அலசல்
சமூகம்
Published:Updated:

காடு அழிப்புக்கும் வைரஸ் பரவலுக்கும் என்ன தொடர்பு?

காடு
பிரீமியம் ஸ்டோரி
News
காடு

வனத்துறை பதிவுசெய்யும் குற்றத் தரவுகள் பொதுவெளியில் இல்லை. இதனால் இந்தியாவில் நடக்கும் காட்டுயிர் குற்றங்கள் பற்றிய முழுமையான தகவல் நம்மிடம் இல்லை.

‘கொரோனா தொற்று மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?’ என்ற விவாதம் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.

‘உணவுக்காகவும் நாட்டு மருத்துவத்துக்காகவும் சட்டத்துக்குப் புறம்பாக காடுகளிலிருந்து கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட எறும்புத்தின்னிகளிடமிருந்து பரவியிருக்கலாம்’ என தெற்கு சீன வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ‘வௌவால்களில் இருந்து எறும்புத்தின்னிக்குப் பரவியிருக்கலாம்’ என ஆஸ்திரேலிய மொனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பொத்தாம் பொதுவாக இவர்கள் இப்படிச் சொல்லவில்லை.

நோய்த்தொற்றுகளுக்கும் காடு அழிப்பு, உலகமயம், நகரங்கள் விரிவடைதல், போர்கள் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான விஷயங்களுக்கும் தொடர்புகள் இருப்பதை வரலாறு உறுதிசெய்கிறது.

13-ம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் ஐரோப்பாவுக்கு புதிய வணிகப் பாதைகளைத் தொடங்கியபோது ஏற்பட்டது பிளேக். காடு அழிப்புகளால் மலேரியா கொசுக்கள் இடம்பெயர்ந்து தொற்றியது மலேரியா. 19-ம் நூற்றாண்டில் லண்டன் நகரமயமாகத் தொடங்கியபோது தொற்றியவை அம்மை, தட்டம்மை, காசநோய். இப்போது கொரோனாவுக்குப் பின்னணியிலும் காடு அழிப்பு, காட்டுயிர் வேட்டை இருக்கிறது என்பதே சூழலியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இதையடுத்து, காட்டுயிர் குற்றங்களை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்கிற குரல், உலகம் முழுவதுமே ஓங்கி ஒலிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், காட்டுயிர்கள் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்புகள் என்ன, இங்கே என்னென்ன பிரச்னைகள் நிலவுகின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சட்டங்களும் திட்டங்களும்

* காட்டுயிர்களை வேட்டையாடுதல், கடத்துதல், விற்பனை செய்தல், அனுமதி இல்லாமல் காட்டுப் பொருள்களை வைத்திருத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தல் போன்ற செயல்கள் காட்டுயிர் குற்றங்களாக வரையறுத் துள்ளது காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் - 1972. எவையெல்லாம் பாதுகாக்கப்பட்ட விலங்குகள், தாவரங்கள் என்பதையும் இந்தச் சட்டம் அட்டவணைப்படுத்தியுள்ளது.

* இந்தியாவில் அந்தந்த மாநில வனத்துறையே காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் காட்டுயிர் குற்ற ஆவணகம் செயல்படுகிறது. காடுகளையும் காட்டுயிர்களையும் கண்காணித்து, அவற்றுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்துவதுதான் இதன் பணி.

* மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் காட்டுயிர் குற்றக் கட்டுப்பாட்டு ஆணையத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. காட்டுயிர் குற்றம் சார்ந்த தகவல்களைச் சேகரித்தல், வனத்துறை, காவல்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து குற்றத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல் மற்றும் அந்தத் துறைகளுக்கு காட்டுயிர் குற்றம் சார்ந்த பயிற்சியை அளித்தல் போன்ற பணிகளை இந்த ஆணையம் செய்துவருகிறது.

* சூழலியல் குற்றம் சார்ந்த தரவுகளை 2014-ம் ஆண்டு முதல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுவருகிறது. அதில் காவல் துறையினரால் பதிவுசெய்யப்பட்ட காட்டுயிர் குற்ற வழக்குகள் குறித்த தரவுகளும் கிடைக்கப்பெறுகின்றன.

பிரச்னைகள் என்ன?

* காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் - 1972, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு காட்டுயிர் குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், பெருவாரியான மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறையினர் காட்டுயிர் குற்றங்களை விசாரணை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். உலகளவில் ஆவணப் படுத்தப்பட்ட பல்லுயிர் வளங்களில் எட்டு சதவிகிதம் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், ஆவணப்படுத்தப்படும் காட்டுயிர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, 2014 முதல் 2018 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் காவல் துறையால் பதிவுசெய்யப்பட்ட காட்டுயிர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 4,066. இதில் 55 சதவிகிதக் குற்றங்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில்தான் பதிவுசெய்யப் பட்டுள்ளன. கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, தமிழ்நாடு, அந்தமான் தீவுகள், சண்டிகர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் ஒற்றை இலக்கங் களிலேயே குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேகாலயா, சிக்கிம், திரிபுரா, தாதர் - ஹவேலி, டாமன் - டையூ ஆகிய இடங்களில் எந்தவிதமான காட்டுயிர் குற்றங்களும் பதிவுசெய்யப்படவில்லை.

காடு
காடு

* ‘அனைத்து மாநிலங்களின் முதன்மை தலைமை வனப் பாதுகாப்பாளர் மற்றும் காவல்துறை இயக்குநர்கள், அவரவர் துறைகளில் காட்டுயிர் குற்றக் கட்டுப்பாட்டு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’ என்று காட்டுயிர் குற்றக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காட்டுயிர் சார்ந்த குற்றங்களைக் கண்காணிக்கவும் தடுப்பதற்கும் தனித்துவமான குழு இருந்தால், அவர்கள் சிறப்பாகச் செயல்படுவர் என்ற அடிப்படையிலேயே இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், பெருவாரியான மாநிலங்கள் இதைச் செய்யவில்லை.

* ‘அனைத்து மாநில வனத்துறையினரிடம் அவர்கள் விசாரணை செய்து தண்டித்த குற்றவாளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும்’ எனவும் காட்டுயிர் குற்றக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அப்படிப் பதிவுசெய்யப்படும் விவரங்கள், காட்டுயிர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றிய தரவுத் தொகுப்பாக இருக்கும். ஆனால், இவை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

* காவல்துறை பதிவுசெய்யும் காட்டுயிர் குற்றத் தரவுகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், வனத்துறை பதிவுசெய்யும் குற்றத் தரவுகள் பொதுவெளியில் இல்லை. இதனால் இந்தியாவில் நடக்கும் காட்டுயிர் குற்றங்கள் பற்றிய முழுமையான தகவல் நம்மிடம் இல்லை. எனவே, காவல்துறை மற்றும் வனத்துறை பதிவுசெய்யும் குற்ற விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

* குற்றத் தரவுகளை ஒருங்கிணைக்க ‘காட்டுயிர் குற்றத் தரவு அமைப்பை’ காட்டுயிர் குற்றக் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், வனத்துறையும் காவல்துறையும் காட்டுயிர் குற்ற விவரங்களை இதில் பதிவேற்றுவதில்லை எனத் தெரிகிறது. மேலும், சுங்கத்துறையினர் கைப்பற்றும் கடத்தப்பட்ட காட்டுயிர் சார்ந்த தகவல்களையும் அந்தக் குற்றத் தரவு அமைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு குற்றத் தரவு ஆய்வாளரை நியமித்தலும் மிகவும் அவசியம்.

கொரோனா மட்டுமன்றி, நிஃபா, லஸ்ஸா, சார்ஸ், எபோலா, மெர்ஸ் போன்ற வைரஸ்கள் பரவுவதற்குக் காரணம், காட்டுயிர்களோடு மனிதர்களுக்கு ஏற்படும் தொடர்பே ஆகும். அந்தத் தொடர்பை ஏற்படுத்துவதில் காட்டுயிர் வேட்டை, கடத்தல், விற்பனை போன்ற காட்டுயிர் குற்றங்களே முக்கியப் பங்குவகிக்கின்றன.

உலகளவில் 56 வகை வைரஸ்கள் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் 250 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 27 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

‘ஆகவே, கொரோனா கற்பித்துள்ள பாடங் களைக் கருத்தில்கொண்டு அரசுகள் காட்டுயிர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை முழுமூச்சுடன் செயல்படுத்த வேண்டும்’ என, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும் பாதுகாவலர்களும் அறிவுறுத்துகின்றனர். காட்டுயிர்களின் நலத்தில் தான் மனிதர்களின் நலமும் அடங்கியிருக்கிறது. எப்போதெல்லாம் காட்டுயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அது மனிதர்களுக்கும் ஆபத்தையே விளைவிக்கும். காட்டுயிர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதன் மூலமே உலக மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்!

- ஷங்கர் பிரகாஷ் அழகேசன்

முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர், குற்றவியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்