ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: மதுவுக்கு எதிராக கட்டையைத் தூக்கும் பெண்கள்!

 திவ்யா எஸ். ஐயர்
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யா எஸ். ஐயர்

சஹானா

விமலின் வீட்டில் மதிய உணவுக்குப் பிறகு, அரட்டையை ஆரம்பித்தனர் வித்யாவும் வினுவும்.

“திவ்யா எஸ்.ஐயர் வீடியோவைப் பார்த்தீங்களா?”

“யாரு வித்யாக்கா?”

“அந்த வீடியோ வைரலாச்சே... உங்களுக்குத் தெரியலையா!?”

“கவனிக்கல... சொல்லுங்க.”

“அவங்க கேரளாவோட பத்தனம்திட்டா மாவட்டத் தோட கலெக்டர். ஞாயிற்றுக்கிழமை ஒரு திரைப்பட விழாவுக்குப் போயிருந்தாங்க. அப்போ அவங்க மகனும் வந்திருந்தான். கொஞ்ச நேரம் வெளியில விளையாடிட் டிருந்தவன், அவன் அம்மா மேடையில இருக்கிறதைப் பார்த்ததும் ஓடி வந்துட்டான். அவனைத் தூக்கி வச்சிக் கிட்டே பேசி முடிச்சாங்க. விழாவுல குழந்தையோட குறும்புகளைப் பார்த்துப் பலரும் சந்தோஷப்பட்டாங்க. அந்த வீடியோவைப் பலரும் ஷேர் பண்ணி, பாராட்டி யிருந்தாங்க. ஆனா, ‘அரசு அதிகாரி இப்படியா குழந்தை யோடு வந்து கலந்துக்கிறது’னு சிலர் விமர்சனமும் செஞ்சிட்டிருக்காங்க.”

 பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு

“ஓ... ஞாயிற்றுக்கிழமைங்கிறதால குழந்தையையும் அழைச்சிட்டு வந்துட்டாங்களோ... அதுல என்ன தப்பு இருக்கு?”

“கரெக்ட் வினு. திவ்யாவும், `ஞாயிற்றுக்கிழமை என் மகனோடு செலவிடற நாள். அதனாலதான் அந்த விழா வுக்கு அழைச்சிட்டுப் போனேன். அவன் மேடை ஏறினதும் நான் அம்மாவா மாறிட்டேன். அந்தச் சூழலை அங்கே இருந்தவங்க நல்லவிதமாகவே எடுத்துக் கிட்டாங்க. ஆனா, வீடியோ வைரலான பிறகுதான் எதிர்வினைகள் வருது. அது அரசு விழா இல்ல. இதை ஏன் விமர்சிக்கிறாங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்குன்'னு சொல்லிருக்காங்க!”

“சோஷியல் மீடியா வந்த பிறகு, எல்லாத்துக்கும் கருத்தும் இருக்கும்; எதிர்க்கருத்தும் இருக்கு. பாவம் திவ்யா...”

‘`கரெக்டா சொன்னே வினு... ஹரியானாவுல ராம்கலி கிராமத் துல பெண்கள் மதுவுக்கு எதிராகப் போராடிட்டிருக்காங்க. அவங் களோட ஆக்ரோஷமான போராட்டம் மற்றும் கண் காணிப்பால அந்தக் கிராமத்துல நாலு வருஷமா யாரும் மது குடிக்கிறதில்ல. பல குடும்பங்கள் மதுவால சீரழிஞ்சு போச்சுங் கிறதாலதான் இந்த முடிவை எடுத் திருக்காங்க. இதுக்கிடையில சமீபத்துல கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவே, அரசியல் வாதிங்க பலரும் கிராமங்களுக்கு மதுபானங்களை சப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, பெண்கள் சும்மா விடல. இரவு நேரத்துல வயசான பெண்கள் கட்டைகளோடு ரோந்து வர ஆரம்பிச்சுட்டாங்களாம். பாட்டு பாடிக்கிட்டே, கட்டைகளை நிலத்துல தட்டிக்கிட்டே அந்தப் பெண்கள் ரோந்து வர்றதப் பார்த்து அரண்டு போயிட்டாங்களாம் அரசியல் வாதிங்க” என்றாள் விமல்.

 திவ்யா எஸ். ஐயர்
திவ்யா எஸ். ஐயர்

“மதுவாலதான் பெரும்பாலான குடும்பங்கள் சீரழிஞ்சு போகுது. அந்தப் பெண்களோட முயற்சிக்கும் துணிச்சலுக்கும் தலைவணங்கலாம். அவங்க எடுக்கிற முயற்சிக்கு அந்தக் கிராமத்து ஆண்கள் கட்டுப் படறாங்கன்னா, நல்ல விஷயம்!”

“ஆமாம் வித்யாக்கா... இன்னொரு தகவல் கேள்விப்பட்டீங்களா... சுஷ்மிதா சென் திருநங்கையா நடிக்கப் போறாங்க.”

“அப்படியா விமல்..!”

“ஆமா...ஒரு குழந்தையைத் தத்தெடுக்குற உரிமைக்காக நீதிமன்றத்தில வழக்கு தொடுத்தவங்க திருநங்கை கெளரி சாவந்த். அவங்களோட கேரக்டர்ல தான் ஒரு இந்திப் படத்துல சுஷ்மிதா நடிக்கப் போறாங்க. இந்த அறிவிப்பு வந்ததுக்கு திருநங்கையும் நடிகையுமான நவ்யா சிங் எதிர்ப்புத் தெரிவிச்சிருக் காங்க. ஒரு திருநங்கை கேரக்டர்ல ஒரு திருநங்கையையே நடிக்க வைக்கிறதுதான் நியாயமானது. எங்களைப் போன்றவங்களுக்குத் திரைப்படங்கள்ல வாய்ப்பு சரியா கிடைக்கிறதில்ல. இதுல திருநங்கை கேரக்டரை யும் எங்களுக்குக் கொடுக்கலைனா எப்படி? நான் இந்த அறிவிப்பால ரொம்ப அதிர்ச்சியடைஞ்சேன்னு சொல்லியிருக்காங்க.”

“இவங்க சொல்றதிலும் நியாயம் இருக்கு விமல். ஆனா, திரைப்படத்துறையில் பெரிய நடிகர், நடிகை களை வச்சு வியாபாரம் நடக்குது. அதனால சுஷ்மிதா மாதிரி பிரபலமானவங்களை நடிக்க வைக்கிறாங் கன்னு நினைக்கிறேன்.”

“ஆமா, கெளரி சாவந்த் என்ன சொல்றாங்க?” - ஆர்வமாகக் கேட்டாள் வினு.

“அவங்க தன்னோட கேரக்டர்ல சுஷ்மிதா நடிக்கிறதை வரவேற்றிருக் காங்க.”

“ம்... கொஞ்சம் இருங்க வரேன்” என்று சமையலறைக்குச் சென்ற விமல், மூன்று கண்ணாடி டம்ளர்களில் ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்தாள்.

 ஹார்மோனி ரோஸ் ஆலன்
ஹார்மோனி ரோஸ் ஆலன்

“நீதிமன்றம்னு சொன்னதும் நினைக்கு வருது. பாலியல் குற்றங் களுக்காக தண்டனை அடைஞ்சி சிறைகள்ல இருக்கறவங்க, இப்பல்லாம் சட்சட்னு விடுதலை ஆகறத நீங்க ரெண்டு பேரும் கவனிச்சீங்களா?”

“என்ன சொல்றே வினு..?” என்று அதிர்ச்சியடைந்தார் வித்யா.

“ஆமா வித்யாக்கா. 2002 குஜராத் கலவரத்துல பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டாங்க. அவங்க உறவினர்கள் கொல்லப்பட்டாங்க. அந்தக் குற்ற வாளிகளைச் சில மாதங்களுக்கு முன்னால குஜராத் மாநில அரசு விடுவிச்சுச்சு...”

“என்ன கொடுமை இது?”

“அதே மாதிரிதான், இப்போ ஹரி யானாவுல குற்றவாளிகள் வெளியில வந்திருக்காங்க. பத்து வருஷங்களுக்கு முன்னால, 19 வயசு டெல்லி பெண் ஒருத்தங்க தன்னோட மூணு நண்பர் களால, ஹரியானா வயல்ல கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டாங்க. நாலு நாளைக்குப் பின்னால பாதி எரிஞ்ச நிலையில அந்தப் பெண் ணோட உடல் கண்டுபிடிக்கப்பட்டுச்சு. விசாரணை நடத்தி, தகுந்த ஆதாரங்களோட மூணு பேரையும் குற்றவாளிகள்னு நிரூபிச்சாங்க. நீதிமன்றம் மரண தண்டனை விதிச்சது. உயர் நீதிமன்றமும் அவங்களோட தண்டனையை உறுதி செஞ்சது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. வழக்கை விசாரிச்ச நீதிபதி, உறுதியான ஆதாரங்கள் இல்லைங் கிறதால குற்றவாளிகளா கருதப்படுறவங்களை விடுவிக்கிறேன்னு சொல்லியிருக்கார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு பாதிக்கப்பட்ட பெண் ணோட குடும்பமும் பொது மக்களும் ரொம்பவே நொறுங்கிட்டாங்க.”

“ஐயோ... என்ன சொல்றதுனே தெரியல வினு. ஏன் இப்படியெல்லாம்...”

“அந்தப் பெண்ணோட குடும்பம் உச்ச நீதிமன்றத்துல மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போறாங்க.”

“இங்கே பாதிக்கப் பட்டவங்களுக்குத்தானே தண்டனை? மகள் இழப்புக்கு ஆறுதலா குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கணும்னு நினைச்சிருப்பாங்க. இப்போ மகளையும் இழந்து, குற்ற வாளிகளும் வெளியே வந்தா, அவங்களுக்கு எப்படி இருக் கும்?”

“ஒரு பக்கம் பாலியல் வன் புணர்வுக்குள்ளாகுற பெண் களுக்கு இரு விரல் சோதனை செய்யக்கூடாதுன்னு வர வேற்க வேண்டிய தீர்ப்பையும் நீதிமன்றங்கள் வழங்குது. இன்னொரு பக்கம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவிக்கிற குற்றவாளிகளை விடுவிக்கவும் செய்யுது. புரியாத புதிரா இருக்கு” - ஆதங்கப்பட்டாள் வினு.

“ஆமா, வினு. இரு விரல் பரிசோதனை... பாதிக்கப்பட்டவங்களை மறுபடியும் காயப் படுத்தத்தானே செய்யும்? அதுக்கு இப்ப வாவது தடை வந்திருக்கேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். இப்படிக் குற்றவாளிங்க வெளியில வந்தா, பயம் இருக்காது. குற்றச் செயல்கள் அதிகரிக்கவே செய்யும்.”

“நாங்க கிளம்பட்டுமா விமல்?”

“என்ன வித்யாக்கா அவசரம்? இருங்க, ஸ்நாக்ஸ் சாப்பிட்டுப் போகலாம்.''

“நீ ஏன் கிச்சன்ல கஷ்டப் படணும்?”

“இன்னிக்கு நான் செய்யப் போறதில்ல வித்யாக்கா. அவர் நமக்கெல்லாம் செஞ்சு கொடுக்கறேன்னு சொல்லி யிருக்காரு. என்னைவிட நல்லா சமைப்பார்.”

“அப்படின்னா சாப் பிட்டே போகலாம் வித்யாக்கா. இல்லைனா ரெண்டு பேரு மனசும் கஷ்டப்படும். இங்கிலாந்துல ஹார்மோனி ரோஸ் ஆலன்ங்கிற எட்டு வயசுக் குழந்தைக்குப் பிறவியிலேயே அரிய வகை குறைபாடு. அந்தப் பெண்ணோட கை கால்கள்ல இருந்த நாலு மூட்டுகளையும் அகற்றிட்டாங்க. பாவம் அந்தக் குழந்தை. எதையும் செய்ய முடியாது. இப்போ அந்தக் குழந்தைக்கு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மூட்டுகளோடு கூடிய செயற்கைக்கால்களைப் பொருத்தியிருக்காங்க. சென்சார் உதவியோட இப்போ அந்தக் குழந்தையால மத்தவங்களை மாதிரி இயல்பா நடக்க முடியுது. ஹார்மோனி ரோஸோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. இனி தன்னாலும் மத்த குழந்தைகளை மாதிரி ஸ்கூலுக்குப் போக முடியும்னு சொல்லும்போது அப்படியே அணைச்சுக்கலாம் போல இருக்கு.”

“இந்த நவீன தொழில்நுட்பக் காலத்துல இதுமாதிரி பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக் கிறது ரொம்ப நல்ல விஷயம்!”

“ஆமா வித்யாக்கா, ஹார்மோனி ரோஸ் தான் உலகத்துலேயே மிக இளம் வயசுல சென்சார் செயற்கைக் கால்களைப் பொருத்திக் கிட்ட பெண்!”

“ஓ... இரான்ல இப்போ போராட்டம் எப்படிப் போயிட்டிருக்கு விமல்?”

“மாஷா அம்னிக்காக ஆரம்பிச்ச போராட் டங்கள் ரெண்டு மாசமாகியும் கொஞ்சமும் தணியாமப் போயிட்டிருக்கு வினு. இப்போ இரான் டாப் நடிகைகள்ல ஒருத்தரும் ஆஸ்கர் வென்ற ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படத்துல நடிச்சு, புகழ்பெற்றவங்களுமான தாரெனா அலிதூஸ்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரி விச்சிருக்காங்க. தன்னோட இன்ஸ்டாகிராம்ல ஹிஜாப் அணியாம போட்டோ போட்டு, ‘பெண், வாழ்க்கை, சுதந்திரம்’னு எழுதியிருக் காங்க. இவங்களை 80 லட்சம்பேர் ஃபாலோ பண்றாங்க! அரசு ஒடுக்குமுறையால கொல்லப் பட்டவங்களோட குடும்பத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் எடுத்துத்துட்டு வர் றாங்க. என்ன நடந்தாலும் இரானை விட்டுப் போகப் போறதில்லைன்னும் சொல்லியிருக் காங்க. இவங்களோட நடவடிக்கை போராட் டக்காரங்களுக்கு வலுவூட்டுறதா இருக்கு!”

“கிரேட்! துணிச்சலுக்கு சல்யூட்!”

“எக்ஸ்க்யூஸ்மி... டிபனை சாப்பிட்டுக்கிட்டே அரட்டையைத் தொடருங்க. காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று விமலின் இணையர் தட்டு நிறைய வெங்காய பக்கோடா பரிமாறினார்.

“ஓ... தேங்க்ஸ். வாசமே இழுக்குது... ரொம்ப நல்லா இருக்கும்போல!”

மூவரும் அரட்டையை முடித்துக்கொண்டு பக்கோடா சாப்பிடுவதில் கவனத்தைச் செலுத்தினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

வினு விமல் வித்யா: மதுவுக்கு எதிராக கட்டையைத் தூக்கும் பெண்கள்!

வினு தரும் வித்தியாசமான தகவல்

மோனோபோலி விளையாட்டை முதலில் உருவாக்கிய பெண்!

மோனோபோலி... வரலாற்றில் மிகவும் பிரபலமான இந்தப் பலகை விளையாட்டை உருவாக்கியதாக சார்லஸ் டாரோ என்ற நபர் அடிக்கடி பாராட்டப்படுகிறார். ஆனால், உண்மையில் இந்த விளையாட்டுக்கான விதிகளை எலிசபெத் மேகி என்ற பெண்மணியே கண்டுபிடித்தார்.

மேகி இந்தப் புதுமையான விளையாட்டின் மூலம் முதலாளித்துவத்தின் சிக்கல்களை நிரூபிக்க விரும்பினார். அவரது விளையாட்டில் ஆட்டக்காரர்கள் போலி பணம் மற்றும் சொத்துகளைக் கொண்டு வர்த்தகம் செய்தனர். 1904-ம் ஆண்டில் காப்புரிமை பெற்ற மேகியின் வடிவமைப்பு, ‘தி லேண்ட்லார்ட்ஸ் கேம்’ என்று அழைக்கப்பட்டது. இன்று நமக்குத் தெரிந்த மோனோபோலி விளையாட்டு, 1935-ம் ஆண்டில் பார்க்கர் பிரதர்ஸால் வெளியிடப் பட்டது. அவர்கள் சார்லஸ் டாரோ மட்டுமே இந்த விளையாட்டை உருவாக்கியவர் அல்ல என்பதைக் கண்டறிந்து, வெறும் $500 விலைக்கு மேகியின் காப்புரிமையை வாங்கி, விளையாட்டைப் பிரபலப்படுத்தினார்கள்.

உங்களுக்காக/எங்களுக்காக...

அது, இது, எதுவானாலும் சரி... அவள் விகடன் இதழில், இணையதளத்தில், யூடியூபில் இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றை பற்றி, உரிமையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்வுபெறும் சிறந்த ஆலோசனை களுக்கு சிறப்புப் பரிசுகள் நிச்சயம் என்று சென்ற (22.11.22) இதழில் அறிவித்திருந்தோம்.

வாசகர்களிடம் இருந்து ஆலோசனைகள் வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொன்றாக பரிசீலித்து தகுந்த நேரத்தில் அந்த ஆலோசனைகள் செயல்படுத்தப்படும். தொடர்ந்து உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

உங்களுக்காக/எங்களுக்காக...

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com