Published:Updated:

“அரசே சைபர் குற்றங்களில் இறங்கலாமா?” - கேள்வி எழுப்புகிறார் சைபர் எக்ஸ்பர்ட் சண்முகவேல் சங்கரன்...

சண்முகவேல் சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
சண்முகவேல் சங்கரன்

வாட்ஸ்அப் ஒரு என்கிரிப்டடு ஆப். அதாவது அனுப்புபவர், பெறுபவர் தவிர மூன்றாவது நபர் நுழைந்து, அந்தத் தகவலைத் தெரிந்துகொள்ள முடியாது

“அரசே சைபர் குற்றங்களில் இறங்கலாமா?” - கேள்வி எழுப்புகிறார் சைபர் எக்ஸ்பர்ட் சண்முகவேல் சங்கரன்...

வாட்ஸ்அப் ஒரு என்கிரிப்டடு ஆப். அதாவது அனுப்புபவர், பெறுபவர் தவிர மூன்றாவது நபர் நுழைந்து, அந்தத் தகவலைத் தெரிந்துகொள்ள முடியாது

Published:Updated:
சண்முகவேல் சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
சண்முகவேல் சங்கரன்

சண்முகவேல் சங்கரன்... 20 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘பெகாசஸ்’ ஸ்பைவேரை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு விசிட் செய்தவர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘ஃபிக்ஸ்நிக்ஸ்’ என்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி, முதல் தலைமுறை பட்டதாரிகளை மென்பொருள் பொறியாளராக உருவாக்கியவர். தற்போது கலிஃபோர்னியாவில் வசித்துவரும் இவர், ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட சர்வதேசப் பத்திரிகைகளில் தொழில்நுட்பம், சைபர் அட்டாக் பற்றி எழுதிவருகிறார். சமீப நாள்களாக சர்வதேச அளவில், மிகப்பெரிய அளவில் கவனம்பெற்றிருக்கும் பெகாசஸ் ஸ்பைவேர் சர்ச்சை பற்றி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பெகாசஸ் என்றால் என்ன... இதனால் செல்போன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

‘‘நம்மை உளவு பார்க்கப் பயன்படும் ஸ்பைவேர்தான் பெகாசஸ். வாட்ஸ்அப், ஐ மெசேஜ் போன்ற ஆப்கள் மூலமாக ஒருவரின் செல்போனுக்குள் எளிதாக இதை இன்ஸ்டால் செய்துவிட முடியும். அப்படிச் செய்துவிடும்பட்சத்தில் திடீரென்று போன் ஸ்லோவாக இயங்கும். தடயவியல் பரிசோதனைகள் மற்றும் பாக்கெட் ஸ்னிஃபிங் (Packet Sniffing) போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் பெகாசஸால் ஒரு போன் பாதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.’’

‘‘பெகாசஸ் ஸ்பைவேரை இத்தனை நாடுகள் பயன்படுத்தும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது?’’

‘‘வாட்ஸ்அப் ஒரு என்கிரிப்டடு ஆப். அதாவது அனுப்புபவர், பெறுபவர் தவிர மூன்றாவது நபர் நுழைந்து, அந்தத் தகவலைத் தெரிந்துகொள்ள முடியாது. எந்தப் பெரிய மென்பொருளாலும் வாட்ஸ்அப்பை எளிதில் ஹேக் செய்துவிட முடியாது. வாட்ஸ்அப் காலை ரெக்கார்டும் செய்யவும் முடியாது. அதனாலேயே வி.ஐ.பி-க்கள் பலரும் வாட்ஸ்அப் கால் மூலமாகப் பேசுவதையே வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் இந்த பெகாசஸ் ஸ்பைவேர், வாட்ஸ்அப் உரையாடல்கள், மெசேஜ்களையும் உளவு பார்க்க வல்லது. இதனாலேயே, பல நாடுகளின் அரசுகள் பெகாசஸ் போன்ற ஸ்பைவேர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றன.’’

‘‘உலகம் முழுவதும் இப்படிக் கண்காணிப்பது நடக்கும்தானே... அப்படியிருக்கும்போது இந்தியாவில் மட்டும் இது பெரிய பிரச்னையானது ஏன்?’’

‘‘அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் இதைவிடத் தரமான ஸ்பைவேர்களை வைத்து தங்களுக்கு எதிரானவர்களைக் கண்காணித்து வருகிறார்கள். என்.எஸ்.ஓ போன்ற ஏஜென்சிகளின் வேலையே இந்த மாதிரியான ஸ்பைவேர்களை உருவாக்குவதுதான். ஆனால், இந்தியாவில் நடந்த அளவுக்குச் சொந்தக் கட்சிக்காரர்கள், நீதிபதிகள், உயரதிகாரிகள், எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் என ஜனநாயகத்தின் அனைத்து முக்கியமான தரப்பினரிடமும் அதைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அதனால்தான், இந்தியாவில் இதற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.’’

“அரசே சைபர் குற்றங்களில் இறங்கலாமா?” - கேள்வி எழுப்புகிறார் சைபர் எக்ஸ்பர்ட் சண்முகவேல் சங்கரன்...

‘‘ `பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கவில்லை’ என்று மத்திய அரசும், `இந்தியாவுக்கு விற்கவில்லை’ என்று என்.எஸ்.ஓ-வும் சொல்லும்போது, இந்திய அரசுதான் கண்காணித்திருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?’’

‘‘கண்காணித்தவர்கள் பட்டியலில் இருக்கும் பெயர்கள்தான் சந்தேகத்தை எழுப்புகின்றன. தவிர, மத்திய அரசு வாங்கவில்லையென்று சொல்லியிருக்கிறதே தவிர, அதைப் பயன்படுத்தவில்லை என மறுத்ததாகத் தெரியவில்லை. தேசப் பாதுகாப்புக்காக கண்காணித்தால், கேள்வியே இல்லை. அரசியலோடு தொடர்பே இல்லாத ராகுல் காந்தியின் நண்பர்களை ஏன் கண்காணிக்க வேண்டும்? பீமா கோரேகான் பிரச்னையோடு தொடர்புடையவர்களின் குடும்பத்தினர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர்மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் உறவினர்கள்... இப்படிக் கண்காணிக்கப்பட்டவர்கள் என பட்டியலிடப்பட்டிருக்கும் பெயர்கள்தான் சந்தேகத்தை அதிகரிக்கின்றன.”

‘‘பெகாசஸ் இவ்வளவு பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததன் பின்னணியில் சர்வதேச அரசியல் ஏதேனும் இருக்கிறதா?”

‘‘பெகாசஸ் பிரச்னையின் பின்னணியில் அமெரிக்காவுக்குப் பங்கிருக்கிறது என்றே கருதுகிறேன். அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் மோடி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற தகவல் இங்கு பரவலாக இருக்கிறது.”

‘‘இணைய வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனவே?’’

‘‘உண்மைதான்! ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் சைபர் குற்றங்களைத் தடுக்க அதிக முதலீட்டில் பல்வேறு விஷயங்களைச் செய்துவருகின்றன. ஆனால், இந்தியாவில் அரசும் மக்களும் சைபர் குற்றங்கள் குறித்தோ, அதன் தீவிரம் குறித்தோ எந்தப் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பயோ வாரைவிட சைபர் வார்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கப்போகிறது. இந்த பெகாசஸ் பிரச்னை அதற்கோர் எச்சரிக்கை மணி. அதைப் புரிந்துகொண்டு சைபர் செக்யூரிட்டியில் கவனம் செலுத்தாமல் அரசே அந்தக் குற்றங்களைச் செய்வது மிகப்பெரிய அவலம்.’’

“அரசே சைபர் குற்றங்களில் இறங்கலாமா?” - கேள்வி எழுப்புகிறார் சைபர் எக்ஸ்பர்ட் சண்முகவேல் சங்கரன்...

‘‘ஆனால், தேசப் பாதுகாப்புக்காக இந்த மாதிரியான ஸ்பைவேர்களைப் பயன்படுத்தலாம் அல்லவா?’’

‘‘தேசப் பாதுகாப்புக்காக என்பதுவரை ஓகே. ஆனால் பத்திரிகையாளர்களை, சமூகச் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து ஸ்பைவேர் மூலம் அவர்களை வளைக்கப் பயன்படுத்துவது ஆபத்தான போக்கு. அப்படிச் செய்தால் அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்து இல்லாமல் போகும்; ஜனநாயகம் கேள்விக்குறியாகும். எந்தத் தயக்கமுமின்றி அரசு தனது சித்தாந்தத்தை, அதிகாரத்தை மக்கள்மீது திணிக்கவே வழிவகுக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism