Published:Updated:

அறுந்து விழுந்த மின்சார வயர்; பறிபோன இரண்டு உயிர்கள் - டெல்லியில் நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்கள்

ராம் பிரசாத்

டெல்லியில் சாலையில் அறுந்துகிடந்த மின்சார வயரால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.

டெல்லி விபத்து
டெல்லி விபத்து

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலீம் சய்ஃபி கடந்த 5 வருடங்களுக்கு முன்புதான் டெல்லிக்கு வந்தார். அங்கு அவருக்கு கார்ப்பென்டர் வேலை. மனைவி ருக்‌ஷனா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சலீம் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கிக்கொண்டிருந்தது. வேலைக்குச் சென்றால் 7 மணிக்கு வீடு திரும்புவதை சலீம் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு சலீம் பணிக்குச் சென்றார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு ருக்‌ஷனாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவரை நிலைகுலையச் செய்தது. விபத்தில் சலீம் சய்ஃபி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

சலீம்
சலீம்

அதேவேளையில் சந்தீப் ராவத் என்பவருக்கும் ஓர் அழைப்பு வந்தது. உங்களது தந்தை ஹோஷியர் சிங் விபத்தில் உயிரிழந்ததுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹோஷியர் சிங் (வயது 54) இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகன்கள் இருவரும் படித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. விதி இவர்களை பிணவறையின் வாயிலில் சந்திக்க வைத்துள்ளது. இந்த இரண்டு குடும்பத்திலும் குடும்பத் தலைவர்கள் விபத்தில் உயிரிழந்துவிட்டனர். சலீம் மனைவி 8 மாத கைகுழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நிற்கிறார். உத்தரப்பிரதேசத்தில் இருந்த பிழைப்புத்தேடி வந்தவர் தனது கணவனை இழந்து தவிக்கிறார்.

சலீம் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மின் கம்பத்தில் இருந்த வயர் அறுந்து அவரது வாகனத்தில் விழுந்துள்ளது. அந்த வேளையில் பணி முடித்து திரும்பிக்கொண்டிருந்த ஹோஷியர் சிங் கீழே விழுந்த சலீமை காப்பாற்றச் சென்றுள்ளார். மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். மழையின் காரணமாக மின்சார வயர் அறுந்துவிழுந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியிருந்தது இதுவும் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மின் கம்பம்
மின் கம்பம்

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ காவல்கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 4.40 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அங்கு சென்ற போது இரு சக்கர வாகனத்தில் மின்வயர் சுற்றி இருந்தது. இதையடுத்து உடனடியாக மின்சார வாரியத்தை தொடர்புகொண்டு மின்சாரத்தை நிறுத்தக்கூறினோம். இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வயர் அறுந்துவிழுந்ததும் பைக்கிலிருந்து சலீம் கீழே விழுந்துள்ளார். சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. அவரைக் காப்பாற்றுவதற்காக சென்றவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டனர்.

மின் கம்பம்
மின் கம்பம்

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், `இது எதிர் பாராத விதமாக நடந்த விபத்து. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். மழைக் காலங்களில் மின் கம்பங்கள், டிரான்பார்மர், தெரு விளக்குகள் அமைந்து இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்க பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மின்சாதன அமைப்புகள் இருந்தால் எச்சரிக்கை இருக்கும்படி கூறியுள்ளோம். அதேபோல் மின்சாதன பொருள்கள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்' என்றனர்.