Published:Updated:

ரூ.12 கோடி வைரம் ரூ.6 கோடியான மர்மம்! - கண்ணாமூச்சி ஆடுகிறதா காவல்துறை?

வைரக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வைரக்கல்

கடத்தல் பேர்வழியை தப்பவிட்ட போலீஸ்...

ரூ.12 கோடி வைரம் ரூ.6 கோடியான மர்மம்! - கண்ணாமூச்சி ஆடுகிறதா காவல்துறை?

கடத்தல் பேர்வழியை தப்பவிட்ட போலீஸ்...

Published:Updated:
வைரக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வைரக்கல்

“12 கோடி ரூபாய் வைரக்கல்லை டவுன் போலீஸ்காரங்க 6 கோடி ரூபாய்தான்னு சொல்றாங்க... பொருளை மாத்திட்டாங்களா இல்லை பாதியை அடிச்சுட்டாங்களா? போதாக் குறைக்கு கடத்தல் பேர்வழியையும் தப்பவிட்டுட்டாங்க... சரியான தில்லாலங்கடிங்கப்பா!” - கடந்த இரு வாரங்களாக ராமநாதபுரம் எங்கும் இதுதான் பேச்சு... மாவட்ட எஸ்.பி-யின் தனிப்படையினர் பிடித்துக்கொடுத்த கடத்தல் வைரக்கற்கள் நகர போலீஸார், சுங்கத்துறையினர் என்று வலம்வந்து இப்போது மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில்தான் ஏகப்பட்ட சர்ச்சைகள். என்னதான் நடந்தது இந்த விவகாரத்தில்?

இது குறித்து எஸ்.பி-யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவிலுள்ள போலீஸார் சிலரிடம் பேசினோம்... ‘‘ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரி ஒருவரின் கார், கடந்த மார்ச் இறுதியில் திருட்டுப்போனது. அதைப் புகார் கொடுக்க விரும்பாத அவர், வாய்மொழியாக எஸ்.பி-யிடம் தெரிவித்து, காரைக் கண்டுபிடித்துக் கொடுக்கச் சொன்னார். நாங்கள் அந்த காரைத் தேடிவந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் தனிப்படையினர் அதற்கான வாகன சோதனையில் ஈடுபட்டபோது, காரைப் பறிகொடுத்தவரும் எங்களோடு இருந்தார். அப்போது சாலையில் வந்த ஒரு காரைப் பார்த்ததும் ‘அது தன்னுடையதுதான்’ என்று அடையாளம் காட்டினார். ஆனால், நாங்கள் நிறுத்தச் சொல்லியும் அந்த காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். அப்போது அதே காரை நோக்கி ஒருவர் ஓடி வந்தார்... எங்களைப் பார்த்ததும் அவரும் தப்பி ஓடினார். அவரை விரட்டிப் பிடித்து, அவரிடம் இருந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் இருந்தன.

யூசுப் சுலைமான்
யூசுப் சுலைமான்

அவரிடம் விசாரித்தபோது, அவர் கீழக்கரையைச் சேர்ந்த யூசுப் சுலைமான் என்பது தெரிந்தது. மேலும், ஹாங்காங்கிலுள்ள அக்தர் என்பவரின் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட இந்த வைரத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் என்றும், காரில் இருந்தவரிடம் வைரத்தைக் கொடுக்க வந்தபோது பிடிபட்டதாகவும் சுலைமான் சொன்னார். இதையடுத்து எஸ்.பி-யின் உத்தரவின்படி வைரக்கற்களையும் சுலைமானையும் ராமநாதபுரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தோம். ஆனால், மூன்று நாள்கள் கழித்தே வைரம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை நகர காவல்துறையினர் வெளியிட்டனர். அதில், பிடிபட்ட 160.9 கிராம் (800 காரட்) வைரத்தின் மதிப்பு 6 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

‘12 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் என சுலைமான் சொன்னானே...’ என்று நகர காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டால், ‘ஆளைப் பிடித்துக் கொடுப்பதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது. மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 12 கோடி ரூபாய் வைரம் என்று வெளியில் சொல்லித் திரியாதீர்கள்’ என்று எங்களை எச்சரித்தார்கள். இவை எல்லாவற்றையும்விட சுலைமானை திட்டமிட்டே தப்பவைத்துவிட்டார்கள். இந்தத் தகவல்களெல்லாம் வெளியே வந்ததால், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வைரக்கற்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீஸார் முன்வந்தனர். ஆனால், கடத்தல் நபரும் இல்லாத நிலையில், இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதை உணர்ந்த சுங்கத்துறையினர், வைரக்கற்களை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து, வைரக்கற்களை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டார்கள். உண்மையில் பிடிபட்ட வைரத்தின் மதிப்பு எவ்வளவு, பல கோடி ரூபாய் மதிப்பைக் குறைத்துச் சொல்லவேண்டிய அவசியம் என்ன, பொருளை மாற்றிவிட்டார்களா என்றெல்லாம் இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை தெரியவில்லை” என்று முடித்தார்கள்!

ரூ.12 கோடி வைரம் ரூ.6 கோடியான மர்மம்! - கண்ணாமூச்சி ஆடுகிறதா காவல்துறை?

சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடல்வழியாகத் தங்கம், வைரம் கடத்தப்பட்டால் மட்டுமே நாங்கள் பறிமுதல் செய்வோம். பிடிபட்டது பட்டை தீட்டப்படாத வைரம் என்பதோடு, அதில் சில குளறுபடிகளும் இருந்ததால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்” என்றார்கள்.

நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் விடுமுறையில் சென்றுவிட்ட நிலையில், அவரது செல்போனும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நகர காவல் நிலைய போலீஸாரிடம் பேசியபோது, ‘‘வைரக்கற்களை திருச்சியிலுள்ள வைர பரிசோதனை நிறுவனத்துக்கு, சோதனைக்காக அனுப்பினோம். அதில், இந்த வைரத்தை இரு முறை பட்டை தீட்டினால் பல கோடி ரூபாய் கிடைக்கும். 160.09 கிராம் எடைகொண்ட இந்த வைரம், சர்வதேச மதிப்பில் ஆறு கோடி ரூபாய் என்று தெரியவந்தது. மற்றபடி இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. வைரத்தை வைத்திருந்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சுலைமான் கூறியதால், அதை எடுத்து வருவதற்காக அவரை அனுப்பினோம். அவர் திரும்பி வரவேயில்லை. அவருக்கு உதவிய அக்தர், சுல்தான் ஆகியோரையும் தேடிவருகிறோம்” என்றார்கள்!

ரூ.12 கோடி வைரம் ரூ.6 கோடியான மர்மம்! - கண்ணாமூச்சி ஆடுகிறதா காவல்துறை?

இந்த விவகாரம் குறித்து தென் மண்டல ஐ.ஜி-யான அஸ்ரா கர்க், துறைரீதியாக ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. உண்மை வெளியே வரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism