Published:Updated:

வினு விமல் வித்யா: பள்ளிக்கூடம் நடத்த வீட்டையே கொடுத்த ஃபாத்திமா!

 டிகாப்ரியோ -  ஃபாத்திமா
பிரீமியம் ஸ்டோரி
டிகாப்ரியோ - ஃபாத்திமா

- சஹானா

வினு விமல் வித்யா: பள்ளிக்கூடம் நடத்த வீட்டையே கொடுத்த ஃபாத்திமா!

- சஹானா

Published:Updated:
 டிகாப்ரியோ -  ஃபாத்திமா
பிரீமியம் ஸ்டோரி
டிகாப்ரியோ - ஃபாத்திமா

தொற்று அதிகரிப்பதால் வெளியில் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டு, விமலின் குடியிருப்பு பூங்காவிலேயே மூவரும் குழுமினர்.

“வித்யாக்கா, வினு ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வரலாமே?”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையா இருந்துக்கறது நல்லது விமல். எங்கே பார்த்தாலும் காய்ச்சல்...” என்றார் வித்யா.

சற்று நேரத்தில் ஃப்ளாஸ்க்கில் காபி, பாக்ஸில் சீடையுடன் திரும்பி வந்தாள் விமல்.

“ஜனவரி ஒன்பதாம் தேதி ஃபாத்திமா ஷேக்குக்காக கூகுள் டூடில் வெளியிட்டதைப் பார்த்தீங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“ஆமா வித்யாக்கா. ஃபேஸ்புக் முழுக்கப் பரவலா கண்ல பட்டுச்சு. சாவித்ரிபாய் புலேயோட சேர்ந்து கல்விப் பணியில ஈடுபட்டவங்க. சாவித்ரியும் அவரோட கணவர் ஜோதிராவ் புலேயும் ஆதிக்க சக்திகளால துரத்தப்பட்டாங்க. அப்ப தன்னோட வீட்டை, பள்ளிக்கூடம் நடத்தறதுக்காகக் கொடுத்தாங்க ஃபாத்திமா. அங்கே ஒரு லைப்ரரியும் திறந்தாங்க. சாதி, மதப் பாகுபாடு இல்லாம, படிப்பு சொல்லிக் கொடுத்தாங்க. நூத்தியம்பது வருஷத்துக்கு முன்னாடியே ஒரு பெண் ரொம்ப முற்போக்கா இருந்திருக் காங்கன்னு நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்கு. கிரேட் ஃபாத்திமா ஷேக்!”

வினு மூன்று கப்களில் காபியை ஊற்றிக் கொடுத்தாள்.

“என்னை ஒரு விஷயம் ரொம்ப உலுக் கிருச்சு” என்றாள் விமல்.

“என்ன விஷயம்?”

“கோவை தனலட்சுமிக்கு ரெண்டு குழந்தைங்க. மகன் சாஃப்ட்வேர்ல வொர்க் பண்றார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. 31 வருஷமா மகளைக் கண்ணும் கருத்துமா பார்த்திருக்காங்க. திருமண வாழ்க்கை சரி யில்லாம, மகன் தனியா இருக்கறதும் அவங் களுக்கு வேதனையா இருந்திருக்கு. அப்போ ஒரு குடுகுடுப்பைக்காரர் வந்து வீட்டுல தோஷம் இருக்கு, அதை நிவர்த்தி பண்ண லைன்னா கை கால் வேலை செய்யாதுன்னு சொல்லியிருக்கார். அதைக் கேட்ட தனலட்சுமி ரொம்பவும் பயந்துட்டாங்க. தனக்கு ஏதாவது ஆச்சுன்னா, தன்னோட மகளை யாரு பார்த்துப்பாங்கன்னு நினைச்சிருக்காங்க. அதனால பால்ல விஷம் கலந்து மகளுக்குக் கொடுத்துட்டு, அவ இறந்ததை உறுதி பண்ணிட்டு, தானும் தற்கொலை செஞ்சிக் கிட்டாங்க. வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு, 53 வயசுல வாழ்க்கையையே முடிச்சிக் கிட்டாங்க.”

“என்ன சொல்றே விமல்... உடம்பே பதறுது...”

“விமல், அவங்க மன அழுத்தத்தில இருந் திருப்பாங்க. 31 வருஷமா ஒரு குழந்தையை பிரேக் இல்லாம பார்த்திருக்காங்க. அவங் களுக்கு ஒரு தற்காலிக ஓய்வு கிடைச்சிருந்தா இப்படி யோசிச்சிருக்க மாட்டாங்க. தாயும் மகளும் இன்னும் வாழ்ந்திருப்பாங்க... பாவம்” என்றாள் வினு.

“ஆமாம், ஒரே வேலையை வருஷக்கணக்கா செய்யுறபோது ஒரு மனச்சோர்வு வந்துரும். மெனோபாஸ் காலத்துல அது இன்னும் அதிக மாயிருக்கும். பெண்கள் கவனமா இருக்கணும். குடும்பமும் புரிஞ்சு நடந்துக்கணும்” என்றார் வித்யா.

“நீங்க சொல்றது சரிதான் வித்யாக்கா. `டைட்டானிக்’ பட ஹீரோ டிகாப்ரியோ பேரை ஒரு மரத்துக்கு வச்சிருக்காங்க தெரியுமா?” என்றாள் வினு.

“அப்படியா! ஏன், அவர்தான் மரத்தைக் கண்டுபிடிச்சாரா?” என்று சிரித்தார் வித்யா.

“வித்யாக்கா, அவர் மரத்தைக் கண்டு பிடிக்கல, பல்லாயிரக்கணக்கான மரங் களைக் காப்பாத்தியிருக்கார்!”

“ஓ... அப்படியா! கொஞ்சம் விவரமா சொல்லு வினு...”

“மத்திய ஆப்பிரிக்காவுல இருக்கற எபோ மழைக்காடுகள் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, மனுஷங்க அவ்வளவா நுழையாத ஏரியா அது. அங்கே தனித்துவ மான விலங்குகள் எல்லாம் இருக்கு. அந்தக் காட்டுல மரங்களை வெட்டறதுக்கு அரசாங்கமே ஒரு திட்டம் வச்சிருக்கு. அது ரொம்ப ஆபத்துன்னு விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினாங்க. உடனே டிகாப் ரியோ காட்டையும் மரங்களையும் காப்பாத்தற நடவடிக்கைகள்ல இறங் கினார். அவரோட கருத்துகள் பல கோடி பேருக்குப் போய் சேர்ந்துச்சு. அதனால அரசாங்கம் மரம் வெட்டுற திட்டத்தைக் கைவிட்டுச்சு. டிகாப்ரியோவைக் கெளரவிக்குற விதத்துல பிரிட்டனோட கியு ராயல் சைன்டிஸ்ட்ஸ் ஒரு மரத்துக்கு ‘உவரியோப்சிஸ் டிகாப்ரியோ’னு பேரு வச்சிருக்காங்க!”

வினு விமல் வித்யா: பள்ளிக்கூடம் நடத்த வீட்டையே கொடுத்த ஃபாத்திமா!

“நல்ல விஷயத்தைச் செய்த டிகாப்ரியோவுக்குக் கிடைச்ச சரியான அங்கீகாரம் இது. சீடை எடுத்துக்குங்கப்பா” என்றாள் விமல்.

“பிரான்ஸ்ல 25 வயசு பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை அரசாங்கம் இலவசமா கொடுத் திருக்கு. தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும் கருக்கலைப்பின்போது ஏற்படுற மரணங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைல இறங்கியிருக்கு அரசாங்கம்” என்றாள் வினு.

“ஆமா, இந்த ஆண்கள் காண்டமைக்கூட ஒழுங்கா பயன்படுத்துறதில்லைன்னும் சொல் றாங்க. அதனால கருத்தடைக்கான விஷயங் களையும் பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கு... என்ன மோசமான மனநிலை... அது சரி, ஆப்கானிஸ்தான் இப்ப எப்படி இருக்கு?” கவலை யோடு கேட்டார் வித்யா.

“ஆப்கானிஸ்தான்ல இப்போ பொருளாதாரச் சிக்கல் அதிகமாயிருச்சு. பெரியவங்களுக்கு வேலை கிடைக்கிறதில்ல. அதனால குழந்தைகளைச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய அனுப்பிட றாங்க... படிக்கிற வயசுல வேலை செஞ்சு பிழைக் கிறாங்க... கொடுமையா இருக்கு வித்யாக்கா...” என்றாள் வினு.

சற்று நேரம் அமைதி நிலவியது.

“வித்யாக்கா, என்ன படம் பார்த்தீங்க?”

“ `அட்ராங்கி ரே' இந்திப் படத்தை `கலாட்டா கல்யாணம்’னு தமிழ்ல ஹாட்ஸ்டார்ல பார்த்தேன். தனுஷை மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்டா பார்த்தது நல்லா இருந்துச்சு. பிரமாதம்னு சொல்ல முடியாது. ஆனா, வித்தியாசமான கதை. அக்‌ஷய் குமாரும் இருக்கார். தனுஷ் தமிழரா வர்றதால சில தமிழ் முகங்களும் இருக்காங்க.”

“ஓ, நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். சரி விமல், நாங்க கிளம்பறோம். டேக் கேர். பை” என்று கிளம்பினாள் வினு.

‘`ஓகே வினு... வித்யாக்கா.... ரெண்டு பேரும் பத்திரமா இருங்க...’’ என விமல் வழியனுப்ப, இருவரும் வண்டியை நோக்கி நடந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

****

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசிக்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. நீங்கள் தயாரா? உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 24.1.2022

சென்ற இதழ் கேள்வி...

உங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா... `ஆமாம்’ என்றால் எப்படிப்பட்ட புத்தகத்தை விரும்பிப் படிப்பீர்கள்?

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த காலத்திலிருந்தே, புத்தக வாசிப்பு என்பது உயிர் மூச்சு. என்னைத் தனக்குள் இழுத்துக்கொள்ளும் எல்லா வகையான புத்தகங்களும் எனக்குப் பிடிக்கும். புனைவு நூல்கள், வரலாற்று நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் என எதுவாக இருந்தாலும் அதற்குள் என்னைக் கரைத்து விட வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி மனதில் நின்றவை அநேகம்.

நான் பிறப்பதற்கு முன்பாகவே, 1950-லிருந்து வாரப் பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை, அம்மா பைண்டிங் செய்து ஓர் இரும்புப் பெட்டி நிறைய வைத்திருந்தார். அவற்றிலிருந்து படக்கதைகளைப் படிக்க ஆரம்பித்து, அமரர் கல்கி, சாண்டில்யன், நா.பா, கொத்தமங்கலம் சுப்பு, சேவற்கொடியோன் ஆகியவர்களின் கதைகளைப் படித்து முடித்தேன். பின்பு பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன் ஆகியவர்களின் எழுத்துகளை தேடித் தேடி வாசித்தேன்.

எம்.எஸ்.உதயமூர்த்தியின் `எண்ணங்கள்', சிவசங்கரியின் `சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது', சுவாமி சுகபோதானந்தாவின் `மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' போன்ற சுயமுன்னேற்ற நூல்களை விரும்பி வாசிப்பேன்.

- பழனீஸ்வரி தினகரன், சென்னை - 129

சிறு வயதில் கதைப் புத்தகம் வாசிப்பதில் தொடங்கியது ஆர்வம். பிறகு பள்ளி, கல்லூரி காலங்களில் பொது அறிவு புத்தகங்களும் பிரபலங்களின் சுய சரிதைகளும் விருப்பமான விஷயங்கள். அப்புறம் நம் முன்னோர்களின் வாழ்வியலின் நேர்த்தியைப் பெருமிதமாக உணரத் தொடங்கிய தருணத்தில் இருந்து சரித்திர நாவல்கள் உயிராயின. எந்த மன்னனாயினும் நம் தமிழ் மன்னன், எந்த வரலாற்று நாயகியாயினும் நம் மண்ணின் மகள் என்ற எண்ணம். எந்த ஆசிரியராக இருந்தாலும் சரித்திர நாவல் என்றால் விருப்பப்பட்டியலுக்குள் வந்துவிடும்.

- ரா.ஜான்சிராணி, சிதம்பரம்

வினுவின் வித்தியாசமான தகவல்!

வட்ட வடிவிலான மர அறுப்பான் (Circular Saw) கருவியைக் கண்டுபிடித்தவர் ஒரு பெண். அமெரிக்க பெண்மணியான டபிதா பாப்பிட், 18-ம் நூற்றாண்டில் கூர்மையான இந்தச் சாதனத்தை உருவாக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism