தொடர் மழை... பூண்டி ஏரியில் நீர் திறப்பு 4,355 கன அடியாக அதிகரிப்பு! #Burevi #LiveUpdates

புரெவி புயல் குறித்த செய்திகளின் தொகுப்பு..!
பூண்டி ஏரியில் நீர் திறப்பு 4,355 கன அடியாக அதிகரிப்பு!
தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு 5,200 கன அடியாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,800 கன அடியிலிருந்து 4,355 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
1964 -ல் அழிந்துபோன தனுஷ்கோடியில், எச்சமாக எஞ்சி நின்றது கிறிஸ்தவ தேவாலயம். புரெவி புயலின் சீற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!
விழுப்புரத்தில் கனமழை காரணமாக பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்
விழுப்புரத்தில் கனமழை காரணமாக பேருந்து நிலையத்தில் கடல்போல் தேங்கி நிற்கும் மழைநீர். புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா தலம் மூடப்பட்டதால், வெறிச்சோடிக் காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை.
கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரி, முழுக்கொள்ளளவான 6.5 அடியை எட்டியிருக்கும் நிலையில், ஏரியிலிருந்து 9,800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோரத்திலுள்ள 23 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
11 இடங்களில் அதீத கனமழை!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பாம்பனில் கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்தில் 11 இடங்களில் அதீத கனமழையும், 20 இடங்களில் மிகக் கனமழையும், 50 இடங்களில் கனமழையும் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை வலுவிழக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கனமழையால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில், மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் தொடர் கனமழை!
புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
புரெவி புயல் நேற்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. நீண்டநேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவியது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த ஆறு மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தொடர் மழையால் நிரம்பியுள்ள மதுராந்தகம் ஏரி
மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் காட்சி
மதுராந்தகம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் காட்சி; சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை!
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது
சென்னையில் காற்றுடன் கனமழை விட்டு விட்டுப் பெய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். கரையைக் கடந்த புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம்கொண்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையில் பலத்தமழை பெய்துவருகிறது.
6 மாவட்டங்களில் டிசம்பர் 4 பொது விடுமுறை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் பாம்பன் - குமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (04-12-2020) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவிலில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார்.
புரெவி புயல்: தனுஷ்கோடியில் பாதுகாப்பு கருதி தங்கவைக்கப்பட்ட பள்ளியில் இரவு பெய்த மழையால் நீர் பள்ளிக்குள் புகுந்தது: மக்கள் தவிப்பு
புரெவி புயல்: மண்டபம் போலீஸ் குடியிருப்பில் மரம் சாய்ந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்!

` 'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்’ என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கோரிக்கை!
காற்றுடன் மழை!

பலத்த காற்றுடன் பெய்த மழையில் மண்டபம் போலீஸ் குடியிருப்பில் மரம் சாய்ந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பாம்பனுக்கு அருகில் `புரெவி’!

இலங்கையின் திரிகோணமலையில் நேற்று கரையைக் கடந்த புரெவி புயல் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் மையம்கொண்டிருக்கிறது. இது பாம்பன், குமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.