Published:Updated:

நிலைகுலைய வைக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!

நிலக்கரி
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கரி

நிலக்கரி விலை சர்வதேச அளவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறது.

நிலைகுலைய வைக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!

நிலக்கரி விலை சர்வதேச அளவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறது.

Published:Updated:
நிலக்கரி
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கரி

‘மாஸ்கோவில் மழை பெய்தால் மயிலாப்பூரில் குடை பிடிப்பார்கள்' என்று கம்யூனிஸ்ட்களைக் கிண்டலடிப்பார்கள். ஆனால், உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் இப்படிக் குடை பிடிக்க நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. நிலக்கரித் தட்டுப்பாடும் மின்வெட்டு அபாயமும் சீனாவில் தொடங்கி இப்போது நம் வீட்டு வாசல் வரை வந்து தொடுவதற்குக் காரணம் இதுதான்.

கடந்த ஜூன் மாதம் சீனாவில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு. பல மாகாணங்களில் தொழிற்சாலைகளைக் கேள்வி கேட்காமல் மூடினார்கள். வீடுகளுக்கும் மின்சார ரேஷனை அறிமுகம் செய்தார்கள். லிப்ட்கள், ஏர் கண்டிஷனர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. நிலாச்சோறுபோல சீனர்கள் பலர் செல்போன் ஸ்க்ரீன் ஒளியில் நூடுல்ஸ் சாப்பிட்டார்கள். தொழிற்சாலைகள் திடீரென இருளில் மூழ்கியதால், சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறிப் பல தொழிலாளர்கள் மருத்துவமனைக்குப் போனார்கள். இந்தத் திடீர் பிரச்னைக்குப் பல காரணங்களை வரிசை கட்டிச் சொன்னார்கள்.

நிலைகுலைய வைக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!

* கொரோனா இரண்டாம் அலை உலகெங்கும் ஓய்ந்தபிறகு தொழில் உற்பத்தி வேகமெடுத்தது. இதனால் திடீரென மின் தேவை அதிகமானது.

* சீனாவில் இந்த ஆண்டு பல அணைகளில் தண்ணீர் இல்லை. அதனால் நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது.

* நிலக்கரி விலை சர்வதேச அளவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு டன் 60 டாலர் என்று இருந்த விலை இப்போது 150 டாலரைத் தாண்டி ஏறுகிறது. கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக சுரங்க நிறுவனங்களுக்குத் தொழிலாளர்கள் கிடைப்பது பிரச்னையாக இருக்கிறது. இந்தோனேஷியா, கொலம்பியா என முன்னணி ஏற்றுமதி நாடுகளில் பருவமழை அதிகம் பெய்ததும் நிலக்கரி உற்பத்தியை பாதித்தது. இதெல்லாம் நிலக்கரி விலை உயர்வுக்கு நேரடிக் காரணங்கள்.

* ஆஸ்திரேலியாவுடன் சமீபத்தில் சண்டை போட்டுக்கொண்ட சீனா, அங்கிருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்திக்கொண்டது. வேறு பல நாடுகளில் இருப்பதையெல்லாம் வாங்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு நாட்டுக்குப் போன நிலக்கரிக் கப்பலை வழிமறித்து சீனாவுக்குத் திருப்பிவிட்ட சம்பவமெல்லாம் நடந்தது. இதனால் மற்ற நாடுகளுக்கு நிலக்கரி கிடைக்கவில்லை.

* ஐரோப்பிய நாடுகளில் இயற்கை எரிவாயுவில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். காற்றாலை மின்சாரமும் அங்கு கணிசமாகப் பயன்படும். இந்த சீசனில் காற்று அவ்வளவாக இல்லை. அதனால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது. ரஷ்யாதான் பெருமளவு இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவுக்கு அளிக்கிறது. அந்த நாடு உற்பத்தியைக் குறைத்து விலையை ஏற்றிவிட்டது. இயற்கை எரிவாயுவை நம்பியிருந்த உரத் தொழிற்சாலை போன்றவை மாற்று எரிபொருளாக நிலக்கரியை நாடின. இதனாலும் நிலக்கரி விலை ஏறியது.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் சீனா மிகுந்த கவனத்துடன் இருக்கிறது. அனல் மின் நிலையங்கள் அதிகம் இருப்பதால் உலகிலேயே அதிகம் கார்பன் உமிழ்வை வெளியிடும் நாடாக சீனா உள்ளது. இதை மாற்றி, சூழலுக்கு உகந்த தேசமாகத் தனது முகத்தைக் காட்ட சீனா நினைக்கிறது. அதனால் புதிய அனல் மின் நிலையங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்தது. பழைய அனல் மின் நிலையங்களிலும் உற்பத்தியைக் குறைக்க முயன்றது. ஆனால், இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதால், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைகிறது.

சீனாவில் பல அனல் மின் நிலையங்கள் தனியார் கைகளில் இருக்கின்றன. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தில்தான் மின்சாரத்தை விற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது அரசு. அதிக விலைக்கு நிலக்கரி வாங்கி எரித்து மின்சாரம் உற்பத்தி செய்து, அதைக் குறைந்த கட்டணத்தில் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் உற்பத்தியைக் குறைத்துவிட்டார்கள்; அல்லது, நிறுத்திவிட்டார்கள். இப்போது வேறு வழியின்றி கட்டண உயர்வுக்கு அரை மனசுடன் சம்மதம் சொல்லியிருக்கிறது அரசு.

இதன் விளைவு உலகத்தையே பாதிக்கும். செல்போன் உதிரி பாகங்கள் முதல் கார் உள்ளிட்ட வாகனங்களின் பாகங்கள் வரை சீனாவில் தயாராகி உலகெங்கும் பல பொருள்கள் செல்கின்றன. சீனாவில் மலிவாகத் தயாரிக்க முடியும் என்பதால்தான் வீட்டு உபயோகப் பொருள்கள் பலவும் விலை குறைவாகக் கிடைக்கின்றன. இனி எல்லாவற்றின் விலையும் அதிகமாகும். (பல நாடுகளில் இயற்கை எரிவாயு சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் உரங்கள் தயாராகின்றன. இயற்கை எரிவாயு விலை உயர்வதால், உரங்களின் விலை உயரும். இது மறைமுகமாக உணவு விலையை உயர்த்தும்!)

அதிக மின்சாரம் தேவைப்படும் தொழில் நிறுவனங்களைத் தனியாகப் பட்டியலிட ஆரம்பித்திருக்கிறது சீனா. இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை போன்றவற்றுக்கு நிலக்கரியும் அதிகம் தேவை. மின்சாரமும் அதிகம் தேவை. இப்படிப்பட்ட தொழில் நிறுவனங்கள் சீனாவிலிருந்து போனால் பரவாயில்லை என்று இப்போது அங்கு நினைப்பு எழுந்துள்ளது.

சீனாவில் யார் எதை மூடினாலும், உடனே அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் மனநிலை இந்தியாவில் இருக்கிறது. ஆனால், இவர்களை வரவேற்கும் அளவுக்கு இந்தியாவின் நிலை திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

உலகிலேயே அதிகம் நிலக்கரி வாங்கும் நாடுகள் சீனாவும் இந்தியாவும்தான். இந்தியாவில் 70 சதவிகித மின் உற்பத்தி நிலக்கரியை நம்பி அனல் மின் நிலையங்களில்தான் நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஆண்டுதோறும் சுமார் 60 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுதவிர சுமார் 40 கோடி டன் வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறோம். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் வாங்குகிறோம்.

நிலைகுலைய வைக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!

இந்தியா முழுக்க இருக்கும் 135 அனல் மின் நிலையங்களில் முக்கால்வாசி இடங்களில் அபாயகரமான அளவுக்கு ஸ்டாக் குறைந்திருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி போன்ற வட மாநிலங்களில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பற்றாக்குறை ஏற்படும்போது இறக்குமதியை அதிகமாக்கியோ, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கியோ நிலைமையைச் சமாளிக்கிறோம். இப்போதும் அதையே செய்கிறது மத்திய அரசு. ஆனால், இது எத்தனை நாள் பலன் தரும் என்று தெரியாது.

சர்வதேச மார்க்கெட்டில் தட்டுப்பாடும் விலை உயர்வும் நிலவும் சூழ்நிலையில், பொதுத்துறை நிறுவனமான `கோல் இந்தியா'வும் விலையை உயர்த்த உத்தேசம் செய்துள்ளது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களை இது இன்னும் பெரிய கடன்சுமையில் தள்ளும். மற்றவர்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

தொழில் நிறுவனங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மாபெரும் ஜவுளி உற்பத்தி கேந்திரம் சூரத். அங்கு துணிகளுக்கு சாயமிடுவது, அச்சிடுவது போன்ற பல வேலைகள் நடக்கின்றன. இவற்றைச் செய்யும் நிறுவனங்கள், ஒரு டன் 15,000 ரூபாய் விலையில் நிலக்கரியை வாங்க முடியாமல் தவிக்கின்றன.

`இந்த தீபாவளிக்கு நாம் வாங்கும் புத்தாடைகளின் விலை உயர்வை நிலக்கரித் தட்டுப்பாடே தீர்மானிக்கிறது' என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.