Published:Updated:

இரண்டாவது அலை எப்போது ஓயும்?

இரண்டாவது அலை எப்போது ஓயும்?
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாவது அலை எப்போது ஓயும்?

இரண்டாவது அலையில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, மூன்றாவது அலை குறித்தும் அபாய எச்சரிக்கை வந்துவிட்டது.

இரண்டாவது அலை எப்போது ஓயும்?

இரண்டாவது அலையில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, மூன்றாவது அலை குறித்தும் அபாய எச்சரிக்கை வந்துவிட்டது.

Published:Updated:
இரண்டாவது அலை எப்போது ஓயும்?
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாவது அலை எப்போது ஓயும்?

இந்தியாவின் பாதி மாநிலங்களில் ஊரடங்கு இருக்கிறது. மீதி மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘கொரோனா இரண்டாவது அலை எப்போது குறையும்? மூன்றாவது அலையும் வருமா? ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் பெரும்பாலானோர் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பெறுவது இந்தியாவில் சாத்தியமா?’ இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இந்த மார்ச் மாதத்தில் தாக்கத் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலை, இப்போது உச்சத்தில் இருக்கிறது. கான்பூர் மற்றும் ஹைதராபாத் ஐ.ஐ.டி நிபுணர்கள் இணைந்து ஒரு கணிப்பு வெளியிட்டுள்ளனர். ‘மே மாத மத்தியில் இரண்டாவது அலை உச்சம் தொடும். மாத இறுதியில் அதன் வீரியம் குறையும். அதன்பின் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சூழல் இருப்பதால், இந்த உச்சம் வெவ்வேறு நாள்களில் நிகழும் என்றாலும், மே மாதத்துக்குப் பிறகு அச்சம் குறையும்’ என்கிறது அந்தக் கணிப்பு. கொரோனா முதல் அலையை சரியாகக் கணித்தது இந்தக் குழு.

இரண்டாவது அலையில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, மூன்றாவது அலை குறித்தும் அபாய எச்சரிக்கை வந்துவிட்டது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் சமீபத்தில், “இந்தியாவில் வைரஸ் பரவும் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. ஆனால், எப்போது மூன்றாவது அலை தாக்கும் என்பதைச் சொல்ல முடியாது” என்றார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இரு தினங்களுக்குப் பின் அவரே, ‘‘தீவிரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால், இந்தியாவில் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம்’’ என்று சொன்னார்.

அப்துல் காஃபர் - டி.மாரியப்பன்
அப்துல் காஃபர் - டி.மாரியப்பன்

முதல் அலையில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவது அலையில் நிறைய இளைஞர்களே பாதிக்கப்படுவதாகத் தரவுகள் சொல்கின்றன. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் எனக் கணிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் அதற்காக இப்போதே குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை ஆரம்பித்து முன்னேற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். முதியவர்களும், நடு வயதினரும் முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்பட்டதாலும், அவர்களுக்குத் தடுப்பூசியும் அளிக்கப்படுவதாலும் மூன்றாவது அலையில் அவர்கள் அதிகம் பாதிக்க நேரிடாது என்கிறார்கள்.

ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளர் டாக்டர் டி.மாரியப்பன், “மற்றவர்களைவிட குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகவே கருதுகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகள் எல்லாம், தற்போது வீட்டில் பெற்றோர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் மிகவும் குறைவே. அதுமட்டுமன்றி எந்த ஒரு பெருந்தொற்றும் மக்களின் சமூகச் செயல்பாடுகள் சார்ந்தே பரவும். மக்கள் கூடுதல் பொறுப்புடன் ஒத்துழைத்தால் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். அரசும், நோய் பரவுவதற்கு முக்கியக் காரணமான பெரும் கூட்டங்கள் கூடுவது, வான்வழிப் பயணிகளை அனுமதிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு இருந்திருக்க வேண்டும். அதில் தவறியதால்தான் நாம் மோசமான இரண்டாம் அலையைச் சந்திக்கிறோம். அதிக கவனத்துடன் இருந்தால் மூன்றாவது அலையை நிச்சயம் தவிர்க்க முடியும்.

இரண்டாவது அலை எப்போது ஓயும்?

மூன்றாவது அலை வராமல் தடுக்க ஹெர்ட் இம்யூனிட்டி உதவும் என்ற கருத்திற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு நோய் தொற்றி, அதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, நோய் பரவுதல் கட்டுப்படுவதையே ஹெர்ட் இம்யூனிட்டி என்கிறோம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தாலும், அதீத மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டால் 40 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே அப்படி நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பார்கள். குறைந்தது 80% மக்களுக்கு நோய் எதிர்ப்பு உண்டாகியிருந்தால் மட்டுமே, அந்தப் பகுதியில் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது சாத்தியமாகும். தடுப்பூசி போடுவதும், மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதுமே இதிலிருந்து நம்மை மீட்கும்’’ என்கிறார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், கனடா போன்ற பல நாடுகள் ஏற்கெனவே மூன்றாவது அலையைச் சந்தித்து மீண்டிருக்கின்றன. சில நாடுகளில் நான்காவது அலை, ஐந்தாவது அலை பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் சுயக் கட்டுப்பாடு, அரசுக் கட்டுப்பாடு, தடுப்பூசி ஆகியவை மட்டுமே தீர்வாக முன்வைக்கப்படுகின்றன.

இதுகுறித்துப் பேசிய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அப்துல் காஃபர், ‘‘மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. இந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது அலை தாக்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருப்பதால் ஹெர்ட் இம்யூனிட்டி உருவாவது கடினமானதுதான். முதல் அலையில் பாதிப்படையாதவர்கள் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது பாதிப்படையாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படலாம். ஒருமுறை பாதிக்கப்பட்டவர் மறுபடியும் பாதிக்கப்படவும் கூடும். மக்கள் விழிப்புடன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே, கொரோனாவிற்கு எதிரான ஆயுதம்’’ என்கிறார்.

விரைவாக நமக்குத் தடுப்பூசி கிடைத்து விட்டால், கொரோனா அச்சம் குறைந்துவிடும். அதைச் செய்வது அரசின் கையில்தான் இருக்கிறது.