Published:Updated:

வினு விமல் வித்யா: கருவைச் சுமப்பதும் கலைப்பதும் யாருடைய உரிமை?

 ஹியூமன்
பிரீமியம் ஸ்டோரி
ஹியூமன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல பெண்கள் அதிகமா ஜெயிச்சது சந்தோஷ மாயிருக்கு. அம்பது பர்சென்ட் இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியிருக்காங்க

வினு விமல் வித்யா: கருவைச் சுமப்பதும் கலைப்பதும் யாருடைய உரிமை?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல பெண்கள் அதிகமா ஜெயிச்சது சந்தோஷ மாயிருக்கு. அம்பது பர்சென்ட் இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியிருக்காங்க

Published:Updated:
 ஹியூமன்
பிரீமியம் ஸ்டோரி
ஹியூமன்

சென்னை புத்தகக் காட்சியில் வினு, விமல், வித்யா மூவரும் சுற்றிக் கொண்டிருந் தார்கள்.

“நல்லவேளை வார நாள்ல வந்தோம்... கூட்டமே இல்ல. நின்னு நிதானமா வாங்க முடியுது. மூத்த எழுத்தாளர்களோட கட் அவுட், அம்பேத்கர் கட் அவுட், வள்ளுவர் சிலை, அட்டையால செய்யப்பட்ட ராட்சச கேமரான்னு சில ஸ்டால்கள் அசத்தலா இருக்கு. என்னென்ன வாங்கியிருக்கீங்க வித்யாக்கா...” என்றாள் வினு.

“தமயந்தியோட ‘நிழலிரவு’, லதாவோட ‘கழிவறை இருக்கை’, லஷ்மி பால கிருஷ்ணனோட ‘ஆனந்தவல்லி’, நற்றிணை பதிப்பகத்துல அசோகமித்ரனோட நாலு புக்ஸ் வாங்குனேன். ஏதாவது சாப்பிட்டுட்டு அடுத்த ரவுண்டு போகலாம். நீ என்ன வாங்கினே வினு?”

“இந்தத் தடவை ஹிஸ்டரியில இறங் கிட்டேன். ஆ.இரா.வேங்கடாசலபதியோட ‘வ.உ.சி.யும் பாரதியும்’, மருதனோட ‘அசோகர்’, வில்லியம் டிக்பியோட ‘1877 தாது வருடப் பஞ்சம்’, ‘அம்பேத்கரின் கடிதங்கள்’ வாங்கி யிருக்கேன் வித்யாக்கா.”

“என்ன சுதேசியா மாறிட்டே... ரஷ்யா, யூரோப், அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு படிச் சிட்டிருப்பே!” என்ற விமல், “எனக்குப் பெரிய அளவுல ஆர்வமெல்லாம் இல்ல... ஸர்மிளா ஸெய்யித்தோட `உம்மத்’ வாங்குனேன். வேற ஏதாவது தோணுச்சுனா வாங்கணும்” என்றாள்.

குழிப்பணியாரமும் ஃபில்டர் காபியும் வாங்கிக்கொண்டு, மூவரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள்.

‘`இந்தக் கொடுமையைக் கேட்டீங்களா வித்யாக்கா... ஒரு பொண்ணு நைட் லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல தனியா டிராவல் பண்ணிட்டு இருந்திருக்காங்க. அங்கே ஒருத்தன் அவங்க கண்முன்னாலேயே சுய இன்பம் பண்ணிட்டிருந் திருக்கான். அந்தப் பொண்ணு திட்டியும் கேட்கல. அவங்க வீடியோ எடுத்தவுடனே அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி ஓடிட்டான். அவங்க கம்ப்ளைன்ட் பண்ணி, அவனை அரெஸ்ட் பண்ண வெச்சிட்டாங்க. ரயில்ல போற பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக் கறதுக்காக ரயில்வே நிர்வாகம் பல விஷயங் களைச் செஞ்சிட்டு வருது. அதுல ஒண்ணு கட்டணமில்லாத தொலைபேசி எண் 139. பயணத்துல ஏதாவது பிரச்னைன்னா உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணலாம். மெசேஜ் அனுப்பலாம். உடனடியா உதவி கிடைக்கும்.”

“ஓ... ரொம்ப நல்ல விஷயம் விமல். நம்பரை மெமரில வச்சுக்கறேன்” என்றார் வித்யா.

‘`ஆனா, ‘இந்த நம்பரைப் பயன்படுத்த முடியல, பயன்படுத்தினாலும் யூஸ் இல்ல’னு என் ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. போன வாரம் மதுரைக்குப் போயிருக்காங்க. வேற வேற கோச்சுல இருந்த பசங்க எல்லாம் இவங்க கோச்சுல கூடி, ராத்திரி 12 மணி வரைக்கும் கும்மாளம் போட்டு கலாட்டா பண்ணியிருக்காங்க. போலீஸோ, டி.டி.ஆரோ இல்லாத சூழல்ல இந்த 139-க்கு தொடர்பு கொண்டிருக்காங்க. ஆனா, எந்தப் பலனும் இல்லையாம். இது மாதிரியான பிரச்னைகளை சரிசெஞ்சு, இதை முறையா செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தா நல்லதுதான்’’ என்றாள் வினு.

வினு விமல் வித்யா: கருவைச் சுமப்பதும் கலைப்பதும் யாருடைய உரிமை?

``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல பெண்கள் அதிகமா ஜெயிச்சது சந்தோஷ மாயிருக்கு. அம்பது பர்சென்ட் இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியிருக்காங்க... அதான் அதிக அளவுல பெண்களால வர முடிஞ்சிருக்கு. வேலூர் 39-வது வார்டுல கங்கா நாயக்ங்கிற திருநங்கை ஜெயிச்சு வந்தது முக்கியமானது. இருபது வருஷமா அரசியல்ல இருக்காங்களாம். `இந்த வெற்றி சக திருநங்கை தோழிகள் அரசியலுக்கு வர்றதுக்கும் மக்களோடு மக்களா இணைஞ்சு செயல்படுறதுக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்’னு அழகா சொல்லிருக்காங்க”- சந்தோஷமாகச் சொன் னார் வித்யா.

“ஆமாம்... இந்த ஹிஜாப் பிரச்னை ஓஞ்சுருச்சா?” என்றாள் வினு.

“இல்ல வினு. உடுப்பி பகுதியில ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்துல கலந்து கிட்ட ஒரு பொண்ணோட அண்ணனை இப்ப தாக்கியிருக்காங்க. அவர் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கார். அவங்க அப்பா காவல்துறையில புகார் கொடுத்துட்டு, மீடியா கிட்ட பேசினார். ஹிஜாபை எதிர்க்கிறவங்க ஏன் காவித்துண்டைப் போட்டுட்டு வர் றாங்கன்னு கேட்டேன். அதான் என்னோட ஹோட்டலுக்குக் கூட்டமா வந்து என் மகனை அடிச்சிருக்காங்கன்னு சொல்லி யிருக்கார்.”

“கொடுமை விமல்.... ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால வாழ்ந்த பேரரசர் அசோகர் ரொம்ப முற்போக்கானவரா இருந்திருக்கார். எல்லா மதங்களையும் ஒரே மாதிரி மதிக்கணும். என் மதம்தான் உயர்ந்ததுன்னு சொல்லும்போது இன்னொரு மதம் தாழ்ந்ததுன்ற கருத்து வருது. அது கூடாது. எதுவும் உயர்ந்ததும் இல்ல, எதுவும் தாழ்ந்ததும் இல்ல. மத நம்பிக்கை உள்ளவங் களைப் போல மத நம்பிக்கை இல்லாதவங் களையும் ஒரே மாதிரிதான் மதிக்கணும்னு சொல்லியிருக்கார். சொன்ன மாதிரி தானும் நடந்திருக்கார். அவர் காலத்துல இந்தச் சிந்தனை எவ்வளவு உயர்ந்ததுன்னு யோசிக்கும்போது பிரமிப்பா இருக்கு. ரெண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்னால நாம அவரைவிட இன்னும் முற்போக்கா யோசிக்கணும் இல்லையா? ஆனா, இப்ப உள்ள பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகள், பல மதங்களைச் சேர்ந்த மதவாதிகள் எவ்வளவு பிற்போக்கா இருக்காங்கன்னு நினைக்கும்போது வேதனையா இருக்கு” - சீரியஸாக பேசினாள் வினு.

``கரெக்ட் வினு... கொலம்பியா நாட்டுப் பெண்களோட போராட்டத்துக்கு ஹிஸ் டாரிகல் விக்டரி கிடைச்சிருக்கு தெரியுமா?” என்ற வித்யா தொடர்ந்தார்...

“இருபது வருஷமா பெண்கள் கருக்கலைப்பு தடையை நீக்கணும்னு போராடிட்டு வர்றாங்க. லத்தீன் அமெரிக்க நாடுகள்ல கத்தோலிக்க மதம் வலுவா இருக்கு. அது கருக்கலைப்பைக் குற்றமா நினைக்குது. அதனால சட்டத்துக்குப் புறம்பா பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கறாங்க. இதுல அவங்களோட ஆரோக்கியம் பாதிக்கப்படுது. உயிரும் போகுது. கொலம்பியாவுல வருஷத் துக்கு 4 லட்சம் கருக்கலைப்புகள் நடக்குது. அதுல 10 சதவிகிதம்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பா இருக்கு. சட்டத்துக்குப் புறம்பா கருக்கலைப்பு செய்யறவங்க மாட்டிக் கிட்டா 16 மாசத்துலயிருந்து 54 மாசம் வரை ஜெயில்ல இருக்கணும். முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி ஜெயில்ல இருக் காங்க. பெரும்பாலான நாடுகள்ல பெண் களோட ஆரோக்கியம், கருவுல குறைபாடு, பாலியல் பலாத்காரம்னு மூணு காரணங் களுக்காகக் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப் பட்டிருக்கு. இதே காரணங்களுக்காக கொலம்பிய பெண்களுக்கும் கருக்கலைப்புக்கு அனுமதி கிடைச்சது. தொடர்ச்சியான போராட்டத்தால இப்போ 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம்கிற சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கு. இந்த வெற்றியைக் கொலம்பிய பெண்கள் கொண்டாடித் தீர்த்துட்டாங்க. கருக்கலைப்புக் கான தடையை முழுசா விலக் கணும்கிறதுலயும் உறுதியா இருக்காங்க...” விளக்கமாகச் சொன்னார் வித்யா.

“நல்ல விஷயம். கருவைச் சுமக்கறதும் கலைக்கிறதும் பெண்களோட உரிமை சார்ந்த விஷயம். இதுல அரசாங்கம் தலையிடக் கூடாது” என்றாள் விமல்.

“ஏதாவது மூவி பார்த்தீங்களாப்பா?”

“நான் ஹாட்ஸ்டார்ல `ஹியூமன்’ வெப் சீரிஸ் பார்த்தேன் வித்யாக்கா. கொரோனா காலகட்டத்துல மிகப்பெரிய ஒரு தனியார் ஹாஸ்பிட்டல், ஏழைகள் மேல மருந்துகளைப் பரிசோதனை செய்யுது. அவங்களுக்கு இந்தப் பரிசோதனையைப் பத்திச் சொல்றதும் இல்ல. உயிரே போனாலும் நிவாரணமும் கொடுக்கற தில்ல. இன்னொரு பக்கம் ஹாஸ்பிட்டல் ஓனர் கெளரி நாத்தும் அவங்க கணவரும் பிசினஸுக்காக என்ன வேணும்னாலும் செய்றவங்களா இருக்காங்க. இவங்க ஹாஸ்பிட்டல்ல வேலைக்குச் சேரும் டாக்டர் சாய்ரா, இவங்களுக்கு எதிரா திரும்பறாங்க. மருத்துவப் பரிசோதனைக்கு ஏழைகளை எப்படிப் பயன்படுத்தறாங்கன்னு காட்டின விதத்துல இந்த சீரிஸை பாராட்டலாம். ஆனா, ஏழையா இருந்து இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிற கெளரி நாத், ஏன் ஏழைகள் மேல முரண்பாடான கருத்துகளோட இருக் காங்கங்கிறதைச் சரியா சொல்லல. அதனால முடிவு எனக்குத் திருப்தியா இல்ல” என்றாள் விமல்.

“சரி, வாங்க இன்னொரு ரவுண்டு சுத்திட்டுக் கிளம்பலாம். நேரமாச்சு” என்று எழுந்தார் வித்யா.

மூவரும் மீண்டும் புத்தகக் காட்சிக்குள் நுழைந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

விரும்பும் உடையை அணிகிற சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருந்தார்கள்.

நீங்கள் விரும்பும் உடையை அணிகிற சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா... இல்லையெனில் அந்தச் சுதந்திரம் யாரால் மறுக்கப்படுகிறது?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் கடிதங்கள்...

* 60-களில் நடந்த நிகழ்வு இன்று நினைக்கும்போதும் மனம் வலிக்க வைக்கிறது. நடுத்தர வசதியுள்ள குடும்பங்கள் ஒன்றாக வசித்த காலனியில் என் உறவுப் பெண் மணம் புரிந்துகொண்டு போனார். அவர் பிரா அணிந்திருந்தார். அப்போதெல்லாம் பிரா அணிவது எளிதல்ல, வாங்குவதே கஷ்டமான விஷயம். பிரா என்பது மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருந்தது. அந்தப் பெண் பிரா அணிந்ததால் ‘எதற்கும் துணிந்தவள்’ என அப்பகுதி மக்கள் அவரை பார்த்தார்கள். கிண்டலும் நக்கலும் அவரது கூட்டுக் குடும்பத்தில் தர்ம சங்கடத்தையும், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு எரிச்சல், கோபத்தையும் ஏற்படுத்தியது. கணவரும், மாமியாரும் அவரை, பிரா அணிய வேண்டாம்... வீட்டில் மற்றவர்களைப் போல வீட்டில் தைத்த முண்டா பாடி போட்டுக்கொள்ள வற்புறுத்தினர். அப்பெண் மறுத்துவிட்டார். முடிவில் அவரின் பெற்றோரை வரவழைத்து, பெண்ணை வளர்த்த லட்சணத்தை சொல்லிக்காட்டி, அவரை பிறந்தவீட்டிற்கு அனுப்பி விட்டனர். பெண்ணின் ஆடையில் சமூகத்தின் தலையீடு எந்த அளவு ஒருவரின் நிம்மதியை, மகிழ்ச் சியை, வாழ்க்கையைக் கெடுக்க முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம்.

- மல்லிகா குரு, சென்னை-33

* பிடித்த உடை அணியும் சுதந்திரம் எல்லாப் பெண் களுக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. சொந்தமாக கார் வைத்திருக்கும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கும் உடை களை, பேருந்தில் பயணிக்கும் என்னைப்போன்ற சாதாரணப் பெண்கள் தேர்ந்தெடுக்க இயலாது. பெற்றோரும் சமூகமும் பதின்ம வயதிலேயே இதுகுறித்து போதித்துவிடுவதால், உடை அணிவதில் இருக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான பெண்கள் அவர்களாகவே சுருக்கிக்கொள்கிறார்கள்.

- எஸ்.ரீனு, சென்னை-126

* பெண்களுக்குத் தாங்கள் விரும்பும் உடையை அணிகின்ற சுதந்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தையாய் இருக்கும்போது பெற்றவர்கள் விருப்பம், பள்ளி செல்லும்போது சீருடை. கல்லூரிக்கு செல்லும் போது கல்லூரி நிர்வாகம் சொல்லும் ஆடையில் கவனம். பணிக்குச் செல்வதாக இருந்தால் அந்த நிறுவனம் சொல்லும் உடை. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் விரும்பும் உடையை அணிகின்ற சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதற்கு காரணம் ஆண்களின் ஆணாதிக்கமும் நிர்வாகம் செய்பவர்களின் பழைமைவாத கருத்துகளும் சட்டதிட்டங்களும்தான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

- ப.நந்தினி, திருவண்ணாமலை

* என் உடையைத் தீர்மானிப்பது என் அம்மாதான்.. அவர் தேர்வுசெய்து கொடுப்பதைத்தான் நான் அணிய வேண்டும். நம் பாரம்பர்யம், கலாசாரம் என்று சொல்லி என்னை அடக்கி விடுவார். நான் ஒரு கல்லூரி மாணவி. விதவிதமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருபவர்களைப் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். என் ஒரே ஆசையான ஜீன்ஸ், டி ஷர்ட் அணியக்கூட வீட்டில் தடா தான். உடை அணிகிற சுதந்திரம் வரும் காலத்தை நோக்கிக் காத்திருக்கிறேன். அப்படி வரும் போது ஒருவேளை நான் அம்மாவைப் பின்பற்று பவளாக மாறிவிடுவேனோ...

- ஆர்.ஜான்ஸி, ஹைதராபாத்

வினு விமல் வித்யா: கருவைச் சுமப்பதும் கலைப்பதும் யாருடைய உரிமை?

* விரும்பிய உடைகளை அணியும் சுதந்திரம் சிறுவயதுப் பெண்களுக்கு மட்டுமன்றி வயதானவர்களுக்கும் மறுக்கப் படுகிறது. 87 வயதாகும் எனக்கு புடவை அணிவதைவிட நைட்டி அணிவது வசதியாக இருக்கிறது. ஆனால், `கிழவிக்கு இளமை திரும்புதுபார்' என்ற மற்றவர்களின் கமென்ட்டுக்கு பயந்து வெளியில் செல்லும்போதோ அல்லது உறவினர்கள் என் வீட்டுக்கு வரும்போதோ பிடித்தோ, பிடிக்காமலோ நான் சிரமப்பட்டு ஒன்பது கஜம் புடவை அணிகிறேன்.

ஆர்.பார்வதி, சென்னை-53

* நான் எப்போதும் என் ஆடைகளை என் விருப்பத்துக் கேற்ப தைத்துக்கொள்வேன் அல்லது வாங்கிக் கொள்வேன். நான் 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் உடை ஹிஜாப். இதில் என் மதக் கலாச்சாரத்துடன் அழகும் கூடியிருக்கிறது. ஆள்பாதி ஆடைபாதி என்பதற் கேற்ப அசத்தலான இந்த உடையை யாரும் எதிர்ப்ப தில்லை. ஆனால், சில அரசியல் காரணங்களால் இதற்கு எதிர்ப்பு வந்தால் நிச்சயம் நம் தமிழக அரசும் கோர்ட்டும் நமக்கு பாதுகாப்பு தரும் என்பது நிச்சயம். தர்மமே வெல்லும்.

- எஸ்.இர்பானா பேகம், சென்னை-11

* விரும்பும் உடையை அணிகிற சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல பொதுவாகவே பெண்களுக்கு இருப்பதில்லை. திருமணம் வரை சுடிதார்... பிறகு புடவை இணைந்து கொள்ளும். பல ஆண்டுகளாகவே பல்வேறு பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் மிக முக்கிய காரணம் என ஆண்களாலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பில் இருப்பவர்களாலும் குற்றம் சாட்டப் படுகிறது. எனவே பெற்றோர், கணவன், மாமியார் போன்றோரால் மட்டுமே பெண்கள் அணிய வேண்டிய உடைகள், அவற்றின் நிறம், வடிவம் போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.

- எ.சுகுணா, சேலம்

* எனக்கு வயது 75. இதுவரை என் உடையை அணிவதில் யாரும் மறுப்பு கூறுவதில்லை. இத்தனை வருடங்களாக புடவைதான் அணிகிறேன். இன்றைய இளைய தலைமுறைகளான என் மருமகளும் பேத்தியும் சுடிதார், சல்வார் கமீஸ் அணிவதிலும் நாங்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. காலத்துக்கேற்ப நாம் அனுசரித்துச் செல்வதுதான் சரி என நம்புகிறேன்.

- ரேவதி சம்பத்குமார், ஈரோடு

வினுவின் வித்தியாசமான தகவல்!

இரண்டாம் உலகப் போரில் அன்றைய ரஷ்யா, எட்டு லட்சத்துக்கும் அதிக பெண்களை ஆயுதம் ஏந்திப் பங்கெடுக்க வைத்தது.

இந்த இதழ் கேள்வி

உங்களுக்கே உங்களுக்கான நேரமான `Me Time’ உங்களுக்கு வாய்க்கிறதா? ஆம் எனில், அந்த நேரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்து கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 8.3.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism