Published:Updated:

`வன்முறையாளர்கள் வைத்த தீ.. கொழுந்துவிட்டெரிந்த குடோன்’ - மூதாட்டி உயிரிழப்பால் தவிக்கும் குடும்பம்!

மருத்துவமனை
மருத்துவமனை

``எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் முக்கியமாக என் தாயை இழந்துவிட்டேன்” என கண்ணீர் மல்கக் கூறினார் மூதாட்டியின் மகன் சல்மானி.

பேரக்குழந்தையின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த அக்பரி ( வயது 85) டெல்லி வன்முறையில் உயிரிழந்துள்ளார். இந்த 85 வயது மூதாட்டி எந்தப் போராட்டத்துக்கும் செல்லவில்லை. வன்முறையாளர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

அக்பரிக்கு 7 குழந்தைகள். இவரது பூர்வீகம் உத்தரப்பிரதேசம். 40 வருடங்களுக்கு முன்பு அவரின் கணவர் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து 7 குழந்தைகளையும் ஆளாக்கியுள்ளார். இவரின் 7 மகன்களில் ஒருவரான சல்மானியின் வீட்டில்தான் இவர் தங்கியிருந்தார். சல்மானி துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்துவருகிறார். இவருக்குச் சொந்தமான மூன்று மாடி கட்டடத்தில் கீழ் தளத்தில் குடோனும் அடுத்த இரண்டு தளத்தில் இவர்கள் குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர்.

`டாக்டர் கனவு; தலையில் துளைத்த தோட்டா!”- டெல்லி கலவரத்தில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

சம்பவம் குறித்து சல்மானி பேசுகையில், ``நான் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தேன். அப்போது என் மகன் எனக்கு போன் செய்தான். பெட்ரோல் குண்டுகள், கையில் தடிகளுடன் ஒரு கும்பல் வீட்டைச் சுற்றி இருப்பதாகக் கூறினான். தெருக்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தடியுடன் சுற்றித்திரிவதாக கூறினான். அப்போது வீட்டின் இரண்டாவது தளத்தில் என் அம்மா, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர். நான் அவர்கள் அனைவரையும் மாடிக்குச் செல்லுமாறு போனில் அறிவுறுத்திவிட்டு எனது வீட்டை நோக்கி ஓடினேன்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

ஆனால், பக்கத்து தெருவில் இருந்த சிலர் என்னைத் தடுத்து நிறுத்தினர். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது; நீங்கள் அங்கே சென்றால் உங்களைக் கொலை செய்துவிடுவார்கள் என எச்சரித்தனர். அவர்கள் சொன்னது எல்லாம் ஏற்கெனவே அங்கு நடந்துகொண்டிருந்தது. நான் பலமணி நேரமாக அங்கு சிக்கியிருந்தேன். என்னால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் என் குடும்பத்தினர் இறந்திருப்பார்களோ என்ற சிந்தனைதான் இருந்தது.

வீட்டுக்கு கீழே இருந்த குடோனை அந்தக் கும்பல் தீவைத்ததையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாடிக்கு விரைந்தனர். வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டுகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் வீசியுள்ளனர். இதையடுத்து, அனைவரும் மாடிக்கு விரைந்தனர். என் தாயார் அங்கு இல்லை என்பதை அப்போதுதான் என் மகன் உணர்ந்தான். இதையடுத்து, என் மகன் கீழே விரைந்துள்ளான் குடோன் தீப்பற்றி எரிந்ததால் வீடு முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. கீழே சென்று பார்த்தபோது என் தாயார் இறந்துவிட்டார்.

Representation Image
Representation Image

250 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு டெல்லி வந்தேன். இங்கு வந்து தொழில்தொடங்கி ஒரு நல்ல நிலைமைக்கு வந்தேன். குடோன் பற்றி எரிந்ததில் எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பல் என் வீட்டைச் சூறையாடியுள்ளது. வீட்டில் இருந்த நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாயையும் எடுத்துச்சென்றுள்ளனர். இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் முக்கியமாக என் தாயை இழந்துவிட்டேன்” என்றார் கண்ணீர் மல்க.

அக்பரியின் சடலத்தைப் பெறுவதற்காக மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் காத்திருந்த அதேவேளையில்தான் அக்பரியின் இளைய மகனின் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் தங்கள் தாயே மீண்டும் மகளாக பிறந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் ஆறுதல் அடைகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு