Published:Updated:

டெல்லியில் கொரோனா பாதிப்பு: இரவு பகலாக எரியும் சடலங்கள்; நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்

டெல்லி
டெல்லி

டெல்லியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துவருவதால், மயானங்கள் இரவு பகலாக எரிந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர்.

கொரோனா நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்தால் இந்தியா முன்னெப்போதும் இல்லாத உயிர்ச் சேதங்களையும், பாதிப்புகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பால் மத்திய, மாநில அரசுகள் திகைத்து நிற்கின்றன. முதலாம் அலையின்போது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு உயிர்ச் சேதங்களைத் தடுத்த சுகாதாரத்துறையால், இந்த முறை அப்படி எதுவும் செய்ய முடியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் மூச்சுத்திணறித் துடித்துக்கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளை இடுகாட்டுக்கு வழிகாட்டி அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

குறிப்பாக, தலைநகர் டெல்லி, கொரோனாவின் பிடியில் சிக்கி நிலைகுலைந்து நிற்கிறது. முதலாம் அலையில் பெரிதான உயிர்ச் சேதங்களைச் சந்திக்காத டெல்லி தற்போது பலத்த உயிர்ச் சேதங்களைச் சந்தித்துவருகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பது டெல்லியில்தான். நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிற கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்ஸிஜன் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், கொரோனா மரணங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக ஆக்ஸிஜன் இருப்பு அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது.

டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், வெளியில் மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு ஆக்ஸிஜன் அளித்து உதவுமாறு மாநிலங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒடிசா, ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்கள் டெல்லிக்கு உதவ முன்வந்துள்ளபோதிலும் டெல்லியின் மொத்த ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தினசரி 700 டன்னுக்கும் அதிகமாக டெல்லிக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

டெல்லி
டெல்லி

பல இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் எப்போது வரும் என்று உயிரைப் பிடித்துக்கொண்டு காத்துக்கிடக்கின்றனர். மறுபுறம், ஆயிரக்கணக்கில் மக்கள் தடுப்பூசி எப்போது வரும் என்று அச்சத்துடன் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருப்பது தலைநகர் டெல்லியில்தான்.

நிலைமை கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் மயானங்கள் இரவு பகலாக எரிந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்

மயானங்களில் கூட்டம் மிகுதியாக இருப்பதாலும், இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், மக்கள் திறந்த மைதானங்களில்வைத்து கொரோனா நோயாளிகளின் உடல்களை எரியூட்டிவருகின்றனர்.

டெல்லியின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மூச்சத்திணறிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும், மயானங்களில் இரவு பகலாக எரிந்துகொண்டிருக்கும் பிணங்களின் புகைப்படங்களும் காண்போர் நெஞ்சைப் பதைபதைக்கவைக்கின்றன.

டெல்லி
டெல்லி

இந்த கோரப் பிடியிலிருந்து நாட்டு மக்கள் விடுபட, மத்திய அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில அரசுகள் பகிரங்கமாகத் தங்கள் இயலாமையைத் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் ஆக்ஸிஜன், ரெம்டிவிசிர் ஊசி, தடுப்பூசிகள் கிடைத்தாலே இறப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது. மக்கள் தங்கள் பங்குக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.

அடுத்த கட்டுரைக்கு