Published:Updated:

டி-டிராக் அட்டாக் - திகிலில் கூடங்குளம்

டி - டிராக் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
டி - டிராக் அட்டாக்

தமிழகத்துக்கு புதிய ஆபத்து?

டி-டிராக் அட்டாக் - திகிலில் கூடங்குளம்

தமிழகத்துக்கு புதிய ஆபத்து?

Published:Updated:
டி - டிராக் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
டி - டிராக் அட்டாக்

உலகம் முழுவதும் உள்ள அணுஉலைகளின்மீது சைபர் (cyber) தாக்குதல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக, சர்வதேசிய அணுசக்தி முகமை (international atomic energy agency) கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக அப்போது நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங், அந்தத் தகவல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார். மேலும், அணுசக்தி அச்சுறுத்தல்குறித்து உலகளவில் ஆய்வுசெய்யும் நிறுவனமும் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தியா இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2019, செப்டம்பர் 7-ம் தேதி, இந்திய அரசின் தொழில்நுட்பப் புலனாய்வு சார்ந்த வேலைகளை ஒருங்கிணைக்கும் தேசியத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் (NTRO) இணையப் பாதுகாப்பு வல்லுநராகப் பணியாற்றி, இப்போது இணையப் பாதுகாப்பின் ஆலோசகராக இருக்கும் புக்ராஜ் சிங், ‘இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இணையதளங்களை வைரஸ் தாக்கியிருக்கலாம்’ என்று அரசுக்குத் தெரிவித்தார். இதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, செப்டம்பர் 23-ம் தேதி ‘காஸ்பெர்ஸ்கி’ (Kaspersky) என்னும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ‘டி-டிராக்’ (D-Track) என்று அழைக்கப்படும் வைரஸ் இந்திய நிதி நிறுவனங்களின் கணினிகளிலும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் உள்ள கணினிகளிலும் பரவலாகக் காணப்படுவதாக அறிவித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகம் முழுவதும் உள்ள கணினிகளைத் தாக்கும் வைரஸ்கள்குறித்து கண்காணித்து வெளிக்கொண்டுவரும் நிறுவனமான ‘வைரஸ்டோட்டல்’ (virustotal.com) செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டது. புக்ராஜ் சிங், ‘எனக்கு இந்தத் தகவல்கள் மூன்றாம் நபர் ஒருவர் மூலம் தெரியவந்தது. அதை தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) ராஜேஷ் பந்த்திடம் தெரிவித்துவிட்டேன்’ எனப் பதிவிட்டார். இப்படித்தான் கூடங்குளம் அணுஉலை மையத்தின் கணினிகள்மீதும் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், வைரஸ் தாக்குதல் நடந்ததால்தான் அக்டோபர் மாதம் 19-ம் தேதி கூடங்குளம் அணுஉலையின் இரண்டாம் அலகு பழுடைந்து நின்றதாகவும் செய்திகள் கசிந்தன.

வடகொரியா டு கூடங்குளம்!

இந்தப் பிரச்னையில் அணுசக்தித் துறை நடந்துகொண்ட விதம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இந்தத் தகவல்குறித்து இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டவுடன், தேசிய அணுமின் கழகத்தின் கூடங்குளம் வளாகத்தைச் சேர்ந்த ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘சமூக ஊடங்கள், காட்சி மற்றும் அச்சு ஊடங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. கூடங்குளம் அணுஉலைகளில் எந்த வைரஸ் தாக்குதல்களும் நடைபெறவில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிக்கை வந்த மறுதினம், தேசிய அணுமின் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘இந்தியாவின் அணுமின் நிலையங்களில் உள்ள ‘கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் (control systems) இணையத் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்கக்கூடியவை. எனவே, இதுபோன்ற வைரஸ் தாக்குதல்கள் அவற்றை ஒன்றும் செய்யாது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முன்னர், ஈரானில் உள்ள புஷேர் அணுஉலையில் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் தனித்து இருந்தாலும் அவையும் தாக்குதலுக்கு உள்ளாகின என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்தியாவின் அணுஉலை கட்டமைப்பு

களில் நடைபெற்ற இந்த இணையவழித் தாக்குதல் வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரஸ்’ எனும் குழுவால் நடத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி நடக்கிறது அட்டாக்?

இந்த இணையவழித் தாக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் அணுஉலைகளின் செயல்பாட்டுமுறையைத் தெரிந்துகொள்ளவேண்டும். பொதுவாக, அணுஉலைகள் இயங்குவதற்கு இரண்டு வகையான வலைப்பின்னல்கள் (நெட்வொர்க்) தேவைப்படும். ஒன்று, அணுஉலை கட்டுப்பாட்டு வலைப்பின்னல் (இன்ட்ராநெட்). அதாவது அணுஉலைகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடியது. இது உலைகளில் நடைபெறும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க தேவைப்படும் மென்பொருள் மற்றும் அதோடு தொடர்புடைய கருவிகளை இயக்கக்கூடிய சமிக்ஞைகளை (Signals) அனுப்ப அல்லது வரக்கூடிய சமிக்ஞைகளைப் பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள என இந்த வலைப்பின்னல் அமைந்திருக்கும். இது பொதுவான இணையப் பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கக்கூடியது. அதாவது, எளிதில் பிற சக்திகள் உள்ளே நுழைந்து கட்டமைப்பைக் குலைக்க முடியாத அளவுக்கு சைபர் செக்யூரிட்டிகொண்டது. இந்தக் கட்டமைப்பு, இப்போது நடைபெற்ற சைபர் தாக்குதலில் பாதிக்கப்படவில்லை. இதைத்தான் தேசிய அணுமின் கழகம் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக உறுதிசெய்துள்ளது.

அணுஉலைகளின் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற அனைத்து செயல்பாடுகளும், தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது, பொதுவான இணையப் பயன்பாட்டில் அடிப்படையில் அமைந்தது. அவை பரந்த அளவிலான தரவுகளைக் கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டவை. அங்கே பணியாற்றக்கூடிய பணியாளர்களின் நிர்வாகரீதியான தரவுகள், யார் யாருக்கு எந்த வகையான அனுமதி, அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான தரவுகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான அட்டவணைகள் மற்றும் பிற தரக்கட்டுப் பாடுகளுக்குத் தேவையான தரவுகள் என அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் இந்த இணைய வலைப்பின்னல் அவசியம். இதனால், இங்கே இயல்பாகவே வைரஸ் தாக்குதலுக்கு வழி ஏற்பட்டுவிடுகிறது.

நிர்வாகத்துக்கான கட்டமைப்புக் கணினிகளின் வாயிலாகத்தான், இப்போது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்புக்குள் தாக்குதல் நடத்தியவர்களால், ‘இன்ட்ராநெட்’ கட்டமைப்புக்குள்ளும் ஏன் ஊடுருவ முடியாது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஈரான் தாக்குதல் எப்படி நடந்தது?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் அணுசக்தி ஆலைகளை முடக்கிய ‘ஸ்டக்ஸ்நெட்’, சைபர் வைரஸிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அந்த வைரஸை, அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஒரு மாநாட்டுக்கு வந்திருந்த ஈரானிய அணு விஞ்ஞானியின் கணினியில் ஒரு யூ.எஸ்.பி டிரைவ் மூலம் பதிவேற்றினர். அந்த அணு விஞ்ஞானி ஈரானில் உள்ள அணுஉலையின் கட்டுப்பாட்டு நெட்வொர்க்கை தனது கணினி மூலம் தொடர்புகொண்டவுடன், குறிப்பிடப்பட்ட அந்த வைரஸ், விண்டோஸ் மென்பொருளில் இருந்த ஒரு பிழையைப் பயன்படுத்தி சென்டிரிஃபியூஜ்களின் வேகத்தைக் குறைத்து விபத்தை ஏற்படுத்தின.

டி-டிராக் அட்டாக் - திகிலில் கூடங்குளம்

தற்போதைய கூடங்குளம் வைரஸ் தாக்குதலில் இந்திய அணுஉலைகள் தொடர்பான தரவுகள் முழுவதுமாக வெளியே சென்றுள்ளன. அவற்றை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த வைரஸ் தாக்குதல் நேரடியாக அணுஉலைகளை இப்போதைக்கு பாதிக்கவில்லை என்றாலும், ஈரானில் நடந்தது போன்று நேரடியாக அணுஉலைச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடக்கவும் இது அச்சாரமிட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு புதிய ஆபத்து!

2016-ம் ஆண்டு இந்தியாவின் ஏ.டி.எம் இயந்திரங்கள்மீது இதே ‘டி-டிராக்’ வைரஸ் தாக்குதல் நடைபெற்ற பிறகு இந்திய அரசு சுதாரித்திருக்கலாம். சரி விடுங்கள், 2017-ம் ஆண்டு சர்வதேச அணுசக்தி அமைப்பு கொடுத்த எச்சரிக்கைக்குப் பிறகாவது தகுந்த சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அப்போதும் கண்டுகொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தால், இப்படி ஒரு வைரஸ் தாக்குதல் நடைபெற்றிருக்காது. குறிப்பாக, கூடங்குளம் அணுஉலைகளுக்கு எனத் தனித்துவமான வைரஸ்களை உருவாக்கி தாக்குதல் தொடுக்க முடிகிறது என்றால், நமது ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய உலகில் இணைய வழித் தாக்குதல்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல வங்கிகளில் உள்ள கணக்குகளின் கடவுச்சொல் திருடப்பட்டு, பத்து லட்சம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அணுஉலை மையங்களின் இணையவழித் தாக்குதல் என்பது அடுத்த அதிர்ச்சியை அளிக்கிறது. அணுஉலைகள் ஆபத்தானவை. அதிலும் இந்தியாவின் அணுஉலைகள் கூடுதல் ஆபத்துகொண்டவை. அப்படி இருக்கும்போது கூடங்குளம் போன்ற அணுஉலைகளில் தாக்குதல் நடத்தப்பட்டால், அது தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் புதிய அச்சுறுத்தலாகவே பார்க்க முடியும்.

ஒன்று மட்டும் உறுதியாகிறது, கூடங்குளம் அணுஉலைகள் ஏற்கெனவே பலமுறை பழுதடைந்து செயல்படுகின்றன; பாதுகாப்பாகவும் இல்லை. இப்படியான சூழலில் அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதன் முக்கியமான தகவல்கள் அந்நியர் கைகளுக்குள் சென்றுள்ளன. உலைகளில் உள்ள யுரேனியத்தின் அளவு, எரிக்கப்பட்ட எரிகோல்கள் அளவு, பாதுகாப்புக் கோட்பாடுகள் என அனைத்தும் பொதுவெளிக்குச் சென்றுள்ளன. இதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டுவந்து, காரணமானவர்களை தண்டிப்பதும் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுவதும்தான் இந்தியாவையும் தமிழகத்தையும் காப்பாற்றும்.

அந்நிய நாட்டு சதியா, கூடங்குளம் சைபர் அட்டாக்?

அந்நிய நாட்டு சதியா, கூடங்குளம் சைபர் அட்டாக்?
அந்நிய நாட்டு சதியா, கூடங்குளம் சைபர் அட்டாக்?

2013-ல் தென்கொரிய வங்கிகள், மீடியாக்களின் கம்ப்யூட்டர்களைப் பதம்பார்த்த ‘டி-டிராக்’ எனப்படும் வைரஸ்தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் தாக்கியுள்ளது. இந்த சைபர் அட்டாக் பின்னணியில், வடகொரியாவிலிருந்து செயல்படும் ‘லாசரஸ் ஹேக்கர்ஸ் குழு’ இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. டார்கெட் செய்யப்படும் கணினி உபகரணங்களைச் செயலிழக்கச் செய்து, அதில் உள்ள தரவுகளை முழுமையாகத் திருடுவதுதான் இந்த வகை வைரஸ்களின் வேலை.

இணையம் தொடர்பில்லாத கம்ப்யூட்டர்களை ஹேக் செய்வது சாத்தியமில்லை என்று சில தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கூறுவதை, ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் மறுக்கின்றனர். “2009-ம் ஆண்டு ஈரான் அணுமின் நிலையங்களை ‘ஸ்டக்ஸ்நெட்’ எனப்படும் வைரஸ் தாக்கியது. இந்தக் கணினிகள் இன்டெர்நெட் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தவைதான். அணுக்கதிர்களைச் செறிவூட்டும் ‘சென்டிரிஃபியூஜ்’ உபகரணங்களைச் செயலிழக்கச்செய்த இந்த வைரஸ், அந்த நாட்டின் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்தையே தவிடுபொடியாக்கியது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டினாலும், அதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. ஏனெனில், இணைய உலகின் இயல்பு அப்படி.

இந்தச் சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய தொழில்நுட்பத்தில் செயற்கைக்கொள் மற்றும் ரிமோட் சென்சார் உபகரணங்கள்மூலம் இன்டர்நெட்டுடன் தொடர்பு இல்லாத எந்தக் கணினியையும் சுலபமாக ஹேக் செய்துவிட முடியும் என்கிறார்கள் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள். அப்படித்தான் கூடங்குளம் அணுமின் நிலையமும் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்பது அவர்களின் கருத்து.

யார் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பார்கள்? ஐ.பி அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘இந்தியாவில் விண்வெளி மற்றும் அணுஉலை தொடர்பான மையங்களில் வழக்கமான இன்டர்நெட் மட்டுமின்றி, சில ரகசிய தகவல் பரிமாற்றங்களுக்காக தனித்துவமான ‘இன்ட்ராநெட்’ நெட்வொர்க் கட்டமைப்பும் இருக்கிறது. அதை வெளியாட்கள் கையாள முடியாது. ஆனால், சம்பந்தபட்ட நபர்கள் உதவினால் ஹேக் செய்ய முடியும். இப்போது நிர்வாகப் பிரிவு தொடர்பான இன்டர்நெட் கட்டமைப்பில்தான் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது” என்றார்.

இன்னும் சில அதிகாரிகளிடம் பேசியபோது, “வாசல் வரை வந்தவர்களுக்கு வீட்டுக்குள் வர எவ்வளவு நேரமாகும்?” என்ற பீடிகையுடன் தொடங்கினார்கள்.

“2014-2018 ஆண்டுகளில், இந்தியாவுக்கு அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது ரஷ்யாதான். சுமார் 58 சதவிகிதம் ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னைக்கும் - ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் கிழக்குத் துறைமுக நகரத்துக்கும் இடையே கடல் வர்த்தகப் போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நவம்பர் முதல் வாரம் மாஸ்கோ செல்லவிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளும் இணைந்து ராணுவத் தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்குறித்துப் பேசவிருக்கிறார். இந்தியா ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்த ரஷ்யாவின் எஸ்-400 வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பு, அடுத்த வருடம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை எரிச்சலடையச் செய்யும் இந்த ஒப்பந்தம்குறித்தும் ராஜ்நாத் சிங், ரஷ்ய அமைச்சர்களுடனும் பேசுகிறார்.

இது ஒருபுறமிருக்க... தென்சீனக் கடல் மட்டுமல்லாது, இந்தியப் பெருங்கடலையும் கட்டுப்படுத்தத் துடிக்கும் சீனாவை, மாமல்லபுரம் சந்திப்பு மூலமாக பிரதமர் மோடி வசப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுடனான ராணுவக் கூட்டணியும் சீனாவுடனான பொருளாதார கூட்டணியும் இந்தியாவை சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தில் நிறுத்தும். இதற்கான வியூகத்தைத்தான் பிரதமர் மோடி கட்டமைக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான், எச்சரிக்கை மணியாக கூடங்குளத்தில் சைபர் அட்டாக் செய்துள்ளனர். வடகொரியாவிலிருந்து இந்த சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதற்குப் பின்னால் வேறொரு நாட்டின் உளவுத்துறை இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.

“நாம் விழிப்புடன்தான் இருக்கிறோம்!”

மத்திய அரசின் விக்யான் பிரசார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் இந்த விஷயங்களை முற்றிலுமாக மறுக்கிறார்.

“ஈரானில் நடந்ததைப் போன்று ‘சைபர் அட்டாக்’ என்று இதை நாம் சொல்ல முடியாது. ஈரானில் அவர்களின் ‘கன்ட்ரோலிங் சிஸ்டத்தின்மீதுதான் அட்டாக் நடந்தது. ஆனால், இங்கு அட்மினில் இருக்கக்கூடிய தனிப்பட்ட நபர் ஒருவரின் பிரைவேட் கம்யூட்டரில்தான் அட்டாக் நடந்துள்ளது. சர்வரில் அட்டாக் நிகழ்வதற்கும் அங்கு வேலை பார்க்கக்கூடிய ஒருவரின் லேப்டாப்பில் அட்டாக் நடப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தவிர, கூடங்குளத்தில் நடந்திருக்கும் அட்டாக், ‘ஹையர் செக்யூரிட்டி’ இடத்தில் இல்லை. செக்யூரிட்டி ‘லெவல் ஒன்’ நிலையில்தான் நடந்துள்ளது. இந்த அட்டாக் நடந்திருப்பதைக் கண்டுபிடித்திருப்பதே நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான். எனது யூகத்தின்படி, பென்-டிரைவ் மூலம் இது நடந்திருக்க வாய்ப்பு அதிகம். அணுஉலை மையம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பென்-டிரைவ் பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடு மீறப்பட்டிருக்கிறது” என்றார் அவர்.

- இரா.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism