Published:Updated:

இண்டு இடுக்குலதான் வாழுறோம்! - மலையுச்சியிலிருந்து ஓர் அவலக்குரல்...

வயதானவர்கள் சிலரோ மனப்பிறழ்வு ஏற்பட்டதுபோல குடிசைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். இவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவிகளும் கிடைப்பதில்லை

பிரீமியம் ஸ்டோரி

கரடுமுரடான மண்சாலையில் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது அந்தச் சிறு குன்று. கண்ணுக்கு எட்டியவரை மனித சஞ்சாரம் இல்லை. அதற்கு மேல் செல்லப் பாதையில்லை. ஆபத்தான சரிவுகளில் கையைக் காலை ஊன்றி, மெதுவாக ஊர்ந்தும் தவழ்ந்தும் சென்றால் வருகிறது அந்தச் சிறு குடியிருப்பு. மன்னிக்கவும், அதைக் குடியிருப்பு என்று சொல்ல முடியாது... குடியிருக்கவே முடியாத இடம் என்று வேண்டுமானால் சொல்லலாம். புயல் காற்று பிய்த்துப்போட்டதுபோலக் கிடக்கும் சரிந்த கூரை இடுக்குகளில் வசிக்கிறார்கள் பளியர் மற்றும் மலசர் பழங்குடியின மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைத்தொடர் களை ஒட்டியுள்ள ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மண்திட்டுப் பகுதிதான் இது. இந்தப் பகுதி ஓர் உதாரணம் மட்டுமே... இதே பகுதியில் புளியம்பட்டி, மஞ்சனூத்து மலை - பொந்துப்புளி ஆகிய பகுதிகளிலும் இதே நிலைமைதான். `பழங்குடியினர் காடு, மலைகளில்தானே வாழ்வார்கள்... இதிலென்ன அவலம்?’ என்று அடிப்படையாக ஒரு கேள்வி எழலாம். ஆம், ஒருகாலத்தில் அவர்கள் தங்களது ஆதிக்காடு களிலும் மலைகளிலும்தான் வாழ்ந்தார்கள்... அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லாமும் இருந்தன. காடு, மலைகளைப் பாதுகாத்ததும் அவர்களே. ஆனால், இப்போது அவர்கள் வசிப்பது அவர்கள் வாழ்ந்த காடோ மலையோ அல்ல... வாழ்விடம் பறிக்கப்பட்டு, செல்லுமிடமெல்லாம் விரட்டப்பட்டு கடைசியாக வந்து சேர்ந்த இடம்!

இண்டு இடுக்குலதான் வாழுறோம்! - மலையுச்சியிலிருந்து ஓர் அவலக்குரல்...

“எங்க வீடே இதுதாங்க”

இவற்றையெல்லாம் அசைபோட்டு முடிப்பதற்குள் அவர்களின் இருப்பிடத்தை அடைந்திருந்தோம். ஆணும் பெண்ணுமாக இருவர் கையில் சிறு அரிவாளோடு மலையுச்சி ஏறக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். நம்மைப் பார்த்ததும் இனம் புரியாத அச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. “சீமாரு வெட்டக் கிளம்புறோங்க... அதிகாரிங்களா சார் நீங்க?” என்றார்கள் தயக்கத்துடன். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?” என்று கேட்டால், “கொரோனா அது இதுன்னு சொல்றாங்க... அதுபத்தி எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்க” என்கிறார்கள் வெள்ளந்தியாக. அந்தப் பகுதியைச் சேர்ந்த வனராஜ் குரலில் விரக்தி தெறிக்கிறது... “நீங்க எத்தனை பேரு வந்து பார்த்துட்டுப் போனாலும் எங்க நிலைமை மாறுமான்னு தெரியலை. நீங்க இந்த கரட்டு மேல ஏறி வர்றப்ப எத்தனை இடத்துல சறுக்கி விழுந்திருப்பீங்க... அந்தப் பாதையை கொஞ்சம் சீரமைச்சுக் கொடுங்கன்னு அதிகாரிங்ககிட்ட பலமுறை சொல்லி சலிச்சு போயிட்டோம். ஆத்திர அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போகவோ, மளிகைச் சாமானம் வாங்கிட்டு வரவோ முடியலை. குழந்தைங்க விழுந்து கையைக் காலை உடைச்சுக்கிறாங்க” என்றார் சலிப்பாக. சற்று தூரத்தில் மேலிருந்த பகுதியிலும் சில குடும்பங்கள் வசிக்கின்றன. கிழிந்த பிளாஸ்டிக் கூரை போர்த்திருந்த ஓர் சிக்கலான இடுக்குக்குள்ளிருந்து வெளியே வந்தார் அந்தப் பெண்மணி. உடைந்து கைவிடப்பட்ட குடிசையிலிருந்து பொருள்களை எடுக்கப் போயிருப்பாரோ என்றெண்ணி, “உங்க வீடு எங்கம்மா இருக்குது?” என்று கேட்டோம்.

இண்டு இடுக்குலதான் வாழுறோம்! - மலையுச்சியிலிருந்து ஓர் அவலக்குரல்...

மலங்க மலங்க விழித்தவர், “அண்ணா எங்க வீடே இதுதாங்க. இத்துனூண்டு பொத்தல் குடிசையிலதான் நாங்க ஏழு பேர் வசிக்கிறோம். மழை, வெயில் எதுன்னாலும் தலைக்கு மேல பிளாஸ்டிக் கூரையை இழுத்துவிட்டுக்கிட்டு உக்கார்ந்திருப்போம். ராத்திரி மழை பெஞ்சா தூங்க முடியாது; மழை நின்னதும்தான் தூங்குவோம். நாங்க மட்டுமில்லை... பலரும் இங்க இண்டு இடுக்குலதான் வசிக்குறாங்க. எங்க பகுதியில இப்படி 40 குடும்பங்கள் இருக்கு. ரெண்டு வருஷம் முன்னாடி அரசு சார்பில் தலா 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபா மதிப்புள்ள 11 பசுமை வீடுங்க கட்டிக் கொடுத்தாங்க. ஆனா, ஒரு வீட்டைக்கூட உருப்படியா கட்டி முடிக்காம விட்டுட்டுப் போயிட்டாங்க. சூரிய மின்சாரம் வரும்னு சொன்னாங்க. அதுவும் வரலை. இருட்டுலதான் வாழுறோம்” என்றார் தவிப்புடன்!

“வயித்துப்பசிக்கு வழியில்லை!”

அங்கு விளையாடிக்கொண்டிருந்த பெரும்பாலான சிறுவர்கள், குழந்தைகளின் கை, கால்களில் சிரங்கு, புண்கள் காணப்பட்டன. வயதானவர்கள் சிலரோ மனப்பிறழ்வு ஏற்பட்டதுபோல குடிசைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். இவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவிகளும் கிடைப்பதில்லை. “சாப்பிட்டியா?” என்று ஒரு சிறுவனிடம் கேட்டால், பதில் சொல்லத் தெரியவில்லை. அவனைவிட வயதில் பெரியவன் ஒருவன், “காலையில நீச்சத்தண்ணி குடிச்சோம். ராத்திரி ஏழு மணிக்கு அம்மா, அப்பா மலை மேலிருந்து வந்துதான் சுடுகஞ்சி காய்ச்சிக் கொடுப்பாங்க” என்றவனின் முகத்தின் பசியின் ரேகைகள் பதிந்திருந்தன.

வனராஜ், தனராஜ், விசாகன்
வனராஜ், தனராஜ், விசாகன்

ஒரு பாறை உச்சியில் இரு கம்புகளை சாய்வாக அமைத்து, குடிலைப் போன்ற அமைப்பில் படுத்திருந்தார் மாரியப்பன். அவரிடம், ``இந்தச் சிறுவர்கள் பள்ளிக்கு போவதில்லையா?’’ என்று கேட்டோம். “ஏதோ ரெண்டு மூணு பேருதான் கீழேயிருக்குற புதுமடைப் பகுதி தொடக்கப் பள்ளிக்குப் போறாங்க. பக்கத்துல இருந்த அங்கன்வாடி மையத்தோட கூரை இடிஞ்சு விழுந்துருச்சு. அங்கேயும் யாரும் போறதில்லை. உடம்புக்கு முடியலைன்னா ஆறு கிலோமீட்டர் தாண்டி ஆண்டிபட்டிக்கு, இல்லைன்னா பத்து கிலோ மீட்டர் தாண்டி பாப்பம்பட்டிக்குத்தான் போகணும். அதுவும் நாலு கிலோ மீட்டர் நடந்துபோனாத்தான் அங்கே போக பஸ்ஸோ, வண்டியோ பிடிக்க முடியும். எங்கள்ல சிலருக்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு இருக்குது. ரேஷன்ல அரிசி, பருப்பு வாங்கணும்னாலும் ஆறு கிலோமீட்டர் நடந்துதான் போகணும்” என்றவரிடம், “வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டோம்.

“அதோ பாருங்க... அந்த மலையுச்சிக்குப் போயி ஈச்சம்புல்லு வெட்டி சீமாரு தயாரிப்போம். ஒரு முடி வெட்டினா அறுபது ரூபா கிடைக்கும். சிலர் ஏறி இறங்கச் சிரமப்பட்டுக்கிட்டு, மலையுச்சியிலேயே குடிலைப் போட்டு தங்கியிருக்காங்க. அவங்கதான் புல்லை வெட்டி, காயவெச்சு கழுதையில ஏத்திக்கிட்டு வருவாங்க. சில சமயத்துல மலைத்தேன், மூலிகை, ஈச்சம்புல், மலை நெல்லிகளை சேகரிச்சும் கீழே கொண்டுபோய் விற்பனை செய்வோம்” என்றார்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழங்குடியினருக்கான பிரச்னைகளை அரசுத் தரப்பிடம் கொண்டு சேர்த்துவருகிறார் பழங்குடியினச் செயற்பாட்டாளர் தனராஜ். “மண்திட்டு, புளியம்பட்டி, சண்முகம்பாறை, மஞ்சனூத்து மலை-பொந்துப்புளி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பளியர்கள், மலசர் பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ்கள் கொடுத்து, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இவர்களில் பலர் வாழ்வாதாரம் இல்லாமல் கீழே இருக்கும் சில ஊர்களில் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து மீட்க வேண்டும். இவர்களுக்கு அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தரமற்ற முறையிலும், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமலும் இருக்கின்றன. அவற்றைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும். குடிநீர், நல்ல உணவு இவை இல்லாததால்தான், இங்குள்ள சிறுவர்கள், குழந்தைகள், வயதானவர்களுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பலரும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்து, நல்ல உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டும். அதேபோல வன உரிமைச்சட்டம் 2006-ன்படி குடியிருப்பு, விவசாயி நிலம் மற்றும் காடுகள் மீதான பாரம்பர்ய வன உரிமைகளை அச்சமின்றி, சுதந்திரமாக இவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இண்டு இடுக்குலதான் வாழுறோம்! - மலையுச்சியிலிருந்து ஓர் அவலக்குரல்...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் இவர்களின் பிரச்னைகளைக் கொண்டு சென்றோம். ஊராட்சிகளின் பெயர், பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளை குறித்துவைத்துக் கொண்டவர், “விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அந்தப் பகுதிகளுக்கு ஆய்வுக்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மாவட்ட வன அலுவலர் பிரபுவிடம் பேசியபோது, “அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து ஊராட்சி நிர்வாகம் வழியாக வனத்துறைக்கு மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, பழங்குடியின மக்களுக்கான வன உரிமைச் சட்டம் 2006-ன்படி அனைத்து உரிமைகளும் முறையாக கிடைக்கச் செய்வோம்” என்றார்.

காடற்றவர்கள்... இப்போது வீடற்றவர்களுமாகிவிட்டார்கள். இவர்களை உடனடியாக கவனிக்குமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு