Published:Updated:

அவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள்

அமைச்சர் சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் சரோஜா

இவர்கள் கொரோனா காலத்தில் வாழ்வா தாரம் இழந்துள்ளதுடன், பணிக்குச் செல்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

செல்வந்தர்களையும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்களையும்கூட விட்டுவைக்கவில்லை கொரோனா... சாமானியர்களெல்லாம் எம்மாத்திரம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றி நாம் யோசித்திருப்போமா? ரயிலில் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தோர், பிளாட்பாரங்களில் பூ விற்றுக் கொண்டிருந்தோர் என தினமும் நாம் எத்தனையோ மாற்றுத்திறனாளிகளைக் கடந்திருப்போம். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்கள்?

தமிழகத்தில் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் அரசின் அடையாள அட்டை யைப் பெற்றுள்ளனர். இவர்கள் கொரோனா காலத்தில் வாழ்வா தாரம் இழந்துள்ளதுடன், பணிக்குச் செல்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பேரிடரை எதிர்கொள்ள அவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து பெரிய அளவில் எந்த உதவியும் செய்யப் படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ராஜா
ராஜா

இது குறித்து நம்மிடம் பேசிய ‘டிசம்பர் 3’ அமைப்பின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் தீபக், ‘‘இந்திய மக்கள் தொகையில் 2.21 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள். கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக மத்திய நிதியமைச்சர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் எங்களுக்கு உதவும் வகையில் ஓர் அறிவிப்புக்கூட இடம்பெறவில்லை. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் ஐந்து சதவிகிதத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என்கிறது சட்டம். அதையும் மாநில அரசு நிறைவேற்றவில்லை.

கடும் ஊனமுற்றோருக்குப் பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு, ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான உதவித் தொகையையும் முன் கூட்டியே வழங்கியுள்ளனர். ஊரடங்கு பாதிப்பைச் சமாளிக்க மத்திய அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதையும் மூன்று தவணை களில் பிரித்துத் தருவார் களாம். இந்தத் தொகையும்கூட வெகு சிலருக்குத்தான் கிடைத்திருக்கிறது.

தீபக்
தீபக்

‘மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரே அத்துறையின் ஆணைய ராகவும் செயல்படுவார்’ என்கிறது 2019-ல் வெளியிடப் பட்ட தமிழக அரசின் அரசாணை. தனியாக ஆணையர் நியமிக்கப் பட்டிருந்தால் அவரால் தற்போதைய கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க முடியும்’’ என்கிறார்.

அடுத்ததாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாவிடம் பேசினோம். ‘‘ `மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வந்து ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்’ எனக் கடந்த மாதம் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, அடையாள அட்டை வைத்திருக்கும் தமிழகத்திலுள்ள எல்லா மாற்றுத்திறனாளி களுக்கும் இந்த உதவித்தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன.

எங்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப் பட்ட ‘டோல் ஃப்ரீ’ எண்ணுக்கு அழைத்தால் உரிய விளக்கம் கிடைப்பதில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதியே டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து சோதனை செய்தார். இணைப்பு கிடைக்காத நிலையில், கண்டனத்தைப் பதிவுசெய்தார். அதன் பிறகுதான் இந்தச் சேவை ஓரளவுக்கு செயல்படுகிறது.

அமைச்சர் சரோஜா
அமைச்சர் சரோஜா

சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாதான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் கூடுதலாக கவனித்துக்கொள்கிறார். எங்கள் துறைக்கு அமைச்சர் முக்கியத்துவம் கொடுப்பதாகவே தெரியவில்லை. கொரோனா பேரிடரில் பல்வேறு துறை அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். ஆனால், அமைச்சர் சரோஜா மீடியாவைச் சந்திப்பதே இல்லை. அவரிடமே பேசலாம் என்று அவரது எண்ணுக்கு அழைத்தால் ‘அவுட்ஆஃப் ரீச்’-லேயே இருக்கிறார். அமைச்சரின் அணுகுமுறை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார் ஆதங்கத்துடன்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் சரோஜாவிடம் விளக்கம் கேட்க, அவரது தொலைபேசி எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவேயில்லை. அவரது மின்னஞ்சல் முகவரியான mlarasipuram@tn.gov.in -க்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அதற்கும் பதில் இல்லை.

‘டோல் ஃப்ரீ’ எண்ணுக்கு அழைத்துப் பார்த்தோம். உடனே அழைப்பை ஏற்று விளக்கம் கொடுத்தனர்.

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸிடம் பேசினோம். ‘‘ஒரே நேரத்தில் பல அழைப்புகள் வந்திருக்கும்பட்சத்தில்தான் சிலருக்கு ‘டோல் ஃப்ரீ’ எண்ணுக்கு இணைப்பு கிடைத்திருக்காது. நீதிபதி முயன்றபோது தொடர்பு கிடைக்காததற்கும் அதுதான் காரணம். இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். ‘டோல் ஃப்ரீ’ எண் சேவை சிறப்பாகவே செயல்படுகிறது. கொரோனா சூழலில் அனைத்து தரப்பு மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏராளமான உதவிகள் செய்திருக்கிறோம். 500-க்கும் அதிகமான சிறப்புக் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சையளிக்க தெரபி கிட்டுகளை வழங்கியிருக்கிறோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் கொரோனா சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பான உதவிகள் செய்யப்படுகின்றன. உதவித்தொகை கிடைப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தாலோ, வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ தாராளமாக டோல் ஃப்ரீ எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்’’ என்றார்.

மற்றவர்களைவிட சிறப்பு கவனம் தேவைப்படுபவர்கள் மாற்றுத்திறனாளிகள். இந்த கொரோனா காலத்தில் அவர்களின் குறைகளைத் தீர்த்துவைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்!