பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கே.ஒய்.சி மோசடி... பணம் பறிக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோசடி

மோசடி

ன்று பணப் பரிவர்த்தனைகள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் அளவுக்கு எளிதாக மாறிவிட்டன. யூ.பி.ஐ (UPI) முறையில் கூகுள் பே, பே டிஎம், போன் பே என விதவிதமான வசதிகளை மக்களும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், இவற்றிலிருக்கும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. இந்தியா டிஜிட்டல்மயமாகும்போது திருடர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன... அவர்களும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டார்கள். அப்படி அண்மையில் தலைதூக்கியிருப்பதுதான் கே.ஒய்.சி (KYC - Know Your Customer) மோசடி.

அவருக்கு 52 வயது. மும்பையிலிருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜர். கடந்த மாதம் அவருக்கு ஒரு வங்கியின் பெயரிலிருந்து சில மெசேஜ்கள் வந்தன. `உங்கள் இ-வாலெட்டைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், கே.ஒய்.சி வெரிஃபை செய்யப்பட வேண்டும்’ என்றன அந்த மெசேஜ்கள். இவரும் மெசேஜ் வந்த நம்பரை அழைத்துப் பேசியிருக்கிறார்.

பிரசன்னா
பிரசன்னா

``இந்த கே.ஒய்.சி வெரிஃபிகேஷனை நீங்கள் ஆன்லைனிலேயே எளிதாகச் செய்துவிட முடியும். நாங்கள் சொல்லும் ஆப்பை மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்’’ என்றிருக்கிறது வங்கி ஊழியர்போல எதிர்முனையில் பேசிய குரல்.

அதை நம்பி இவரும் அந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்த பிராசஸின்போது இ-வாலெட் ஆக்டிவ்வாக இருக்க வேண்டுமென்றும் இவருக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 10 ரூபாய்க்கு ஒரு கிஃப்ட் வவுச்சர் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு அவருக்குத் தொடர்ந்து பல ஓ.டி.பி-க்கள் (OTP) வந்திருக்கின்றன. ஏதோ தவறுதலாக வருகிறது என்று அவற்றைக் கண்டுகொள்ளாமல் கே.ஒய்.சி விவரங்களை ஆப்பில் நிரப்பிவிட்டு, மெயிலைப் பார்த்தபோதுதான், அவர் வங்கிக் கணக்கிலிருந்து 15 கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவற்றில் ஒரு பே டிஎம் கணக்குக்கு மட்டும் 1.6 லட்ச ரூபாய் சென்றிருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர், காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்.

இதை விசாரித்த காவல்துறை, பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த ஆப்பினால்தான் இந்த மோசடி நடந்திருக்கிறது என்று தெரிவித்தது. அந்த ஆப், அவரின் மொபைல் ஸ்கிரீனில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை அப்படியே மறுமுனையில் இருப்பவருக்குக் காட்டியிருக்கிறது. அவர் 10 ரூபாய்க்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கியபோது கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களையும், ஓ.டி.பி-களையும் எளிதாகப் பார்த்து, பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். இப்போது எந்தெந்த கணக்குகளுக்குப் பணம் அனுப்பப் பட்டது என்ற விவரம் பெறப்பட்டு, காவல்துறையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர் மட்டுமல்ல, அண்மையில் இந்தியா முழுக்கப் பலரும் இது போன்ற கே.ஒய்.சி (KYC) மோசடிகளில் பணத்தை இழந்திருக்கிறார்கள். உணவு டெலிவரி ஆப், வங்கி, தனியார் இ-வாலெட் எனப் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள்போலப் பேசியே இந்த மோசடிகளைச் செய்கிறார்கள் இந்த டிஜிட்டல் திருடர்கள். தொடர்ந்து நடக்கும் இது போன்ற மோசடிகள் குறித்து சைபர் செக்யூரிட்டி (Cyber Security and Privacy Foundation) அமைப்பின் தலைவரான பிரசன்னாவிடம் பேசினோம்.

கே.ஒய்.சி மோசடி... பணம் பறிக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

``இதற்கும் தொலைபேசி அழைப்புகள்வழி கார்டின் தகவல்கள் மற்றும் பின் நம்பர்களை வாங்கும் ‘Vishing’ வகை மோசடிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதன் அடுத்த லெவல்தான் இது. இப்படி மொபைல் ஸ்கிரின்களை ரெக்கார்ட் செய்து, எங்கோ இருக்கும் ஒருவருக்கு ஒளிபரப்பும் ஆப்கள் பல இருக்கின்றன. ஆனால், என்னவென்றே தெரியாமல் ஸ்கிரீன் ரெகார்டு செய்து அனுப்ப நாம்தான் அனுமதி தர வேண்டும். இவை மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் ஆப்கள்தானே தவிர, மோசடி ஆப்கள் கிடையாது. அலுவலகங்களின் கணினிகளைக் கண்காணிப்பது, பராமரிப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றை ஆன்டிவைரஸ்கள் கண்டறிந்து சொல்லாது.

இது போன்ற சூழ்நிலைகளில் வங்கிகள், `எங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனக் கைவிரித்துவிடும். அறியாமையால் செய்த தவற்றால் வாடிக்கையாளரே குற்றம்சாட்டப்படுகிறார். அரசும் இது போன்ற விஷயங்களில் திடமான வழிமுறைகளை இன்னும் நிறுவவில்லை. அனைத்து கே.ஒய்.சி பணிகளுக்கும் பொதுவான அரசின் ஒரு ஆப் இருந்தால், தைரியமாக அதை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள்’’ என்றார் அவர்.

காலத்துக்கேற்ப மோசடி முறைகள் பல வழிகளில் அப்டேட் ஆகிவரும் நிலையில், ‘டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் பின் நம்பர் விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள்; வங்கியிலிருந்து பின் நம்பர் கேட்டு யாரும் அழைக்க மாட்டார்கள், பின் நம்பரை அடிக்கடி மாற்றுங்கள்’ என்று இன்றும் பொதுவான விழிப்புணர்வுச் செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு செல்கின்றன வங்கிகள். அரசு முழுவதுமாக டிஜிட்டல் இந்தியாவாக மாறும் முயற்சிகளிலிருந்தாலும், மக்கள் அதற்கு இன்னும் தயாராகி விடவில்லை என்பதே உண்மை. ஆனால், தற்போதைய சூழலில் இது போன்ற மோசடி வலையில் சிக்கினால் சிரமப்படப்போவது நாம்தான். எனவே, ஒவ்வொருவரும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கே.ஒய்.சி தகவல்களைக் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் இ-வாலெட்களும் கேட்கின்றன. அதனால் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு, சரியான முறையில்தான் இந்தத் தகவல்களைத் தருகிறோமோ என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்.

எவற்றையெல்லாம் வங்கிகள் நம்மிடம் கேட்கலாம், கேட்கக்கூடாது என்ற புரிந்துணர்வு நமக்கு வேண்டும். நிஜ உலகிலோ, டிஜிட்டல் உலகிலோ பின் நம்பர், ஒ.டி.பி (OTP) போன்ற விஷயங்கள் நம்மைத் தாண்டி வெளியில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ட கண்ட ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்யக்கூடாது, பதிவிறக்கும் ஆப்களுக்கு என்னென்ன அனுமதிகள் தருகிறோம் என்பதைத் தெளிவாக ஆராய வேண்டும்’’ என்கிறார் பிரசன்னா.

வள்ளுவர் சொல்வதுபோல, டிஜிட்டல் உலகிலும் ‘மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு’ என்பதை உணராமல் செயல்படுபவர்கள், பெரிய விலை கொடுத்துத்தான் பாடங்களைக் கற்க வேண்டும்!