அரசியல்
அலசல்
Published:Updated:

நெருங்குகிறதா டெல்டா ப்ளஸ் கொரோனா? - என்ன செய்ய வேண்டும் அரசு?

டெல்டா ப்ளஸ் கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்டா ப்ளஸ் கொரோனா

‘டெல்டா ப்ளஸ்’ (கே-417) எனும் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மட்டுமன்றி உலக அளவிலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்துவருகிறது. நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீக்கப்பட்டு, தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவிவருவது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மென்மேலும் அதிகரிக்கச்செய்திருக்கிறது!

நெருங்குகிறதா டெல்டா ப்ளஸ் கொரோனா? - என்ன செய்ய வேண்டும் அரசு?

கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட முதல் அலையில் `ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸிலிருந்து உருமாறி, வீரியம் அதிகரித்த வைரஸுக்கு `டெல்டா’ (பி.1.617.2) வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டது. இந்தியாவில் இரண்டாம் அலையில் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பரவல்தான் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம், முன்பிருந்த வைரஸைவிட இந்த வைரஸ் பரவலின் வேகமும் பாதிப்பும் அதிகமாக இருந்ததுதான்.

இந்தநிலையில்தான், கடந்த மார்ச் மாதத்தில் டெல்டா வகை வைரஸிலிருந்து ‘டெல்டா ப்ளஸ்’ (கே-417) எனும் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டெல்டா ப்ளஸ் வைரஸின் பரவல் வேகம் மிக அதிகமாக இருப்பதுடன், இந்த வைரஸ் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருக்குலைக்கும் தன்மைகொண்டது. இதனால், இறப்புகள் அதிகரிக்கக்கூடும்’ என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

நெருங்குகிறதா டெல்டா ப்ளஸ் கொரோனா? - என்ன செய்ய வேண்டும் அரசு?

டெல்டா ப்ளஸ் வைரஸ் குறித்து மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் முதன்முதலில் மத்தியப்பிரதேசத்திலுள்ள 65 வயது பெண்ணுக்கு டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மகாராஷ்டிராவில் மட்டும் 21 பேருக்கு அந்த வைரஸின் தொற்று இருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள், டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொற்றைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் இந்த ஆய்வுகளை அதிகப்படுத்துவது மட்டுமே முன்கூட்டியே நோய்ப் பரவலைத் தடுக்கும் ஒரே வழி. இந்த டெல்டா வகை வைரஸ் உடலில் ஆக்சிஜன் அளவைக் குறைப்பதுடன், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மைகொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

தொற்றைக் கட்டுப்படுத்த வழி இருக்கிறதா என்று மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ‘‘டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸ்கள், மற்ற வைரஸ்களைவிட 30 முதல் 60 சதவிகிதம் வரை அதிக வேகத்தில் பரவும்; பாதிப்பும் அதிகம் இருக்கும். சமீபத்தில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில், டெல்டா வைரஸுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் 33 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்களின் முடிவுகள் ஆராய்ச்சிநிலையில் உள்ளன.

நெருங்குகிறதா டெல்டா ப்ளஸ் கொரோனா? - என்ன செய்ய வேண்டும் அரசு?

தமிழகத்தில் தொற்று குறையாத கோவை போன்ற பகுதிகளில் மூலக்கூறு ஆய்வு மேற்கொண்டால், அங்கு தொற்று குறையாததற்கு உண்மைக் காரணம் என்னவென்பது வெளிச்சத்துக்கு வரும். தமிழகம் பல்வேறு நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது உண்மைதான். ஆனால், தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் வழங்கியிருப்பது கவலையளிக்கிறது. இந்த வகை வைரஸ் தொற்று உள்ளவர்களோடு அருகிலிருந்து பேசினாலே தொற்று மற்றவருக்குப் பரவும் அபாயம் உள்ளது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி, VEC (Vaccination Enhanced Testing, Containment Zone) ஏற்படுத்துவதுதான். அதாவது, தடுப்பூசியை அதிகப்படுத்துவதும், பரிசோதனையை அதிகப்படுத்துவதும், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட பகுதியைக் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பதும் மட்டுமே இந்தத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரே வழி’’ என்று எச்சரித்தார்.

தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, அபாயங்களைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

இரண்டாம் அலையில் 70 % டெல்டா

இரண்டாம் அலையில் டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு முன்னதான டெல்டா வைரஸின் தாக்கமே மிக அதிகமாக இருந்தது தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் வைரஸ் மரபணு ஆய்வகம் இல்லாததால், கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இங்கிருந்து 1,159 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரிலுள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதற்காக, குழந்தைகள், தடுப்பூசி செலுத்திக்கொண்டும்கூட தொற்றுக்கு ஆளானவர்கள், இணை நோயில் இறந்தவர்கள் உள்ளிட்டோரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முதற்கட்டமாக 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின. இவற்றில், 70 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.