Published:Updated:

சைக்கிள் திருடுறது ரொம்ப ஈஸி சார்!

சைக்கிள் திருட்டு
பிரீமியம் ஸ்டோரி
சைக்கிள் திருட்டு

அக்கம் பக்கத்துலயும் ஆளுங்க இல்லை. ஆண்டவனே எனக்கு நல்ல வழியைக் காட்டினதா தோணுச்சு... நைசா அதைத் தள்ளிக்கிட்டு வந்துட்டேன்.

சைக்கிள் திருடுறது ரொம்ப ஈஸி சார்!

அக்கம் பக்கத்துலயும் ஆளுங்க இல்லை. ஆண்டவனே எனக்கு நல்ல வழியைக் காட்டினதா தோணுச்சு... நைசா அதைத் தள்ளிக்கிட்டு வந்துட்டேன்.

Published:Updated:
சைக்கிள் திருட்டு
பிரீமியம் ஸ்டோரி
சைக்கிள் திருட்டு

‘‘பைக்கையோ காரையோ திருடினா ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், இன்ஜின் சேசிஸ் நம்பர், ஆர்.சி புக் எல்லாத்தையும் மாத்தி விக்குறது கஷ்டம். சைக்கிளைத் திருடி வித்தா இந்தப் பிரச்னையெல்லாம் இல்லை. அதனாலதான், சைக்கிள்களை மட்டுமே திருடினேன்’’ - சென்னை பம்மல் அருகேயுள்ள சங்கர் நகர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சைக்கிள் திருடன் சதீஷ்குமாரின் வாக்குமூலம் இது!

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

சதீஷ்குமார் திருடனானது எப்படி? அவன் வாக்குமூலத்தைக் கேட்போம்...

‘‘கொரோனா ஊரடங்குக்கு முன்னாடி வரைக்கும் ஹார்டுவேர் கடை, நாள் கூலிக்கு ஆட்டோ ஓட்டுறதுன்னு கிடைக்குற வேலைகளை செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஊரடங்கால போன வருஷம் ஏப்ரல் மாசம் என்னை வேலையிலருந்து அனுப்பிட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியாம வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன். அப்போ ஒரு அபார்ட்மென்ட் முன்னாடி புத்தம் புதுசா சைக்கிள் ஒண்ணு பூட்டாம நின்னுக்கிட்டிருந்தது. அக்கம் பக்கத்துலயும் ஆளுங்க இல்லை. ஆண்டவனே எனக்கு நல்ல வழியைக் காட்டினதா தோணுச்சு... நைசா அதைத் தள்ளிக்கிட்டு வந்துட்டேன்.

சாயங்கால நேரம்... சரக்கடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப, வட மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருத்தர் என்கிட்ட வந்து, ‘சைக்கிள் என்ன விலை?’னு கேட்டாரு. ஐநூறு ரூபாய்னு சொன்னதும், பேரமே பேசாம, பணத்தைக் கொடுத்து வாங்கிக்கிட்டு போயிட்டாரு. அந்தப் பணத்துல சரக்கு அடிச்சேன். போதை தெளிஞ்ச பிறகு, ‘சைக்கிளைத் திருடி வித்தா உடனே பணம் கிடைக்கும்’னு முடிவுக்கு வந்தேன். இனிமே நமக்கேத்த தொழில், சைக்கிள் திருடுறதுதான்னு அதைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

சைக்கிள் திருடுறது ரொம்ப ஈஸி சார்!

இதுக்காகவே காலையில வீட்டிலிருந்து கிளம்பி கால்போன போக்குல நடப்பேன். வசதியானவங்க குடியிருக்கும் ஏரியாவுக்கு ஒரு ரவுண்ட் போவேன். அப்போ பூட்டாம ஏதாவது சைக்கிளை நிறுத்தியிருந்தா, அதை ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துடுவேன். அதிக விலைக்கு ஆசைப்படாம கேக்குற விலைக்கு சைக்கிளை விக்குறதாலயும், சொந்த ஊருக்குப் போக பஸ் வசதி இல்லாததால சைக்கிள்ல ஊருக்குப் போறவங்க அதிகரிச்சதாலயும் என்னைத் தேடி நிறைய வடமாநிலத் தொழிலாளர்கள் வர ஆரம்பிச்சாங்க.

ஒருகட்டத்துல அவங்களே இந்த மாடல்ல சைக்கிள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்காக முன்கூட்டியே அட்வான்ஸும் கொடுத்துட்டுப் போனாங்க. அலைஞ்சு திரிஞ்சாவது அவங்க கேட்ட மாடல் சைக்கிளை திருடிக் கொடுத்துடுவேன். நமக்கு கஸ்டமரோட திருப்தி ரொம்ப முக்கியம் இல்லையா?

ஒரு வருஷமா சைக்கிளைத் திருடி வித்துக்கிட்டு இருக்கேன். திருடப் போறப்பவும் சரி, திருடிக்கிட்டு வர்ற வழியிலயும் சரி, இதுவரைக்கும் எங்கேயும் மாட்டுனது இல்லை. இப்பதான் முதல் தடவையா மாட்டிக்கிட்டேன். எங்கே தப்பு நடந்துச்சுன்னே தெரியலை’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

சைக்கிள் திருட்டு வழக்கில் சதீஷ்குமார் சிக்கியது எப்படி? மவுன்ட் பகுதி போலீஸ் துணை கமிஷனர் கே.பிரபாகர், சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் நம்மிடம் விவரித்தார்கள்... ‘‘சென்னை மவுன்ட் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சைக்கிள்கள் திருடப்படுவதாக மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், தாம்பரம், சங்கர்நகர் ஆகிய காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வரத்தொடங்கின. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி பம்மல் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்த அமுதலட்சுமி என்பவர், தனது புதிய சைக்கிள் திருட்டுப்போனதாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ‘எங்கள் தெருவில் இன்னும் சில சைக்கிள்கள் திருட்டுப் போயிருக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து, மார்ச் மாதம் பொழிச்சலூரைச் சேர்ந்த ரோஸி என்பவரும், சங்கர் நகரைச் சேர்ந்த முத்துமாரியப்பனும் புகார் அளித்தார்கள். முத்துமாரியப்பன் சைக்கிள் திருட்டு குறித்த சிசிடிவி கேமரா பதிவையும் எங்களிடம் கொடுத்தார். அதையடுத்து இன்னோர் இடத்திலும் சைக்கிள் திருட்டு தொடர்பான சிசிடிவி பதிவு கிடைத்தது. அந்தப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு இடங்களிலும் கைவரிசையைக் காட்டியது ஒரே நபர்தான் என்று தெரிந்தது. சைக்கிள் திருட்டுப்போன இடத்திலிருந்து ரூட் பிடித்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். சைக்கிள் திருடிய நபர் திருநீர்மலைக்குச் செல்வது தெரிந்தது. திருநீர்மலைப் பகுதியில் சைக்கிள் திருடனின் போட்டோவைக் காட்டி விசாரித்தோம். அப்போதுதான், சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது சதீஷ்குமார் எனத் தெரியவந்தது’’ என்றார்கள்.

கே.பிரபாகர்
கே.பிரபாகர்

சதீஷ்குமார் யாரிடமெல்லாம் சைக்கிள்களை விற்றான் என்ற விவரங்களைச் சேகரித்த போலீஸார் அவர்களிடமிருந்து

59 சைக்கிள்களை மீட்டிருக்கிறார்கள். சைக்கிள் திருடன் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகே, தங்கள் சைக்கிளைக் காணவில்லை எனப் பலரும் புகார் அளித்து வருகிறார்கள். இதுவரை மொத்தமாக எத்தனை சைக்கிள்கள் திருடு போயின என்ற விவரம் தெரியவில்லை. சதீஷ்குமாரிடம் கேட்டால், ‘‘ஒரு வருஷமா திருடிக்கிட்டு இருக்கேன். எத்தனை சைக்கிளைத் திருடினேன்னு கணக்கெல்லாம் வெச்சுக்குறது இல்லை. எவ்வளவு விலை உசத்தியான சைக்கிள்னாலும், ஆயிரம் ரூபாய்க்கு மேல விக்குறது இல்லை. அதுதான் என்னோட பாலிசி’’ என்று சொல்லியிருக்கிறான்.

சிசிடிவி இல்லையென்றால் இப்போதும் சதீஷ்குமார் சிக்கியிருக்க மாட்டான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism