Published:Updated:

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி

டந்த வாரத்தில் இரண்டு முக்கியமான நிறுவனங்கள் பற்றி பலரும் பேசவேண்டிய நிலை ஏற்பட்டது. திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள்தான் அவை. இந்த இரு நிறுவனங்களும் சந்தித்து வரும் சிக்கல்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

திவான் ஹவுஸிங்கின் காலாண்டறிக்கை

திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மார்ச் 2019-உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.2,223 கோடி இழப்பினைச் சந்தித்துள்ள திவான் ஹவுஸிங் நிர்வாகம், தான் வெளியிட்டுள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களின் மீதான வட்டியை உரிய காலத்திற்குள் செலுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் வாங்கியுள்ள கடன்கள் தொடர்பான தீர்வுக்காக நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

ஒரு சமயத்தில், உயர்ந்தபட்ச தரக்குறியீடான ‘AAA’-யைப் பெற்றிருந்த திவான் ஹவுஸிங் நிறுவனம், தற்போது மிகக் குறைந்த பட்ச அளவான ‘D’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தவியலாத அளவுக்கு நொடிந்துபோய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

இந்தத் தகவல் வெளியான அன்றே திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 30% வரை வீழ்ச்சியடைந்தன. கடந்த ஓராண்டில் மட்டும், இந்தப் பங்கின் விலை 90 சதவிகிதத்துக்குமேல் இறக்கம் கண்டி ருக்கிறது.

கடைக்கோடி மனிதருக்கும் கடன் வசதி

மூலதனப் பற்றாக்குறை, மெகா-வங்கி இணைப்புகள், முத்ரா கடன், ஜன் தன் கணக்குகள், பண மதிப்பிழப்புத் திட்டம் போன்ற மத்திய அரசின் கொள்கை சார்ந்த பணிகள் காரணமாக, கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு குறைந்துபோனது. ‘தலைமை மாற்றம்’ மற்றும் வாராக் கடன் போன்ற பிரச்னைகளால் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் யெஸ் பேங்க் போன்ற தனியார் வங்கிகளும்கூட, முன்புபோல முனைப்பாகச் செயல்பட முடியவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

இவ்வாறாக, நிதிச் சேவைகள் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. மென்மையான வட்டி விகிதங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, நுகர்வோர் கலாசாரம் போன்ற சமூகப் பொருளாதாரக் காரணிகள் நிதி நிறுவனங்களின் குறுகிய காலத்திய பிரமாண்டமான கடன் வளர்ச்சிக்கு வித்திட்டன. சாதாரண வங்கிகள்போல, நிலையான வருவாய், வருமான வரித் தாக்கல் ரசீது போன்ற ஆவணங் களை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கட்டாயப் படுத்தாமல் கடன் வழங்கியது, இந்த ஆவணங் களை வழங்க முடியாத இந்தியாவின் பெருவாரி யான அமைப்புசாரா சமூகத்தை எளிமையான மற்றும் குறைவான வட்டி விகிதங்களுடன்கூடிய புதிய கடன் உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், நுகர்பொருள்கள், வீடுகள் போன்ற தனிநபர் பயன்பாட்டுத் துறைகள் மட்டுமல்லாமல், கனரக வாகனங்கள், சிறுகுறு உற்பத்தி நிறுவனங்கள் போன்ற அமைப்புசாரா தொழில் துறைகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களால் பயன்பெற்றன. ஆக மொத்தத்தில், தொழில் துறையில் பெரும் வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில்கூட, நமது பொருளாதாரம் சிறப்பான முன்னேற்றத்தைக் காண வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெரும்பங்காற்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திவாலாகுமா திவான் ஹவுஸிங்?

ஐ.எல்&எஃப்.எஸ் விவகாரம் வங்கிசாரா நிதித் துறைக்கு ஒரு அக்னிப் பரீட்சையாக அமைந்துவிட்டது. சுந்தரம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்று வலுவான அடிப்படை மற்றும் சிறப்பான நிர்வாகத் தலைமைகொண்ட நிறுவனங்களின் வளர்ச்சி கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், சற்று சிரமப்பட்டாலும் நொடிந்து போகவில்லை. ஆனால், திவான் ஹவுஸிங் கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. வாழ்வா, சாவா எனும் போராட்டத்தில் சிக்கித் தவிர்த்து வருகிறது.

திவான் ஹவுஸிங்கின் எதிர்காலம் கீழ்க்கண்ட மூன்று சவால்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைச் சார்ந்தே அமைந்திருக்கும். 1. சுமார் ரூ.20,750 கடனுக்கான ஆவணங்கள் முழுமையாக இல்லை. 2. ரூ.16,487 கோடி மதிப்புள்ள காசோலைகளை மாற்ற முடியவில்லை. 3. மூலதனம் - கடன் விகிதாசாரம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

திவான் ஹவுஸிங் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியுள்ள வங்கிகள் தள்ளுபடியுடன்கூடிய ஒரு கடன் தீர்வுத் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக சில ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றாலும், தள்ளுபடிக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் இணங்கவில்லை என்றும் அவை கடன் தீர்வைச் சட்டரீதியாக அணுகப்போவதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளன.

திவான் ஹவுஸிங் கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் எதிர்காலம் மூன்றுவிதமான சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைச் சார்ந்தே அமைந்திருக்கும்!

சுருக்கமாக, திவான் ஹவுஸிங் நிறுவனம் மீண்டும் பிழைத்துவருமா என்பதைச் சொல்லமுடியாத அளவுக்கு ஐ.சி.யு-வில் இருக்கிறது.

இண்டிகோ - வெகுஜன விமானச் சேவை

வான்வெளிப் பயணம் வெகுஜன மக்களுக்கும் சாத்தியமாக வேண்டும் என்ற கனவை முதன்முறையாக முன்வைத்த டெக்கான் ஏர்வேஸ், அந்த நோக்கம் நிறைவேறாமலேயே கிங்ஃபிஷருடன் இணைய நேர்ந்தது. ஆனால், பட்ஜெட் சேவைகளை மட்டுமே வழங்கி வெகு சீக்கிரம் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக உயர்ந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அந்தக் கனவை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்தியது.

பட்ஜெட் விமான சேவை நிறுவனத்தால் சிறப்பான லாபமும் ஈட்ட முடியும் என்று நிரூபித்துக் காட்டியது இண்டிகோ. முதலீட்டாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த இண்டிகோ நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கிடையே தற்போது பொது வெளியில் நடைபெறும் வார்த்தைப் போர், இண்டிகோ நிறுவனத்தில் உள்ள உள்சிக்கல்களை வெட்டவெளிச்சமாக்கி உள்ளதுடன் அதன் எதிர் காலத்தையும் கடுமையாகக் கேள்விக்குறியாகியுள்ளது.

ராகேஷ் Vs ராகுல் - வான்வெளிப் போர்

இண்டிகோ நிறுவனத்தில் 36.68% பங்கு ராகேஷ் காங்வாலிடமும், 38.26% பங்கு ராகுல் பாட்டியா விடமும் உள்ளது. ராகுல் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக ராகேஷ் சமீபத்தில் செபியிடம் புகார் சொன்னார். மேலும், ராகுல் பாட்டியாவுக்குச் சொந்தமான இன்டர் க்ளோப் என்டர்ப்ரைஸ் நிறுவனத்துடனான பணப் பரிவர்த்தனைகள் வாயிலாக, இண்டிகோவின் பணம் சூறையாடப் படுவதாகவும் நிர்வாக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தணிக்கை நிர்வாகக் குழுவிடம் உரிய அனுமதி பெறாமலும் பொதுவெளியில் ஏலம் கேட்டுப் பெறாமலும் தனிப்பட்ட முறையில் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

தனது நீண்ட கால நண்பரான ராகேஷின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ராகுல் பாட்டியா, நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை தன்மீது அள்ளிவீசுவதாக ராகேஷ் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள செபி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஜூலை 19-ம் தேதிக்குள் ராகுல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும் இது குறித்து விசாரணையை வெகு சீக்கிரம் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சியை மதிப்பிடுவதில் முக்கிய பங்கு உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு ஆகும். இரட்டை இலக்க எண்ணில் வளர்ந்துவந்த பயண எண்ணிக்கை உயர்வு தற்போது தட்டுத் தடுமாறி வருவது கவலைக்குரிய விஷயமாகும். பொருளாதார மந்த நிலையும் இதற்கு முக்கியக் காரணம் என்றாலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் திவால் நிலையும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஏற்கெனவே ஏர் இந்தியா தடுமாறி வரும் நிலையில், ஜெட் ஏர்வேஸின் வெளியேற்றம் வான்வெளி பயணத்தின் விலையைப் பெருமளவு உயர்த்திவிட்டது. இந்த சூழ்நிலையில், மொத்த விமான சேவைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேலே தன்வசம் வைத்துள்ள இண்டிகோ நிறுவனத்தின் இந்த உள்குழப்பத்தினால் இண்டிகோவின் சேவைகள் தடைபடுமேயானால், இந்தியாவின் ஒட்டுமொத்த விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமுமில்லை.

தனிப்பட்ட மனிதர்களின் பேராசையாலும் நிறுவனங்களின் நிர்வாகச் சீர்கேடுகளாலும் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் ஒட்டுமொத்த பொருளாதார மும்தான் என்பதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசும் ஒழுங்குமுறை அமைப்புகளும் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு