Published:Updated:

வினு விமல் வித்யா: ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தால்..?

சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்
பிரீமியம் ஸ்டோரி
சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்

- சஹானா

வினு விமல் வித்யா: ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தால்..?

- சஹானா

Published:Updated:
சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்
பிரீமியம் ஸ்டோரி
சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பார்க்கில் வினு, விமல், வித்யா மூவரும் சந்தித்தனர்.

“புயலால விழுந்த மரங்களோட சில வருஷத்துக்கு முன்னவரைக்கும் பரிதாபமா இருந்த இந்த பார்க், இப்ப பாரு, அடர்த்தியா மரங்கள் கண்ணுக் கும் மனசுக்கும் சந்தோஷத்தைத் தருது” என்று மகிழ்ச்சியாகச் சொன் னார் வித்யா.

“ஆமா வித்யாக்கா. பார்க் சூப்பரா இருக்கு. இன்னிக்கு ஒரு புதிர் சொல்லப்போறேன்... விபத்துல ஓர் இளைஞரை ஹாஸ்பிடல்ல சேர்க்க றாங்க. அவர்கிட்ட முகவரி எதுவும் இல்ல. தொலைக்காட்சி மூலமா தகவல பரப்பறாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு புரொஃபஸர் தன்னோட மகன்னு அழுதுட்டே ஓடி வர்றார். அப்போ கமிஷனர்கிட்டருந்து ஹாஸ் பிட்டலுக்கு ஒரு போன் வருது. அவன் கமிஷனரோட மகன்னு. அப்படின்னா அந்த கமிஷனர் யார்? ரெண்டு பேரும் யோசிச்சு, கிளம்பும்போது சொல் லணும்.”

“ட்ரை பண்றேன் வினு... அருணாசலப் பிரதேசத்துல காங்கிரஸ் எம்.எல்.ஏ. நினாங் எரிங், பீரியட்ஸ் காலத்துல லீவு கொடுக்கணும்னு சட்ட சபையில கோரிக்கை வச்சிருக்கார். அதுக்கு பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. லோகம் தாசர், புனிதமான சட்டசபையில அசுத்தமான மாதவிடாய் பத்தியெல்லாம் பேச வேணாம். எங்க சமூகத்துல மாத விடாய் நேரத்துல பெண்கள் சமையலறைப் பக்கம்கூட வர மாட்டாங்க. மத்தவங்க பக்கத்துலயும் போக மாட்டாங்கன்னு சொல்லிருக்கார்” என்றார் வித்யா.

“அடக் கொடுமையே... அதிகாரத்துல உள்ளவங்களே இப்படியெல்லாம் பிற்போக்குச் சிந்தனையோட இருந்தா, சாதாரண மக்கள் கிட்ட எப்படி முற்போக்கான சிந்தனை வரும்? இந்திய அரசியல்வாதிகள் எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் பெண்கள் விஷயத்துல ரொம்பவும் பிற்போக்கா சிந்திக்கிறாங்க” என்றாள் வினு.

“இப்பதான் மாதவிடாய் பத்தியெல்லாம் கொஞ்சம் விழிப்புணர்வு வந்துட்டிருக்கு. இப்படி எல்லா இடங்களுக்கும் நல்ல விஷயங்கள் பரவட்டும். உக்ரைனைச் சேர்ந்த அமிலியா பாபோவிச் பாட்டைக் கேட்டீங்களா?” என்றாள் விமல்.

“இல்லையே...”

“ஒன்பது வயசுப் பெண் குழந்தை. போரை நிறுத்தச் சொல்லி அழகா பாடுறா. கண்ணீரோட அவ பாடுறதைக் கேட்டா, போர்ங்கிற சிந்தனையே யாருக்கும் வராது. அமிலியா ஒரு வயசுலேருந்து இத்தாலியில வசிக்கிறா. அவளோட தாத்தா உக்ரைன்ல இருக்கார். நாட்டுக்காகப் போராட போயிருக்கார். அவர் எப்படி இருப்பாரோன்னு தவிக்கிறா. யாருக்கும் நன்மை செய்யாத இந்தப் போரை நிறுத்தக்கூடாதா?” கவலை யோடு சொன்னாள் விமல்.

“விமல், அந்த வீடியோவை ஷேர் பண்ணு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைக் கல்யாணம் பண்ணிருக்கார். வினி ராமன் ஆஸ்திரேலி யாவுல பிறந்து வளர்ந்தவங்க. மருத்துவம் படிச்சிட்டிருக்காங்க. ரெண்டு பேரும் அஞ்சு வருஷமா காதலிச்சு, இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கொரோனாவாலதான் கல்யாணம் தள்ளிப்போனதுன்னு சொல்லி யிருக்காங்க. தமிழ் முறைப்படியும் கல்யாணம் நடக்கப் போகுது!” என்றாள் வினு.

“ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்!'' என்று சொல்லி, வினுவுக்கும், விமலுக்கும் வீட்டி லிருந்து கொண்டு வந்த நுங்கு சர்பத்தை எடுத்துக்கொடுத்தார் வித்யா.

சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்
சுலுஹு ஹசன், மெரில் ஸ்ட்ரீப்

“அடடா! இந்த வெயில் காலத்துக்கு நுங்கு சர்பத் தேவாமிர்தமா இருக்கு வித்யாக்கா. ஆமா, ஆப்கானிஸ்தான்ல பள்ளிக்கூடம் திறந்துட்டாங்களா?” என்றாள் விமல்.

“தாலிபன்கள் ஆட்சியைப் பிடிச்சதுக்குப் பிறகு, இப்பதான் பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்காங்க. அறிவிப்பு வந்ததும் குழந்தைங்க எல்லாம் ஆர்வமாயிட்டாங்க. அப்புறம் ஆம்பிளைப் பசங்களுக்கு மட்டும் தான் ஸ்கூல்னு சொன்னாங்க. உடனே பெண் குழந்தைகளும் பேரன்ட்ஸும் ரொம்ப கோப மாயிட்டாங்க. படிக்க அனுமதி கேட்டு, பெண்கள் வீதியில் போராட்டமெல்லாம் நடத்தினாங்க. இப்ப எல்லாருக்கும் ஸ்கூல் திறந்துட்டாங்க. பெண்கள் அவங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளோட பள்ளிக் கும் போகணும்” - விளக்கமாகச் சொன்னார் வித்யா.

“பெண்கள் பள்ளிகளைச் சில மணி நேரத்துக்குள்ளேயே தாலிபன்கள் மூடிட் டாங்களாம்... அது தெரியுமா” என்றாள் வினு.

“அடக் கொடுமையே” என்றபடி மூவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.

விமல் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள், “ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தா, நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் கிறதுக்கு தான்சானியா அதிபரை உதாரணமா சொல்லலாம்.”

“தான்சானியாவுல பெண் அதிபரா..! அப்படி என்ன செஞ்சாங்க விமல்?”

“தான்சானியாவுல கடந்த பல வருஷங்களா அரசியல் நிலைமை மோசமா இருந்துச்சு. எதிர்க்கட்சிகளையெல்லாம் ஆளுங்கட்சி ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணுச்சு. ஒரே கட்சி ஆட்சியில இருக்கணும்னு எதிர்க்கட்சி களை ஒழிக்கும் வேலையில் இறங்குச்சு ஆளுங்கட்சி. அதனால எதிர்க்கட்சித் தலைவர்கூட நாட்டைவிட்டுப் போயிட்டார். ஒரு வருஷத்துக்கு முன்னால ஜனாதிபதி ஜான் மாகுஃபுலி இறந்த பிறகு, சமியா சுலுஹு ஹசன் ஜனாதிபதியா பதவிக்கு வந்தாங்க. அதுவரை இருந்த அரசியல் சூழல் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. சில வாரங்களுக்கு முன்னால எதிர்க்கட்சியினரை எல்லாம் அழைச்சுப் பேச்சுவார்த்தை நடத்தி யிருக்காங்க. அதனால தான்சானியா மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தவுடனே வன்முறை இல்லாத, அமைதியான வழியில நாட்டை வழிநடத்துறாங்கன்னு மக்கள் சமியாவைக் கொண்டாடுறாங்க. அவங்களை `மாமா சமியா’ன்னு அன்போட கூப்பிடறாங்க. அதுக்கு சமியா அம்மான்னு அர்த்தமாம்.”

“வாவ்... சூப்பர் விமல்! இப்ப எனக்கு ஹாலிவுட் ஆக்ட்ரஸ் மெரில் ஸ்ட்ரீப் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருது. `பெண்களால உலகம் இயக்கப்பட்டா, உலகத்துல அமைதி அதிகமாகும். பெண்களாகிய நாம அடிப்படை யில குழந்தைகள் கொல்லப் படுறதை விரும்ப மாட்டோம். அதனால அதிகாரம் மிக்க பதவிகள்ல பெண்கள் உட்காரும்வரை போராடணும்’னு சொல்லிருக்காங்க வினு.”

“மெரில் ஸ்ட்ரீப் எவ்ளோ அழகா இந்த உண்மையைச் சொல்லிருக்காங்க... சரி, ஏதாவது மூவி பார்த்தீங்களா வித்யாக்கா?”

“ `லலிதம் சுந்தரம்'னு மலையாளப் படம் பார்த்தேன். சுமாரான ஃபீல் குட் மூவினு வச்சுக்கலாம். மஞ்சு வாரியரோட அண்ணன் மது வாரியர் இயக்கி, மஞ்சு வாரியரே தயாரிச்சு நடிச்ச படம். மலைப்பிரதேசத்துல அழகான பங்களா. பிள்ளைகள் மூணு பேரும் வெவ்வேறு ஊர்கள்ல இருக்காங்க. அந்த பங்களாவுல அவங்க அப்பாவும் வேலை செய்யுறவங்களும் பிள்ளைகளோட வருகைக் காகக் காத்திருக்காங்க. மூணு பேரும் வீட்டுக்கு வர்றாங்க. அண்ணன் பிஜு மேனன், தங்கை மஞ்சு வாரியர், தம்பி அனு மோகன் மூணு பேருக்கும் சண்டை நடக்குது. கடைசியில மூணு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிறதோட படம் முடியுது. ரொம்ப சிம்பிள் கதை.”

“ஓகே... டைம் ஆச்சு... கிளம்பலாமா?”

“வித்யாக்கா, புதிருக்கு விடை சொல்லுங்க. அந்த கமிஷனர் யார்?”

“அந்தப் பையனோட அம்மாவா?”

“கலக்கிட்டீங்க வித்யாக்கா. கமிஷனர்னு சொன்னதும் நிறைய பேர் அது ஓர் ஆணாத் தான் இருக்கணும்னு நினைச்சு, பெரியப்பா, மாமா, தத்தெடுத்தவர்னு எல்லாம் சொல்லி யிருக்காங்க. ஆனா, நீங்க கிரேட்! லவ்யூ வித்யாக்கா” என்றாள் வினு.

“உங்க ரெண்டு பேரோட பழகினதுக்கப்புறம்தான் நான் இப்படி மாறியிருக்கேன். ஓகே... பை'' என்று கிளம்பினார் வித்யா.

மூவரும் ஆளுக்கொரு வண்டியில் வீட்டை நோக்கிக் கிளம்பினர்.

- அரட்டை அடிப்போம்...

*****

வினுவின் வித்தியாசமான தகவல்!

கைரேகைகளின் மூலம் ஒருவர் ஆணா, பெண்ணா என அறிய முடியும். பெண்கள் ஆண்களைவிட, தங்கள் வியர்வையில் இரண்டு மடங்கு அமினோ அமிலங்களைச் சுரப்பதன் காரணமாக இந்த அறிதல் சாத்தியமாகிறது.

****

இன்று பெண்களுக்கு மிக முக்கியமான தேவை எது?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

பெண்கள் தினத்தையொட்டி பெண்களின் சாதனைகளையும் வேதனைகளையும் நிறையவே படித்தோம். அதன் பின்னணியில், இன்று பெண்களுக்கு மிக முக்கியமான தேவை எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

பல மணி நேரப் பேருந்து பயணங்களின்போது, டாய்லெட் செல்ல பெண்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். எனவே, வெளியூர் செல்லும் எல்லா பேருந்துகளிலும் கழிப்பறை வசதி அவசியத் தேவை.

- என்.கோமதி, நெல்லை-7

என் அப்பாவுக்கு பச்சை நிறம் பிடிக்காது. என் அம்மா கடைசி வரை பச்சை நிறத்தில் புடவை கட்டிக்கொள்ளவே இல்லை. கணவன் காணாததை தானும் காண மாட்டேன் என்று கண்ணைக் கட்டிக்கொண்ட காந்தாரிகள் மகாபாரதத்துடன் மாண்டுவிடவில்லை. இன்றும் `என்ன சமைக்கட்டும்...' என்பதில் தொடங்கி, ஆண் ஆணைகளை அடிபிறழாமல் நிறைவேற்றும் அடிமையாகத்தான் பல பெண்கள் உள்ளனர். பெண் தானே யோசித்து தனக்கான முடிவுகளை தானே எடுக்கும் நிலை வர வேண்டும். அதற்கு ஆதாரம் தன்னம்பிக்கை. தற்காப்புக்காக ஆயகலைகளோடு, அடிக்கும் கலை களையும் தெரிந்துகொள்ள வேண்டும். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிமுறை கொண்டு பெண் வாழ வேண்டும்

- கீதா பாலு, ஹைதராபாத்-7

பெண்களுக்கு மிக முக்கியமான தேவை சுதந்திரம். சுதந்திரம் என்பது யாருடைய அனுமதியும் பெறாமல் நீ நீயாக இருப்பது. இதில் படிப்பதற்கான சுதந்திரம், வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தேவைப்படும்போது மற்றொன்றாக மாறுவதற்கான சுதந்திரம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் ஆகியவை அடங்கும்.

- ம. ஹர்ஷிகா, கும்பகோணம்

இன்றைய பெண்களுக்கு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நகைச்சுவை உணர்வுதான் அவசியம். காலையில் அடுப்படியில் ஆரம்பித்து... குழந்தைகள், கணவரை தயார்படுத்தி, பின் தானும் பணிக்குச் செல்வது அல்லது வீட்டு வேலைகளை முடித்து, மாலை யில் பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகளை கவனித்து, இரவு உணவுக்கு தயார் செய்வது வரை பெண்களாகட்டும்... அலுவல் பணியில் திணறும் பெண்களுக்கும் சர்வ ரோக நிவாரணி நகைச்சுவை தான். ஒரு பெண் நகைச்சுவை உணர்வுகொண்டிருந்தால் எந்தப் பிரச்னையையும், கவலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம். பெண் புன்னகைத்தால் அவளின் குடும்பமும் புன்னகைக்கும்.

- என்.சாந்தினி, மதுரை-9

இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணை யாக அவர்களைவிட அதிகமாக உழைக்கிறார்கள் பெண்கள் எனும்போது, பாலினப் பாகுபாடற்ற சம ஊதியத்தைக் கேட்டுப் பெற வேண்டியது பெண்களின் உரிமை. வேலை கிடைத்தால் போதும், கிடைத்த வேலை யைத் தக்கவைத்தால் போதும் என்று நினைக்காமல் `என் ஊதியம் என் உரிமை' என்பதில் பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை 126

*****

இந்த இதழ் கேள்வி

தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையேறுவதன் காரணமாக நீங்கள் பாதிப்புக்கு ஆளாகிறீர்களா? எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 5.4.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism