Published:Updated:

300 அடி ஆழ்துளைக் கிணறு வீணானது, ஆனால்..!- தேனிக்காரரின் அசத்தல் முயற்சி

தேனி அருகே, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றியிருக்கிறார் ஒருவர். இன்று நேற்று அல்ல, 15 வருடங்களுக்கு முன்பே!

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

திருச்சி மணப்பாறை அருகே கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட அல்லது மாற்று ஏற்பாடு செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகளில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன, அவற்றில் எத்தனை கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டிருக்கிறார்.

``ஆழ்துளைக் கிணறுகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1,111 பரிசு'' - களமிறங்கியது குளித்தலை அமைப்பு

கிராம நிர்வாக அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்ள, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்பணியை மேற்பார்வை செய்கிறார்கள். கணக்கெடுக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. இது ஒருபுறம் என்றால், தேனி அருகே, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றியிருக்கிறார் ஒருவர். இன்று நேற்று அல்ல, 15 வருடங்களுக்கு முன்பே!

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

தேனி கோடாங்கிபட்டி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயன்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் நிலத்துக்குள் தொட்டி அமைத்து, அதில் கற்களை நிரப்பி, கட்டடங்களின் மீது விழும் மழைநீரை அத்தொட்டியினுள் சேருமாறு அமைத்திருக்கிறார் சங்கரநாராயணன். ``சுமார் 15 வருடங்களுக்கு முன்பே, 300 அடிக்கு போர் போட்டேன். ஆனால் பயன்படுத்தவில்லை. சும்மாவே இருக்கிறதே என்று, அதைச் சுற்றி 6 அடி ஆழத்தில் எட்டுக்கு எட்டு தோண்டி, தொட்டி போன்று அமைத்து, கட்டடங்களின் மீது விழும் மழைநீரை அத்தொட்டியில் விழுமாறு செய்தேன்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் எனது தொழிற்சாலையில் விழும் மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாவதில்லை. தற்போது திருச்சி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆழ்துளைக் கிணற்றை அப்படியே விடாமல், மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். பிற்காலத்தில் ஆழ்துளைக் கிணற்றைப் பயன்படுத்தினால் தண்ணீர் கிடைக்கும்” என்ற சங்கரநாராயணன், ``அதை தற்போது தோண்டி, கற்களை மாற்றியிருக்கிறேன் பழைய பைப்புகளை எடுத்து புதிய பைப்புகளை இணைக்க இருக்கிறேன்’’ என்றார்.

சங்கரநாராயணன்
சங்கரநாராயணன்

சுமார் 15 வருடங்களுக்கு முன்பே, ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றியிருக்கும் சங்கரநாராயணனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. மாவட்ட நிர்வாகம், வாய்ப்புள்ள இடங்களில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.