தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: எல்லாவற்றையும்விட வாழ்க்கை முக்கியமானது!

மீராபாய், மோமிஜி நிஷியா, ஃப்ளோரா
பிரீமியம் ஸ்டோரி
News
மீராபாய், மோமிஜி நிஷியா, ஃப்ளோரா

செம டேஸ்ட்! ஒலிம்பிக் புரோகிராம்லாம் பார்க்கறீங்களா? இந்த கொரோனாவால போன வருஷம் நடக்க வேண்டிய ஒலிம்பிக், இந்த வருஷம்தான் நடந்திட்டிருக்கு

ஏழு மணி ஆகியும் வெயில் எட்டிப் பார்க்க வில்லை. ரம்மியமான காலை நேரம். வித்யா வீட்டின் மொட்டைமாடியில் சந்தித்தார்கள் தோழிகள்.

“மழை வரவா, வேணாமான்னு மிரட்டிட்டிருக்கு… சூடா சூப் சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும்” என்று வினு சொல்லவும், சூடான முருங்கைக்கீரை சூப்புடன் மேலே ஏறிவந்தார் வித்யா.

“ச்சோ ஸ்வீட் வித்யாக்கா. இவ்வளவு சீக்கிரம் சூப் செஞ்சு எடுத்துட்டு வரணுமா? உங்களுக்கு ஏன் சிரமம்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, எப்படியும் நீங்க கிளம்பறதுக்குள்ளே உனக்குப் பசி எடுத்துடும்” என்று சொல்லிக்கொண்டே ஆளுக்கு ஒரு கப் முருங்கைக்கீரை சூப் கொடுத்தார் வித்யா.

“செம டேஸ்ட்! ஒலிம்பிக் புரோகிராம்லாம் பார்க்கறீங்களா? இந்த கொரோனாவால போன வருஷம் நடக்க வேண்டிய ஒலிம்பிக், இந்த வருஷம்தான் நடந்திட்டிருக்கு. ஏகப்பட்ட பிரச்னைகள், சாதனைகள்னு போயிட்டிருக்கு. பெண்களுக்கான ஸ்கேட் போர்டு விளை யாட்டு இந்த வருஷம்தான் ஒலிம்பிக்ல அனுமதிக்கப்பட்டிருக்கு. முதல் ஸ்கேட் போர்டு ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த 14 வயசு மோமிஜி நிஷியா தங்கப் பதக்கம் வாங்கிட்டாங்க. வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வாங்கினவங்களும் மோமிஜி மாதிரி யங் கேர்ள்ஸ்தான்!”

வினு விமல் வித்யா: எல்லாவற்றையும்விட வாழ்க்கை முக்கியமானது!

“நானும் பார்த்தேன், என் மக மாதிரி இருந்த மோமிஜிக்கு ஒரு முத்தம் கொடுக்கணும்போல இருந்துச்சு. 96 வருஷங்கள்ல பிலிப்பைன்ஸ் நாடு முதல் தடவையா ஒலிம்பிக்ல தங்கப் பதக்கம் வாங்கியிருக்கு. இதுக்கு காரணம், 30 வயசான ஹிடிலின் டயாஸ். பளு தூக்குற போட்டியில தங்கத்தைத் தட்டிட்டுப் போயிட்டாங்க.”

“சூப்பர்... பிரிட்டனோட முடியாட்சிக்குக் கீழே இருக்கும் சின்ன நாடு பெர்முடா. இங்கே 63,000 மக்கள்தான் வாழுறாங்க. இந்த நாடு ஒலிம்பிக் போட்டிக்கு ரெண்டு வீரர்களை அனுப்புச்சு. அதுல டிரையத்லான் போட்டியில் ஃப்ளோரா டஃபிங்கிற பெண், தங்கப் பதக்கம் வாங்கியிருக்காங்க. பெர்முடாவுக்கு முதல் பதக்கம், அதுவும் தங்கம் வாங்கிக் கொடுத்த பெண் என்கிற சாதனையை வரலாற்றுல படைச்சிட்டாங்க. 33 வயசான ஃப்ளோரா நாலாவது முறையா ஒலிம்பிக்ல கலந்து கிட்டாங்க. பெர்முடாவே இப்போ இவங்களைக் கொண்டாடிட்டு இருக்கு.”

“கலக்குறாங்க பெண்கள்... ஜிம்னாஸ் டிக்ஸ்ல கலந்துக்குற எல்லாப் போட்டி கள்லயும் தங்கம் வாங்குவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா வின் சிமோன் பைல்ஸ், ஒலிம்பிக்கை விட்டே வெளியேறினதுல உலகமே அதிர்ச்சியடைஞ்சு கிடக்கு. ஆனா, காரணம் தெரிஞ்ச பிறகு, மிஷெல் ஒபாமா உட்பட பல பிரபலங்கள் சிமோனுக்கு ஆதரவு தெரிவிச் சிருக்காங்க. `ஜிம்னாஸ்டிக்ஸை விட வாழ்க்கை முக்கியமானது. மனநலத்துக்காகவே இந்த முடிவை எடுத்திருக்கேன்’னு கம்பீரமா சொல்லியிருக்காங்க சிமோன். ஜிம்னாஸ்டிக் வீரர்கள் எப்பவுமே பயிற்சியில இருந்துட்டே இருக்கணும். கொரோனாவால போட்டி தள்ளிப் போயிட்டேயிருந்தது. தன்னோட கடைசி ஒலிம்பிக் இப்படி ஆகுதேன்னு சிமோன் ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளானாங்க. இப்போ போட்டியிலிருந்து வெளியேறிட் டாங்க. அவங்க சொல்ற மாதிரி வாழ்க்கை ரொம்ப முக்கியம். அவங்க சீக்கிரம் முழுசா குணமாகணும்” என்றாள் விமல்.

“நவோமி ஒசாகாவும் வெளி யேறிட்டாங்க. அமெரிக்காவின் ரெண்டு நம்பிக்கை நட்சத்திரங் களுக்கும் இப்படி ஆயிருச்சு. ஜிம்னாஸ்டிக்ஸ்ல பெண்கள் அணியும் உடை இந்த முறை சர்ச்சையாகிருச்சு. ஆண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ்ல அவங்க வசதிப்படி உடை அணியலாம். ஆனா, பெண்கள் பிகினி உடைதான் அணியணும்னு ரூல். இது வியாபார நிறுவனங்கள் செய்யுற வேலை. `இந்த பிகினி உடை எங்களைக் காட்சிப் பொருளா காட்டுது. நாங்க எங்க திறமைகளைக் காட்டதான் போட்டிகள்ல பங்கேற்கிறோம். எங்க உடலைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உடை என்பது அணிகிற எங்களுக்கு வசதியாவும் திருப்தியாவும் இருக்கணும். பெண் களுக்குக் கொடுக்கப்படும் பிகினி கட் உடைகள், பாலியல் பிரச்னை களைக் கொடுக்கக் கூடியவையா இருக்கு. அதனால நாங்க முழுசா மூடும் உடைகளைத்தான் அணி வோம்’னு ஜெர்மன் வீராங் கனைகள், தகுதி போட்டிகளி லிருந்தே அந்த டிரஸ்களைத்தான் போட்டுக்கிட்டாங்க” என்றாள் வினு. “ஆமா, அவங்க சொல்றது சரிதான். டிரஸ்ஸுங்கறது கம்ஃபர்ட்டபிளா இருக்கணும். ஜெர்மனி வீராங்கனைகள் ஒலிம்பிக் கமிட்டியை எதிர்த்து தைரியமா முடிவெடுத்திருக்காங்க. மதத்துக்காகவோ, கலாசாரத்துக் காகவோ நாங்க முழு உடையை அணியல. எங்களைப் பாலியல் நோக்கில் பார்க்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த முடிவை எடுத்தோம்னு சொல்லிருக்காங்க” என்றார் வித்யா.

“இந்தியாவோட பதக்கப் பட்டியலை ஆரம்பிச்சு வச்ச மீராபாய் சோனுவுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லிடுவோம். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய், 49 கிலோ பிரிவுல பளு தூக்குதல்ல வெள்ளிப் பதக்கத்தை வாங்கிக் கொடுத் திருக்காங்க. 26 வயசான மீராபாய் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. 12 வயசுல அதிக அளவு விறகுக் கட்டைகளைச் சுமந்துகிட்டு வருவாங்களாம். அப்பதான் இவங்களோட திறமையைக் கண்டுபிடிச்சாங்க. இன்னிக்கு இந்தியாவைப் பதக்கப் பட்டியல்ல இடம்பிடிக்க வச்சிட்டாங்க மீராபாய். தீபிகா குமாரி, மேரி கோம் பதக்கம் வாங்குவாங்கன்னு நினைச்சோம். கிடைக்கல. இன்னும் விளையாட்டு இருக்கு. நம்பிக்கையோட காத்திருப்போம்” என்றாள் விமல்.

“வித்யாக்கா, பசிக்குது” என்றாள் வினு.

``இரு நவதானிய சுண்டல் செஞ்சிருக்கேன். கொண்டு வரேன்... சாப்பிடு. வீட்டுக்குப் போற வரைக்கும் தாங்கும்” என்றார் வித்யா. ஆளுக்கு ஒரு கப்பில் சுண்டலை வாங்கிக் கொண்டு, அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள்.

“பொதுவா ரொம்ப சின்ன வயசிலேயே ஜிம்னாஸ்டிக் கத்துக்க ஆரம்பிச்சிருவாங்க. இருபதுகளின் ஆரம்பத்துல ஜிம்னாஸ்டிக்ஸ்லயிருந்து ரிட்டையர்டு ஆயிருவாங்க. அதுக்கு மேல விளையாடுறது கஷ்டம். ஆனா, 46 வயசில ஆக்சானா ச்சுசோவைட்டினா இந்த ஒலிம்பிக்ல ஜிம் னாஸ்டிக்ஸ் விளையாட்டுல கலந்துகிட்டாங்க. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. 92-ம் வருஷம் சோவியத் ஒன்றியத்துக் காக விளையாடினாங்க. அப்புறம் ஜெர்மனிக்காகவும் சொந்த நாடான உஸ்பெகிஸ்தானுக்காகவும் விளையாடி னாங்க. 2018-ம் வருஷம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில நாலாவது இடத்தைப் பிடிச்சாங்க. இந்த ஒலிம்பிக்தான் இவங்களோட கடைசிப் போட்டி. முதல் எட்டு இடங்களுக்குள்ள இவங்களால வர முடியல. ஆனாலும், அரங்கமே எழுந்து நின்னு இவங்களுக்கு மரியாதை செலுத்துச்சு. `இந்த அங்கீகாரம் என்னை நெகிழ வச்சிருச்சு. என்னோட 22 வயசு மகனைவிட, போட்டியாளர்கள் இளமையானவங்க. இதுவரை என்னை ஆதரிச்சவங்களுக்கு நன்றி’னு கண்ணீருடன் கிளம்பினாங்க ஆக்சானா!” ``கிரேட்! இத்தனை வருஷம் உடம்பைத் தகுதியா வச்சிக் கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்... இவங்கதான் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்ல அதிக வயசுல பங்கேற்ற போட்டியாளரா காலத்துக்கும் இருப்பாங்க” என்றாள் விமல்.

வாஃபா முஸ்தஃபா
வாஃபா முஸ்தஃபா

“கேரளால வரதட்சணை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல நடவடிக்கைகள் எடுத்துட்டு வர்றாங்க. அரசுப் பணியில உள்ள ஆண்கள், கல்யாணம் முடிஞ்ச கையோட, மனைவி, மாமனார், மாமியார்கிட்டயிருந்து `இவர் வரதட்சணை வாங்கவில்லை’னு உறுதிமொழியை வாங்கிட்டு வரணும்னு கேரள அரசு அறிவிச்சிருக்கு. ஆனா, இது நிரந்தர தீர்வு இல்ல… மனுஷங்களோட மனசு மாறினாதான் உண்டு.”

“ஆமா, வித்யாக்கா. பாகிஸ்தான்ல திரு நங்கைகளுக்காகத் திருநங்கைகளே ஒரு பார்லர் ஆரம்பிச்சிருக்காங்க. பாகிஸ்தான்லயும் திருநங்கைகளை மோசமாத்தான் நடத்துறாங்க. அவங்க பாலியல் தொழிலாளியாவும் பிச்சை எடுக்கிறவங்களாவும் இருக்காங்க. அதை மாத்தி, அவங்களையும் சக மனுஷங்களா நினைக்கணும்கிறதுக்காக இந்த பார்லரை ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ திருநங்கைகள் மட்டுமல்லாம பெண்களும் இந்த பார்லரைத் தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க. அதனால மாற்றம் சாத்தியம்கிற நம்பிக்கை வந்திருக்குனு சொல்றாங்க இதை நடத்துற பெபோ ஹைடர்” என்றாள் விமல்.

“சமூகம் மாறினா அதைவிட நல்ல விஷயம் என்ன இருக்கு சொல்லு? சிரியாவைச் சேர்ந்தவங்க வாஃபா முஸ்தஃபா. இவங்களோட அப்பாவை எட்டு வருஷங்களுக்கு முன்னால ஆர்மி ஆட்கள் பிடிச்சிட்டுப் போனாங்க. எந்தத் தடுப்பு முகாம்ல வச்சிருக்காங்கன்னு இதுவரைக்கும் தெரியல. `எங்கப்பா சுதந்திரத் துக்காகக் குரல் கொடுத்தார். அதுக்காகத்தான் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க. எங்க இருக்கார், எப்படி இருக்கார்னு தெரியாம எங்களால ஒரு நாள்கூட நிம்மதியா தூங்க முடியல, சாப்பிட முடியலைங்கிறார் வாஃபா முஸ்தபா. இவரும் பல போராட்டங்கள் செஞ்சு பார்த்துட்டார். ஒரு பலனும் இல்ல.”

“ரொம்ப கொடுமையான விஷயம் வினு. சரி, ரொம்ப நேரமாச்சு… கிளம்பலாமா?”

“காலையில இப்படி மீட் பண்ற சுகமே தனி. அடிக்கடி சந்திப்போம்” என்று கிளம்பினார்கள்.

அரட்டை அடிப்போம்...