
கொரோனா வைரஸை ஒழிக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில், டென்மார்க் அரசாங்கம் கொரோனாவுக்கு எதிரான போரில் 15 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் எனும் `கொறிவகை' விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது.
மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை. அதிலிருந்து பல ஃபேஷன் துறை சார்ந்த பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. டென்மார்க்கில் ரோமங்களுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பெருமளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் மிங்க்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே அவற்றைக் கொல்ல அந்நாட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதே காரணத்தை முன்வைத்து நெதர்லாந்திலும் மிங்க்குகள் கொல்லப்பட்டன.
இதேபோல அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 10,000 மிங்க்குகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பதாகச் செய்தி வெளியானது. மனிதர்களிடமிருந்து இந்த விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவுவதாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்திகள் மிங்க்குகள் வளர்க்கப்படும் நாடுகளை அச்சுறுத்தின. இந்தச் சூழலில்தான், டென்மார்க் அரசாங்கம் தங்கள் நாட்டில் வளர்க்கப்படும் 15 மில்லியனுக்கும் அதிகமான மிங்க்குகளைக் கொல்ல அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது.

மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது. டென்மார்க்கில் சுமார் 1,100 பண்ணைகளில் 15 முதல் 17 மில்லியன் மிங்க்குகள் இருக்கின்றன. டென்மார்க் அரசின் கால்நடை மற்றும் உணவு நிர்வாகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 200-க்கும் மேற்பட்ட மிங்க் பண்ணைகளில் கோவிட் -19 நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen), ``மிங்க்குகள் பொது சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளன.
மனிதனிடமிருந்து மிங்க்குகளுக்குப் பரவும் கொரோனா வைரஸ் அந்த விலங்கிடமிருந்து வேறொரு மனிதருக்குத் தொற்றும்போது இன்னும் ஆபத்தானதாக உருமாறிவிடுகிறது. அப்படி உருமாறும் கொரோனா வைரஸ் எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஏற்கெனவே 12 பேர் இப்படி மிங்க்குகளிடமிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மிங்க்குகளை அழிக்க வேண்டும். மிங்க் பண்ணைகளுக்கு உதவ ராணுவம், போலீஸ் மற்றும் தேசிய அவசர சேவை அணி திரட்டப்படும்” என்று கூறியுள்ளார்.