கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மற்றும் அரசுக் கல்வி விடுதிகளில் புதிய வகை உணவுப் பட்டியலை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை, பல்வேறு சர்ச்சைகளுக்குச் சலங்கை கட்டியிருக்கிறது.
‘பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஏன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.... இதுதான் ‘திராவிட மாடல்’ சமூகநீதியா?’ என்ற கோபக்குரல் ஒருபக்கமும், ‘புதிதாகத் திட்டத்தை அறிவித்தவர்கள், அதற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்யவில்லையே...’ என்ற குமுறல் மறுபக்கமுமாக எதிரொலிக்கின்றன.


தமிழ்நாட்டிலுள்ள அரசு மாணவர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவாக இட்லி, பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை உள்ளிட்ட உணவுகள் மாறி மாறி வழங்கப்பட்டுவருகின்றன. தினம்தோறும் மதியம், இரவு வேளைகளில் அரிசி சாதம் வழங்கப்படுகிறது. மேலும் வாரம் ஒரு வேளை இறைச்சி, வாரத்தில் நான்கு வேளை முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்படுகின்றன. இதற்கான செலவுத் தொகையாக ஒரு நபரின் ஒரு வேளை உணவுக்குத் தலா 11 ரூபாய் வீதம் மாதம் 1,000 ரூபாயும், கல்லூரி விடுதிகளுக்கு நபர் ஒருவருக்கு, ஒரு வேளை உணவுக்கு ரூ.12.5 வீதம் மாதம் 1,100 ரூபாயும் தமிழக அரசால் விடுதிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
உணவுப் பாகுபாடு!
இந்த நிலையில்தான், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 3-6-2022 முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபைச் சார்ந்த மாணவ-மாணவியர் தங்கி கல்வி பயிலும் அரசு விடுதிகளில் புதிய உணவுப் பட்டியலை நடைமுறைப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இதில், மாணவ-மாணவியருக்குக் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சத்தான பல்வேறு வகையான உணவுகளை வழங்குமாறு, ‘நீண்ண்ண்ண்ட’தொரு பட்டியலையும் அட்டவணைப்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து நம்மிடம் பேசிய விடுதிக் காப்பாளர்கள் சிலர், ‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான விடுதிகளில், புதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நல விடுதிகளிலும் இதே போன்ற உணவுப் பட்டியலை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்காதது ஏன் என்று தெரியவில்லை. பெரும்பாலான இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் விடுதியும், ஆதிதிராவிடர் விடுதியும் அருகருகேதான் அமைந்துள்ளன. இந்தப் பாகுபாடு மாணவர்களை மனதளவில் பாதிக்கும்.
அடுத்து, ஏற்கெனவே அரசு விடுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சமையலர் இல்லாததால் சரியான உணவு இல்லை. காவலாளிகள் இல்லாததால் உரிய பாதுகாப்பு இல்லை என்பது போன்ற சூழல்களால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த நிலையில் புதிய உணவுப் பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்கான போதிய நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யாமல், ‘நடைமுறைப்படுத்துங்கள்... இல்லையென்றால் வேலையைவிட்டுச் செல்லுங்கள்’ என அதிகாரிகள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்... என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்று குமுறினர்.


கூடுதல் நிதி ஒதுக்கீடு!
‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை விடுதிக் காப்பாளர் மற்றும் ஆசிரியர் சங்க’த்தின் நிறுவனத் தலைவர் சகாதேவன், ‘‘அரசுக் கல்வி விடுதிகளில் 50 சதவிகிதத்துக்கும் மேல் சமையலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிறைய விடுதிகளில் இரவு காவலாளி பணியிடமும் நிரப்பப்படவில்லை. எனவே, சமையலர்களே காவலாளியாகவும், காவலாளியே சமையலராகவும் கூடுதல் பணி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், பழைய விலைவாசியின்படி நிர்ணயிக்கப்பட்ட உணவுக் கட்டணத்தில் புதிய உணவு வகைகளைத் தயாரித்து வழங்குவது சாத்தியமில்லை. புதிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான மளிகைப் பொருள்கள், காஸ் விலை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர் ஒருவருக்கு எந்த அளவில் உணவு வழங்க வேண்டும் என்பதையும் கணக்கிட்டு பட்டியல் வழங்கவில்லை. எனவே, பள்ளி மாணவருக்கு 500 ரூபாய், கல்லூரி மாணவருக்கு 700 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கிடம் பேசினோம். ‘‘Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition பரிந்துரையின்படி உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த தொகைக்குள் என்னென்ன உணவு வகைகள் தயாரிக்க முடியும் எனக் கோரியிருந்தோம். அதனடிப்படையில்தான் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய பட்டியலில் இருக்கும் உணவுகளைச் சமைப்பதற்கு காஸ் தேவை அதிகம் இருக்கும் என்பதை ஏற்கிறேன். அதற்கு விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

ஆதிதிராவிடர் அரசு விடுதிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என்றக் கேள்வியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கேட்டபோது, ‘‘பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய உணவு வகைத்திட்டம் பரீட்சார்த்த அடிப்படையிலானதுதான். எனவே, விரைவிலேயே இந்தத் திட்டம் ஆதிதிராவிடர் நல அரசு விடுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இது குறித்து ஏற்கெனவே அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசித்திருக்கிறோம்’’ என்றார்.