Published:Updated:

வினு விமல் வித்யா: கமல் சொன்னதைக் கேட்டீங்களா?

லாரா ஷெப்பர்டு - சாரதா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
லாரா ஷெப்பர்டு - சாரதா மேனன்

- சஹானா

வித்யா வீட்டுக்கு வினுவும் விமலும் சென்றிருந்த போது, உறவினர் பெண் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.

“என்ன வித்யாக்கா, காரசாரமா பேசிட்டிருக்கீங்க?” என்றபடி சோஃபாவில் உட்கார்ந்தாள் வினு.

“இவ கீர்த்தனா. சிபிஎஸ்இ டென்த் எக்ஸாம்ல கேட்கப்பட்ட அந்தக் கேள்வியைப் பத்திச் சொல்லிட்டு இருக்கா...”

“ஓ... நீ என்ன நினைக்கிறே கீர்த்தனா?”

“ரொம்ப மோசமான விஷயம். எனக்கு மட்டுமில்ல, என்னோட ஃபிரெண்ட்ஸாலும் அந்தப் பத்தியையும் கேள்விகளையும் சகிச்சிக்க முடியல. எங்க சப்ஜெக்ட்ல இல்லாத விஷயம் வேற... மோசமான பிற்போக்கான கருத்துகளைச் சொல்லிட்டு அதுலேருந்து விடை எழுதற மாதிரி கேள்வி களைக் கேட்டிருந்தாங்க...”

“படிக்கிற குழந்தைகளுக்கே இது எவ்வளவு அபத்தமான, மோசமான, பிற்போக்கான கேள்வின்னு தெரியற அளவுக்கு ஒரு கேள்வியை மத்திய அரசுப் பாடத்திட்டத்துல கேட்டிருக்கிறது அதிர்ச்சியா இருக்கு. இது தவறுதலா வந்திருக்குன்னுகூடச் சொல்ல முடியாது. `பெண்கள் படிக்கிறதாலும் வேலைக்குப் போறதாலும் குடும்ப நிம்மதி குலையுது, குழந்தைகளைச் சரியா வளர்க்க முடியலை’ன்னு சொல்றதெல்லாம் ரொம்பக் கொடுமையா இருக்கு” என்றாள் விமல்.

“கீர்த்தனா மாதிரியான குழந்தைகளை நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு!” என்று பாராட்டினாள் வினு.

நன்றி சொல்லிவிட்டு, கீர்த்தனா விடை பெற்றுச் சென்றாள். ஆரஞ்சு ஜூஸும் பனீர் பக்கோடாவும் கொண்டு வந்து கொடுத்தார் வித்யா.

“இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் இறந்துட்டாங்க. 98 வயசு வரைக்கும் ரொம்ப ஆக்டிவ்வா இருந்தாங்க.”

“ம்... சென்னையில படிச்சவங்க. கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில வேலை செஞ்சாங்க. மனநலம் பாதிக்கப்பட்டவங்க மேல அளவற்ற அன்பும் கருணையும் காட்டினாங்க. மனநல மருத்துவத்தை மேம்படுத்தினாங்க. ஓய்வுக்குப் பிறகும் மருத்துவச் சேவையைத் தொடர்ந்துட்டுதான் இருந்தாங்க. கொரோனா காலத்துலகூட ஆன் லைன்லேயே நோயாளிகளைக் கவனிச்சிட்டு இருந்தாங்க.”

“ஆமா, வினு. `ஸ்கார்ஃப்’னு ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்திட்டு இருந்தாங்க. நிறைய விருதுகள் வாங்கியிருக்காங்க. பத்ம பூஷணும் இவங்களுக்குக் கிடைச்சிருக்கு. தன்னோட வாழ்நாள் முழுக்க சேவை செஞ் சிட்டுப் போயிருக்கிற சாரதாம்மா எப்பவும் மக்களோட நினைவுல இருப்பாங்க!”

“வித்யாக்கா, கமல்ஹாசன் சொன்னதைக் கேட்டீங்களா?”

“அவர் ஆயிரம் சொல்றாரு... எதைன்னு சொல்லு வினு!”

“பிக் பாஸ் நிகழ்ச்சியில காதல் தொடர்பா பேசும்போது, `என் மகள்கள்கிட்ட உனக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமான்னு அநாகரிகமா கேட்க மாட்டேன்’னு சொன்னார். அதைப் பத்திதான் கேட்கறேன் வித்யாக்கா.”

வித்யா யோசித்துக்கொண்டிருக்க, விமல் தனக்கு அந்தக் கருத்து மிகவும் பிடித்திருப்ப தாகச் சொன்னாள்.

“எனக்குக் கல்யாண வயசுல பிள்ளைங்க இருக்கறதால சட்டுனு ஏத்துக்க முடியல. ஆனா, அவர் சொன்னது ரொம்ப நல்ல விஷயமாதான் இருக்கு. என் பிள்ளைங்க காலத்துல அப்படி நடக்க சான்ஸ் இருக்கு.”

“இப்படி ஒருத்தர் பேசும்போதுதான் பலருக்கும் அதைப் பத்தி யோசிக்கவாவது தோணும். ரெண்டு பேர் சேர்ந்து வாழறதுக்குச் சம்பந்தப்பட்டவங்களே அவங்களுக்குப் பிடிச்ச இணையைத் தேடிக்கலாம். அப்படி அவங்களால தேட முடியலைன்னு ஹெல்ப் கேட்டா மத்தவங்க உதவலாம்.”

“இப்படி ஒரு நிலை உருவாக நம்ம நாட்டுல இன்னும் நூறு வருஷம்கூட ஆகலாம். கமல் எதையும் முன்கூட்டியே திங்க் பண்றவர். கிரேட்!”

“கல்யாணம்னு சொன்னதும் நினைவுக்கு வருது. தமிழ்நாட்டுல மறுபடியும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிச்சிட்டு வருது. அரியலூர்ல ஒரு பஸ் கண்டக்டர், எட்டாவது படிக்குற குழந்தையை, நாலாவதா கல்யாணம் பண்ணியிருக்கார். அந்தப் பொண்ணு இப்போ நாலு மாச கர்ப்பம். பொண்ணோட புருஷனும் அம்மாவும் போக்சோ சட்டத்துல கைதாகி, ஜெயில்ல இருக்காங்க. கடந்த அஞ்சு வருஷத்துல குழந்தைத் திருமணங்கள் வேகமா அதிகரிச்சிட்டு வருதாம். திண்டுக்கல் மாவட்டம் குழந்தைத் திருமணங்கள்ல முதல் இடத்துல இருக்கு. இங்கே அஞ்சு வருஷத்துல 683 குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கு. கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தேனி, திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங் கள்லாம் அடுத்தடுத்த இடங்கள்ல இருக்கு.”

“நிஜமாவா விமல்... அதிர்ச்சியா இருக்கு.”

“ஆமா வித்யாக்கா. சாதி விட்டுக் கல்யாணம் பண்ணிடுவாங்கன்ற பயத்துலயும் வறுமை யாலயும் குழந்தைங்களுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்துடறாங்க.”

“இதைத் தடுக்க முடியலையா விமல்?”

“இதுவரை 11,550 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்காங்க. 586 பேர்மேல வழக்கும் தொடுத்திருக்காங்க. மறுபடியும் பின்னோக்கிப் போற மாதிரி இருக்கு.”

‘`குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தறதுக்காக கொடுக்கிற முக்கியத்துவத்தை, குறிப்பிட்ட வயசுதாண்டி நடக்கற திருமணங் களுக்கும் கொடுக்கணும். ஏற்கெனவே 18 வயசா இருந்த பெண்களோட குறைந்தபட்ச திருமண வயசை இப்ப 21 வயசுன்னு கூட்டறதுக்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கு. இந்த விஷயத்துல ஆதரவு, எதிர்ப்புனு கலவையான குரல்கள் கேக்குது. இது இன்னும் என்னென்ன பிரச்னைகளைக் கிளப்பப் போகுதோ...’ என்றார் வித்யா கவலைபொங்க.

“ரொம்ப போர் அடிக்குது. சின்ன டூராவது போயிட்டு வரலாமா?” என்றாள் வினு.

“டெல்டா போய் இப்ப ஒமிக்ரான் வந்திருச்சு. எல்லாம் முடியட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றார் வித்யா.

“நாமதான் இப்படிப் பயந்துகிட்டு கிடக்கோம். 74 வயசுல லாரா ஷெப்பர்டு விண்வெளிக்கே போயிட்டு வந்துட்டாங்க வித்யாக்கா!”

வினு விமல் வித்யா: கமல் சொன்னதைக் கேட்டீங்களா?

“என்னம்மா சொல்றே... 74 வயசு விண்வெளி வீராங்கனையா?”

“வித்யாக்கா, இவங்க விண்வெளி வீராங்கனை இல்ல. டிராவலர். சும்மா விண்வெளிக்கு டூர் போயிட்டு வந்திருக்காங்க. லாரா ஷெப்பர்டு அமேசான் நிறுவனத்தோட ப்ளூஆரிஜின் விண்வெளி சுற்றுலா நிறுவனத் தோட கெஸ்ட்டா இலவசமா போயிட்டு வந்திருக்காங்க. அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்டின் மகள் இவங்க. அப்பாவோட சில நினைவுப் பொருள்களை எடுத்துக்கிட்டு விண்வெளிச் சுற்றுலாவை முடிச்சிட்டு வந்திருக்காங்க லாரா.”

“சூப்பர்! ஏதாவது படம் பார்த்தீங்களா?”

“நான் `மணி ஹெய்ஸ்ட்’ - சீஸன் 5 ஃபைனல் பார்ட் பார்த்தேன் வித்யாக்கா.”

“முடிவு எப்படி இருந்துச்சு வினு?”

“சீஸன் 5 முதல் பகுதியில துப்பாக்கிச் சத்தமா கேட்டு என் காதே வலிச்சிருச்சு வித்யாக்கா. ஃபைனல் பார்ட் அப்படியில்ல. ரொம்பவே நல்லவிதமா எல்லோரும் ஏத்துக்கிற மாதிரிதான் முடிச்சிருக்காங்க. தங்கத்தை எப்படி உருமாத்திக் கடத்துறாங்க, போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படித் தப்பிக்கிறாங்கங்கறதைப் பார்த்தாதான் `அட அட’ன்னு ஆச்சர்யப்பட்டு அனுபவிக்க முடியும்.”

“தங்கத்தை எடுக்கறது, உருக்கறது, கடத்துறது எல்லாத்துக்கும் ரியல் ப்ளானே போட்டு வச்சிருந்தாங்களாமே?” என்றாள் விமல்.

“ஆமாம், எக்ஸ்பர்ட்கிட்ட கேட்டு ஒவ்வொண்ணயும் செஞ்சிருக்காங்க. அந்த ப்ளானை வச்சிக்கிட்டு, யார் வேணாலும் தங்கத்தைக் கடத்த முடியும். ஆனா, ஷூட்டிங்ல இருக்கற மாதிரி ரீல் போலீஸ் இருக்க மாட்டாங்க, ரியல் போலீஸ் இருப்பாங் கன்னு நம்மளையே கலாய்க்கறாங்க.”

``ஹா ஹா... நானும் முயற்சி பண்றேன்...’’

``என்னது... தங்கம் கடத்தவா?!’’

“இல்லே இல்லே... மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் பார்க்க. சரி... நீங்க ஏதாவது படம் பார்த்தீங்களா வித்யாக்கா...”

“மெனோபாஸ் பிராப்ளம் வச்சு `ஸ்டார்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். எனக் கென்னவோ இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கணும்னு தோணுச்சு.”

“நல்ல சப்ஜெக்ட். மலையாளத்துலதான் நிகழ்காலத்துல நடக்கிற பிரச்னைகளை எல்லாம் அழகா படம் எடுக்கறாங்க. `கிரேட் இண்டியன் கிச்சன்', `சாரா' எல்லாம் எல்லோரையும் பேச வச்சுச்சு. யோசிக்க வச்சுச்சு.”

‘`இந்தப் படம் மெனோபாஸ் காரணமா பாதிக்கப்படற காலேஜ் புரொஃபஸரைச் சுத்திச் சுழலுது. கிரேட் இண்டியன் கிச்சன், சாரா மாதிரி மெயின் விஷயத்துலயே கதை பண்ணாம, இவங்க அமானுஷ்யத்துக்குள்ள புகுந்துட்டாங்க... சில இடங்கள் ‘மணி சித்திரத்தாழ்’ படத்தை நினைவுபடுத்துது...”

``ஓகே வித்யாக்கா. நாங்களும் பார்க்கறோம். விமலுக்கு ஆபீஸ் வேலை கொஞ்சம் இருக்காம். எனக்கும் வேலையிருக்கு. கிளம்பட்டுமா?”

வித்யா விடைகொடுக்க, வினுவும் விமலும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

*****

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

உங்கள் வீட்டில் எப்படி?

குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் உங்களுக்கு உண்டா? `ஆம்' என்றால் கதைகளை அப்படியே கதைகளாகச் சொல்வீர்களா? அவற்றை உண்மை என்பதுபோல மாற்றிச் சொல்வீர்களா? எது சரி என்று நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 28.12.2021

சென்ற இதழ் கேள்வி...

உங்கள் வீட்டில் எப்படி... காய்கறிகள் உட்பட ஆரோக்கிய உணவைச் சாப்பிடும் குழந்தைகளா? சிப்ஸையும் ஃப்ரைடு சிக்கனையும் நொறுக்குத் தீனிகளையும் கொறித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளா? என்றதற்கு வாசகிகளின் பதில்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

மதிய லன்ச்சுக்கும், இரவு டின்னருக்கும் இடைப்பட்ட நேரம் நொறுக்குத் தீனிடைம்தான். ஆரோக்கியமானதாகச் செய்துதருவது மட்டுமே என் பணி.

குழந்தைகள் விரும்புவது சாட் ருசிகளை, சாட் ஐட்டங்களை அல்ல. வடைக்கு பதில் வெஜ் வடை, கீரை போண்டா, காய்கறி கட்லட், புதினா லெமன் ஜூஸ், முட்டைகோஸ், முருங்கைக்கீரை குணுக்கு, கோதுமை மாவில் செய்த கேக், கருப்பட்டி அல்வா என மாலை டிபன் செய்கிறேன். வயதானவர்களுக்கு பாரம்பர்ய முறையிலும், அதில் சொந்தமாகவே தயாரித்து வைத்திருக்கும் சாட் மசாலா, எக்ஸ்ட்ரா காய்கறிகள் சேர்த்து பிள்ளைகள், கணவருக்கும் அவரவர் ருசிப்படி செய்ய முடிகிறது. நம் கையால் அனைவரும் ஆரோக்கியமாகச் சாப்பிடுவதில் திருப்தி, பர்ஸுக்கும் ஆரோக்கியம் என நிறைய சந்தோஷம்.

- வித்யா வாசன், சென்னை-78

'காக்கா முட்டை' பாட்டி பாலிஸிதான் எங்கள் வீட்டில். சீசனில் கிடைக்கும் பொருள்கள் எல்லாம் மதிப்பு கூட்டப்பட்டு ஜாம், சாஸ், தொக்கு என்று எப்போதும் தயாராக இருக்கும். தினமும் ஒரு வெஜ் அல்லது நான்-வெஜ் என்று வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கிச்சடி, சுக்கா என வெரைட்டியாக ரெடி பண்ணி விடுவோம். தோசை மாவு அல்லது கோதுமை மாவை தோசையாக ஊற்றி, அதன் மேல் இந்தக் கலவையை பரப்பி, ஜாம், சாஸ், தொக்கு ருசிக்கேற்ப தடவினால் பீட்சா, பர்கராக நாக்குக்கு ருசியாக வயிற்றை நிரப்பும். நொறுக்குத் தீனியாக கார்ன், நிலக்கடலை, பொரிக்கடலை உருண்டை, தேங்காய் துருவல் தூவிய முளைகட்டிய பயிறு தினம் ஒன்றாக அணிவகுக்கும். `பிடிச்சதைச் சாப்பிடு' என்று சொல்லிப் பழக்காமல், காய்கறிகளின் சிறப்பைச் சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டும்.

- விஜயலக்ஷ்மி, மதுரை-9

வினுவின் வித்தியாசமான தகவல்!

உலகின் முதல் கணினி புரொகிராமர் ஒரு பெண் தான். அவர் பெயர் அடா லவ்லேஸ். வாழ்ந்த காலம்: 1815 - 1852 (லண்டன்)