Published:Updated:

இது அவமானங்களை உரமாக்கி அடைந்த உயரம்!

பெற்றோருடன் ரஞ்சித்
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருடன் ரஞ்சித்

நிறைய கிண்டல் பண்ணுவாங்க. ஆரம்பத்துல அது எனக்குக் கஷ்டமாதான் இருந்துச்சு. என் குறைபாட்டுக்கு நான் காரணம் கிடையாது.

இது அவமானங்களை உரமாக்கி அடைந்த உயரம்!

நிறைய கிண்டல் பண்ணுவாங்க. ஆரம்பத்துல அது எனக்குக் கஷ்டமாதான் இருந்துச்சு. என் குறைபாட்டுக்கு நான் காரணம் கிடையாது.

Published:Updated:
பெற்றோருடன் ரஞ்சித்
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருடன் ரஞ்சித்

“மாற்றுத்திறனாளிங்கறதால காலேஜ் பிளேஸ்மேன்ட்ல என்னை எந்தக் கம்பெனியும் எடுக்கல. அப்பதான் யு.பி.எஸ்.சி-ல மாற்றுத்திறனாளிங்களுக்குத் தனிப்பிரிவு இருக்குன்னு கேள்விப்பட்டேன். சமூகத்துல மாற்றம் ஏற்படுத்த முடிவு பண்ணினேன்” - ரஞ்சித்தின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அவமானத்தின் வலியும், அதை உடைத்தெறிந்த வெற்றியின் மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்படுகின்றன.

குழந்தைப் பருவம் எல்லோருக்கும் அலாதியானதுதான். ரஞ்சித்துக்கு மட்டும் அது ரணமானது. பிறவியிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாட்டுடன் பூமியில் அடியெடுத்து வைத்தார் ரஞ்சித். அதற்காக ரஞ்சித் முடங்கிப்போகவில்லை. பெற்றோர் கொடுத்த ஊக்கத்துடன் உற்சாகமாகப் பயணித்தார். இந்தியக் குடிமைப் பணித் தேர்வை, தமிழ் வழியில் எழுதி, அதுவும் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார் ரஞ்சித்.

கோவை, காளப்பட்டிப் பகுதியில் உள்ள ரஞ்சித்தின் வீட்டுக்குச் சென்றோம். நம்மை உற்சாகமாக வரவேற்றுக் கைகுலுக்கினார். “எங்க சொந்த ஊர் ஈரோடு. எனக்கு செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு இருக்குன்னு தெரிஞ்சவுடனே என்னை நல்ல நிலைக்குக் கொண்டு வரணும்னு அம்மா அப்பா கோயம்புத்தூர் கூப்பிட்டு வந்தாங்க. ஆனா, இப்படி ஒரு குறைபாடு இருக்குன்னு எனக்கு அதிகமா தெரியல. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாருமே இப்படி ஒரு குறை இருக்கறது என் மனசுல பதியாத மாதிரி நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க. இங்க ஸ்பீச் தெரபி கொடுக்கற ஒரு ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்தாங்க. எட்டாவது வரை அந்த ஸ்பெஷல் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்பறம் நார்மல் ஸ்கூல்ல சேர்ந்தப்ப, மற்ற பசங்களோட பழக கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மாற்றுத்திறனாளிகள் உலகமே தனி. சமூகத்தோட எந்தத் தொடர்பும் இருக்காது. அவங்களுக்குள்ளயே பேசிக்குவாங்க. அதனால ஒன்பதாம் வகுப்புல இருந்துதான் எனக்கு வெளி உலகம் தெரிஞ்சுது.

இது அவமானங்களை உரமாக்கி அடைந்த உயரம்!

நிறைய கிண்டல் பண்ணுவாங்க. ஆரம்பத்துல அது எனக்குக் கஷ்டமாதான் இருந்துச்சு. என் குறைபாட்டுக்கு நான் காரணம் கிடையாது. அப்படி இருக்கறப்ப, அதுக்கு நாம கவலைப்பட்டுப் பயனில்லைன்னு என் மனநிலைய நான் மாத்திக்கிட்டேன். என்னால எந்த விஷயமும் தனியாச் செய்ய முடியும்ங்கற நம்பிக்கைய அம்மா அப்பா கொடுத்துருக்காங்க. தைரியமா பழகறதுக்காக என்னை வெளில சுத்திப் பார்த்துட்டு வரச் சொல்லுவாங்க. நான் 5-வது படிக்கறப்ப கோயம்புத்தூர்ல இருந்து பஸ்ல தனியா ஈரோடு போயிட்டு வர வெச்சாங்க. அப்ப சமூகத்துல எல்லார்கிட்டயும் எப்படிப் பேசணும், அணுகணும்கிற விஷயத்தைக் கத்துக்க முடிஞ்சுது.

ஸ்பெஷல் ஸ்கூல்ல ஸ்பீச் தெரபி, லிப் ரீடிங் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆனா, நார்மல் ஸ்கூல்ல வித்தியாசம் இருந்துச்சு. அதனால, என்னய பர்ஸ்ட் பெஞ்ச்ல உக்கார வெச்சாங்க. டீச்சர்ஸ் எல்லாரும் என்னைப் பத்தி நல்லாப் புரிஞ்சு வெச்சிருந்தாங்க. என்மேல தனிக் கவனமும் செலுத்தினாங்க. 10-வதுல 472 மார்க் எடுத்தேன். 12-வதுல 1,117 மார்க் எடுத்தேன். நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட். செவித்திறன் குறைபாடு பிரிவுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தேன். அப்ப முதல்வரா இருந்த ஜெயலலிதா மேடம் கூப்பிட்டு எனக்கு அவார்டு கொடுத்தாங்க.

பி.எஸ்.ஜி டெக்னாலஜில மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். காலேஜ் படிக்கறப்ப, கேம்பஸ் இன்டர்வியூ மூலமா ஏதாவது கம்பெனிக்குப் போயிடணும்னுதான் யோசிச்சேன். செவித்திறன் குறைபாடுன்னு தெரிஞ்சதும், எந்தக் கம்பெனியும் என்னை வேலைக்கு எடுக்கத் தயாரா இல்ல. நான் ‘எனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. நல்லா வேலை செய்வேன்’னு சொல்லிப் புரிய வைக்கப் பார்த்தேன். யாரும் நம்பத் தயாரா இல்ல. அப்பதான் உத்வேகத்தோட சமூகத்துல மாற்றம் கொண்டு வரணும்னு முடிவு பண்ணினேன்.

காலேஜ் முடிச்சுட்டு ஒரு வருஷம் ஒரு பவுண்டரி கம்பெனில வேலை பார்த்தேன். ஆனா, என்னோட எண்ண ஓட்டம் இன்ஜினீயரிங் துறைக்கு செட் ஆகல. வேலையை விட்டுட்டு கவர்மென்ட் வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு இறங்கினேன். ஒரு வருஷம் வங்கிப் பணித் தேர்வுகளுக்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அப்புறம்தான், பிரெண்ட்ஸ் மூலமா செவித்திறன் குறைபாட்டுக்கு யு.பி.எஸ்.சி-ல தனிப்பிரிவு இருக்குன்னு தெரிஞ்சுது. நம்பிக்கையோடு தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன்.

பொறந்து வளர்ந்து, காலேஜ் முடிக்கற வரை அம்மா அப்பா கூடவேதான் இருந்திருக்கேன். முதல்முறையா என் கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து விலகி இதுக்காக சென்னை போனேன். எட்டாவது வரை நான் தமிழ்வழிக்கல்விதான் படிச்சேன். அதுக்கப்புறம்தான் இங்கிலீஷ் படிக்க ஆரம்பிச்சேன். யு.பி.எஸ்.சி-ல தமிழ்வழில எழுதினா நிறைய மார்க் வாங்கலாம்னு தோணுச்சு. பேஸிக் விஷயங்கள்தான் தமிழ்ல இருக்கும். மற்ற விஷயங்கள் இங்கிலீஷ்லதான் இருக்கும். லைப்ரரில இருந்து நிறைய படிப்பேன். பிரெண்ட்ஸ் ஹெல்ப் பண்ணுனாங்க. ஒரு நாளுக்கு சராசரியா 14 மணி நேரம் வரை படிப்பேன். நான் படிச்ச கோச்சிங் கிளாஸ்ல எனக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ரிசல்ட்டுக்கு ரெண்டு நாளுக்கு முன்ன வரை பதற்றமா இருந்துச்சு. ரிசல்ட் வந்தோன இதுவரை பட்ட கஷ்டம் எல்லாமே தூள் தூளா உடைஞ்சு போச்சு” என்று பேசிக்கொண்டிருக்கும்போது வந்த கண்ணீரை ரஞ்சித்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரஞ்சித்தைப் பார்த்து அவரது தாய் அமிர்தவல்லிக்கும் கண்ணீர் வந்துவிட்டது.

சற்று இடைவெளி விட்டுப் பேசிய ரஞ்சித், “என் அப்பா, அம்மா நிறைய அவமானப்பட்ருக்காங்க. ஊர்ல எல்லாரும் கண்டபடி பேசியிருக்காங்க. கோயம்புத்தூரைப் பத்தி எந்த அறிமுகமும் இல்லாட்டியும்கூட, எனக்காக இங்க வந்து நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க. கல்விதான் எல்லாத்துக்கும் அடிப்படை. நான் இவ்வளவு தூரம் வந்ததுக்கு அதுதான் காரணம். நான் சர்வீஸுக்கு வர்றப்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்கிறார் உறுதியுடன்.

ரஞ்சித்தைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் அவரின் தாய் அமிர்தவல்லி. “சமுதாயத்துல இவன எப்படி ஆள் ஆக்கறதுன்னு நிறைய கவலைப்பட்டேன். இதுக்கு நடுவுல, ‘நீ என்ன பாவம் செஞ்சியோ தெரியல. உனக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்துருக்கு’ன்னு நேரடியா பேசிக் காயப்படுத்தினாங்க. ரொம்ப உடைஞ்சிட்டோம். கணவர் தர்மலிங்கம் ஈரோடு ஆவின்ல வேலை பார்த்துட்டு இருந்தார். ஈரோட்ல நல்ல ஸ்கூல் இல்லாததால கோவை வந்தோம். இங்க எங்களுக்கு சொந்தம்னு சொல்ல யாரும் இல்ல. எங்க போனாலும் ரஞ்சித் கத்தி அழுதுட்டே இருப்பான். நானும் அழாத நாள் இல்ல. ஆனா, எப்படியாவது ரஞ்சித்த சாதிக்க வெச்சுட்டுதான் திருப்பி ஈரோடு போகணும்னு வெறி குறையல. ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்தோம். பொதுவா செவித்திறன் குறைபாடு இருக்கறவங்க பேசவும் முடியாது. ரஞ்சித்துக்கும் ஆரம்பத்துல பேச்சு வரல. 5 வயசுலதான் ‘ஆப்பிள்’னு முதல் வார்த்தை பேசினான். அதுதான் எங்களுக்குக் கிடைச்ச முதல் நம்பிக்கை. நான் ஏற்கெனவே நார்மல் பி.எட் முடிச்சிருந்தேன். நானும் அங்க இருந்தா பையனுக்கு உதவியா இருக்கும்னு ஸ்பெஷல் பி.எட் முடிச்சேன். அதே ஸ்கூல்ல சேர்ந்தேன். டைரி எழுதற பழக்கத்தைக் கத்துக் கொடுத்தேன். அது வார்த்தைகளை நல்லா கோர்வையா பேச பெரிய உதவி பண்ணுச்சு.

பெற்றோருடன் ரஞ்சித்
பெற்றோருடன் ரஞ்சித்

டி.என்.பிஸ்.சி பர்ஸ்ட் குரூப்ல 200-க்கு 174 மார்க் எடுத்திருந்தான். செவித்திறன் குறைபாடுனால மெயின்ஸ் தேர்வுக்குத் தகுதி பெறல முடியல. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, பேராசிரியர் பாரதி, சந்தோஷ் சபரி இன்ஸ்டிட்யூட்னு எல்லாரும் ரஞ்சித்துக்கு நல்லா சப்போர்ட் பண்ணுனாங்க. ரஞ்சித் மனசளவுல ரொம்ப பலமானவன். அந்த மாதிரி ஒரு நிலைல இருந்து, இப்படி ஒரு நிலைக்கு யாரும் வந்தது இல்ல. பெருமையா இருக்கு. என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்த ஸ்கூலுக்கு இப்ப நான்தான் ஹெச்.எம். நிறைய அரசுப் பணி வாய்ப்பு வந்துச்சு. ஆனா, நமக்குக் கொடுத்ததுக்கு சமூகத்துக்கு நாம திருப்பிக் கொடுக்கணும். இன்னும் நிறைய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்னுதான் அங்கயே இருக்கேன்” என்று கண்கள் பனிக்கப் பேசினார்.

ரஞ்சித்துக்குப் பயிற்சியளித்த சபரிநாதன், “எங்களுக்கிருந்த சவால், 50 மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது நாங்கள் ரஞ்சித்தை மட்டுமே பார்த்து நடத்தவேண்டும். எங்கள் உதட்டசைவை வைத்தே நோட்ஸ் எடுப்பார். அதனால் முதல் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கிவி்டுவோம். அவர் எழுதிய பிறகே அடுத்த பாடத்துக்குச் செல்வோம். ரஞ்சித்தின் வெற்றி மிகுந்த மனநிறைவைத் தருகிறது” என்கிறார் நிறைவுடன்.

ரஞ்சித்தின் தந்தை தர்மலிங்கம், “ரஞ்சித் ஏழு மாசக் குழந்தையா இருந்தப்ப இப்படி ஒரு குறைபாடு இருக்குன்னு நான்தான் முதல்ல கண்டுபிடிச்சேன். சத்தம் போட்டுக் கூப்பிட்டாலோ, கைதட்டினாலோ அவன் பார்க்கல. அப்பதான் இவனுக்கு ஏதோ பிரச்னை இருக்குன்னு சந்தேகம் வந்துச்சு. சென்னை, கோவைன்னு எல்லா இடத்துக்கும் போய் சிகிச்சை பார்த்தோம். ரஞ்சித்துக்காகத்தான் எல்லாத்தையும் மாத்திக்கிட்டோம். இப்ப நாங்க நினைச்சதவிடப் பெருசா சாதிச்சுட்டான்.

இதுமாதிரி குறை இருந்தா முதல்ல பெற்றோர், ‘என் குழந்தைக்குக் காது கேட்காது’ன்னு மனசார ஒத்துக்கணும். அந்த மனநிலை இருந்தாலே குழந்தைய ஓரளவுக்கு முன்னேற வைக்கற பக்குவம் வந்துடும். பல வீடுகள்ல மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வீட்லயே விட்டுட்டு வெளியே போய்டுவாங்க. ரஞ்சித்த நாங்க எல்லா இடத்துக்கும் கூப்பிட்டுப் போய் உண்மைய சொன்னோம். அப்ப எங்களை கேவலமா பேசினவங்க எல்லாம், இப்ப ரஞ்சித்தோட வெற்றிய பார்த்து வெட்கப்படணும். நாங்க பட்ட கஷ்டத்துக்கு கடவுள் பலன் கொடுத்துட்டார். அதுபோதும்” என்றார் நிறைவான குரலில்.