Published:Updated:

உ.பி: துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - பட்டியலினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

ஹத்ராஸ் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உ.பி-யில் மீண்டும் அரங்கேறிய இந்தப் பாலியல் வன்கொடுமை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஹத்ராஸ் நிகழ்வே பல மர்ம முடிச்சுகளுடன் நம் கண்முன் அனல்வீசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இருவர் துப்பாக்கிமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியலையை எழுப்பியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்திலுள்ள தேராபூர் கிராமத்தில் வசித்துவந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை, வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அத்துமீறி உள்ளே நுழைந்து துப்பாக்கிமுனையில் ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறர்கள். அவர்களில் ஒருவர் அந்தக் கிராமத்தின் முன்னாள் தலைவர் என்பது தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

அதன் பின்னர், இது குறித்து யாரிடமாவது சொல்ல முற்பட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த கான்பூர் மாவட்ட கிராமப்புற காவல் நிலைய எஸ்.பி.கேஷவ் குமார்,``கடந்த வாரமே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் நேற்றுதான் (ஞாயிற்றுக்கிழமை) இது குறித்த தகவல் காவல்துறையினருக்குத் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தேராபூர் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் மூன்று போலீஸ் சிறப்புப் படை அமைத்துத் தேடிவருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

ஹத்ராஸ் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உ.பி-யில் மீண்டும் நடந்திருக்கும் இந்தப் பாலியல் வன்கொடுமை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தநிலையில், ``மாநிலத்தில் இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது’’ என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு