தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்ணை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்!

 ஆனி எர்னோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனி எர்னோ

- சஹானா

வினுவுக்கு கால்வலி என்பதால் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். விமலும் வித்யாவும் அவளைப் பார்க்க வந்தனர்.

“வாங்க, வாங்க” என்று வரவேற்ற வினுவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை.

“என்ன வினு, கால் ரொம்ப வலிக்குதா? உன் முகம் ரொம்ப இறுக்கமா இருக்கே?” என்று பரிவுடன் கேட்டார் வித்யா.

“போர் அடிக்குதேன்னு நியூஸ் சேனல் பார்த்தேன். சத்யப்ரியாங்கிற பொண்ணை சதீஷ்ங்கிறவன் ரயில் முன்னாடி தள்ளிவிட்டதுல அந்தப் பொண்ணோட உயிர் போயிருச்சு. என் உடம்பே நடுங்கிருச்சு. என்ன மாதிரி சமூகத்துல வாழறோம்? அந்தப் பொண்ணு அவனைக் காதலிச்சிருக்கா... அவன் சரியானவன் இல்லைன்னதும் விலகியிருக்கா. அதை அவன் மதிக்க வேணாமா? கொலை செய்யுற அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? ‘எனக்குக் கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது’ங் கற ஆணாதிக்க மனப்பான்மை அரசர்கள் காலத்துல இருந்தே நீடிக்குது. இதையெல்லாம் இந்தக்கால சினிமா வரைக்கும் காட்சிப்படுத்துது. அதப்பாக்கற பலரும், அந்த மாதிரி ‘ஹீரோ’வா நிஜத்துல வலம் வர்றாங்க.”

“இதுக்கப்பறம் சத்யப்பிரியாவோட அப்பா, தற்கொலை பண்ணிக்கிட்டாரு. நோயோடு போராடிட்டு இருக்கிற அம்மாவுக்கு இப்படி அநியாயமா ரெண்டு உயிர்களை இழந்தது எவ்வளவு வேதனையைக் கொடுக்கும்?” என்றார் வித்யா.

 சத்யப்ரியா
சத்யப்ரியா

“இவ்வளவுக்கும் ரெண்டு பேர் வீட்டுலயும் காவல்துறையைச் சேர்ந்தவங்க இருக்காங்க. ஒரு பொண்ணை எப்படி மதிக்கணும்னுகூட கத்துக் கொடுத்திருக்க மாட்டாங்களா? ஒருத்தனோட பழகின பிறகு சரியில்லைன்னு தெரிஞ்சாலும் அவனையே கட்டிக்கிட்டு சீரழியணுமா? பொம்பிளைங்களை மதிக்கச் சொல்லி வளர்த்திருந்தா, காதல் தோல்வி வருத்தம் தந்தாலும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டான். எவ்வளவுதான் டெக்னாலஜியில முன்னேறினாலும் நம்ம சிந்தனையில மாற்றம் வரலைன்னுதான் தோணுது” - கடுப்பாகச் சொன்னாள் வினு.

“கரெக்ட் வினு. குழந்தைத் திருமணம் எல்லாம் இப்ப கிடையாதுன்னு பலரும் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா, குழந்தைத் திருமணங்கள் அதிகம் செய்யுற நாடுகள் பட்டியல்ல இந்தியா மூணாவது இடத்துல இருக்கு. வருஷத்துக்கு 15 லட்சத்துக்கும் மேலான சிறுமிகளுக்குத் திருமணம் நடக்குது. தமிழ்நாட்டுல குழந்தைத் திருமணம் நடக்குற மாவட்டங்கள்ல கடலூரும் ஒண்ணு. கடந்த பத்து மாசத்துல 23 குழந்தைத் திருமணங்கள் இங்கே நடந்திருக்கு. அதுல சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பங்கள்ல மட்டும் நாலு திருமணங்கள் நடந்திருக்கு. கடைசியா 13 வயசு சிறுமிக்கும் 15 வயசு சிறுவனுக்கும் நடந்த திருமணத்தால தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டிருக்காங்க.”

“ஆமாம் வித்யாக்கா... ரொம்ப அதிர்ச்சியா இருக்கு... நாம பின்னோக்கிப் போயிட்டி ருக்கோம் போல... கொரோனாவுக்குப் பிறகு வறுமையால குழந்தைத் திருமணங்கள் இன்னும் அதிகரிச்சிருக்கு போல... இன்னோர் அதிர்ச்சியையும் சொல்லிடறேன்.

கேரளாவுல நரபலி கொடுத்திருக்காங்க ஒரு தம்பதி. எலாந்தூர்ல பகவல்சிங், லைலாங்கிற தம்பதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மாவையும் கேரளாவைச் சேர்ந்த ரோஸ்லினையும் நரபலி கொடுத்த குற்றத்துக்காகக் கைது செய்திருக்கு போலீஸ். இவங்களுக்கு நரபலி ஐடியா கொடுத்த மாந்திரீகர் முகமது ஷாஃபியும் கைது செய்யப்பட்டிருக்கார். பத்மா காணாமப் போனது பத்தி விசாரிச்சப்பதான் ரெண்டு பெண்களை நரபலி கொடுத்த விஷயம் தெரிய வந்திருக்கு. வீட்டுத் தோட்டத்துல வெட்டப் பட்ட உடல் உறுப்புகள் கிடைச்சிருக்கு...” என்றாள் விமல்.

“ இவங்க எல்லாம் சைக்கோக்கள். வீட்டுல பிணத்தைத் தோண்டி எடுக்கும்போதுகூட இவங்க ரொம்ப இயல்பா இருந்தாங்களாம்... என்னத்த சொல்றது?” கோபமாகச் சொன்னாள் வினு.

மூவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.

திடீரென்று, “சாரி... சாரி... உங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்... மறந்துட் டேன். அப்படியே விமலுக்குப் பிடிச்ச முந்திரி பக்கோடாவும் கொண்டு வரேன்” என்று எழுந்தாள் வினு.

மூவரும் காபியையும் பக்கோடாவையும் சாப்பிட்டபடியே மீண்டும் அரட்டையைத் தொடர ஆரம்பித்தனர்.

“கொலை, பலின்னு இல்லாம கொஞ்சம் இதமா ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா” என்றார் வித்யா.

“திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில்ல சுமதி மதியழகன் மிகமிகப் பழங்கால இசைக் கருவிகளை வாசிக்கிறாங்க. இதுவரை ஆண்கள் வாசிச்ச பஞ்சமுக வாத்தியம், சுத்த மத்தளம் கருவிகளை சுமதி வாசிக்கிறாங்க. இவங்க அப்பா இறந்த பிறகு, சுமதி வாசிக்க ஆரம்பிச் சிட்டாங்க. இவங்க ஆசிரியராவும் இருக்காங்க.இந்த வித்தியாசமான வாத்தியங்கள் சோழர் காலத்துலேருந்தே இருக்கிறதாவும் சொன் னாங்க...” சுவாரஸ்ய தகவல் சொன்னாள் வினு.

“சூப்பர்... இந்த வருஷ நோபல் பரிசுல ஏதாவது ஸ்பெஷல் இருக்கா விமல்..?”

 ஆனி எர்னோ
ஆனி எர்னோ

“பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைச்சிருக்கு. தன்னோட சொந்த அனுபவங்களைத்தான் ஆனி எழுதிட்டு வர்றாங்க. சமுதாயத்துல இவங்க எதிர் கொண்ட பாலின பேதம், வர்க்க வேறுபாடு, இனப்பாகுபாடு மாதிரியான விஷயங்களை நாவல்ல வெளிப்படுத்திட்டிருக்காங்க. ஒரு பெண் தாயாகணுமா, வேணாமாங்கிறது அவளுடைய அடிப்படை உரிமை. கருத் தடையும் கருக்கலைப்பும் பெண் விடுதலை யின் மையப்புள்ளின்னு சொல்றாங்க...”

“ஆமா விமல்... ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நல்லபடியா நடந்துச்சு. ஆண் குழந்தை. அவன் மகிழ்ச்சியாக இருந்தான்னு எழுதிட்டுப் போயிடறாங்க ஆண்கள். ஆனா, பெண்ணோட பிரசவவலி, கத்தியால உடம்பைக் கிழிக்கும்போது ஏற்படுற வேதனை, ரத்தப் பிசுபிசுப்பு எல்லாத்தையும் உணர்ந்ததில்ல. அவங்களைப் பொறுத்தவரை குழந்தைப் பிறப்புங்கறது மகிழ்ச்சி. பெண்ணுக்கோ அது வேதனைன்னு சொல்லிருக்காங்க.”

“சரியான பெண்ணிய எழுத்தாளருக்குத்தான் நோபல் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கு” என்றார் வித்யா.

“காம்பியா நாட்டுல எழுபது குழந்தைங்க பலியானது கொடுமை. இந்தியாவுல இருந்து அனுப்பப்பட்ட, கெட்டுப்போன இருமல் மருந்தாலதான் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக் கலாம்னு உலக சுகாதார மையம் எச்சரிக்கை செஞ்சிருக்கு.”

“ஆப்பிரிக்க ஏழை நாடுகள் ரொம்பவே பாவம் விமல்...”

“ஆமா வித்யாக்கா, சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்கள் மேல நடவடிக்கை எடுக்கணும். இன்னும் எத்தனை நாடுகளுக்கு அனுப்பிருப் பாங்களோ...”

“ம்... ஓகே, வினு. இன்னிக்கு நம்ம அரட்டை ரொம்ப சீரியஸாயிருச்சு. உடம்பைப் பார்த்துக்க. நெக்ஸ்ட் டைம் ஹேப்பியா பேசற மாதிரி நிகழ்வுகள் நடக்கட்டும். பை, டேக் கேர்” என்று கிளம்பினார் வித்யா. அவருக்குப் பின்னால் விமலும் கையசைத்துக்கொண்டே விடை பெற்றாள்.

- அரட்டை அடிப்போம்...

வினு தரும் வித்தியாசமான தகவல்

விண்ட்ஸ்கிரீன் துடைப்பான் வந்தது எப்படி?

ஒரு குளிர்கால நாளில், மேரி ஆண்டர்சன் நியூயார்க் நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் கண்ணாடியில் இருந்து பனியை அகற்றுவதற்காக, ஓட்டுநர் ஜன்னலைத் திறக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை ஜன்னலைத் திறக்கும்போதும், காரில் இருந்த பயணிகள் குளிரில் நடுங்கினர். இதன் பிறகு மேரி ஆண்டர்சன், காருக்குள் இருந்தே நகர்த்தக்கூடிய ஒரு ரப்பர் பிளேட் மாதிரியை வரையத் தொடங்கினார். 1903-ம் ஆண்டில் விண்ட்ஸ்கிரீன் துடைப்பான் (Windscreen wiper) என்கிற அவரது சாதனத்துக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனால், கார் நிறுவனங்களிடம் இந்தக் கண்டுபிடிப்பு வரவேற்பைப் பெறவில்லை. இது ஓட்டுநர்களைத் திசைத்திருப்பும் என்று அவை நினைத்தன. அதனால் மேரி தனது கண்டுபிடிப்பிலிருந்து ஒருபோதும் லாபம் பெறவில்லை. பிற்காலத்தில்தான் `வைப்பர்கள்' கார்களுக்கு அத்தியாவசிய கருவியாக மாறின.

பண்டிகை காலமும் ஆம்னி பேருந்து கட்டணமும்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

பண்டிகைகள் மற்றும் விடுமுறைக் காலத்தில் விமான கட்டணத்துக்கு நிகராக ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது காலம் காலமாகத் தொடர்கிறதே... இது குறித்து உங்கள் கருத்து என்ன?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

இன்றைய கால கட்டத்தில் கட்டண உயர்வெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்படியோ சொகுசாக, சுகமாய் வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள் மக்கள். இதற்கு அவர்களது வேலைப்பளு கூட ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும் தனியார் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். மேலதிகாரிகளிடம் வாதாடி, போராடி கேட்டு விடுப்பு வாங்குவதற்குள் போதும் போது மென்றாகிவிடும். அப்படி இருக்கும்பட்சத்தில் எந்த நேரத்திலும், எப்போதும் பயணம் செய்ய ஏதுவானது ஆம்னி தான். அதனால் இந்தக் கட்டண உயர்வையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.`ஓடுகிறவனைக் கண்டால் முடுக்கிறவனுக்கு தொக்கு' என்று. பயணிகள் கொடுக்கத் தயாராக இருக்க, நிறுவனத்தார் கட்டணத்தை ஏற்ற (ஆளையும்தான்) தயங்குவார்களா என்ன?

- ஜானகி பரந்தாமன், கோவை-36

பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில் நியாயமான காரணங் களும் இருக்கின்றன. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் உடனே செய்வதாக இருந்தால் பணம் அதிகமாகக் கேட்பதும் கொடுப்பதும் வழக்கமான ஒன்று தான். தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்கும்போது அவர்கள் தங்கள் பணியினை விட்டுவிட்டு தற்காலிக பேருந்துப் பணிக்கு வரும்போது, சம்பளம் அதிகமாக எதிர்பார்க்கும்போது அதை பயணிகளிடம்தானே வசூல் செய்ய முடியும்? பஸ்ஸில் ஏறும் பயணிகளும் திடீரென பண்டிகை விடுமுறை தினங்களில் பிளான் போட்டு கடைசி நேரத்தில் கிளம்பும்போது எப்படியும் டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் நமக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை உடன் இருக்கிறார்கள்.

- எஸ்.நிரஞ்சனி, சென்னை 125

கடைசி நிமிடத்தில் காளானைப் போல் முளைக்கும் ஆம்னி பேருந்துகளை அரசு தடை செய்ய வேண்டும். இவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு பயிற்சி இல்லாத ஓட்டுநர்களை நியமித்து, அதிக ட்ரிப் எடுக்க வேண்டும் என்பதற்காக வேகமாக, தாறு மாறாக ஓட்டி , பல கோர விபத்துகளை ஏற்படுத்து கின்றனர். இதை நிறுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வித்யா ஆனந்த், பெங்களூரு-3

ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாள்களில் ஏற்படும் இழப்பை விசேஷ நாள்களில் ஈடுசெய்து கொள்வது காலம் காலமாக நடந்து வருவதுதான். மேலும் பண்டிகை நாள்கள் திடீரென வருவதில்லை. எனவே நாம்தான் திட்டமிட்டு முன்கூட்டியே பயணங் களை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாங்கமும் பண்டிகை காலங்களில் பேருந்துகளின் எண்ணிக் கையையும் பயணிகளின் எண்ணிக்கையையும் வைத்து புள்ளிவிவரப் பட்டியல் தயாரிப்பதை விடுத்து பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் பெருகுவதோடு ஆம்னி பேருந்துகளின் அடா வடித்தனத்துக்கு கடிவாளம் போட்டது போலவும் ஆகும்.

- ஆர்.விசாலி, மன்னார்குடி

வினு விமல் வித்யா: பெண்ணை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்!