Published:Updated:

வினு விமல் வித்யா: மருமகளுக்கு மறுமணம் செய்த மகத்தான மாமியார்!

 அகன்ஷா -  செரீனா
பிரீமியம் ஸ்டோரி
அகன்ஷா - செரீனா

செரீனாவோட சாதனைகளைப் பத்தி அடுத்தடுத்த தலைமுறைகளும் பேசிட்டிருக்கும். இங்கிலாந்து பிரதமரா லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க.

வினு விமல் வித்யா: மருமகளுக்கு மறுமணம் செய்த மகத்தான மாமியார்!

செரீனாவோட சாதனைகளைப் பத்தி அடுத்தடுத்த தலைமுறைகளும் பேசிட்டிருக்கும். இங்கிலாந்து பிரதமரா லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க.

Published:Updated:
 அகன்ஷா -  செரீனா
பிரீமியம் ஸ்டோரி
அகன்ஷா - செரீனா

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா… வினு, விமல், வித்யா மூவரும் ஆஜர். நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் இருந்ததால், ஆளுக்கு ஒரு வெல்கம் டிரிங்கை எடுத்துக் கொண்டு, பூங்காவில் கச்சேரியை ஆரம் பித்தனர்.

“செரீனா வில்லியம்ஸ் தோல்வியோட ஓய்வுபெற்றது எனக்குக் கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“இறுதிப் போட்டியில தோல்விங்கறதெல் லாம் ஒரு விஷயமே இல்ல. இந்தத் தோல்வி செரீனாவோட புகழை எந்தவிதத்துலயும் குறைக்காது வித்யாக்கா. 27 வருஷங்கள் விளை யாடியிருக்காங்க. மொத்தம் 39 கிராண்ட் ஸ்லாம் பட்டம். இதுல 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், 2 கலப்பினப் பட்டங்கள்... 4 கிராண்ட் ஸ்லாம்களை ஒரே நேரத்துல வென்ற அஞ்சா வது பெண் வீராங்கனையும் செரீனாதான். அக்கா வீனஸோடு செரீனா இரட்டையர் ஆட்டத்துல ஒரே நேரத்துல நாலு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வாங்கின சாதனையும் இருக்கு. இத்தனை சாதனைகளைப் படைக் கணும்னா அதுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும்!”

வினு விமல் வித்யா: மருமகளுக்கு மறுமணம் செய்த மகத்தான மாமியார்!

“இவ்வளவு உச்சத்துல இருந்தாலும் ஆப் பிரிக்க அமெரிக்கர், பெண் போன்ற காரணங் களுக்காக அவங்க எதிர்கொண்ட பிரச்னை களும் ஏராளம். ஆனா, திறமையும் உழைப்பும் இருந்தா எல்லாத்தையும் கடந்து, சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கலாம்கிறதுக்கு செரீனா உதாரணம். அதனாலதான் இந்த உலகம் செரீனாவோட உழைப்புக்கும் திறமைக்கும் தலைவணங்கி, அவங்களுக்கு நன்றி சொல் லிட்டிருக்கு” என்றாள் விமல்.

“செரீனாவோட சாதனைகளைப் பத்தி அடுத்தடுத்த தலைமுறைகளும் பேசிட்டிருக்கும். இங்கிலாந்து பிரதமரா லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க. 1996-வது வருஷம் கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்தாங்க. இப்போ பிரதமர் பொறுப்புக்கு வந்திருக்காங்க. இவங்க இங்கிலாந்தோட மூணாவது பெண் பிரதமர். சூப்பர்ல... ரிஷி சுனக் பிரதமர் போட்டியில இருந்தார். கடைசில இருபதா யிரம் ஓட்டு வித்தியாசத்துல பின்தங்கிட்டார். ஒருகாலத்துல இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது. அவர் மட்டும் பிரதமரா ஆகி யிருந்தா, 75 வருஷங்களுக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், அதே இங்கி லாந்துக்கு பிரதமரானார் என்ற வரலாற்றுச் சிறப்பு நடந்திருக்கும்” என்றாள் வினு.

“ஆமா வினு. இவரும் கன்சர் வேட்டிவ் கட்சிக் காரர்தான். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியோட மருமகன். நிதியமைச்சரா இருந் தவர். 42 வயசுதான். இன்னும் காலம் இருக்கு” என்றார் வித்யா.

“நீங்க சொல்றதும் சரிதான். பிலிப்பைன்ஸ் அதிபரா இருந்த ரமோன் மகசேசே நினைவா பொதுச்சேவை, அமைதி, இலக்கியம்னு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவங்களுக்கு விருது வழங்கப்படுது. இந்த விருது கேரளா வோட முன்னாள் சுகாதார அமைச்சரான கே.கே. ஷைலஜாவுக்கு வழங்கப்பட இருந்துச்சு. ‘நான் செய்த பணிகள் கூட்டு முயற்சி. அதனால தனிப்பட்ட முறையில விருது வாங்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை’ன்னு விருதை மறுத்துட்டாங்க ஷைலஜா. பிலிப்பைன்ஸ் கம் யூனிஸ்ட்களை ஒடுக்கியவர் பெயர்ல வழங்கப் படும் விருதுங்கிறதால அவங்களுக்கு வாங்க விருப்பமில்லைன்னும் சொல்லப்படுது.”

‘`ஆமாம் விமல்...ஆசியாவின் நோபல்னு சொல்லப்படற மகசேசே விருதையே வேணாம்னு சொல்லியிருக்காங்க ஷைலஜா டீச்சர். விருதை ஏற்குறதும் ஏற்காத தும் அவங்க விருப்பம்தான். ரெண்டு காரணங் களுமே நியாயமாதான் இருக்கு. ஆனா, இதுக் கெல்லாம் பெரிய மனசு வேணும்” என்றார் வித்யா.

மீண்டும் ஆளுக்கு ஒரு ஜூஸ் டம்ளரை எடுத்துக்கொண்டு அரட்டையைத் தொடர்ந் தனர்.

“வித்யாக்கா, விமல்... ரெண்டு பேரும் ஒரு விஷயம் கேள்விப்பட்டீங்களா... குஜராத்ல உள்ள ராஜ்கோட்ல வசிக்கிறாங்க மிதாபென் கொட்டாடியா. கொரோனா காலத்துல இவங்களோட கணவரையும் மகனையும் இழந் துட்டாங்க. மருமகள் ஏக்தா ரெண்டு குழந்தை களோட தனியா வாழறதை அவங்களால ஏத்துக்க முடியல. ஒரு வரன் பார்த்து, அந்த மாப்பிள்ளையைத் தன் மகனா தத்தெடுத்து, மருமகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட் டாங்க. . திருமணத்தை நடத்தி வச்ச மாமி யாருக்கு நன்றி சொன்ன ஏக்தா, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செஞ்சிக்க இந்தச் சமூகம் ஒத்துழைக்கணும்கிறாங்க. ரொம்ப நல்ல விஷயம்!”

“ மாமியார் மிதாபென் எடுத்த முயற்சியை எவ்ளோ வேணாலும் பாராட்டலாம். அப்படியே அகன்ஷா குமாரியையும் பாராட்டி டலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவங்க, சுரங்கப் பொறியியல் பட்டதாரி. நிலக்கரி சுரங்கத்தைச் சின்ன வயசுலயிருந்தே பார்த்துட்டிருந்திருக்காங்க. ஆனா, சுரங்கத்துக் குள்ள என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க முடியல. அதனால பொறியியல் படிச்சாங்க. அறுபது மாணவர்கள்ல அகன்ஷா மட்டுமே பெண். மத்திய நிலக்கரி சுரங்கத்துல வேலை செஞ்சிட்டிருக்காங்க. இந்தியாவிலேயே நிலக்கரி சுரங்கத்துல வேலை செய்யும் முதல் பெண் பொறியாளர்னு அகன்ஷாவைச் சொல்றாங்க. ‘எனக்கு இந்த வேலை பத்தி நல்லா தெரியும். தொழில்நுட்பத்தால இந்த வேலை இப்போ எளிதாயிருக்கு. தகுந்த பாது காப்பை எடுத்துக்கறேன். நல்லா சாப்பிடறேன். என்கூட வேலை செய்றவங்க என்னை ஒரு பொண்ணுன்னு நினைச்சு ஒதுக்கிறதில்ல. மதிப்பும் மரியாதையும் கொடுக்கறாங்க. எங்க வீட்லதான் சுரங்க வேலைன்னா பயப்படுறாங்க. அதனால அம்மாகிட்ட எதையும் நான் சொல் றதில்லை’ங்கிறாங்க அகன்ஷா” என்று விமல் நிறுத்த, அடுத்த தகவல் சொன்னாள் வினு.

“அருந்ததி ராய் அம்மா, மேரி ராய் 89 வய சுல இறந்துட்டாங்க. இவங்க கல்வியாளர் மட்டுமில்ல, சமூக சீர்திருத்தவாதியும்கூட. கிறிஸ்துவ வாரிசு சட்டத்துக்கு எதிரான சட்டப் போராட்டத்தை 39 வருஷம் நடத் தினாங்க. அதன் பயனா உச்சநீதிமன்றம், கிறிஸ்துவப் பெண்கள் எல்லாருக்கும் சட்டப் படி குடும்பச் சொத்துல சமமான பங்கு கிடைக்கணும்னு தீர்ப்பு கொடுத்தது” என்றாள்.

“கிரேட்... மேரி ராய்க்கு நாம நிச்சயம் அஞ்சலி செலுத்தணும்’’ என்ற வித்யா, ‘`சரி, ஏதாவது படம் பார்த்தீங்களா...” என்று கேட் டார்.

“நான் `19(1)(a)' மலையாளப் படம் பார்த்தேன் வித்யாக்கா. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உங்களுக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் நடிச்சிருக்காங்க.”

“ஓ... அப்படியா! முதல்ல தலைப்புக்குக் காரணம் சொல்லு விமல்.”

“கருத்து சுதந்திரத்துக்கான சட்டப் பிரிவு தான் படத்தோட தலைப்பு. விஜய் சேதுபதி சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர். நித்யா மேனன் சின்ன ஊர்ல ஜெராக்ஸ், டிடிபி கடை வச்சிருக்காங்க. வீடும் கடையும் ஒரு தோழியும்தான் அவங்க உலகம். ஒரு நாள் விஜய் சேதுபதி, நித்யா கடைக்கு வந்து, ஒரு ஸ்கிரிப்டைக் கொடுத்து ஜெராக்ஸ் எடுத்து வைக்கச் சொல்லிட்டு, சாயங்காலம் வந்து வாங்கிக்கிறதா சொல்லிட்டுப் போறார். நைட் ரொம்ப நேரம் அவருக்காகக் கடையை மூடாம காத்திருக்காங்க நித்யா. பிறகு வீட்டுக் குப் போயிடறாங்க. மத அடிப்படைவாதிகளால விஜய் சேதுபதி சுட்டுக்கொல்லப்பட்டதை நியூஸ்ல பார்த்து அதிர்ச்சியடையறாங்க. விசாரணை நடந்துகிட்டு இருக்கு.

ஸ்கிரிப்டை படிச்சுப் பார்க்கும் நித்யா, கொஞ்சம் கொஞ்சமா விஜய் சேதுபதி மேல அன்பு வைக்கிறாங்க. எப்படியாவது இது புத்தகமா வரணும்னு விரும்பறாங்க. விஜய் சேதுபதி நண்பரும் பப்ளிஷருமான இந்திர ஜித்தைப் பார்க்கப் போறாங்க. கொடுக்க முடியல. அப்புறம் சேனல்லேருந்து ஒரு பெண் விஜய் சேதுபதியோட அக்காவைப் பார்க்கப் போறாங்க. நித்யாவும் அவங்களோட போறாங்க. கடைசில ஸ்கிரிப்டை பல பிரதிகள் எடுத்து பலருக்கும் அனுப்பி வைக்கிறாங்க. அப்போ விஜய் சேதுபதியோட கருத்து சுதந் திரத்தைக் கொன்னவங்களோட பைக் சத்தம் கேட்குது. படம் முடியுது... இந்து வி.எஸ். என்ற பெண் இயக்கியிருக்காங்க. ரொம்ப நீட்டா, அழகா பண்ணியிருக்காங்க. கொஞ்ச நேரமே வந்தாலும் படம் முழுக்க நிறைஞ்சிருக்கார் விஜய் சேதுபதி. நித்யா மேனன் வழக்கம்போல கலக்கியிருக்காங்க.’’

“வாவ்... ‘புழு’ படம் எடுத்த ரத்தீனா,

‘19(1)(a)’ எடுத்த இந்துன்னு மலையாளத்துல பெண் இயக்குநர்கள் கலக்க ஆரம்பிச்சிட் டாங்க. அவசியம் பார்த்துடறேன்” என்று வித்யா சொன்னபோது, கேக் வெட்டும் நிகழ்ச்சி ஆரம்பமானது. மூவரும் வேகமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி நடந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

*****

வினு தரும் வித்தியாசமான தகவல்

ஸ்டெம் செல் தனிமைப்படுத்தல் முறையைக் கண்டுபிடித்தவர் ஆன் சுகாமோட்டோ என்ற அமெரிக்க பெண் விஞ்ஞானி. இவருக்கு 1991-ம் ஆண்டில் காப்புரிமை வழங்கப்பட்டது. அதன் பின்னர் சுகாமோட்டோவின் பணி புற்று நோயாளிகளின் ரத்த அமைப்புகளைப் புரிந்து கொள்வதில் பெரும் முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தது, நோயைக் குணப்படுத்தவும் உதவியது.

தற்போது, 70 வயதிலும் ஸ்டெம் செல் வளர்ச்சியில் மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். ஏழுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு களுக்கு இணை காப்புரிமை பெற்றுள்ளார்.

***

மாநிலக் கொள்கையில் பிரதானமாக இடம்பெற வேண்டிய விஷயம்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

பெண்களுக்கான மாநிலக் கொள்கையை சமூக நலத்துறை விரைவில் வெளியிட உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையில் பிரதானமாக இடம்பெற வேண்டிய விஷயம் எதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

* பிரதானமாக இடம்பெறவேண்டிய விஷயம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். செயின் பறித்தலும், பாலியல் வன்புணர்வும் தினசரி நிகழ்வாக மாறிவிட்ட நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது.

- சுப்புலட்சுமி சந்திரமெளலி, சென்னை-91

* மகளிர்க்கான மாநிலக் கொள்கையில் கல்வி, வேலை வாய்ப்பு, ஊதியம் ஆகியவற்றில் பெண்களுக்குச் சம வாய்ப்புகள், பெண் கல்விக்கடன், கல்வி மான்யம், மக்களாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு பிரதிநிதித் துவம் ஆகியவற்றைவிட பெண்களுக்கு எதிரான வன்முறைக்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, அலுவலக வன்முறை, பொது இடங்களில் வன்முறை ஆகியவை தடுக்கப்பட வேண்டும். கால் டாக்ஸி, பேருந்து, மின்சார, மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்குக் கட்டாய தற் காப்புப் பயிற்சி தரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவான விசாரணையும், கடுமையான தண்டனையும் தரப்பட வேண்டும்.

- எஸ்.ஜெயலட்சுமி, கும்பகோணம்.

* பெண்களுக்கான மாநிலக் கொள்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள்...

1. வளரும் இளம் பருவத்தில் சிறுமிகள் ரத்தச் சோகை யால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச மாக இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் வழங்கப்பட வேண்டும்.

2. சத்துணவில் வாரத்தில் இருமுறை இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை, பீட்ரூட் போன்றவை வழங்கப்பட வேண்டும்

3. பூப்படைந்த மாணவிகள் மாதவிலக்கின்போது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்ற வேண்டும் என்று எல்லா பள்ளிகளிலும் ஆசிரியைகளால் அறிவுறுத்தப்பட வேண்டும்.

4. ஐடி நிறுவனங்களைப் போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம் தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

5. தொழில்முனைவோராக விரும்பும் மகளிருக்கான வங்கிக் கடன்கள் விரைந்து வழங்கப்பட வேண்டும். சட்ட திட்டங்களும் எளிமையாக்கப்பட வேண்டும்.

6. மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறையில் புகார் அளித்தால் காவல் நிலையத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு களும் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் வழங்கப்பட வேண்டும்.

7. பெண் காவலர்களுக்கான பணி நேரம் குறைக்கப்பட வேண்டும். போக்குவரத்திலும், பாதுகாப்பிலும் நீண்ட நேரம் நின்று பணி செய்யும் பெண் காவலர்களுக்கு அமர்வதற்கு இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்.

- விஜிரவி, ஈரோடு-11

இந்த இதழ் கேள்வி

தமிழ்நாடு அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டம் பெண் கல்வியை மேம்படுத்த உதவுமா? உங்கள் கருத்து என்ன?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 20.9.2022