Published:Updated:

``அவர் எனது ஹீரோ, சிறந்த நண்பர்!" - உருகும் பிரிகேடியர் லிட்டர் மகள்

பிரிகேடியர் லிட்டர் மகள்
News
பிரிகேடியர் லிட்டர் மகள்

``மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்க்கையில் முன்னேறுவேன். எனது தந்தையின் மரணம் தேசிய இழப்பு” என்கிறார் பிரிகேடியர் லிட்டரின் மகள்

கடந்த புதன்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரான Mi-17V5 விபத்துக்குள்ளானது. இது இந்தியாவின் பல மூத்த ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்று. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். அவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் கடுமையான காயங்களுடன் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

அந்த உயிரிழந்த 13 பேரில் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா மற்றும் சிடிஎஸ் (CDS)-ன் பாதுகாப்பு உதவியாளராக இருந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டரும் அடக்கம். பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டரின் உடல் கோவைக்கு அருகே உள்ள சூலூரிலிருந்து டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பரார் சதுக்கத்தில் இருக்கும் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குக்கு முன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும், இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் மற்றும் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி ஆகிய மூன்று படைத் தலைவர்களும் லிட்டர் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவரின் மனைவி கீதிகா, மகள் ஆஷ்னா ஆகியோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் கீதிகா மண்டியிட்டு கண்ணீருடன் முத்தமிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஞ்சலி
அஞ்சலி

பிறகு கீதிகா பேசுகையில், ``தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தாலும், நாம் அவருக்கு ஒரு நல்ல பிரியாவிடையைப் புன்னகையுடன் வழங்க வேண்டும்.

கீதிகா
கீதிகா

அவர் அனைவரிடமும் அன்பை வழங்குபவர். நான் ஓர் இந்திய ராணுவ அதிகாரியின் மனைவி. என்னிடம் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

மகள் ஆஷ்னா பேசுகையில், ``என் தந்தை என்னுடன் 17 வருடங்கள் இருந்தார். மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்க்கையில் முன்னேறுவேன். என் தந்தையின் மரணம் தேசிய இழப்பு. ஒருவேளை அது விதிக்கப்பட்டிருக்கலாம். சிறந்த விஷயங்கள் நம் வாழ்வில் வரும். அவர் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தார். அவர் ஒரு ஹீரோ. எனது சிறந்த நண்பர். அனைவரையும் ஊக்குவிக்கும் குணம்கொண்டவர் அவர்” என்றார் நெகிழ்வுடன்.

ஆஷ்னா
ஆஷ்னா

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் ஜெனரல் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர் உள்ளிட்டோரின் நான்கு சடலங்கள் நேற்று வரைஅடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று காலையில் மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து தளபதி ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டர் ஜூன் 26, 1969-ல் பிறந்தார். ஜனவரி 2021 முதல் சிடிஎஸ் (CDS)-ன் பாதுகாப்பு உதவியாளராக இருந்தார். இவர் டிசம்பர் 1990-ல் ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸில் (JAKRIF) பணியமர்த்தப்பட்டார். இவர் ராணுவ நடவடிக்கை இயக்குநரகத்தில் இயக்குநராகவும், கஜகஸ்தானில் பாதுகாப்பு உதவியாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.