அரசியல்
அலசல்
Published:Updated:

வெடித்த குண்டு... புகையும் கேள்விகள்... தோற்றுப்போன உளவுத்துறைகள்!

கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு

அக்டோபர் 23-ம் தேதி, அதிகாலை 4:05 மணிக்கு, உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோயில் முன்பு மாருதி 800 கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

மயிரிழையில் தப்பியிருக்கிறது இந்த தீபாவளிப் பண்டிகை. கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்திருக்கிறார். பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மிகப்பெரிய கொடூரம் இயற்கையால் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தை ‘கார் சிலிண்டர் வெடிப்பு’ வழக்காக மட்டுமே அணுகிவரும் தமிழ்நாடு அரசு, இதுவரையில் தீவிரவாதத் தாக்குதலுக்கான முன்னெடுப்பாகக்கூட ஏற்கவில்லை. ஆனால், சம்பவ இடத்திலிருந்து கிடைத்திருக்கும் ஆதாரங்கள், சம்பவத்தோடு தொடர்புடையவர்களின் பின்னணி, அதையொட்டிய விசாரணைகளில் வெளிவரும் விஷயங்களெல்லாம் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றே உணர்த்துகின்றன. அந்த சிலிண்டர் குண்டிலிருந்து கிளம்பிய கரும்புகையைப்போலவே பல்வேறு கேள்விகளும் எழுந்திருக்கின்றன. சம்பவத்தைத் தடுக்க பல்வேறு வாய்ப்புகள் இருந்தும், என்.ஐ.ஏ., மாநில உளவுத்துறை இரண்டுமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது, போலீஸ் விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சிக்குரிய விஷயங்கள் என்னென்ன, காத்திருக்கும் ஆபத்து என்ன, இப்படிப் பல கேள்விகளுடன் விசாரணையில் இறங்கினோம்...

வெடித்த குண்டு... புகையும் கேள்விகள்... தோற்றுப்போன உளவுத்துறைகள்!
trikolor

வெடித்த குண்டு... அதிர்ச்சியில் முதல்வர்!

அக்டோபர் 23-ம் தேதி, அதிகாலை 4:05 மணிக்கு, உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோயில் முன்பு மாருதி 800 கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரில் வந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரண்டு எல்.பி.ஜி சிலிண்டர்களைக் கைப்பற்றினார்கள். அதற்குள்ளாக, ‘காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் விபத்து நிகழ்ந்ததாக’ தகவல் பரவியது. கார் வெடித்த இடத்தில் இரும்புக் குண்டுகளும், ஆணிகளும் சிதறிக்கிடந்ததை போலீஸ் கண்டறிந்த பிறகே, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்திருக்கிறார்கள். உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் தெரிவித்தது கோவை காவல்துறை.

காலை 6:30 மணிக்கெல்லாம், டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடமிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு ‘அலர்ட்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கோவையில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய பொருள்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. விஷயம் தீவிரமாகலாம்’ என்பதை முதல்வருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதிர்ச்சியில் உறைந்த முதல்வர் உடனடியாக சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன், ஸ்பெஷல் டிவிஷன் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோரைச் சம்பவ இடத்துக்குப் போகச் சொல்லியிருக்கிறார். கோவையில் பொழுது நன்றாகப் புலர்ந்தபோது, தமிழ்நாடு காவல்துறையின் மிக மூத்த அதிகாரிகளெல்லாம் நகரில் குழுமிவிட்டனர். பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதற்கிடையே, வெடித்த கார் யாருடையது... கார் வெடிப்பில் உயிரிழந்தவர் யார் என்பதை விசாரிக்கத் தொடங்கியது போலீஸ். கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது. கார் நம்பரைவைத்து விசாரித்ததில், பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடமிருந்து பத்து பேருக்கு மேல் அந்தக் கார் கைமாறியிருப்பது தெரிய வந்திருக்கிறது. கார் பயணித்த பாதையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாகவும் விசாரணை நடத்திய போலீஸார், கார் வெடிப்பில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பதைக் கண்டறிந்தனர். கடைசியாக, அவர்தான் அந்த காரை வாங்கியிருக்கிறார். முபின் வீட்டைச் சோதனை நடத்தியதில், வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சல்பர் போன்ற பொருள்கள் 75 கிலோ அளவில் சிக்கவும் போலீஸாரே வெலவெலத்துப் போய்விட்டனர். அடுத்த 24 மணி நேரத்துக்குள், முபினுக்கு உடந்தையாக இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாருதின், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆன்லைன் மூலமாக சல்பர், சார்கோல் போன்றவற்றை முபினுக்கு வாங்கிக்கொடுத்த குற்றச்சாட்டில் அப்சர்கான் என்பவர் கைதாகியிருக்கிறார்.

ஜமேஷா முபின்
ஜமேஷா முபின்

யார் இந்த முபின்? கேரளா டு இலங்கை... நீளும் தொடர்புகள்!

தமிழகக் காவல்துறையின் மிக மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “நிச்சயமாக இது தீவிரவாதத் தாக்குதலுக்கான முன்னெடுப்புதான். உயிரிழந்த ஜமேஷா முபின், அவினாசி ரோட்டிலுள்ள பார்க் இன்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயின்றவர். மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம்தான். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர் மனைவிக்குப் பேச்சு, செவித்திறன் குறைபாடு உண்டு. சில ஆண்டுகளாக இதயநோயால் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சையும் எடுத்துவந்திருக்கிறார் முபின். பழைய புத்தகக்கடை நடத்திவந்தவர், பிறகு ரோட்டோரத் துணி வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் ஜி.எம்.நகரிலிருந்து கோட்டைமேடு பகுதிக்கு வீடு மாறியிருக்கிறார்.

அவருடைய மொபைல் போன் விவரங்களை ஆராய்ந்ததில், சமூக வலைதளங்களில் புனிதப்போர் குறித்த வீடியோக்களை அதிக அளவில் பார்த்திருப்பது தெரியவந்தது. டெலிகிராம் ஆப் மூலமாக, அடிப்படைவாதிகள் பலரோடும் தொடர்பில் இருந்திருக்கிறார் முபின். அவரை மூளைச்சலவை செய்ததில், முகமது அசாருதின் என்பவரின் பங்கு பெரிது. 2019 இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹஷீம் உடன் தொடர்பில் இருந்தவர் அசாருதின். ஃபேஸ்புக்கில், ‘கலிஃபா ஜி.எஃப்.எக்ஸ்’ என்கிற பக்கம் மூலமாகப் பல்வேறு அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பியவர். கோவை உக்கடத்தைச் சேர்ந்தவரான அசாருதினை, இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு என்.ஐ.ஏ கைதுசெய்தது.

அசாருதினோடு தொடர்பிலிருந்த பலரும் விசாரிக்கப்

பட்டனர். முபினும் என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப் பட்டார். ஆனால், முபினுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, முபினை என்.ஐ.ஏ கண்காணிப்பு வளையத்துக்குள் சரியாக வைத்திருக்கவில்லை. கேரளாவில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அசாருதினை முபின் சந்தித்திருக்கிறார். அது பற்றிய தகவலும் உளவுத்துறை வசமில்லை. இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புபோல, தமிழகத்தையும் அதிரச்செய்ய இவர்கள் கூட்டுச் சதி செய்திருக்கிறார்கள். முபின் எடுத்துச் சென்ற சிலிண்டரில் டைமர், மொபைல் போன் ஏதும் பொருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. தற்கொலைப்படைத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வகையில் குண்டை வெடிக்கவைக்கத் திட்டமிட்டிருந்தார்களா என்பதெல்லாம் விசாரிக்கப்பட்டுவருகின்றன.

சம்பவம் நடப்பதற்குச் சில நாள்களுக்கு முன்பு, ‘தொழில் நிமித்தமாக வெளியூர் செல்கிறேன்’ எனச் சொல்லி மனைவி, குழந்தைகளைத் தன் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார் முபின். அக்டோபர் 21-ம் தேதி, தன்னுடைய வாட்ஸ்அப் புரொஃபைல் படமாக, ‘என் மரணச் செய்தி உங்களை அடைந்தால் என் தவறுகளை மன்னியுங்கள். என் குறைகளை மறைத்துவிடுங்கள். என் ஜனாஸாவில் (இறுதிச்சடங்கில்) கலந்துகொள்ளுங்கள். எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று வைத்திருக் கிறார். கிடைத்திருக்கும் தகவலெல்லாம் ‘Tip of iceberg’ தான்” என்றனர்.

வெடித்த குண்டு... புகையும் கேள்விகள்... தோற்றுப்போன உளவுத்துறைகள்!

சிக்கிய நான்கு டைரிகள்... ஐ.எஸ்.ஐ.எஸ் பின்னணி!

முபினின் வீட்டைச் சோதனை நடத்தியதில், வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களோடு சேர்த்து நான்கு டைரிகளும் சிக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் விசாரணை டீமிலுள்ள போலீஸ் அதிகாரிகள்.நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள் சிலர், “காரில் சிலிண்டர் குண்டோடு முபின் பயணித்தது, ஒரு பிரபலமான கடையை நோக்கித்தான். தீபாவளிக்கு முதல்நாள் என்பதால், டவுன் ஹால் ஏரியாவில் காலை 8 மணிக்கே கூட்டம் பெருக ஆரம்பித்துவிடும். மிகப்பெரிய உயிர்ப்பலியை வாங்கத்தான், அந்த இடத்தை முதலில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு டைரியில், ‘Tourist Places’ எனக் குறிப்பிட்டு, கோவை மாநகராட்சி அலுவலகம், விக்டோரியா ஹால், ஒரு பிரபல கடை, காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒப்பனக்கார வீதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களே அவர்களின் டார்கெட்டாக இருந்திருக்கின்றன.

மீதமுள்ள மூன்று டைரிகளில், அடிப்படைவாதக் கருத்துகள், வெடிகுண்டுத் தயாரிப்புக்கான ‘நோட்ஸ்’, சிலரின் போன் நம்பர்கள் இருந்தன. முபினுக்கு மாருதி 800 காரை விற்ற முகமது தல்காவின் தந்தை நவாப்கான், 1998 கோவை குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மத்தியச் சிறையில் இருக்கிறார். தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷாவின் சகோதரர்தான் இந்த நவாப்கான். கடந்த மார்ச் மாதம் பரோலில் நவாப்கான் தன் வீட்டுக்கு வந்தபோது, அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்கிற விவரங்களைச் சேகரித்துவருகிறோம்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் அனுதாபியாக இருந்ததால், கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார். அப்போதிருந்தே, என்.ஐ.ஏ-வின் கண்காணிப்பு வளையத்திலும் அவர் இருந்திருக்கிறார். தற்போதுவரை இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்தச் சதித் திட்டத்தில் 12 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விரைவில் அவர்களும் கைதுசெய்யப் படுவார்கள்” என்றனர்.

முகமது தல்கா, முகமது அசாருதின், முகமது ரியாஸ்,  ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் , அப்சர்கான்
முகமது தல்கா, முகமது அசாருதின், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் , அப்சர்கான்

புகையும் கேள்விகள்... தோல்வியடைந்த உளவுத்துறை!

கோவையில் நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், ஒரு உயிர்ப்பலியோடு தமிழகம் தப்பிவிட்டது. சதித்திட்டம் தீட்டியவர்களின் எண்ணப்படி கோரம் நிகழ்ந்திருந்தால், தமிழ்நாடு குலைந்துபோயிருக்கும். இந்த விவகாரத்தில், என்.ஐ.ஏ., மாநில உளவுத்துறை இரண்டுமே படுதோல்வியடைந்துள்ளன. ஒரு மிகப்பெரிய சம்பவம் நடைபெறப்போகிறது என்பதை முன்கூட்டியே உணரக்கூட முடியாத நிலையில்தான், உளவுத்துறைகளின் புலனாய்வு சக்தி இருக்கிறதென்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

நம்மிடம் பேசிய, சட்டம்-ஒழுங்கில் நிபுணத்துவம் பெற்ற மிக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், “முகமது அசாருதின் தொடர்புடையவர்களைத் தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கும் என்.ஐ.ஏ., முபின் மீதும் பார்வையைப் பதித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. முபினுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து சிலர் மூலமாகப் பணம் வந்திருக்கிறது. அதை என்.ஐ.ஏ ஏன் கண்காணிக்க வில்லை... ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அனுதாபியான ஃபிரோஸ் இஸ்மாயில், 2020-ல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு, அவரைச் சில காலம் என்.ஐ.ஏ கண்காணித்திருக்கிறது. ஆனால், தொடர்ச்சியான கழுகுப் பார்வை இல்லாததால், இஸ்மாயிலின் நடவடிக்கை என்.ஐ.ஏ-வுக்குத் தெரியவில்லை. சமீபகாலமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருக்கிறது. அவர்களுக்கென பிரத்யேக உளவுத் தகவல்கள் வருகின்றன. அவற்றை மாநில உளவுத்துறையுடன் பகிர்ந்து, தங்கள் சோதனைக்குப் பிறகு என்னவெல்லாம் எதிர்வினை நிகழும் என்பதையும் ஆலோசித்திருக்க வேண்டும். கோவை விஷயத்தில் என்.ஐ.ஏ தோற்றுவிட்டது.

அதேநேரத்தில், மாநில உளவுத்துறையும் சறுக்கிவிட்டதை ஒத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஜூலை 19-ம் தேதி, மாநில உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து உளவுத்துறைத் தலைவருக்கும், கோவை போலீஸ் கமிஷனருக்கும் கடிதம் சென்றிருக்கிறது. அதில், முபின் உட்பட 50 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘இவர்களெல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அனுதாபிகள். இவர்களின் நடவடிக்கைகள் சரியில்லை. தீவிரமாகக் கண்காணியுங்கள்’ என்று அலர்ட் கொடுத்திருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு. ஆனால், அதை மாநில உளவுத்துறை அதிகாரிகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக்கூட, முபினைத் தொடர்புகொண்ட ஸ்பெஷல் டிவிஷன் போலீஸாரிடம், தன்னுடைய வறுமை குறித்து கண்ணீர்மல்கப் பேசியிருக்கிறார் முபின். அவர்களும் அதை நம்பி, மேற்கொண்டு விசாரிக்கவில்லை. பொள்ளாச்சியிலுள்ள சில உரக்கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம், சிறுகச் சிறுக அமோனியத்தை முபினும் அவருடைய சகாக்களும் பெருமளவில் வாங்கியிருக்கிறார்கள். இதைக்கூட உளவுத்துறையால் மோப்பம் பிடிக்க முடியவில்லையே, ஏன்?

வெடித்த குண்டு... புகையும் கேள்விகள்... தோற்றுப்போன உளவுத்துறைகள்!

இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதெல்லாம், ஒரு சிறு Module-ன் தீவிரவாத முன்னெடுப்புதான். இந்தக் குழுவிலுள்ளவர்கள் பெரிய பணபலம் மிக்கவர்கள் இல்லை. ஒரு பெரிய டீம் இவர்களையெல்லாம் வழிநடத்துகிறது. ‘Lone Wolf’ தாக்குதலாக இவர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழகமெங்கும் இதுபோலக் குழுக்கள் இருக்கலாம். அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டிவரலாம். அதைத் தமிழகக் காவல்துறை கண்டறிந்து, தடுக்காவிட்டால் பெரும் விபரீதங்களை எதிர்கொள்ள நேரிடும்” என்றனர் ஆற்றாமையுடன்.

இந்த குண்டுவெடிப்பு விவகாரத்தை முன்வைத்து, கோவை மாநகர பா.ஜ.க 12 மணி நேர பந்த்-துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. `இதில் அரசியல் செய்வதென்பதை ஏற்கக் கூடாது’ என்கிறார்கள் தி.மு.க சீனியர் அமைச்சர்கள். “ஒரு குடியிருப்பில் தீவிரவாதி புகுந்துவிட்டால், குடியிருப்பவர்களுக்கே தெரியாமல் அவனைக் கைது செய்வதில்தான் உளவுத்துறை, காவல்துறையின் சாமர்த்தியம் இருக்கிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், `இதை ஏன் சொல்லவில்லை, அதை ஏன் வெளிப்படுத்தவில்லை’ என்பதெல்லாம் அபத்தம். விஷயங்களை பூதாகரப்படுத்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது. நாட்டின் அமைதி முக்கியம். இதில், தேவையற்ற அரசியலுக்கு இடம் தராமல், விசாரணை பாரபட்சமின்றி நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையை முடுக்கிவிட்டிருக்கும் தமிழக முதல்வர், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறார். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின்கீழ் என்.ஐ.ஏ வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இனியாவது, உளவுத்துறை தன் பணியைச் சரிவரச் செய்து, ஆபத்து நெருங்குவதற்கு முன்னரே அதைத் தகர்த்தெறிய வேண்டும். இயற்கை ஒவ்வொரு முறையும் காப்பாற்றாது!