Published:Updated:

சைக்கிள் இந்தியா!

சில நேரங்களில் நோயைவிட, நோயை குணப்படுத்துவதற்காகக் கொடுத்த மருந்தின் பக்கவிளைவுகளே நோயாளியைக் கொன்றுவிடும்.

பிரீமியம் ஸ்டோரி
நிலவில் தடம் பதிக்கவும், செவ்வாய் கிரகத்தைத் தொடவும் இந்தியா உருவாக்கிய சந்திரயான், மங்கள்யான் போன்றவை நம் தேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களாக இருக்கலாம்.

ஆனால், சைக்கிள்தான் எளிய இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் வாகனம். ஆம், ஊரடங்கு நாள்களில் நாடு முழுவதும் சுழலும் சக்கரங்களில் நகர்கிறது புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்க்கை!

சில நேரங்களில் நோயைவிட, நோயை குணப்படுத்துவதற்காகக் கொடுத்த மருந்தின் பக்கவிளைவுகளே நோயாளியைக் கொன்றுவிடும்.

அப்படித்தான் கொரோனாவைவிட, அதைக் கட்டுப்படுத்த அமலான ஊரடங்கே லட்சக் கணக்கான இந்தியர்களை வதைத்திருக்கிறது. எங்கோ இருக்கும் செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கு வாகனம் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், இந்தியா முழுக்க ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வாகனங்களை ஏற்பாடு செய்யத் தவறிவிட்டோம். குழந்தைகளும் பெண்களும் நெடுஞ்சாலைகளில் 1,000 கிலோமீட்டருக்கும் மேல் நடந்தே கடந்த கண்ணீர்க் கதைகளால் இந்த ஆண்டின் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், நடக்க இயலாதவர்களுக்குக் கைகொடுக்கும் வாகனமாக இருக்கிறது சைக்கிள்.

அப்படிச் சில சைக்கிள் கதைகளைப் பார்ப்போம்!

சைக்கிள் இந்தியா!

* ஜோதி குமாரியின் துணிச்சல் இந்தியாவையே திகைக்கவைத்திருக்கிறது. விபத்தில் அடிபட்ட தன் தந்தையைப் பின்னால் அமரவைத்து, 1,300 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி வந்திருக்கிறார் இந்த 15 வயதுப் பெண். ஜோதியின் அப்பா மோகன் பஸ்வான், டெல்லியை அடுத்த குருகிராம் நகரில் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பவர். ஜனவரி மாதம் விபத்தில் சிக்கினார். தந்தையை மருத்துவமனையில் சேர்த்துப் பராமரிப்பதற்காக, பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து ஜோதி வந்தார். சிகிச்சைக்குப் பிறகு மோகன் பஸ்வானின் உடல்நலம் தேறுவதற்குள் ஊரடங்கு அமலாகிவிட்டது.

ஊரிலிருந்து குடும்பத்தினர் அனுப்பிய பணம் முழுக்கச் சிகிச்சைக்கு செலவாகிவிட, அப்பாவும் மகளும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்தனர். வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தார். இரண்டு முறை மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார். திடீரென ஒருநாள் அவர் வெளியில் துரத்தினால், கதியற்று வீதியில் நிற்போம் என்பது இருவருக்கும் புரிந்தது. ரயில் டிக்கெட் வாங்கியோ, லாரி பிடித்தோ ஊர் செல்ல முடியாது. விபத்தில் சிக்கிய மோகனால் மற்றவர்கள்போல நடக்கவும் முடியாது.

அந்த நேரத்தில் ஜோதி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். அரசு வழங்கிய நிவாரணத் தொகை 1,000 ரூபாய் கையில் இருந்தது. பக்கத்து வீட்டில் ஒருவரிடம் பேரம் பேசி, பழைய சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கினார். 1,600 ரூபாய் விலை. 500 ரூபாய் கொடுத்துவிட்டு, ‘‘மீதியை ஊர் போய்ச் சேர்ந்ததும் அனுப்பிவைக்கிறேன்’’ என்று கடன் சொன்னார். மிச்சமிருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு, சைக்கிளில் அப்பாவை உட்காரவைத்து மிதிக்கத் தொடங்கினார். தயக்கத்துடன் தடுத்த அப்பாவிடம் ஜோதி சொன்னது... ‘‘நமக்கு இதைத் தவிர வேறு வழியில்லை!’’

பகல் முழுக்க சைக்கிள் மிதிப்பார் ஜோதி. இரவானதும் ஏதாவது நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க்கில் தங்கிக்கொள்வார்கள். ‘‘அங்கிருந்த மனிதர்கள் கனிவாக நடந்துகொண்டார்கள். உணவும் தண்ணீரும் கொடுத்தார்கள். கையிலிருந்த பணம் தீர்ந்து போன பிறகு, ஆங்காங்கே சிலர் கொடுத்த உணவில் பசியாறினோம். இரண்டு நாள்கள் எதுவும் சாப்பிடக் கிடைக்காமல் பட்டினியும் கிடந்தோம். ‘மகளைச் சைக்கிள் ஓட்ட வைத்துவிட்டு, நீ உட்கார்ந்து வருகிறாயே...’ என வழியில் பார்த்தவர்கள் என் அப்பாவைத் திட்டினார்கள். அவர் கூனிக்குறுகிப்போனார். எனக்குத்தானே தெரியும் அப்பாவின் வலி. அவரைச் சமாதானப்படுத்துவதுதான் கஷ்டமாக இருந்தது’’ என்கிறார் ஜோதி குமாரி.

சைக்கிள் இந்தியா!

ஜோதியின் இந்தத் துணிச்சலான செயலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா பாராட்டியிருக்கிறார். இந்திய சைக்கிள் ஃபெடரேஷன், சைக்கிள் போட்டிகளுக்கான பயிற்சியை ஜோதி குமாரிக்குத் தரப் போவதாக அறிவித்தது. ஆனால், ஜோதி இதை விளையாட்டாகவோ, சாகசத்துக்காகவோ செய்யவில்லை. இப்படி சைக்கிள் மிதித்து தன் தந்தையை அழைத்துச் செல்ல வேண்டிய சூழலை இந்த அரசுகள்தான் அவருக்கு ஏற்படுத்தின. அந்தத் துயரத்தைப் பற்றி அவர்களில் யாரும் பேசவில்லை. நல்லவேளை... நெடுஞ்சாலைகளில் நாள்கணக்கில் நடந்தவர்களிலிருந்து மாரத்தான் வீரர்களைத் தேடும் மனநிலை, இன்னமும் இந்திய தடகள அமைப்புகளுக்கு வந்திருக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* முகமது இக்பால். உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியைச் சேர்ந்தவர். ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளி. ஊரடங்கால் வேலையிழந்து, உணவுக்கு வழியில்லாமல் தவித்த அவர் ஊர் திரும்ப முடிவு செய்தார். மற்றவர்களைப்போல நடந்து கடக்க முடியாத துயரச் சூழல். தான் பணிபுரிந்த பகுதியில், ராரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹாப் சிங் என்பவர் வீட்டிலிருந்த பழைய சைக்கிளைத் திருடிக்கொண்டார்.

சைக்கிளைத் திருடிய அந்த வீட்டு வாசலில், இந்தியில் ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் அவர். ‘நீங்கள் தேடும் குற்றவாளி நான்தான். நிராதரவாக நிற்கும் தொழிலாளி நான். என் மாற்றுத்திறனாளிக் குழந்தையை ஊருக்கு அழைத்துச் செல்ல எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களால் முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்’ என உருக்கமாக வேண்டுகிறது அந்தக் கடிதம்.

* ஒடிசாவின் கேந்திரபாரா பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் நாயக், கோவாவில் பிளம்பர் வேலை செய்துவந்தார். தான் பணிபுரிந்த கட்டுமானப் பகுதியில், தற்காலிகக் கூடாரத்தில் தங்கியிருந்தார் அவர். பணிகள் இல்லாததால் வருமானம் இல்லை. கட்டுமான நிறுவனம் அவரை அங்கிருந்து வெளியேறச் சொன்னது. கையிருப்புப் பணத்தில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டார். தெலங்கானா வழியாகப் போனபோது, ஓர் இரவில் அவரது சைக்கிள் திருடு போனது. அவருக்கு வேறு வழியில்லை... அங்கிருந்த வேறொரு சைக்கிளை திருடிக்கொண்டார்.

சைக்கிள் இந்தியா!

ஊரடங்கு நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சைக்கிள் விற்பனை பெரிதும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, பழைய சைக்கிள் விற்பனை. மற்ற வாகனங்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை வழிமறிக்கும் போலீஸார், நடந்தும் சைக்கிளிலும் செல்பவர்களைப் பெரும்பாலும் தடுப்பதில்லை. இதுவே சைக்கிளுக்கு கிராக்கியை ஏற்படுத்தியிருக்கிறது. கைக்குழந்தையைத் தோளில் தாங்கியபடி அம்மா நடக்க, மூத்த குழந்தையையும் பாத்திர பண்டங்களையும் சைக்கிளில் வைத்தபடி அப்பா நடக்கும் காட்சிகளைப் பல நெடுஞ்சாலைகளில் காண முடிகிறது. கொளுத்தும் வெயிலைத் தாள முடியாமல், தூக்கமும் இல்லாமல், சாப்பிடவும் எதுவும் கிடைக்காமல் அந்தக் குழந்தைகள் அழும் குரல் எவரையும் வேதனையில் தள்ளும். என்றாலும், அவர்களுக்கு வேறு வழியில்லை!

தமிழகத்தில் பணிபுரிந்த பலரும் இப்படி சைக்கிளில் சென்றார்கள். பள்ளி மாணவர்களுக்கு அரசு தந்த இலவச சைக்கிள்களை, பழைய சைக்கிள் கடைகளில் வாங்கிச் சென்றார்கள். 1,000 ரூபாய்க்குக்கூட இந்த சைக்கிள்கள் கிடைத்தன. புது சைக்கிள் 4,000 ரூபாய். திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் பல கடைக்காரர்கள் அக்கறையுடன் சைக்கிள்களை பழுது பார்த்துக் கொடுத்தனுப்பினர். பங்ச்சர் ஒட்டும் பொருள்கள், காற்று அடிக்கும் பம்பு போன்றவற்றையும் சிலர் கொடுத்தனர். ‘1,000 கிலோமீட்டரைத் தாண்டி இவர்கள் பாதுகாப்பாகப் போய்ச் சேர வேண்டுமே...’ என்ற அக்கறை அதில் தெரிந்தது.

சைக்கிள் இந்தியா!

ராம் பிஸ்வாஸ் என்ற 44 வயது மனிதர் இப்படித்தான் சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொண்டு கிளம்பினார். அவர் ஒடிசா போய்ச் சேர வேண்டும். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டமில்லை. கும்மிடிப்பூண்டி அருகிலேயே சுருண்டு விழுந்துவிட்டார். இருந்த பணத்தைப் போட்டு சைக்கிள் வாங்கிய அவரிடம், சாப்பிடுவதற்குப் பணம் இல்லை. பசியில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

நல்லவர்கள் இருக்கும் நாட்டில் இரக்கமற்ற கும்பல்களும் இருக்கின்றனதான். புது சைக்கிளில் சொந்த மாநிலம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்தான் அவர்களின் குறி. ‘‘பார்டரில் போலீஸ் நிற்கிறது. சைக்கிளில் போனால் அவர்கள் மடக்கி சைக்கிளைப் பிடுங்கிக்கொள்வார்கள். அதை எங்களிடம் விற்றுவிடுங்கள். பணமாவது உங்களுக்கு மிஞ்சும். நடந்து பத்திரமாக ஊர் போய்ச் சேரலாம்’’ என்று பேரம் பேசுகிறது. ஒருகட்டத்தில் அவர்களை மிரட்டி, வந்த விலைக்கு சைக்கிளை அடித்துப் பிடுங்குகிறது.

என்ன செய்வது... இரக்கமற்ற அரசுகள் போலவே, இரக்கமற்ற மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு