Published:Updated:

வினு விமல் வித்யா: நூறு ஆண்டுகளாக பெண்கள் நிர்வாகம் செய்யும் ஊர்!

 அனீரா,  லிமிட்லெஸ்
பிரீமியம் ஸ்டோரி
அனீரா, லிமிட்லெஸ்

- சஹானா

வினு விமல் வித்யா: நூறு ஆண்டுகளாக பெண்கள் நிர்வாகம் செய்யும் ஊர்!

- சஹானா

Published:Updated:
 அனீரா,  லிமிட்லெஸ்
பிரீமியம் ஸ்டோரி
அனீரா, லிமிட்லெஸ்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடற் கரைக்கு வந்திருந்தார்கள் வினுவும் வித்யாவும்.

“விமல் எப்ப வருவா?”

“அவ ரிலேட்டிவ் ஹாஸ்பிடல்ல இருக்காங் களாம். பார்த்துட்டு வந்துடறேன்னு சொன்னா. டென் மினிட்ஸ்ல வந்துடுவா வித்யாக்கா.”

“ஒரு கல்யாணத்துக்காகத் திருவையாறு போயிருந்தேன். அங்கே ‘அசோகா’ ரொம்ப ஃபேமஸ். உனக்கும் விமலுக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்று ஒரு பொட்டலத்தை நீட்டினார் வித்யா.

“ரீசன்ட்டா அசோகா பத்தின ஒரு வீடியோ பார்த்தேன். பாசிப்பருப்பு, மைதா, கோவா, சர்க்கரை, நெய் சேர்த்து பார்க்கவே அட்ட காசமா இருந்துச்சு. சாப்பிடணும்னு நினைச் சிட்டிருந்தேன், அதுக்குள்ள நீங்களே வாங் கிட்டு வந்துட்டீங்க... அசோகாவைவிட வித்யாக்கா ச்சோ ஸ்வீட்” என்றாள் வினு.

“நானே செய்வேன் வினு. கோவா சேர்க்க மாட்டேன். மைதாவுக்குப் பதில் கோதுமை மாவு” என்று வித்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது வந்து சேர்ந்தாள் விமல்.

“எப்படி இருக்காங்க உன் ரிலேட்டிவ்?”

“பாவம், அவங்க இவ்வளவு மோசமா பாதிக்கப்பட்டிருப்பாங்கன்னு நான் நினைக் கல. அவங்க ஹஸ்பண்ட் கண்ட வீடியோக் களையும் பார்த்துட்டு, இவங்ககிட்டேயும் அதே மாதிரி செய்யச் சொல்லி டார்ச்சர் பண்றாராம். உடம்பு சரியில்லைன்னோ விருப்பம் இல்லைன்னோ சொன்னாலும் கேட்கறதில்லையாம். மனசாலும் உடம்பாலும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த விஷயத்தை லைட்டா மாமியார்கிட்டயும் அவங்க அம்மாகிட்டயும் சொல்லியிருக்காங்க. அவங்க, ‘இதெல்லாம் ஒரு தப்பா? பொண் டாட்டிகிட்டதானே இப்படி நடந்துக்கறான்’னு சொன்னாங்களாம். நைட் ஆனாலே பயம் வந்துடுதாம். டாக்டர்கிட்ட சொல்லி, அவங்க ஹஸ்பண்ட்கிட்ட பேசச் சொல்லியிருக்கேன்.”

“கேட்கும்போதே நடுங்குது விமல்... தாலி கட்டிட்டா அந்தப் பொண்ணு தன்னோட உடைமை, என்ன வேணாலும் செய்யலாம்னு ஆம்பிளைங்க நினைச்சுக்கறாங்க. திருமண உறவுல வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு கேஸ் டெல்லி கோர்ட்டுக்கு வந்துச்சு. அப்போ சென்ட்ரல் கவர்ன்மென்ட்கிட்ட, `திருமண வன்புணர்வைக் குற்றமாகக் கருதும் யோசனை இருக்கா’ன்னு கோர்ட் கேட்டுச்சு. அதுக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட், `இல்லை’ன்னும் `அப்படிக் கருதினா குடும்ப அமைப்பே சிதைந்து போகும்’னு சொல்லிருச்சு” என்றார் வித்யா.

“ம்... பெண்களோட பாதுகாப்பை உறுதிசெய்ய ஐடியாஸ் கொடுக்க வேண்டிய ஜே.எஸ்.வர்மா கமிட்டி, திருமண வன்புணர்வைக் குற்றமா பார்க்கச் சொல்லுது. அப்படிப் பார்த்தா ஆண் களுக்குப் பாதுகாப்பில்லாம போயிடும்னு பலரும் எதிர்ப்புகளைக் காட்டிட்டு வர்றாங்க. இப்படி எதிர்ப்பு காட்டுறதுக்கு பதிலா, மனைவிகிட்ட டீசன்ட்டா நடந்துக்க லாம். எந்த பிரச்னையும் வராது” என்று வினு சொல்ல, விமலும் வித்யாவும் ஆமோதித் தனர்.

சுடச்சுட மசாலா கார்ன் வாங்கிக் கொண்டு வந்தாள் வினு.

“சுட்டுச் சாப்பிடறது நல்லா யிருந்தாலும் வாய் வலிக்கும். இப்படி வேகவச்சு, மசாலா போட்டுச் சாப்பிடறது வசதியா இருக்கு” என்றார் வித்யா.

“என்ன வித்யாக்கா, உள்ளாட்சித் தேர்தல் எப்படிப் போயிட்டிருக்கு?” என்றாள் விமல்.

“பரபரப்பா போயிட்டிருக்கு... அது சரி, ஆண் அரசியல்வாதிகளைவிட, பெண் அரசியல்வாதிகளை ரொம்ப மோசமா உருவத்தை வச்சு சித்திரிக்கிறாங்களே... ஏன்?”

“யாரைச் சொல்றீங்க வித்யாக்கா?”

“மமதா பானர்ஜியை ஒரு சோஷியல் மீடியாவுல மோசமா சித்திரிச்சிருந்ததைப் பார்த்தேன். அதான் கேட்டேன்.”

“சமூகத்துக்குப் பெண்கள் சிம்பிள் டார்கெட். எவ்ளோ பெரிய பொறுப்புல இருந்தாலும் அவங்களைப் பொறுத்தவரை பெண், கிண்டலுக்கு உரியவ. மம்தா பானர்ஜி மட்டுமல்ல, எத்தனையோ பெண் அரசியல் வாதிகளைப் பத்தி கருத்து சொல்றோம்கிற பேர்ல இழிவுபடுத்திட்டுதான் இருக்காங்க. அது ரொம்பவும் கேவலமான மனநிலை...” கோபமாகச் சொன்னாள் விமல்.

 அனீரா,  லிமிட்லெஸ்
அனீரா, லிமிட்லெஸ்

“ஆமா, அரசியல்வாதிகளைக் கேவலப் படுத்துறதா நினைச்சிட்டு அவங்கதான் கேவலப்பட்டுப் போய் நிக்கறாங்க. கேரளாவைச் சேர்ந்த அனீரா கபீர், தன்னைக் கருணைக்கொலை செய்யச் சொல்லி, அரசாங்கத்துக்கு வேண்டுகோள் வச்சாங்க. அவங்க ஒரு திருநங்கை. ரொம்பக் கஷ்டப்பட்டு மூணு போஸ்ட் கிராஜுவேஷன் பட்டம் வாங்கியிருக்காங்க. டீச்சரா வேலை செய்யணும்னு ஆசை. ஆனா, ரெண்டு மாசத்துல பதினாலு இன்டர்வியூக்குப் போயும் வேலை மட்டும் கிடைக்கல. அவங்க ஒரு திருநங்கைங்கிறதுதான் வேலைக்குத் தடையாயிருந்துச்சு. அரசாங்கம் தலை யிட்டதால ஒரு ஸ்கூல்ல வேலை கிடைச்சது. ஆனா, திடீர்னு அந்த ஸ்கூல் இவங்களை வெளியே அனுப்பிருச்சு. அந்த விரக்திலதான் கருணைக்கொலை செய்யச் சொன்னாங்க. உண்மையில அப்படிச் சொன்னதுல விருப்பம் இல்லை, வேற வழியில்லாம, கவன ஈர்ப்புக்காகச் சொன்னேன்னு சொல்றாங்க. அனீராவுக்கு இப்போ கவர்ன்மென்ட் வேலை கிடைச்சிருச்சு” என்றாள் வினு.

“இன்னும் எத்தனை அனீராக்கள் வேலை கிடைக்காம அலையறாங்களோ வினு... பாவம்!” என்றார் வித்யா.

“இதே கேரளாவுலதான் பெண் கலெக்டர்கள் அதிகமா இருக்காங்க தெரியுமா? 14 மாவட்டங்கள்ல 9 மாவட் டங்களுக்குப் பெண் கலெக்டர்கள் இருக் காங்க. பினராயி விஜயன் ரெண்டாவது தடவை பதவிக்கு வந்தவுடனே 8 பெண் கலெக்டரகளை நியமிச்சார். இப்போ இன்னொரு பெண் கலெக்டர் பதவிக்கு வந்திருக்காங்க. இப்படிப் பெண்கள் அதிகளவுல பெரிய பொறுப்புகள்ல இருக்கும்போது, சமூகத்துல பெண்களைப் பத்தின கண்ணோட்டமும் நல்லவிதத்துல மாறுதுன்னு சொல்றாங்க...” சோளத்தைச் சுவைத்த படி சொன்னாள் வினு.

“பிரமாதம்! இதே மாதிரிதான் வினு, இங்கி லாந்துல உள்ள லாஃபோர்டு கிராமம் முழுசும் பெண்களோட நிர்வாகத்துல இருக்கு. கிராமத்துல முக்கியமான பெரிய பொறுப்புகளைப் பெண்கள் தான் திறமையா கையாண்டுட்டு வர்றாங்க.”

“அப்படியா விமல்.... எப்பயிருந்து இப்படி?” ஆர்வமாகக் கேட்டார் வித்யா.

“ஒண்ணுல்ல ரெண்டில்ல... கிட்டத்தட்ட நூறு வருஷங்களா அங்கே பெண்கள்தான் நிர்வாகம் செஞ்சிட்டு வர்றாங்க. ஸ்கூல், போஸ்ட் ஆபீஸ், கிராம நிர்வாகம், தேவாலயம்னு எல்லா இடங்கள்லயும் பெண்கள்தான் அதிகாரத்துல இருக்காங்க. நூறு வருஷங்களா பெண்கள் பொறுப்புகள்ல இருக்கிறதால, இப்ப பொறுப்புகள்ல இருக்கிற பெண்களுக்கு எதுவும் கஷ்டமா இல்லைன்னு சொல்றாங்க. ஆனா, தேவாலயப் பொறுப்புல இருக்குற பெண் முக்கியமான முடிவு களை எடுக்கும்போது மட்டும் கிராம மக்களுக்கு அதை ஏத்துக்கறதில மனத்தடை இருக்காம். அதையும்கூட ரொம்ப கண்ணியமாதான் சொல் வாங்களாம். லாஃபோர்டுல எப்பவும் ஆண்களை விடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கு றாங்க...” வியப்பான தகவல் சொன்னாள் விமல்.

“ஓ... வித்தியாசமான கிராமம்தான். ஏதாவது மூவி, சீரிஸ் பார்த்தீங்களா ரெண்டு பேரும்?”

“நான் ஒரு டாகுமென்ட்ரி பார்த்தேன் வித்யாக்கா. இந்தியாவுல ஓடக்கூடிய எட்டு ஓட்டப்பந்தய வீராங்கனைகளைப் பத்தின உத்வேகம் அளிக்குற மாதிரியான டாகு மென்ட்ரி. இவங்க எல்லாம் தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் இல்ல. சாதாரண பின்னணியில இருந்து தானா உருவானவங்க. ஓட்டத்தின் மேல இருக்கிற ஆர்வத்தால ஓட ஆரம்பிச்சவங்க. வயித்துல குழந்தையோட ஓடறவங்க, அறுபது வயசுக்கு மேல புடவையோட ஓடறவங்க, புருஷன்கிட்ட குழந்தைகளைப் பார்த்துக்கச் சொல்லிட்டு ஓடறவங்கன்னு ஒவ்வொரு ஓட்டப்பந்தய வீராங்கனைக்கும் நெகிழ்ச்சியான கதை இருக்கு” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் வினு.

“வாவ்... எதுல இருக்கு?”

“படம் பேரு ‘லிமிட்லெஸ்’. நெட்ஃப்ளிக்ஸ்ல இருக்கு. இதுல ஒரு பொண்ணு, ‘நான் பிராக்டிஸ் பண்ணப் போகும்போது குழந்தை களை என் ஹஸ்பண்ட் பார்த்துக்கணும். ஒவ்வொரு நாளும் அவர் சரியான நேரத்துக்கு வருவாரான்னு காத்துக் கிடக்கணும். நான் பிராக்டிஸ் பண்ணிட்டு வந்த உடனே, குழந்தைகளைப் பாத்துக்கிட்டதுக்கு அவருக்கு நன்றி சொல்லி, `இனி உங்க வேலையைப் பாருங்க’ன்னு சொல்லணும். என் கணவர் மோசமானவர் இல்ல. ஆனா, வீட்டுப் பொறுப்புகளை அவர் கவனிக்கிறதுக்கு நான் நன்றி சொல்ல வேண்டிய இடத்துல இருக்கேன். அவர் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய சூழல் இல்ல. இதுதான் ஒரு பெண்ணா எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றாங்க. எவ்ளோ அழுத்தமான, முக்கிய மான கேள்வி இது!”

“ஆமாம் வினு. இப்பதான் ஓடுறதுக்கே அனுமதி கிடைச்சிருக்கு. நன்றி சொல்லாமல் இருக்க இன்னும் சில நூறு வருஷங்களாவது தேவைப்படும். அதுக்கு இவங்களை மாதிரி பெண்கள் முன்மாதிரியா இருப்பாங்க” என்றாள் விமல்.

“வித்யாக்கா, ஒரு ஃபைவ் மினிட்ஸ் வாக் போயிட்டுக் கிளம்பலாம்” என்றாள் வினு.

மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

- அரட்டை அடிப்போம்...

****

வினுவின் வித்தியாசமான தகவல்!

குழந்தைகளுக்கான டிஸ்போசபிள் டயப்பர்களைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த, மேரியன் டோனவன் என்ற பெண். கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1946.

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருக் கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

நீங்கள் விரும்பும் உடையை அணிகிற சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா... இல்லையெனில் அந்தச் சுதந்திரம் யாரால் மறுக்கப்படுகிறது?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 22.2.2022

சென்ற இதழ் கேள்வி...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து என்ன? இதனால் சமூக, அரசியல் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

முதல்வராகவோ, பிரதமராகவோ ஒரு பெண் தேர்ந் தெடுக்கப்படுவதால் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங் களை விடவும் கீழ்மட்டத்தில் பெண்கள் அதிகாரத்துக்கு வரும்போது ஏற்படும் மாற்றங்கள் சக்தியுடையதாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் பெண்களில் சிலர் ஆரம்பத்தில் கணவர், அப்பா, அண்ணன் போன்றோரின் பின்புலத்தில் இயங்கினாலும், பெரும்பாலான பெண்கள் சுயமாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். அது சமூகத் திலும் அரசியலிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

- எஸ்.ரீனு, சென்னை-126

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது வெறும் கண் துடைப்பு என்பதுதான் உண்மை. பதவி ஏற்ற பெண்களின் பின்னால் அவர்கள் குடும்ப ஆண்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் சுதந்திரமாக செயல்பட அவர்களுக்கு இல்லத்தில், முக்கியமாக கணவர்கள் அனுமதி அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியலில், சமூகப்பணிகளில் பெண்கள் ஈடுபடும் வாய்ப்பு மிகக்குறைந்த அளவே உள்ளது.

- நாகை சந்திரா, நெல்லிக்குப்பம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு வரவேற்கத்தக்கதே. அதே சமயம் பெண்களாகவே முன்வந்து சுயமாக பெண்களுக்கான ஒதுக்கீட்டை கொண்டாடுகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வேட்பு மனுவில் கையெழுத்து இடுவதில் தொடங்கி பிரசார யூகத்தைக் கட்டமைப்பது,

வெற்றி பெற்ற பின் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது வரை எல்லாவற்றிலும் ஆணாதிக்க தலையீடு அதிகமாகவே உள்ளது. கிட்டத்தட்ட தலையாட்டி பொம்மை போன்றுதான் வெற்றி பெறுபவர்களின் நிலை. சமூக சிந்தனையையும் அரசியலில் காலூன்றுவதற்கான சிந்தனையையும் ஒருசேர வளர்த்துக்கொண்டு மக்கள் பணியாற்ற பெண்களாகவே முன்வந்தால் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வலம் வரலாம்.

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி