மொகலாய சக்ரவர்த்தியான அக்பரின் மனமே மயங்கும்படி பக்தி ரசம் சொட்டிய பாடல்களை இயற்றிய பெண்ணடி யார், மீரா பாய். சர்வேஸ்வரனை தாயாக, தந்தையாக, தோழனாக பாவித்து பக்தி செய்வதுபோல கணவனாகவும் பாவித்து பக்தி செய்யலாம். அதன் பெயர் `நாயக நாயிகா பாவம்'. அவ்விதம், ‘அவனே என் பதி’ என்று வாழ்ந்த மீராவின் சரித்திரம் ஆச்சர்யமானது.

மீராபாய்
உதயப்பூர் அரச குடும்பத்தில் பிறந்து, கிருஷ்ண பக்தியை மாத்திரமே பிரதானமாகக் கொண்டு வளர்ந்தவள். சிறுவயதில் அவளை வந்தடைந்த கிரிதரன் எனும் கிருஷ்ண விக்ர கத்துடனேயேதான் அவளது நாள் தொடங்கி, தொடர்ந்து, முடியும். முப்பொழுதும் அவன் சிந்தையிலேயே இருந்ததைக் கண்டு, மீராவின் மனோபாவம் புரியாத ஊர் உலகு பரிகசித்தது. திருமண வயதை எட்டிய மீராவுக்கு மண முடிக்க ஆசைப்பட்டார் ராஜா. ஆனால் கண்ணனின் மேல் இருந்த அவளின் பக்தியை பற்றி அறிந்த எவரும் அவளை மணக்க முன் வரவில்லை. இந்நிலையில் மேவார் ராஜ் ஜியத்தை ஆண்ட கும்பராணா என்ற ராஜ புத்திர அரசன் மீராவைப் பற்றியும், அவளது பக்தியைப் பற்றியும் கேள்விப்பட்டு அவளை மணக்க விரும்பினான். ராணா ஏற்கெனவே திருமணமானவன். இரண்டு மனைவியர் இருந்தாலும் பலதார மணம் புரிவது அப்போ திருந்த வழக்கமாதலால் தன் விருப்பத்தை அவன் தெரிவிக்க, ராஜபுத்திர ராஜ்ஜியங் களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதால் திருமணமும் நடந்தேறியது.
அரண்மனையிலும் எளிய வாழ்வு!
ராணாவின் குடும்பத்துக்கு இஷ்டதெய்வம் துர்கை. ஆனால், மீராவுக்கோ கண்ணன். இதில் தொடங்கியது முரண். பிற அரசிகளைப் போல அல்லாமல் மீரா சாமான்யருடனும் எளிதாக பழகுவதும், சதாசர்வகாலமும் கிரி தரனை வணங்குவதும் அந்த அரண்மனையில் இருந்த பலரின் கண்களையும் உறுத்தியது. இயல்பிலேயே இறை நம்பிக்கையில் ஆழ்ந்த பற்றுகொண்டிருந்த ராணாவுக்கு மீராவையும், அவளது அப்பழுக்கற்ற குணத்தையும், மாறாத பக்தியையும் மிகவும் பிடித்தது. மீராவுக்கு முன்னதாக ராணா மணந்த இரண்டு மகா ராணிகளுமே போகங்களில் நாட்டம் உடை யவர்களாக இருந்தனர். அதனால், பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த மீராவின்பால் ராணா வின் மனம் ஈர்க்கப்பட்டது.
‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என ராணா கேட்க, மீரா வேண்டியது கிரிதரனுக் கான ஒரு சிறு கோயில் மாத்திரமே. ராணாவும் அவளது அந்தப்புரத்துக்கு அருகிலேயே சிறு கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தான். ராஜ பரிபாலனம் செய்தது போக மீதி நேரமனைத் தையும் மீராவுக்கென்றே செலவிடத் தொடங் கினான். மீராவும் அவனுக்கான பணிவிடை களைத் தவறாமல் செய்து முடித்த பின் கோயிலுக்குச் சென்றதால் அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் மனமொத்து வாழ்ந்தனர். இது கண்டு பொறாமை கொண்ட ராணாவின் மற்ற இரு மனைவியர், ராணாவின் தம்பி மற்றும் தங்கை என அனைவரும் ஒன்று கூடி மீராவை ராணாவிடமிருந்து பிரிப்பதற் கான பல உபாயங்களையும் கையாண்டனர்.

சிறையிடப்பட்ட சிலை!
மேவார் வம்சத்து ராணியானவள் உயர்ந்த பட்டுடுத்தி, விலை மதிக்கவியலாத நகைகளை அணிந்துகொண்டு சுகபோகங்களில் கவனம் செலுத்தாமல், கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு கோயிலில் பொது ஜனங்களின் முன் மெய்மறந்து ஆடுவதை அரண்மனையில் யாருமே ரசிக்கவில்லை; ஒரு ராணி செய்யக் கூடிய செயலா இது என்று அவளை வசை பாடினர். தொடக்கத்தில் அவர்களை, ‘மீராவைப் பற்றி எனக்குத் தெரியும்’ என்று சொல்லி அடக்கிய ராணாவின் மனதும் ஒரு கட்டத்துக்கு மேல் மாறியது. அரசகுலப் பெண்மணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளை சட்டை செய்யாமல் சாமானியரோடு வெகு சாதாரணமாக பழகிய மீரா வீட்டுச் சிறையி லிடப்பட்டாள். அரண்மனைக்கு அருகிலேயே யிருந்த கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள், வீட்டு சிறையிலிடப்பட்ட மீரா வைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்.
‘இவள் இங்கே இருப்பதால் தானே இவளை முன்னிட்டு இந்த பரதேசி கூட்டம் அனு தினமும் அரண்மனை பக்கமாக வருகிறது’ என்று நினைத்த ராணா, காட்டிலிருந்த பாழடைந்த மண்டபத்தில் மீராவை அடைத் தான். மனம் கலங்காத மீரா அங்கிருந்தே கிரிதரனை நினைத்தபடி தன் தேன்மதுரக் குரலினால் பாடல், மக்கள் காடு நோக்கிச் செல்ல, ராணா வேறுவழியின்றி மீராவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்தான்.
அக்பரின் பரிசு
இந்நிலையில், அக்பர் தனது ஆஸ்தான பாடகரான தான்சேன் மூலமாக மீராவின் பாடல்களைக் கேட்க நேர்ந்தது. பாட்டிலிருந்து கருத்தாழமிக்க வரிகளும் அந்த இசையும் மயக்க, ‘இப்பாடல்களை இயற்றியவரைக் காண வேண்டும்’ என்றார். தான்சேனோ, ‘உங்களின் பரம எதிரியான ராணாவின் மனைவியே அவள்’ என்று சொல்ல, அக்பரும் விடாமல், ‘என்ன செய்வீர்களோ தெரியாது, நான் அவளைப் பார்க்க வேண்டும்’ என்றதும் அக்பருக்கு சாது வேடம் அணிந்து மீராவைப் பார்த்தார்கள் அவர்கள்.
தன்னைச் சுற்றி நடப்பதை, சுற்றி இருப் போரை மறந்து கிரிதரனின் சிந்தனையில் மூழ்கியவளாக காலில் சலங்கை கொஞ்ச மீரா ஆடிப்பாட, ஆச்சர்யத்தில் ஆழ்ந்த அக்பர் தனது ராஜ முத்திரையிடப்பட்ட முத்துமாலை ஒன்றை கிரிதரனுக்கென்று சமர்ப்பித்துவிட்டு, தான் வந்த சுவடே தெரியாமல் நகரைவிட்டு அகன்றார். இதையறிந்த ராணா, மீராவின் மீது கடும் கோபம் கொண்டான். அடியார் போல வேடமிட்டு வந்து விட்டுப்போனது அக்பர் அல்ல, ஆபத்து என்பதையுணர்ந்த ராணா, இதற்கு காரணம் மீராதானே என்று, கோயிலுள் மீரா இருந்த நிலையில் அதை பீரங்கியால் தகர்த்தெறிய உத்தரவிட்டான்.
கோயில் தவிடுபொடியானது. மீரா கிரிதரனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிழைத்து, பிருந்தாவனத்தை அடைந்தாள். அவள் பிருந்தாவனம் போனதையும், பின் பாதயாத்திரையாக துவாரகையை அடைந்த தையும், அவளுக்கு நடந்தது அனைத்தையும் கேள்விப்பட்ட அக்பர் சினம் கொண்டு, மீரா மீண்டும் மேவாருக்கு வராத பட்சத்தில் படை யெடுப்பேன் என ஓலை அனுப்பினான். மக்கள் மத்தியிலும் சுற்றியிருக்கும் சிற்றரசு களிடமும் மீராவுக்கிருந்த புகழும் ஆதரவும் புரிய, மீராவை மீண்டும் அழைத்து வரும்படி சில அந்தணர்களை, அரச குடும்பத்திலிருந்து தூது அனுப்பினர். மறுநாள் காலை தன் முடிவை செல்வதாகச் சொல்லினாள் மீரா.
கண்ணனைச் சுற்றியிருந்த மீராவின் ஆடைகள்!
கதிரவன் குணதிசையில் உதித்த நேரம் மீராவைப் பார்க்க போனவர்களுக்கு அவள் வசித்த இடத்தில் அவளைக் காணாதது அதிர்ச்சி அளித்தது. ‘மீரா எங்கே?’ எனக் கேட்க, சுற்றியிருந்தவர்கள் சுட்டிக் காட்டியதோ கதவுகள் அடைக்கப்பட்டிருந்த கண்ணனின் கர்ப்பக்கிரகம். அடைக்கப்பட்டிருந்த சந்நிதி யின் கதவுகள் திடீரென இடி முழக்கம் போல அதிர, அங்கிருந்த அனைவரும் மிரண்டு போயினர். மூடிய கதவுகள் தானாகத் திறக்க உள்ளே பார்த்தால், மீரா அணிந்திருந்த ஆடைகள் கண்ணனைச் சுற்றியிருக்க, கரு வறைக்குள் சென்ற மீரா அவனுடன் ஒன்றரக் கலந்துவிட்டது புரிந்தது. ஆச்சர்யமான அந்த பக்தி, ஆச்சர்யத்துடனே முக்திபெற்றது.
தன் வாழ்வில் நடந்த அனைத்து முக்கிய மான நிகழ்வுகளையும் தான் எழுதிய பாடல் களில் பதிவு செய்த மீராவின் பஜனைப் பாடல்கள் இந்தியா முழுக்க வெகு பிரசித்தம்.
கங்கையும் யமுனையும் இருக்கும் காலம் வரையிலும் மீராவின் பக்தி இவ்வுலகத்தில் நிலைத்து இருக்கும். போலவே, அவள் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அமரத்துவம் பெற்றவையாக இன்றுபோல் என்றும் விளங்கும்.
- சக்திகளின் பக்தி தொடரும்...