Election bannerElection banner
Published:Updated:

ஹரியானாவில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள், மால்கள்?! - உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் ( Manish Swarup )

மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் டெல்லியின் எல்லைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடிவருகின்றன.

மத்திய அரசு கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் டெல்லியின் எல்லைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடிவருகின்றன.

பஞ்சாப், ஹரியான மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவருகின்றனர். இந்தநிலையில், போராட்டம் தொடர்ந்தால், நாட்டுக்குப் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும் அபாயம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

போராட்டம் உச்சம் பெற்றிருக்கும் சூழலில், இது தொடர்பான 6-ம்கட்ட பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமையன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில், விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும், வரும் நாள்களில், இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் வீட்டின் முன்பு சாணம் குவிப்பு!

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றைய தினம், (01.01.2021) பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் நகரில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில முன்னாள் பா.ஜ.க அமைச்சர் திக்‌ஷன் சுத் இல்லத்தின் முன்பு அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் சிலர் மாட்டுச் சாணத்தை குவித்து, விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தை நிகழ்த்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து, திக்‌ஷன் சுத் உள்ளிட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் தங்கள் வீட்டின் முன்பு போராட்டம் நிகழ்த்திய நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஹோஷியார்பூரின் ராய் பகதூர் ஜோதமால் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

``இந்தச் சம்பவம் ஒரு தாக்குதலுக்கு இணையானது. இது பஞ்சாப் மாநிலத்தின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயல்” என்று பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர் அஸ்வனி குமார் ஷர்மா குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், ``அமைதியான முறையில் நிகழ்ந்துவரும் போராட்டத்தின் நடுவே இது போன்று நிகழும் சம்பவங்கள் போராட்டத்தை திசை திருப்பக்கூடும். போராட்டத்தில் ஈடுபடுவோர் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைவரும் போராட்டத்தை நல்ல முறையிலேயே தொடர வேண்டும்” என்று எச்சரித்திருக்கிறார்.

மீண்டும் பந்த்?! - மூடப்படும் மால்கள், பெட்ரோல் பங்குகள்:

கடந்த புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் விவசாய அமைப்பினருடன் நிகழ்த்திய 6 -ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு சாதகமாக ஒரு சில முடிவுகள் எட்டப்பட்டதால், வரும் ஜனவரி 4-ம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்தநிலையில், அதில் தீர்வு எட்டப்படவில்லையெனில் ஹரியானாவிலுள்ள பெட்ரோல் பங்குகள், மால்கள் மூடப்படும் என்று டெல்லியின் எல்லைகளில் போராடிவரும் போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

டெல்லியின் சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாய அமைப்பின் தலைவரான யுத்வீர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்திய அரசாங்கம் விவசாயிகளின் இந்தப் போராட்டம் ஷாஹீன் பாக் போரட்டத்தைப் போன்று திசை திரும்பும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அவ்வாறு எதிர்பார்ப்போருக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, பல்வேறு விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்களும் அரசாங்கம் தங்களுக்கு விரைவில் ஒரு நல்ல முடிவைத் தெரிவிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை, ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஹரியானா- ராஜஸ்தான் எல்லையின் வழியே டிராக்டர்களின் மூலம் டெல்லியை நோக்கிச் செல்ல விவசாயிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு