையும் பண்ணாமல் அதிலேயே மூழ்கி இருப்பார்கள் என்பது அனைவரது எண்ணம். ஆனால் குழந்தைகள், பெற்றோர்கள் தங்களுடன் விளையாடுவதையே அதிகம் விரும்புகிறார்கள். கேரம், செஸ் போன்ற இண்டோர் கேம்களை கற்றுக் கொடுத்து அவர்களுடன் பெற்றோர்கள் அடிக்கடி விளை யாடலாம். எங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரத்துக்கு மேல் மொபைல் பார்க்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதைப் பின்பற்றினால் அவர் களுக்குப் பிடித்தது கிடைக்கும். பள்ளிகளில் கேம்ஸில் கலந்துகொள்ள என்கரேஜ் செய்வதோடு அவர்கள் விளையாடும்போது தவறாமல் பள்ளிக்குச் சென்று உற்சாகப்படுத்தலாம்.

- ம.ஹர்ஷிகா, கும்பகோணம்

வெர்ச்சுவாலிட்டிக்கும், ரியாலிட்டிக்கும் உள்ள வித்தி யாசத்தை உணர வைக்க, முதலில் மொபைல் போனி லேயே செஸ், கேரம் போன்ற `கேம் ஆப்'களை டௌன் லோடு செய்து விளையாட வைக்கலாம். அவர்களுக்குள் விளையாட்டு பற்றிய தெளிவு ஏற்பட்ட பின், நேரடியாக விளையாட வைக்கலாம். நான்கு சுவருக்குள் அமர்ந்து மொபைல் போனை பயன்படுத்துவதைவிட, வெளிக் காற்றில் உற்சாகமாக விளையாடுவதால், உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பொறுமையாக எடுத்துச் சொல் வதன் மூலம், அவர்களை மெள்ள அந்தப் பழக்கத்தி லிருந்து விடுவிக்க முடியும்.

- செந்தில்குமார்.எம், சென்னை-78

இந்த இதழ் கேள்வி

‘‘இலவசத் திட்ட அறிவிப்புகள் நாடு தன்னிறைவு அடைவதைத் தடுக்கும். வரி செலுத்துவோர் மீதான சுமையை அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கும்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ‘‘இலவசங்களும் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை’’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு வழக்கு விசாரணையின்போது கூறியிருக்கிறார். இந்த இரண்டு கருத்துகளையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 23.8.2022