சமூகம்
Published:Updated:

மேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன?

மேற்குத் தொடர்ச்சி மலை
பிரீமியம் ஸ்டோரி
News
மேற்குத் தொடர்ச்சி மலை

`ஆழமாகவும் கவனமாகவும் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வல்லுநர் குழு இந்த முடிவுக்கு வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை, சர்வதேச அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதன் 64 சதவிகித நிலப்பரப்பு, தீவிர சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை மூன்று தொகுதிகளாகப் பிரித்துப் பாதுகாத்தே தீரவேண்டும். அங்கு இருக்கும் குவாரிகளையும் கட்டுமானங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆபத்தான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.’

கடந்த 2011-ம் ஆண்டு, சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் சமர்ப்பித்த அறிக்கையின் வரிகள் இவை. ஆனால், இந்த முடிவை மத்திய அரசு மற்றும் மேற்கு மலைத்தொடரில் அமைந்திருக்கும் ஒன்பது மாநிலங்களும் நிராகரித்தன. ‘ஆய்வறிக்கை, வளர்ச்சிக்கு எதிரானது; நடைமுறைக்குச் சாத்தியமற்றது’ என்றன அரசுகள். அதற்கான விளைவுகளே 2018-ம் ஆண்டின் கேரள வெள்ளம். கர்நாடகத்தில் சில இடங்களில் அப்போது வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகித் தவித்துக்கொண்டிருந்த ஆகஸ்ட் 2018-ல், கர்நாடக அரசு இந்த அறிக்கையை நிராகரித்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘வளர்ச்சி’! கடும் விளைவுகள் தொடர்கின்றன... இதோ 2019-லும் வெள்ள அழிவுகள் தொடர்கின்றன.

சூழலியல் அகதிகளான மக்கள்!

காலநிலை அவசரத்தை, உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால், நம் அரசு இன்னமும் அதன் வீரியத்தை முழுமையாக உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், குஜராத், கோவா என்று மேற்குத் தொடர்ச்சி மலை நீளும் மாநிலங்கள் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் தவிக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள், சூழலியல் அகதிகளாக மாறியுள்ளனர்.

ஆகஸ்ட் 7-ம் தேதி, நீலகிரியில் 820 மில்லிமீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்த நாளே 911 மில்லிமீட்டர் மழை பதிவானது. நீலகிரி மாவட்டம் அதன் வரலாற்றிலேயே கண்டிராத மழை இது. ஐம்பது கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. தமிழகத்தின் ‘தண்ணீர்த் தொட்டி’யான நீலகிரிக்கு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் 368 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. கூடலூரில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 1,562 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பலியானோரின் எண்ணிக்கை 200-யைத் தொட்டுவிட்டது. கேரளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 95 பேர் பலியாகியுள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் காணவில்லை. இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர், இருப்பிடம் மற்றும் உடைமைகளை இழந்து அகதிகளாக மாறியுள்ளனர். வயநாடும் கர்நாடகத்தின் குடகு மாவட்டமும் கடுமையான நிலச்சரிவுக்குள்ளாகியுள்ளன. கர்நாடகத்தில், பயிர் மற்றும் பொருள் சேதங்களால் 6,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குடகுமலையில் உள்ள காபித் தோட்டங்களையும், பல கிராமங்களையும் நிலச்சரிவு ஒட்டுமொத்தமாக மூடிவிட்டது. மக்கள் உயிரோடு புதைக்கப்பட்டுவிட்டார்கள்.

எங்கெல்லாம் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் குவாரிகள் அமைந்திருக்கின்றன. இது தற்செயல் அன்று. கேரளத்தில் மட்டுமே 5,924 குவாரிகள் உள்ளன. குறிப்பாக, மாதவ் காட்கில் அறிக்கையில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மட்டுமே 3,332 குவாரிகள் இருக்கின்றன. அதாவது, 56 சதவிகிதக் குவாரிகள், அந்த மலைத்தொடரின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளுக்குள் உள்ளன. இவற்றின் உரிமங்களைத்தான் ரத்துசெய்ய பரிந்துரைத்தது அந்த அறிக்கை. ஆனால் செய்யவில்லை. அறிக்கை குறிப்பிட்டதுபோலவே 11 நிலச்சரிவுகளில் 10 நிலச்சரிவுகள், குவாரிகள் அமைந்துள்ள பகுதிகளில்தான் நிகழ்ந்துள்ளன.

மாதவ் காட்கில் அறிக்கையை நிராகரித்துவிட்டு, கஸ்தூரிரங்கன் குழுவை நியமித்தது மத்திய அரசு. அந்தக் குழு, வளர்ச்சிப் பணிகளுக்குத் தடைவிதிக்கக் கோரிய 64 சதவிகிதத்தை, 37 சதவிகிதமாகக் குறைத்தது. அதைக்கூட மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கைப்படி பார்த்தாலும்கூட நிலச்சரிவு ஏற்பட்ட 11 இடங்களில் ஐந்து இடங்களுக்கு அருகே குவாரிகள் அமைந்துள்ளன. மலப்புரம் மாவட்டத்தில் கவலப்பாறா என்ற பகுதியில் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவுக்கு உள்ளேயே 27 குவாரிகள் உள்ளன. அங்கு இப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் புதைத்துவிட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன?

இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், “இனி, குறைந்த காலத்திலேயே அதிதீவிர மழை பெய்யும். வறட்சியும் அப்படியே. நீலகிரியில் ஒரே நாளில் 911 மில்லிமீட்டர் பெய்துள்ளது. அதாவது, மூன்று மாதத்துக்கான மழை ஒரு வாரத்தில் பெய்துள்ளது. இதற்கு முன் இந்த அளவுக்குப் பெய்ததற்கான தரவுகள் இல்லை. காலநிலை மாற்றத்தின் விளைவு இது. மேற்குத் தொடர்ச்சி மலை, உயிரினங்கள் தோன்றுவதற்கும் முன்னரே தோன்றியது.

கடினமான பாறை களைக்கொண்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன், அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டதில்லை. ஆனால், இப்போது அது வாடிக்கையாகிவிட்டது. சோலைக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்தது தான் அதற்குக் காரணம். காபி உட்பட அந்நியப் பயிர்கள் அங்கு விளைவிக்கப்பட்டு, மலையின் இயல்பு சிதைக்கப்பட்டுவிட்டது. குவாரி, சுரங்கம், அணைகள், நீர்மின் திட்டங்கள் என்று சீரழிவுகள் தொடர்கின்றன. இவையெல்லாம் மண்ணை இலகுவாக்கி நிலச்சரிவுக்குக் காரணமாகின்றன. மாதவ் காட்கில் குழு சொன்னதுபோல், 64 சதவிகிதப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். புதிதாகக் குடியேறியவர்கள், சொகுசு விடுதிகள், குவாரிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதன் விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களின் தவறுகளுக்கான தண்டனையை எளிய மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன?
  • கேரளத்தின் 2018 பெருவெள்ளம் குறித்து `Flood and Fury’ என்ற நூலை எழுதியவர் விஜு. அவரிடம் பேசினோம். “மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, மலைகளில் முறையான ஆய்வுகளின்றி அளவுக்கு அதிகமாகப் போடப்படும் சாலைகள். இரண்டு, குவாரிகள். இங்கு 5,924 குவாரிகள் உள்ளன. மூன்று, சரிவுகளில் கட்டடங்களைக் கட்டுவது. இதனால், மலையின் மேற்பகுதி மண் வலிமையை இழக்கிறது. மழை தீவிரமாகும்போது அவை நிலச்சரிவுகளில் சிக்குகின்றன” என்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன?
  • நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் வயநாடும் ஒன்று. அதன் துணை ஆட்சியர் உமேஷ், “நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தையநாள் இரவே வனத் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, புத்துமலைப் பகுதியில் வசித்த 60 குடும்பங்களை வனத்துறை அலுவலகத்தில் தங்கவைத்தது. அங்கிருந்து அத்தியாவசியப் பொருள்களை எடுத்துவருவதாகச் சென்ற நான்கு பேர், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 60 குடும்பங்களை முகாமுக்கு மாற்றம் செய்யாமல் இருந்திருந்தால், பலி எண்ணிக்கை 100-க்குமேல் அதிகரித்திருக்கும். குறிப்பாக, புத்துமலையை அடுத்து மிகவும் ஆபத்தான இடத்தில் ராணிமலை எஸ்டேட் உள்ளது. அங்கு வனத்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட மீட்புக் குழு, மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து, இரண்டு ஆறுகளைக் கடந்து, தற்காலிகப் பாலம் அமைத்து மக்களை மீட்டனர். தற்போது புத்துமலை மீட்புப் பணியில் ராணுவம், தீயணைப்புப் படையினர், தன்னார்வலர்கள் என சுமார் 600 பேர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.