Published:Updated:

வினு விமல் வித்யா - மாங்காய் அடித்த பெண் இன்று ஒலிம்பிக்கில்!

 மாயா ஏஞ்சலோ,  ஸ்கேட்டர் கேர்ள்,  ஷெர்னி
பிரீமியம் ஸ்டோரி
News
மாயா ஏஞ்சலோ, ஸ்கேட்டர் கேர்ள், ஷெர்னி

சஹானா

வினு வீட்டு மாமரத்தடியில் வித்யாவும் விமலும் அமர்ந்திருக்க, ஃபில்டர் காபி, சுண்டலுடன் வந்தாள் வினு.

“ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளே வந்திருக் கலாம்...”

“நாங்க ரெண்டு பேருமே ஆபீஸ் போயிட்டு வந்திருக்கோம். கொரோனா குறைஞ்சாலும் வெளியிலிருந்தே பேசிட்டுப் போறதுதான் நல்லது. சுண்டலும் காபியும் மணக்குது... அப்பாவோட கைமணமா?” என்று கேட்டாள் விமல்.

“ஆமாம், அம்மாவைவிட அப்பா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் மீல்ஸ் சாப்பிட வாங்க ரெண்டு பேரும். இனிமேலும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கொரோனா காலத்துல நடக்கப்போற மிகப் பெரிய விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்தான். இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி நிச்சயம் பதக்கம் வாங்குற வாய்ப்பு இருக்குறதா சொல் றாங்க!”

“ஆமாம், பாரிஸ்ல நடந்த உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில மூணு தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்காங்க தீபிகா குமாரி. இதுல இரட்டையர் போட்டியில கணவர் அடானு தாஸுடன் சேர்ந்து தங்கம் வாங்கியிருக்காங்க! அதான் ஒலிம்பிக்ல நிச்சயம் பதக்கம் வாங்குவாங்கனு தோணுது” என்றாள் விமல்.

“மாங்காய்களை அடிச்சுதான் இவங்க வில்வித்தைப் பழகியிருக்காங்க, ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. இன்னிக்கு நம்ம நாட்டோட நம்பிக்கை நட்சத்திரமா உயர்ந்திருக்காங்க. தீபிகாவை நினைச்சா பெருமையா இருக்கு!” என்றார் வித்யா.

வினு விமல் வித்யா - மாங்காய் அடித்த பெண் இன்று ஒலிம்பிக்கில்!

“ஆறுதலான இன்னொரு நியூஸ் சொல்றேன். போன வருஷம் டெல்லியில நடந்த சிஏஏ போராட்டத்துல தேவாங்கனா கலிதாவும் நடாஷா நர்வாலும் வன்முறையைத் தூண்டினதா சிறையில் அடைக்கப்பட்டாங்க. இவங்க ரெண்டு பேருமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள். ஃபிரெண்ட்ஸுக்கு இவங்க எழுதின லெட்டர்களை `கேரவன்' இதழ் வெளி யிட்டிருக்கு. ஒவ்வொரு லெட்டரும் அவ் வளவு நெகிழ்ச்சியா இருக்கு. எதிர்காலத்தை நினைச்சு பயத்தோட இருந்தாலும் ரெண்டு பேரும் சக பெண் கைதிகள்கிட்ட புத்தகம் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தியிருக்காங்க. பல விஷயங்களைப் பேசியிருக்காங்க. பெண் கைதிகள் தங்களோட மகள்களும் இவங்க ரெண்டு பேர் மாதிரி காலேஜ்ல படிக்கணும்னு விரும்பியிருக்காங்க. பெண் கைதிகள் படிக்கக் கேட்ட புத்தகங்கள், அவங்க குழந்தைகளுக் கான புத்தகங்கள் எல்லாம் நண்பர்கள் மூலமா வாங்கிக் கொடுத்திருக்காங்க. மார்ச் 8 உழைக் கும் பெண்கள் தினத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டாட வச்சிருக்காங்க. சோர்வடையுற போதெல்லாம் நம்பிக்கை தரும் பாடல்களைப் பாடியிருக்காங்க. பாடல்கள் மூலமா வன் முறையைத் தூண்டுனதாத்தான் வழக்கு. ஒரு வருஷத்துக்குப் பிறகு, பெயில் கிடைச்சு வெளியில் வந்திருக்காங்க” என்றாள் விமல்.

“இவங்களா வன்முறையைத் தூண்டுறவங்க? ரொம்ப அநியாயமா இருக்கு. பருல் கக்கர் பத்தி கேள்விப்பட்டீங்களா?”

“யாரு வித்யாக்கா?”

“அவங்க குஜராத் கவிஞர். ஃபேஸ்புக்ல கொஞ்சம் பிரபலம். போன மாசம் கங்கையில கொரோனாவால இறந்த உடல்கள் மிதக்குற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சாங்க. உடனே, வருத்தத்தோட ஒரு கவிதை எழுதினாங்க. `நகரம் பற்றி எரியும்போது ராஜா பிடில் வாசிச்சிட்டிருக்கார். எல்லோரும் வெளியே வந்து பலவீனமான ராஜாவைக் கேள்வி கேளுங்க'னு எழுதி யிருந்தாங்க. இதைப் பலரும் பாராட்ட, இன்னொரு பக்கம் பிரதமரை விமர்சிக்கிறாங்கனு எதிர்ப்பும் கிளம்பிருச்சு. ஒரே ராத்திரில பருல் ஃபேமஸ் ஆயிட்டாங்க. எதிர்ப்பு வலுக்க வலுக்க பல மொழிகள்லயும் இந்தக் கவிதை வெளிவந்துருச்சு. வெளிநாட்டிலிருந்தெல்லாம் ஒரே பாராட்டு. உள்ளூர்ல எதிர்ப்பு. எதுக்கும் பதில் சொல்லாத பருல், கவிதையையும் நீக்கல. இப்படியொரு கவிதை எழுத நேர்ந்த சூழலை யாரும் ஏன்னு கேட்கல. எழுதினதை மட்டும் ஏன்னு கேட்குறாங்க. சாதாரணமான பருலை அரசியல் கவிதை எழுத வச்ச சூழல்தான் இங்கே முக்கியம்” என்றார் வித்யா.

``தமிழ்நாட்டுல 38 கலெக் டர்கள் இருக்காங்க. இவங்கள்ல 11 பேர் பெண்கள். ஒரே நேரத்துல இத்தனை பெண் கலெக்டர்கள் இருக்குறது இதுதான் முதல் தடவை. இன்னும் இந்த எண்ணிக்கை பல மடங்கா பெருகட்டும்” என்றாள் வினு.

“கிரேட்... எல்லோருக்கும் வாழ்த்துகள்! அமெரிக்காவுல அடுத்த வருஷம் பெண் சாதனையாளர்கள் அஞ்சு பேரைக் கெளரவிக்கிறதுக்காக நாணயங்களை வெளியிடப் போறாங்க. விண்வெளிக்குப் போன முதல் அமெரிக்கப் பெண் சாலி ரைடு, கவிஞரும் எழுத்தாளருமான மாயா ஏஞ்சலோ, சீன அமெரிக்க நடிகை அன்னா மே வோங், பழங்குடி மக்களின் முதல் பெண் தலைவர் வில்மா மேன்கில்லர், நியூ மெக்ஸிகோ போராட்ட இயக்கத் தலைவர் அட்லினா ஓட்ரோ வாரென்… இவங்களோட நாணயங்கள் எல்லாம் வெளிவரப் போகுது!”

“சூப்பர் விமல்... எகிப்துல சபா சாக்குங்கிற குத்துச்சண்டை வீராங்கனை இருக்காங்க. இவங்க பத்துக்கு மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வாங்கினவங்க. மூணு வருஷமா குத்துச்சண்டை பயிற்சியாளராவும் இருக்காங்க. ஒரு பொண்ணுகிட்ட குத்துச்சண்டை பயிற்சி எடுக்க முடியுமானு ஆண்கள்கிட்ட தயக்கமும் அவநம்பிக்கையும் இருந்துச்சு. ஆனா, சபா கொடுக்குற பயிற்சியைப் பார்த்து நிறைய சிறுவர் களும் ஆண்களும் குத்துச்சண்டை கத்துக்க வர்றாங்க. ஆண்-பெண் பாலினப் பாகுபாட்டையெல்லாம் உடைச்சு எறிஞ்சுட்டாங்க சபா. இவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிறதுல பெருமையா இருக்குன்னு பலரும் சொல்றாங்க. 18-ம் நூற்றாண்டிலேயே பெண்கள் குத்துச்சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, 2012-ம் வருஷம்தான் ஒலிம்பிக்ல பெண்கள் குத்துச்சண்டைக்கு அனுமதி கிடைச்சிருக்கு!” என்றாள் வினு.

“ஓ… அப்படியா! கிரேட் சபா! ஏதாவது படம் பார்த்தீங்களா?” என்று கேட்டார் வித்யா.

“வித்யாக்கா, நான் `ஸ்கேட்டர் கேர்ள்' பார்த்தேன்.”

“நான் `ஷெர்னி' பார்த்தேன்.”

“அட! ரெண்டு பேருமே சொல்லுங்க. நானும் பார்க்கறேன்.”

“ராஜஸ்தான்ல ஏழ்மையும் சாதிப் பாகுபாடும் நிறைஞ்ச கிராமம். இங்க வறுமையான ஒரு குடும்பத்துல பிறந்தவ பிரெர்னா. வறுமை காரணமா, அவளால பள்ளிக்கூடத்துக்குத் தொடர்ந்து போக முடியல. பெண்ணை வேலைக்கு அனுப்பவும் அப்பாவுக்கு விருப்பமில்ல. அவளும் அவள் தம்பி வயசுப் பசங்களும் ஸ்கேட்டிங் மாதிரி கட்டையில் சக்கரத்தைக் கட்டி சுத்திக்கிட்டிருக்காங்க. அந்தக் கிராமத்துக்கு இங்கிலாந்திலிருந்து ஜெஸிகா வர்றாங்க. குழந்தைகளோட ஸ்கேட்டிங் ஆர்வத்தைப் பார்த்து, அவங்களுக்கு ஸ்கேட் போர்டு வாங்கிக் கொடுக்குறாங்க. ஸ்கேட்டிங்கால பல பிரச்னைகள் வருவதால, ஊர்ப் பெரிய வங்க காவல்துறையில புகார் கொடுத்துடறாங்க. குழந்தைகள் வருத்தப்படுறதைப் பார்த்து, ஜெஸிகாவும் அவங்க நண்பர்களும் ஸ்கேட்டிங் பார்க் கட்ட நினைக்கிறாங்க. பல தடங்கல்களைத் தாண்டி, கட்டி முடிக்கிறாங்க. குழந்தைகளுக்குப் பயிற்சியும் கொடுக்குறாங்க. அப்போ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மகனுக்குப் பிரெர்னா மேல ப்ரியம் வருது. சாதிப் பிரச்னை வந்துடுமோனு பயப் படற பிரெர்னாவோட அப்பா, அவளுக்குக் கல்யாணத் துக்கு ஏற்பாடு பண்றார். கல்யாணத்தன்னிக்கு இந்திய அளவுல ஸ்கேட் பார்க்குல போட்டிகள் நடக்குது. பிரெர்னா என்ன பண்றாங்கிறதுதான் க்ளைமாக்ஸ். மஞ்சரி மகிஞ்சய் என்கிற பெண் இயக்கியிருக்காங்க. இந்தப் படத்துல இருக்கிற சாதிப் பாகுபாடு அதிர்ச்சியா இருக்கு. தமிழ்நாட்டுல படிக்கிற குழந்தைகளுக்கு யூனிஃபார்ம், மதிய உணவு, புக்ஸ் எல்லாம் கொடுத்துடறாங்க. ஆனா, ராஜஸ்தான்ல வறுமை காரணமா பலர் படிக்க முடியாமலே போயிடுது.”

 சபா
சபா

‘`வினு, நீ சொல்லும்போதே படம் கண்ணுக்குள்ள ஓட ஆரம்பிச்சுடுச்சு. கூடவே, ‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மாதிரி அநியாயங்கள் தொடருமோ’ங்கிற கவலையும்தான். சரி, `ஷெர்னி' பத்தி சொல்லு விமல்.’’

“மத்தியப் பிரதேசத்திலிருக்குற வனப்பகுதியை ஒட்டின ஒரு கிராம். அந்த மக்கள்ல பலரும் விலங்குகள் தாக்கி சாகறாங்க. அப்படி கொல்றது ஒரு பெண் புலிதான்னு ஊரே சொல்லுது. ஆனா, வனத்துறை சார்ந்தவங்களோ... இறந்தவங்க தாக்கப்பட்ட விதத்தை வெச்சு சிறுத்தை, கரடி போன்ற விலங்குகளும்கூட காரணமா இருக்கலாம்னு சொல்றாங்க. இதுக்கு நடுவுல இந்த விஷயத்துல அரசியல் குறுக்கிடுது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் புலியைப் பிடிச்சு, வேற இடத்துக்கு அனுப்பத் திட்டமிடுறாங்க வனத்துறை அதிகாரியா வர்ற வித்யா பாலன். அவங்களோட முயற்சிகளுக்குக் குறுக்கே அரசியல்வாதிகள், வேட்டைக்காரங்க, உயரதிகாரிகள், கிராமத்து மக்கள்ல சிலர்னு இடையூறு செய்யறாங்க. அந்தப் பெண் புலியை சுட்டுக் கொன்னே தீரணும்னு கங்கணம் கட்டறாங்க. ரெண்டு குட்டி போட்ட பெண் புலியால, காட்டோட உள்பகுதிக்கு சுலபமா போக முடியல. காரணம், பல இடங்கள்ல காட்டை வெட்டி, சுரங்கம் அமைச்சிருக் கிறதுதான். வித்யா பாலன், அந்தப் புலியைக் காப்பாத் தினாங்களா... இல்லையாங்கறதுதான் க்ளைமாக்ஸ். அவசியம் பார்க்க வேண்டிய ரொம்ப யதார்த்தமான ஒரு படம்.”

“பார்த்துடறேன். வினு, நாங்க கிளம்பறோம். கவனமா இரு. பை” என்று வித்யா சொல்லவும் விமலும் எழுந்தாள்.

இருவரும் வண்டியில் கிளம்ப கை அசைத்துவிட்டு, வீட்டுக்குள் சென்றாள் வினு.

(அரட்டை அடிப்போம்!)