Published:Updated:

புதுக்கோட்டை: வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க செயின்! - கைதியின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு

நேர்மையுடன் ஒப்படைத்த கைதி
நேர்மையுடன் ஒப்படைத்த கைதி

பணியிலிருந்த தண்டனைக் கைதி கிறிஸ்து ஆரோக்கியராஜ், கீழே விழுநது கிடந்த செயினை கையில் எடுத்துப் பார்த்திருக்கிறார். தங்க செயின்போலத் தெரிந்ததால், உடனே அதை பத்திரமாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார்.

சம்பவம் 1: 

புதுக்கோட்டை சிறைத்துறை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி அருகே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. இந்த பெட்ரோல் பங்க்கில் தண்டனைக் கைதிகள் ஷிஃப்ட் அடிப்படையில் பணிபுரிந்துவருகின்றனர். பெட்ரோல் நிரப்புவது, கேஷியர், ஏர் செக்கர் என அனைத்திலும் தண்டனைக் கைதிகள்தான் பணியாளர்களாக இருக்கின்றனர். இங்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

தங்க செயின்
தங்க செயின்

இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே அடப்பன்வயலைச் சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்கு பங்க்குக்கு வந்திருக்கிறார். பெட்ரோல் நிரப்பிவிட்டுச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.65,000 மதிப்பிலான தங்கச் செயின் கழன்று கீழே விழுந்திருக்கிறது. சரவணனும் அதை கவனிக்காமல் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் அப்போது பணியிலிருந்த தண்டைக் கைதி கிறிஸ்து ஆரோக்கியராஜ் கீழே விழுந்து கிடந்த செயினை கையில் எடுத்துப் பார்த்திருக்கிறார்.

தங்க செயின்போலத் தெரிந்ததால், உடனே அதை பத்திரமாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார். ஆரோக்கியராஜின் நேர்மையைப் பாராட்டிய சிறைத்துறை அதிகாரிகள், செயினை விட்டுச் சென்ற நபர் குறித்த தகவல்களைச் சேகரித்துவந்தனர். இதற்கிடையே, தங்கச் செயினைத் தேடி பெட்ரோல் பங்க்குக்கு வந்த சரவணன், பணியாளர்களிடம் இது பற்றிக் கேட்க, ``கீழே விழுந்துகிடந்த செயின் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். உரிய அடையாளங்களைக் கூறி வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

தண்டனைக் கைதி
தண்டனைக் கைதி

நிம்மதிப் பெருமூச்சுவிட்ட சரவணன், அடையாளங்களைக் கூறி செயினைப் பெற்றுச் சென்றிருக்கிறார். சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ருக்மிணி பிரியதர்ஷினி செயினை அடையாளங்களைப் பெற்றுக்கொண்டு, உரியவரிடம் ஒப்படைத்தார். அதோடு, கிறிஸ்து ஆரோக்கியராஜின் நேர்மையைப் பாராட்டினார். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் ஒருவர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை நேர்மையுடன் இங்கு பணிபுரியும் மற்றொரு பணியாளர் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 2:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சக்தி (31), கீரமங்கலம்-பட்டுக்கோட்டை சாலை வழியாகச் சென்ரிருக்கிறார். அப்போது, கட்டைப்பை ஒன்று சாலையில் கிடந்திருக்கிறது. சாலையில் கிடந்த அந்தக் கட்டைப்பையைச் சக்தி பிரித்துப் பார்த்திருக்கிறார். அதில், தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு, செல்போன் ஆகியவை இருந்திருக்கின்றன. உடனே, அந்தப் பையை அப்படியே எடுத்துக்கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

கட்டைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
கட்டைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

அங்கிருக்கும் போலீஸாரிடம் பையைக் கொடுத்த சக்தி, உரியவரிடம் அந்தப் பையை ஒப்படைக்கும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து, பையிலிருந்த செல்போன் எண்ணைவைத்து தொடர்புகொண்ட போலீஸார், அது யாருடைய பை என்பதை உறுதி செய்து, அவர்களின் முகவரியைப் பெற்றனர். விசாரணையில், பையைத் தவறவிட்டது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-சசிகலா தம்பதியருடையது என்பது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வழியாக பனசக்காடு கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது அந்தப் பை எதிர்பாராதவிதமாகச் சாலையில் கழன்று விழுந்திருக்கிறது. அந்தப்பையில், மூன்று பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளிக்கொலுசு, செல்போன் உள்ளிட்டவை இருந்திருக்கின்றன. உறவினர்களுக்குச் செய்முறை செய்வதற்காக நகைகளை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்ட போலீஸார், அவர்களைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து கட்டைப்பையிலிருந்த விவரங்களைக் கேட்டுக்கொண்டனர்.

கட்டைப்பையிலிருந்த பொருள்கள்
கட்டைப்பையிலிருந்த பொருள்கள்

அனைத்து விபரங்களையும் சரியாகச் சொன்ன பிறகு, சம்பந்தப்பட்டவர்களிடம் பையை ஒப்படைத்தனர். நகை, செல்போன் இருந்த கட்டைப்பை காணாமல்போன சில மணி நேரங்களிலேயே, உரியவரிடம் கீரமங்கலம் போலீஸார் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் கீழே விழுந்து கிடந்தது நகை என்று தெரிந்தும் நாணயத்தோடு நடந்துகொண்ட சக்தியின் செயலை போலீஸாரும் பொதுமக்களும் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு