Published:Updated:

அஸ்ஸாம்-மிசோரம் எல்லை மோதல் - பிரச்னை... பின்னணி... தீர்வு?

அஸ்ஸாம்-மிசோரம்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்ஸாம்-மிசோரம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், `ஏழு சகோதரிகள்’ (Seven Sisters) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றன.

அஸ்ஸாம்-மிசோரம் எல்லை மோதல் - பிரச்னை... பின்னணி... தீர்வு?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், `ஏழு சகோதரிகள்’ (Seven Sisters) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றன.

Published:Updated:
அஸ்ஸாம்-மிசோரம்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்ஸாம்-மிசோரம்

சமீபத்தில் அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்த எல்லை மோதல், இந்தியா முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய ஒற்றுமையுணர்வைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம், அரசியல்வெளியில் முக்கியப் பேசுபொருளாகி யிருக்கிறது. இதுபோல மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை உட்பட நிலவிவரும் பல்வேறுவிதமான மோதல்களுக்கும் முற்றுப்புள்ளிவைக்க வேண்டிய சவால் மத்திய அரசின் முன் நிற்கிறது!

பிரச்னையின் பின்னணி என்ன?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், `ஏழு சகோதரிகள்’ (Seven Sisters) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றன. ஆனால், ஏழு சகோதரிகளும் எல்லைப் பிரச்னையால் மோதிக்கொள்வது துயர அத்தியாயமாகவே தொடர்கிறது. அஸ்ஸாமுக்கும் மிசோரத்துக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த மிசோரம், 1972-ம் ஆண்டு தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. பின்னர், 1987-ம் ஆண்டு மிசோரத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டாலும் அஸ்ஸாமுக்கும் மிசோரத்துக்கும் இடையே எல்லை வரையறுக்கப்படாமல் இருந்தது. ஆரம்பத்தில் எல்லைப் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், எல்லையை வரையறுக்க முயன்றபோது பிரச்னை வெடித்தது. அதிலிருந்து அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றானது. எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மோதல்கள் அதிகரித்த வண்ணமிருந்தன.

அஸ்ஸாம்-மிசோரம் எல்லை மோதல் - பிரச்னை... பின்னணி... தீர்வு?

அதன் உச்சமாக, கடந்த ஜூலை 26-ம் தேதி பெரிய மோதல் வெடித்தது. அன்றைய தினம், இரு மாநில எல்லையில் உள்ள கோலாசிப் மாவட்டத்தின் வைரங்டே என்ற இடத்தில், இரு மாநில மக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கம்பிகளையும், கட்டைகளையும், கற்களையும் வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு மாநிலக் காவல்துறையினரும் அங்கு விரைந்தனர். இதில் என்ன கொடுமையென்றால், அங்கு இரு மாநில மக்களிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த மோதல், இரண்டு மாநிலக் காவல்துறையினருக்குமான மோதலாக உருமாறியது. விபரீதம் பெரிதாகி, இரு மாநிலக் காவல்துறையினரும் மாறி மாறி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். அதில், அஸ்ஸாம் காவல்துறையைச் சேர்ந்த ஆறு பேர், பொதுமக்களில் ஒருவர் என ஏழு பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

எல்லைப் பகுதியில் என்னதான் நடக்கிறது?

‘அஸ்ஸாம் வனப்பகுதிகளை மிசோரம் மாநிலத்தவர் ஆக்கிரமித்துள்ளனர். சாலைகள் அமைப்பதற்காகவும், விவசாயம் செய்வதற்காகவும் அஸ்ஸாம் வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன’ என்பது அஸ்ஸாம் மாநில அரசின் குற்றச்சாட்டு. இதுவும் மோதலுக்கான முக்கியக் காரணம். இரு மாநில மக்களுக்கிடையே மோதல் போக்கைத் தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை நிறுத்தப்பட்டுள்ளது. ‘சி.ஆர்.பி.எஃப் படை அஸ்ஸாம் காவல்துறையினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது, அஸ்ஸாம் காவல்துறையினரை மிசோரம் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதற்கு சி.ஆர்.பி.எஃப் அனுமதித்துள்ளது’ என்பது மிசோரத்தின் குற்றச்சாட்டு. இப்படி மாறி மாறி இருதரப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எல்லை மோதலால், மிசோரம் மாநிலத்தின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அங்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, மிசோரத்துக்குச் செல்லும் முக்கிய சாலையில் அஸ்ஸாம் மக்கள் தடைகளை ஏற்படுத்தியிருப்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது.

ஜூலை 26-ம் தேதி நிகழ்ந்த மோதல் சம்பவத்தையடுத்து, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், மிசோரம் முதல்வர் சோரம் தங்காவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அஸ்ஸாம் காவல்துறை அதிகாரிகள் சிலர்மீது மிசோரம் காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்தது. மிசோரம் எம்.பி-யான வன்லால்வேனா மீதும், மிசோரமின் ஆறு அதிகாரிகள் மீதும் அஸ்ஸாம் காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது. அந்தச் சூழலில், இரு மாநில முதல்வர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைதியை நிலைநாட்டுமாறு இருவரையும் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு, எல்லைப் பகுதியில் பதற்றம் குறைந்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர், அதிகாரிகள் ஆகியோர்மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக மிசோரம் முதல்வர் அறிவித்தார். அதுபோலவே, மிசோரம் எம்.பி., அதிகாரிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அஸ்ஸாம் அரசு முடிவு செய்தது. மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில் 4 கி.மீ தொலைவுக்குத் தங்கள் காவல்துறையை வாபஸ் பெறுவது என்றும், அந்த இடத்தில் மத்திய துணை ராணுவப்படைகளை நிறுத்துவது என்றும் இரு மாநில அரசுகளும் முடிவுசெய்துள்ளன.

ஹிமந்தா பிஸ்வா சர்மா, சோரம் தங்கா, அமித் ஷா
ஹிமந்தா பிஸ்வா சர்மா, சோரம் தங்கா, அமித் ஷா

‘இது வரவேற்கத்தக்க விஷயம் அதேநேரம், மிசோரம் மாநிலத்தின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான அஸ்ஸாம் மக்களின் நடவடிக்கைகளை அஸ்ஸாம் அரசு அனுமதிக்கக் கூடாது. எதிர்காலத்தில் இத்தகைய மோதல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு, சமீபத்திய மோதலுக்கான காரணங்களை பாரபட்சமற்ற விசாரணையின் மூலம் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்பது அமைதியை விரும்புவோரின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

‘இந்தியாவில் ஏழு இடங்களில் மாநில எல்லைப் பிரச்னைகள் நீடித்துவருவதாக’ மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹரியானா - இமாச்சலப் பிரதேசம், லடாக்-இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா-கர்நாடகா இவை மூன்றைத் தவிர அஸ்ஸாமுக்கு அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் எல்லைப் பிரச்னை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

சவால் மிகுந்த இந்தப் பிரச்னையை மோடி அரசு எப்படித் தீர்க்கப்போகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism