Published:Updated:

வினு விமல் வித்யா: உங்கள் வேலையில் பயப்படுவதற்கோ, அவமானப்படுவதற்கோ எதுவும் இல்லை!

 சச்சீன் லிட்டில் ஃபெதர்,  மீனா,  ஆலிசன் ஃபெலிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சச்சீன் லிட்டில் ஃபெதர், மீனா, ஆலிசன் ஃபெலிக்ஸ்

- சஹானா

வினு விமல் வித்யா: உங்கள் வேலையில் பயப்படுவதற்கோ, அவமானப்படுவதற்கோ எதுவும் இல்லை!

- சஹானா

Published:Updated:
 சச்சீன் லிட்டில் ஃபெதர்,  மீனா,  ஆலிசன் ஃபெலிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சச்சீன் லிட்டில் ஃபெதர், மீனா, ஆலிசன் ஃபெலிக்ஸ்

ஜூஸ் கடைக்குள் நுழைந்ததும் வினு, விமல், வித்யா ஆகிய முவரின் முகங்களும் மலர்ந்தன. ஆளுக்கு ஒரு மில்க்‌ஷேக் ஆர்டர் செய்துவிட்டு, அரட்டையை ஆரம்பித்தனர்.

“வித்யாக்கா, இந்த விஷயத்தைக் கேட்டீங்கன்னா வெளியில இருக்கும் வெயிலைவிட அதிகமா சூடா வீங்க” என்று நிறுத்தினாள் வினு.

“இப்பதான் ஏசி குளிர்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்... அதுக்குள்ள என்ன சொல்லப் போற?”

“கேரளாவுல 74 வயசு மாற்றுத்திறனாளி எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியில, இளம்பெண் எழுத்தாளரைத் தன் மடியில் உட்கார வச்சு, பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டாராம். அந்தப் பொண்ணு வழக்குத் தொடுத்தாங்க. இதை விசாரிச்ச நீதிபதி, ‘நீங்க பாலியல் அத்துமீறல் நடக்குற விதத்துல ஆடை அணிஞ்சிருக்கீங்க... அதோட நீங்க தலித் பெண்ணா இருக்கிறதால குற்றம் சாட்டப்பட்டவர் உங்களைத் தொடு வதற்கான வாய்ப்பு இல்ல. அதனால அவருக்கு ஜாமீன் வழங்குறேன்னு சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்காரு!”

“எவ்வளவு மோசமான வாதம்? ஒரு நீதிபதியே இப்படிச் சொன்னா என்ன பண்றது?”

“விசாரிச்சதுல குற்றம் நடந்தது, நடக்கலைன்னு சொல்லலாம். ஆனா, அவரே காரணங்களைத் தேடிக் கண்டு பிடிக்கிறாரு... ரொம்ப அருவருப்பா இருக்கு” என்றாள் வினு.

“இன்னொரு வழக்கு பத்தி நான் சொல்றேன்” என்றாள் விமல்.

“நீயும் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போறியா?”

“இல்ல வித்யாக்கா. நிஜ ‘கார்கி’ பத்தி சொல்லப் போறேன். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லதிகாவோட அப்பாவுக்கு ரெண்டு பெண் குழந் தைகள். மகன் இல்லைங்கிற ஆத்திரத் துல அடிக்கடி மனைவியைப் போட்டு அடிப்பாராம். இதைப் பார்த்து நான் ஏன் பொறந்தேன்னு லதிகா அழு வாங்களாம். ஒருநாள் அம்மாவோட அலறல் கேட்டுக் கண்விழிச்சுப் பார்த்திருக் காங்க. ஜன்னலுக்கு வெளியே இவங்க அம்மா, ‘என்னைக் காப்பாத்துங்க’ன்னு அலறிக்கிட்டு இருந்திருக்காங்க. இவங்க அப்பா கேன்ல இருந்த கெரசினை அம்மா மேல ஊத்திக் கிட்டே இருந்திருக்கார். அவங்க எரிஞ்சு போயிட்டாங்க. தன்னோட அம்மாவைக் கொன்ன அப்பாவுக்குத் தண்டனை கொடுக்கணும்னு ஆறு வருஷமா லதிகா போராடிட்டு இருக் காங்க. பலமுறை முதல்வருக்குக் கடிதம் எழுதியும் பலன் இல்ல. அதனால ரத்தத்தால் கடிதம் எழுதியிருக்காங்க. அது மீடியாவுல வைரலாச்சு. இதைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் பணம் வாங்காம வாதாட முன்வந்தார். இப்போ லதிகாவோட அப்பா பன்சாலுக்கு ஆயுள் தண்டனை கிடைச்சிருக்கு.”

வினு விமல் வித்யா: உங்கள் வேலையில் பயப்படுவதற்கோ, அவமானப்படுவதற்கோ எதுவும் இல்லை!

“என்ன ஒரு கொடுமை... ஆண் குழந்தை பிறக்கறதும் பிறக்காததும் தன்னாலதாங்கிற அடிப்படை அறிவுகூட இல்லை?”

“அந்த அறிவு இருந்தா மகன் இல்லைங் கிறதுக்காக, மனைவியைக் கொளுத்துவாங் களா வினு?”

“லதிகா பதினைஞ்சு வயசுல அம்மா எரிஞ்சதைப் பார்த்தாங்க. இப்பவரை அழு துட்டே இருக்காங்க. பலரும் ‘உங்க அப்பா வுக்கே தண்டனை வாங்கித் தர்றியா’னு திட்டினாங்களாம். ‘என் அப்பாவா இருந் தாலும், அவர் கொன்னது எங்கம்மாவை. அவரை எப்படி விடமுடியும்? இப்பதான் எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா யிருக்கு. பெத்தவங்க இல்லாம, நானும் என் தங்கையும் வாழறது கஷ்டம்தான். ஆனா, ஒரு கொலை காரரோட வாழறது அதை விடக் கஷ்டமில்லையா’னு கேட்கறாங்க லதிகா.”

“சரியான கேள்விதான்” என்றார் வித்யா.

மூவரும் மில்க்‌ஷேக்கை குடித்த படி அமைதியாக இருந்தனர்.

மெளனத்தைக் கலைத்து, “ஜெய்ப்பூர்ல திரிவேணி நகர் சுடுகாட்டுல சடலங்களை எரி யூட்டுற வேலையை 30 வருஷமா செஞ்சிட்டு வர்றாங்க மாயாதேவி. சின்ன வயசுல அப்பாவை இழந்த வங்க. அம்மா எரியூட்டுற வேலை செய்யும்போது, எட்டு வயசுலேயே ஹெல்ப் பண்ண ஆரம்பிச் சிட்டாங்க. முதல்ல கொஞ்சம் பயமா இருந்துச்சாம். அவங்க அம்மா ‘இதுல பயப்படறதுக்கோ அவமானப்படறதுக்கோ எதுவும் இல்லை. இதுவும் செய்யலைன்னா சாப்பிட முடியாது’ன்னு சொல்லி யிருக்காங்க. பத்து வயசுலேயே சடலம் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்க மாயாதேவி. ‘அஞ்சாவதுதான் படிச்சேன். போலீஸாகணும்னு ஆசைப்பட்டேன். வறுமையால முடியல. விறகு அடுக்கறதுலேருந்து எரிக்கற வரை தனியாதான் எல்லாமே செய்வேன். ஆதரவு இல் லாத சடலங்களை எரிக்க பணம் வாங்க மாட்டேன். அதை ஒரு சேவையா செய்வேன். இதுல கிடைக்கிற வருமானத்துல என் மகள்களைப் படிக்க வைக்கறேன். அதேசமயம், இந்த வேலைக்கு வர விருப்பம் இல்லைனாலும் அம்மா வோட வேலையில தங்களுக்கு பயமோ, அவமானமோ இல்லைனு சொல்றாங்க மாயாதேவியோட மகள்கள்’’ என்றாள் வினு.

“ரொம்ப டச்சிங்கா இருக்கு!” என்றாள் விமல்.

“ஆமா... நடிகை மீனா உறுப்பு தானம் செய்யப் போறதா சொல்லியிருக்காங்க. தானமா உறுப்பு கிடைக்காததாலதான் அவங்க கணவரை இழந்துட்டாங்க. அதனால இந்த முடிவை எடுத்ததா சொல்லியிருக்காங்க. ரொம்ப நல்ல முடிவு. நானும் உறுப்பு தானம் செய்யலாம்னு இருக்கேன். எங்கே பதிவு செய்யணும் விமல்?”

“இப்போ ஆன்லைன்லயே (https://transtan.tn.gov.in) பதிவு பண்ணிடலாம் வித்யாக்கா. நமக்கு ஏதாவது ஆச்சுனா தமிழ்நாட்டுல இருக் கிற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களுக்குத் தெரிவிக்கலாம்!” என்றாள் விமல்.

“வித்யாக்கா, உலகப் புகழ்பெற்ற அமெரிக் கத் தடகள வீராங்கனை ஆலிசன் ஃபெலிக் ஸோட சாதனையைப் பத்தி கேள்விப்பட்டீங் களா?”

“அப்படி என்ன சாதனை வினு?!”

“அவங்களுக்கு ஸ்பான்சர் செய்யுற ‘நைக்’ நிறுவனம், அவங்க கர்ப்பமா இருந்தப்ப வரு மானத்துல 70 சதவிகிதத்தைக் குறைக்க நினைச்சது. ‘கர்ப்பமாயிருந்தாலும் உன்னோட இடம் எதுன்னு உனக்குத் தெரியும்ல... ஓடு’ன்னு வேற வற்புறுத்தியிருக்கு. அதனால, ஏழாவது மாசத்துலேயே சிசேரியன் பண்ண வேண்டிய சூழல் வந்திருச்சு. ஆலிசன் ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க. பிறந்த குழந்தை ஒரு மாசம் வரை அவசர சிகிச்சைப் பிரிவுல இருந்திருக்கு. அப்படியும் ரெண்டு வருஷம் பிரேக் எடுத்துட்டு, 2021 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியானாங்க. நைக் ஒப்பந்தத் துலேருந்து விடுபட்ட பிறகு ‘Saysh One’ அப்படிங்கிற பேர்ல சொந்தமா ஷூ கம்பெனி ஆரம்பிச்சாங்க. ஜப்பான் ஒலிம்பிக்ல ‘என் இடம் எதுன்னு எனக்குத் தெரியும்’ங்கிற பேனருக்குக் கீழே, தன் கம்பெனி ஷூவை மாட்டிக்கிட்டு ஓடினாங்க. மொத்தம் 11 பதக் கங்களை ஒலிம்பிக்ல அள்ளி, கார்ல் லூயிஸ் சாதனையை முறியடிச்சாங்க. இப்ப தட களத்துல அதிகமான பதக்கங்கள் வாங்கின அமெரிக்க வீராங்கனைங்கிற பெருமையும் கிடைச்சிருக்கு!”

“வாவ்! கிரேட் ஆலிசன்!” சந்தோஷப்பட்டார் வித்யா.

“ `நான் புதுசா தொடங்கியிருக்கற saysh one ஷூ நிறுவனம், பெண்களுக்காகவே ஆரம்பிச்ச நிறுவனம். ஸ்பான்சருக்குத் தெரியக் கூடா துன்னு வீராங்கனைகள் கர்ப்பத்துலயும் ஓட வேண்டியதில்ல. தினமும் காலை 4:30 மணிக் குப் பயிற்சி செய்ய வேண்டியதில்ல'ன்னு சொல்லியிருக்காங்க ஆலிசன் ஃபெலிக்ஸ்!” - கூடுதல் தகவல் சொன்னாள் வினு.

“1973-ம் வருஷம் ‘காட் ஃபாதர்’ திரைப்படத் துக்காக மார்லன் பிராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுச்சு. ஹாலிவுட்ல பூர்வகுடி அமெரிக்கர்களை மோசமா சித்தரிக்கும் போக்குக்கு எதிர்ப்பு காட்டும் விதமா இந்த விருதை ஏத்துக்க மார்லன் பிராண்டோ வரல. அவருக்கு பதிலா அமெரிக்கப் பூர்வகுடி நடிகையான சச்சீன் லிட்டில் ஃபெதர் ஆஸ்கர் மேடையேறினாங்க. பிராண்டோவோட கடிதத்தைப் படிச்சுட்டுக் கீழே இறங்கினாங்க. அங்கிருந்தவங்க எல்லாம் அவரைக் கிண்டல் செஞ்சாங்க. இந்த மோச மான சம்பவத்துக்காக ஆஸ்கர் அகடமி 50 வருஷத்துக்குப் பிறகு, லிட்டில் ஃபெதர்கிட்ட இப்போ மன்னிப்பு கேட்டிருக்கு. ஆஸ்கரோட இந்த பதிலைக் கேட்கறதுக்காகத்தான் நான் உயிரோட இருக்கேன்னு நினைக்கிறேன்னு சொல்லிருக்கும் லிட்டில் ஃபெதருக்கு இப்போ வயசு 72!” என்றார் வித்யா.

“ஒரு மன்னிப்பு கேட்க இத்தனை வருஷங் களாயிருக்கா?” என்று விமல் வாட்ச்சைப் பார்க்க, “சரி, கிளம்புவோமா...” என்று வித்யா வும் வினுவும் விமலும் எழுந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

வினு தரும் வித்தியாசமான தகவல்

பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்த பெண்!

வீட்டுப் பாதுகாப்பு அமைப்பை (Home security system) உருவாக்கியவர் ஒரு பெண்தான். அடிக்கடி வீட்டில் தனியாக இருக்கும் ஒரு செவிலியர், மேரி வான் பிரிட்டான் பிரவுன் (Marie Van Brittan Brown). அப்போது அவர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்காக ஓர் ஐடியா யோசித்தார். அதிகரித்துவரும் குற்றங்களி லிருந்து பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், 1960-களில், கணவர் ஆல்பர்ட்டுடன் சேர்ந்து வான் பிரிட்டான் பிரவுன், முதல் வீட்டுப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார்.

இந்தச் சாதனத்தை உருவாக்குவது எளிதானதல்ல. ஒரு மோட்டாரால் இயக்கப்படும் கேமரா வழியாக, கதவிலுள்ள துளை வழியாகப் பார்க்கும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் படுக்கை அறையில் இருந்த ஒரு மானிட்டரில் அலாரம் பட்டன் பொருத்தப்பட்டிருந்தது. இதுவே பிற்காலத்தில் நவீன பாதுகாப்பு முறைகள் உருவாக வழி வகுத்தது.

இலவசத் திட்டங்கள்... இருவேறு கருத்துகள்!

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

‘‘இலவசத் திட்ட அறிவிப்புகள் நாடு தன்னிறைவு அடைவதைத் தடுக்கும். வரி செலுத்துவோர் மீதான சுமையை அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கும்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ‘‘இலவசங்களும் சமூகநலத் திட்டங்களும் வெவ்வேறானவை’’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு வழக்கு விசாரணையின்போது கூறியிருக்கிறார். இந்த இரண்டு கருத்துகளையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

இலவசத் திட்டங்கள் கூடாது என்று பொதுவாகச் சொல்வது தவறு. என்ன இலவசமாக வழங்கப்படுகிறது, பயனாளிகள் யார் என்பது முக்கியம். உணவு, உடை, உறைவிடம் தவிர, தரமான கல்வி, மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவற்றையும் அவசியமாகவே பார்க்கிறேன். இவை சமூகநலத் திட்டங்களாக அனைத்து மக்களையும் சென்று சேர்வது முக்கியம். இலவசம் என்று பொதுவாகப் பேசுவது அரசியல் ஆதாயத்துக்காக என்றோ, பிரித்தாளும் அரசியல் யுக்தி என்றோ பலருக்குப் புரிவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இலவசம் என்றாலே அநாவசியம் என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், திராவிடக்கட்சிகள் சில ஆடம்பரப் பொருள்களை தேர்தல் வெற்றிக்காக அளித்ததில் எனக்கு உடன்பாடில்லை. மக்களின் எதிர்பார்ப்பும், இவர்கள் இப்படித்தான் என்ற மனோபாவமும் மாற வேண்டும்.

@ சோபனா

எங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும், பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணவருக்கு காய்கறி வியாபாரம் . “மூணு பேத்துக்கும் பீஸு கட்டி, நோட்டு பொஸ்தகம், துணி வாங்கி..'' என கண்ணீருடன் நிற்பார். பெரும்பாலும்அவர்கள் வீட்டில் காலை உணவு முதல்நாள் சோறு அல்லது கஞ்சிதான். இன்று அவர் வாழ்வில் நிறைய சந்தோஷங்கள். கல்லூரிப் பெண்ணுக்கு மாதம் 1,000 ரூபாய், ஃப்ரீ பஸ் பயணம். அவராலான செலவு குறைந்துவிட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு காலை, மதிய உணவு. ஃப்ரீ பஸ்ஸில் கோயம் பேடு சென்று காய்கறி வாங்கி வருகிறார். சமூகநலத் திட்டங்கள் அவர் குடும்பத்தில் பல நல்ல மாறுதல்களைக் கொண்டு வந்திருப் பதை கண்ணெதிரே பார்க்கிறேன். ஓட்டு வாங்குவதற்காக தரப்படும் மூக்குத்தி, கொலுசு போன்ற இலவசங்களால் சமுதாயம் முன்னேறுவதில்லை. இலவசங்களை மறுப்போம். எளியவர் வாழ்வில் ஒளியேற்றும் சமூகநலத் திட்டங்களை ஆதரிப்போம்.

- வித்யாலக்ஷ்மி, சென்னை-78

இந்த இதழ் கேள்வி

பெண்களுக்கான மாநிலக் கொள்கையை சமூக நலத்துறை விரைவில் வெளியிட உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையில் பிரதானமாக இடம்பெற வேண்டிய விஷயம் எதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 6.9.2022