மத்திய அரசின் பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 100 ரயில்களைத் தனியார் வசம்விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகக் கோவை - ஷீர்டிக்கு இடையே தனியார் ரயில் இன்று முதல் தன் சேவையைத் தொடங்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரயில்களைத் தனியாருக்கு விடப்பட்ட முடிவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. இந்த முடிவைக் கண்டித்துக் கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவடகோவை ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை ஷீர்டிக்கு முதல் பயணத்தைத் தொடங்குகிறது தனியார் ரயில். கடந்த சில நாள்களாக ரயிலுக்கு வண்ணம் பூசுவது, உள்கட்டமைப்பு வசதியைச் செய்வது போன்ற பணிகளில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

அந்தப் பணிகளைத் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வும் செய்தனர். முக்கியமாக ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சேவையைத் தனியார் நிறுவனம் இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. ரயில் கட்டணம் (டிக்கெட் மட்டும்) மற்றும் பேக்கேஜ் கட்டணம் என்று 2 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே பேக்கேஜ் பிரிவில் ஸ்லீப்பருக்கு ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு ஏ.சி பிரிவில் ரூ.5,000 கட்டணமும், பேக்கேஜில் ரூ.7,999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இரண்டடுக்கு ஏ.சியில் ரூ.7,000 மற்றும் பேக்கேஜில் ரூ.9,999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஏ.சி முதல் வகுப்புக்கு ரூ.10,000 கட்டணமும், பேக்கேஜ் பிரிவில் ரூ.12,999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டணம் கோவை – ஷீர்டி சென்று மீண்டும் கோவை திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேக்கேஜ் பிரிவில் கோவையிலிருந்து ஷீர்டி சென்று திரும்புவதுடன், ஷீர்டியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏ.சி அறை, இன்ஷூரன்ஸ், ஷீர்டி ரயில் நிலையத்திலிருந்து சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கும்.

செல்லும் வழியில் மந்திராலயம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உணவு மற்றும் மந்திராலயம் கட்டணம் பேக்கேஜில் அடங்காது.
இதுகுறித்து இந்த சேவையைச் செய்யும் தனியார் தரப்பில் பேசியபோது, “கோவை – ஷீர்டிக்கு நேரடி ரயில் இல்லை. புனே சென்றுதான் மாற வேண்டும். எங்களிடம் வரும் பயணிகள் ரயில் கட்டணம் மட்டும் எடுத்துக்கொண்டு வரலாம் அல்லது பேக்கேஜிங்கிலும் வரலாம்.

சராசரியாக கோவை டு ஷீர்டி ரயிலில் ஸ்லீப்பரில் செல்ல ரூ.1,000 – 1,200 ஆகும். நாங்கள் அப் அண்ட் டவுன் கட்டணமே ரூ.2,500 தான் நிர்ணயித்துள்ளோம். ரயில்வே கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நாங்களும் அதே கட்டணத்தைத்தான் நிர்ணயிக்கிறோம்.
இந்தக் கட்டணத்தில் நாங்கள் ஏராளமான வசதிகளை வழங்குகிறோம். அனைத்துப் பயணிகளுக்கும் தலையணை, பெட்ஷீட், டூத் ப்ரஷ், பேஸ்ட், சோப்பு வழங்குகிறோம். பெட்ஷீட்டைப் பயணிகள் திருப்பித் தரவேண்டியதில்லை. அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

ரயிலில் ஒரு மருத்துவர் இருப்பார். அவசர கால சேவைக்கு அவர் உடனடியாக சிகிச்சை வழங்குவார். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை கழிப்பறை சுத்தம் செய்வோம். உணவைப் பொறுத்தவரை மக்களின் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உணவு பிடிக்கும். அவர்களின் விருப்பத்துக்குத் தகுந்ததுபோல ஆர்டர் கொடுத்து சாப்பிடலாம். சராசரியாக ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவும் ரூ.350 – 500க்குள் முடித்துவிடலாம். உணவுக்குப் பெரிய அளவில் கட்டணம் நிர்ணயிக்கவில்லை.

இங்கிருந்து போகும் கட்டணத்தை, அப் அண்ட் டவுன் கட்டணத்துடன் ஒப்பிட்டுத் தவறான தகவலைப் பரப்புகின்றனர். அளவான கட்டணத்தில் தரமான சேவையைக் கொடுக்க உள்ளோம். அடுத்தகட்டமாக மேலும் சில சேவைகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் நேரடியாக ஆய்வு செய்தவரை, போதுமான முன்னேற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். பேக்கேஜ் கட்டணத்தில் பல்வேறு சேவைகள் இணையும். அதனடிப்படையில் கட்டணம் மாறும். மற்றபடி சராசரி ரயில் கட்டணத்திலிருந்து பெரிய வித்தியாசம் இல்லை. தனியாக ஷீர்டி செல்லும்போது மொழிப் பிரச்னை, உணவு போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பேக்கேஜில் செல்லும்போது அந்தச் சிக்கல்கள் எல்லாம் களைய இந்த சேவை உதவும்” என்றனர்.