லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்ப்பு!

 ஜார்ஜியா மெலோனி,  ஹிலரி,  ஸ்டீபனி குவோலெக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜார்ஜியா மெலோனி, ஹிலரி, ஸ்டீபனி குவோலெக்

சஹானா

ஷாப்பிங் சென்ற வினு, விமல், வித்யா - மூவரும் திடீரென்று பெய்த மழையால் அருகிலிருந்த காபிக் கடையில் தஞ்சமடைந்தனர்.

சூடான காபியைக் குடித்துக்கொண்டே, “என்ன வித்யாக்கா, ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துட்டீங்க போல” என்றாள் வினு.

“நானா போகல வினு, வந்தியத்தேவன்தான் என்னை வா வான்னு கூப்பிட்டார்” என்று வித்யா சொல்லவும் விமலும் வினுவும் சிரித்து விட்டனர்.

“கல்கியின் வந்தியத்தேவனை மணிரத்னம் கொண்டு வந்துட்டாரா?”

“ஓ... நான் கற்பனை பண்ணின மாதிரியே கார்த்தி நல்லா பொருந்தினார். நல்லாவும் நடிச்சிருக்கார் வினு!”

“எங்கே பார்த்தாலும் ‘பொன்னியின் செல்வன்’னு இங்கே வந்தா... இங்கேயுமா? டாபிக் மாத்துங்க” என்றாள் விமல்.

“பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக் கலைப்பு செய்ய எல்லாப் பெண்களுக்கும் உரிமை உண்டு. அதாவது திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டத்துல இடம் உண்டுன்னு தீர்ப்பு வந்திருக்கு பார்த்தீங் களா?” என்றாள் வினு.

“ஆமா, கருக்கலைப்புக்குக் கணவனோட அனுமதியும் தேவையில்லைன்னு சொல்லி யிருக்கு. கேரளாவுல காதலிச்சு திருமணம் செஞ்ச ஒரு பொண்ணை, அவ கணவனும் அவன் அம்மாவும் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியிருக்காங்க. அந்த நேரத்துல அந்தப் பொண்ணு கர்ப்பமா யிட்டாங்க. இது தன்னோட குழந்தை இல்லைன்னு அவன் சொல்லிட்டான். பிறந்த வீட்டுக்கு வந்த பொண்ணு, குழந்தை யைப் பெத்து வளர்க்க பொருளாதார வசதியோ மன தைரியமோ இல்லைன்னு கருவைக் கலைக்க முடிவு பண்ணி, கோர்ட்டுக்குப் போயிட்டாங்க. அந்த கேஸ்லதான் கணவனோட அனுமதியில்லாம கருவைக் கலைக்கப் பெண்ணுக்கு தனியுரிமை உண்டுன்னு சொல்லியிருக்காங்க. சட்டத்துல ஏற்கெனவே உரிமை இருக்கு, நடைமுறையிலதான் அமல்படுத்தல. இந்தத் தீர்ப்பு எல்லாருக்கும் சட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கு. பெண் உரிமை விஷயங்கள்ல இது ரொம்ப முக்கியமானதுதான்” என்றாள் விமல்.

“தெளிவான விளக்கம்தான். பீகார்ல ஓர் அரசு விழாவுல ஹர்ஜோத் கவுர்ங்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி கலந்துகிட்டாங்க. அப்போ பள்ளி மாணவி ரியா, ‘மாணவி களுக்குக் குறைவான விலையில சானிட்டரி நாப்கின் கொடுக்க ஏற்பாடு செய்ங்க’ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு ஹர்ஜோத், ‘அரசு சார்புல யூனிஃபார்ம் இலவசமா கொடுக்க றோம். இனி ஜீன்ஸ், காண்டம் எல்லாம் கேட்பீங்க போல’ன்னு சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் மீடியாவுல வைரலானவுடனே, ஹர்ஜோத் மன்னிப்பு கேட்டிருக்காங்க. ஐ.ஏ.எஸ் படிச்சவங்க, அதுவும் ஒரு பெண் இப்படிப் பேசினது ரொம்பவே வருத்த மாயிருக்கு” என்றாள் வினு.

“ம்... ஒரு ஹேப்பி நியூஸ் சொல்றேன்...” என்ற வித்யாவிடம்,

“என்ன வித்யாக்கா, நாம எங்கேயாவது ட்ரெக்கிங் போறோமா?” என்று கேட்டாள் வினு.

“மலை ஏறுற அளவுக்கா நான் இருக்கேன்? நான் சொல்ல வந்தது நிர்மலி கல்யாணம் பத்தி. அசாமைச் சேர்ந்த நிர்மலிக்குச் சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி, ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமண உறவு சரியில்லாததால இருபது வயசுல குழந்தை யோடு அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்புறம் படிச்சாங்க. நல்ல வேலையில சேர்ந்தாங்க. அவங்களுக்கு பைக் ஓட்டுறது பொழுதுபோக்கு. பைக் பயணத்துல ஒருத்தரைச் சந்திச்சாங்க. நட்பு காதலாச்சு. கல்யாணம் செய்துக்க நினைச்சாங்க. ஆனா, அமெரிக்காவுல இருக்கற இருபது வயசு மகள் என்ன நினைப்பாளோன்னு யோசனை. தயக்கத்தை உடைச்சு சொன்ன தும் மகள் சந்தோஷமாயிட்டாங்க. உடனே இந்தியாவுக்கு ஓடிவந்தாங்க. அம்மாவும் பொண்ணும் கல்யாணத்துக்கு ஷாப்பிங் செஞ்சாங்க. கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சிருச்சு. ‘எங்கம்மாவோட வாழ்க்கை இப்படியாயிருச்சேன்னு நான் கவலைப் பட்டதுண்டு. இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு’ன்னு சொல்றாங்க நிர்மலியோட மகள். வாழ்க்கையில எதுவும் முடிஞ்சு போயிடறதில்ல, நாம நினைச்சா அதைத் தொடரலாம்னு சொல்லியிருக்காங்க நிர்மலி.”

“கேட்கவே ரொம்ப நல்லாயிருக்கு வித்யாக்கா. வாழ்க நிர்மலி” என்ற விமல், தன் பங்குக்கு இன்னொரு சந்தோஷ செய்தி பகிர்ந்தாள்.

 ஜார்ஜியா மெலோனி,  ஹிலரி,  ஸ்டீபனி குவோலெக்
ஜார்ஜியா மெலோனி, ஹிலரி, ஸ்டீபனி குவோலெக்

“மத்தியப்பிரதேசம், கால்வா மாவட்ட வனப்பகுதியில ஏராளமான பழங்குடிகள் வசிக்கிறாங்க. இவங்களுக்குச் சொந்தமா நிலம் இல்லை. வேலை தேடி ரொம்ப தூரம் போறாங்க. கொரோனா காலத்துல இப்படிப் போனவங்க திரும்பிவர முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. பெண்கள் விவசாய வேலைக்குப் போனாலும் இருநூறு ரூபாய்க்கு மேல கிடைக்கல. குண்டா மஸ்கோலேங்கிற பெண் புதுசா ஏதாவது செய்யணும்னு யோசிச்சாங்க. பழங்குடிகள் அதிகமா வசிக்கிற பகுதியில மெக்கானிக் ஷாப் இல்ல. அதுக்காக ஒரு தொண்டு நிறுவனத்துல பயிற்சி எடுத்துக் கிட்டாங்க. இப்போ ஒரு மெக்கானிக்கா தினமும் 600 ரூபா வரை சம்பாதிக்கிறாங்க. இப்போ ஐம்பது பழங்குடிப் பெண்கள் வாக னங்களைப் பழுது பார்க்கிற வேலையைச் செஞ்சு குடும்பத்தோட வறுமையைப் போக் கிட்டிருக்காங்க. ஆரம்பத்துல இந்த வேலை யைச் செய்யக்கூடாதுன்னு எதிர்த்த பழங்குடி ஆண்களோட மனசும் இப்போ மாறியிருக்கு. துணிச்சலா ஒரு பெண் எடுத்த முடிவு, ஏராளமான பெண்களோட வாழ்க்கையை மாத்தியிருக்கு. குண்டா மஸ்கோலேவை எவ்வளவு வேணாலும் பாராட்டலாம்!”

“அடடா... கிரேட்! இன்னொரு காபி ஆர்டர் பண்ணு விமல்.”

“சொல்லிட்டேன் வித்யாக்கா. ஒரு வருத்த மான விஷயம். ட்ரெக்கிங் பத்தி நாம பேசும் போது அமெரிக்க மலையேற்ற வீராங்கனை ஹிலரி நெல்சனைப் பத்தியும் பேசியிருக்கோம் இல்லையா... அவங்க செப்டம்பர் மாசம் இமய மலையில சாதனை முயற்சியில் ஏற்பட்ட விபத்துல இறந்துட்டாங்க. 49 வயசு ஹிலரியோட உடலை அங்கேயே அடக்கம் செஞ்சிட்டாங்க.”

“ஐயோ... என்ன சொல்றே விமல்? 2012-ம் வருஷத்துல 24 மணி நேரத்துக்குள்ள எவரெஸ்ட் ஏறிய முதல் பொண்ணுங்கிற சாதனையைச் செஞ்சவங்களாச்சே... தொடர்ந்து மலையேற்றத்துல பல சாதனை களைச் செஞ்சிருக்காங்க...ரொம்ப வருத்தமா இருக்கு.”

“இரான்ல மாசா அமினிக்கான போராட்டம் இப்ப எப்படி இருக்கு வினு?”

“ரொம்ப தீவிரமா போயிட்டிருக்கு விமல். போராட்டத்துல கலந்துகிட்ட ஒரு பொண்ணை எல்லாருக்கும் முன்னாலேயே போலீஸ் சுட்டிருக்கு. இப்போ போராட்டம் பள்ளி மாணவிகள் வரைக்கும் பரவிருச்சு. மாணவிகள் ஹிஜாபைக் கழற்றிப் போராட்டத்தை நடத்திட்டிருக்காங்க. இதுல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், எதிர்க் கிறவங்களை மோசமா நடத்துது அரசாங்கம். ஆனாலும், பெண்கள் துணிச்சலா போராட றாங்க. யாரையும் ரொம்ப காலத்துக்கு அடக்கிவைக்க முடியாது. ஒருநாள் பொங்கிடுவாங்கங்கறது உண்மையாகியிருக்கு. இந்தப் போராட்டங்கள்ல நூற்றுக் கணக்கானவங்க உயிரிழந்திருக்காங்க. அந்தப் பெண்களுக்கு இனியாவது விடிவு காலம் வரணும்.”

“ம்... இத்தாலியில ஜார்ஜியா மெலோனி முதல் பெண் பிரதமரா ஆகியிருக்காங்க.

45 வயசுதான் ஆகுது. என்ன பண்ணப் போறாங்கன்னு பார்ப்போம்.”

“ஆமாம் விமல்... அவங்களுக்கு முதல்ல வாழ்த்து சொல்லிடுவோம். சரி, ஏதாவது சினிமா பார்த்தீங்களா?”

“வினு, நான் துருக்கி வெப் சீரிஸ் பக்கம் போயிட்டேன். `ஹிடன்', `நியூ லைஃப்'னு ரெண்டு சீரிஸ் பார்த்தேன். எனக்குப் பிடிச் சிருந்தது. ரொம்ப டீசன்ட்டாவும் இருந்தது. துருக்கியோட அழகு மயக்குது. ஆக்டர்ஸும் அசத்தலா இருக்காங்க. சும்மா விறுவிறுன்னு போகுது.”

“எல்லாரும் கொரியன் சீரிஸ் பார்த்தா வித்யாக்கா நீங்க டர்கிஷ் சீரிஸ் பக்கம் போயிட்டீங்களா” என்று சிரித்தாள் விமல்.

“விமல், மழை நின்னுருச்சு. சீக்கிரம் ஷாப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகணும்” என்று எழுந்தாள் வினு.

வித்யாவும் விமலும் பின்னால் சென்றார்கள்.

- அரட்டை அடிப்போம்...

வினு தரும் வித்தியாசமான தகவல்

எஃகைவிட ஐந்து மடங்கு வலிமையான பொருள்!

ஸ்டீபனி குவோலெக் என்ற வேதியியலாளரே குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் உடல் கவசங்களில் பயன்படுத்தப்படும் கெவ்லர் என்ற இலகுரக இழையை (Kevlar - Lightweight Fibre) 1965-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். இந்தப் பெண்ணின் கண்டுபிடிப்பு, ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. எஃகைவிட ஐந்து மடங்கு வலிமையான இந்தப் பொருள், பாதுகாப்புத்துறையில் மட்டுமல்ல... கையுறைகள், மொபைல் போன்கள், விமானங்கள், சஸ்பென்ஷன் பிரிட்ஜ்கள் வரை பல தயாரிப்புகளில் இடம்பெறுகிறது

எந்த நாவலை திரைப்படமாகவோ, சீரிஸாகவோ எடுக்கலாம்?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

`பொன்னியின் செல்வன்’ வாசகரா நீங்கள்? அந்த அற்புதமான வாசிப்பு அனுபவத்தை இதோ சில நாள்களில் திரையில் காணப் போகிறோம். இதுபோல வேறு எந்த நாவல்களை திரைப்படமாகவோ, சீரிஸாகவோ எடுக்கலாம்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

என்னுடைய சாய்ஸ்... சாண்டில்யனின் ‘கடல் புறா’. விறுவிறுப்பான ஆக்‌ஷன் நிறைந்த திரைப்படமாக எடுக்கலாம். முதல் பாகத்தில் இளைய பல்லவன் தப்பிக்கும் காட்சிகள், காஞ்சனா, தேவி பீமன் சபையில் அவனை மீட்கும் காட்சி, அரேபிய முரட்டுக் குதிரைகளை மணலில் பழக்கும் காட்சி, பின்னர் அவர்கள் சீனத்து ஜாடியில் தப்பிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக பிர மாண்டமாக எடுக்கவல்ல கதை `கடல் புறா'. க்ளைமாக்ஸ் சூப்பராக, த்ரில்லிங்காக இருக்கும்.

இரண்டாம் பாகம்... சொர்ண தீவில் காதல், பழங்குடி யினர் தாக்குதல், கப்பலை பழுது பார்த்தல் என அருமையான கதைக்களம்.

மூன்றாம் பாகம்... கடல் புறா பங்கேற்கும் கடல் போர்கள், காஞ்சனா - இளைய பல்லவன் காதல் காட்சிகள் என ரசனைமிக்கவை. பிரமாண்ட காட்சிகளாக எடுக்கவாய்ப்புள்ள படம்.

`பாகுபலி'யை மிஞ்சும் படமாகவும் இருக்கும்... யாராவது எடுப்பார்களா?

- தி.வள்ளி, திருநெல்வேலி-11

முதலாம் ராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் வீர தீரத்தை விறுவிறுப்பாக சொல்லும் அகிலனின் `வேங்கையின் மைந்தன்’ நாவலை திரைப்படமாக்கலாம். பட்டத்தரசி வீரமாதேவி மற்றும் ராஜேந்திர சோழனின் வெகுளித்தனமும், துடுக்குத்தனம் நிறைந்த இளைய மகள் அம்மங்காதேவியும் படத்துக்கு இனிமை கூட்டும் கேரக்டர்களே!

- தீபா, பாளையங்கோட்டை

சந்தேகமே வேண்டாம். சு.வெங்கடேசனின் ‘வேள் பாரி’ தான். சீரியலை விட சினிமா பெஸ்ட். கபிலர், காட்டை கடந்த முதல் பாகத்தை ஒன் லைனில் சொல்லிவிடலாம். போர்த் தந்திரங்கள், விதி மீறாத ஒழுங்குமுறை என இரண்டாம் பாகம் இன்றைய இளசுகளுக்கு வாழ்க்கை யைக் கற்பிக்கும். போர்க்களம் கற்கள் நிறைந்த இடம் எனத் தெரிந்ததும் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் காட்சி மாற்றி யோசிக்கச் சொல்லும். போர் முடிந்து விட்டது என சங்கு ஊதியதும், கையில் சிக்கிய எதிரியை கொல்லாமல் விட்டு விடுவது ஒழுங்கை போதிக்கும். பாரி களத்துக்கே வராமல், படையை நடத்தியதில், நேர விரயத்தை தவிர்த்து , ஓரிடத்திலிருந்து பல கிளைகளையும் நிர்வாகம் செய்யலாம் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும் படமாகவும் அமையும்.

பாரியாக கார்த்தியும், பொற்சுவையாக த்ரிஷாவும், கபிலராக பசுபதியும் கலக்கலாம். விரைவில் வெள்ளித் திரைக்கு 'வேள் பாரி' களமிறங்க வாழ்த்துகள்.

- என்.கோமதி, நெல்லை-7

****

இந்த இதழ் கேள்வி

பண்டிகைகள் மற்றும் விடுமுறைக் காலத்தில் விமான கட்டணத்துக்கு நிகராக ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது காலம் காலமாகத் தொடர்கிறதே... இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா,

அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 18.10.2022