Published:Updated:

வினு விமல் வித்யா: பிரசவவலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்ற எம்.பி...

ரொமிலா தாப்பர், ஷர்பத் குலா , டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ரொமிலா தாப்பர், ஷர்பத் குலா , டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட்

- சஹானா

மழை என்பதால் வினு வீட்டில் சந்திக்க முடிவா னது. விமலையும் வித்யா வையும் சூடான சூப்புடன் வரவேற்றாள் வினு.

“இஞ்சியும் மிளகும் தூக்கலா, இந்த மழைக்கு இதமா முடக்கத்தான் சூப் அட்டகாசமா இருக்கு வினு!”

“நம்பிட்டோம் வித்யாக்கா!” என்று சிரித்தாள் வினு.

“உன்னோட லேப்டாப்ல இருக்கிற பொண் ணோட படத்தை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கு. ஆனா, யாருன்னு தெரியல” என்று வித்யா சொன்னவுடன் விமலும் வினுவும் திரும்பிப் பார்த்தார்கள்.

“இவங்கதான் ‘ஆஃப்கன் கேர்ள்’. உலகப் புகழ்பெற்ற அகதி” என்றாள் விமல்.

“ஏய், கொஞ்சம் டீடெய்லாதான் சொல்லேன்...”

“நீ சொல்லு விமல், நான் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்று கிச்சனுக்குச் சென்றாள் வினு.

“இந்தப் பொண்ணு பேரு ஷர்பத் குலா. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவங்க. எண்பதுகள்ல சோவியத் யூனியன் ஆப்கானிஸ் தானை ஆக்கிரமிச்சது. அப்போ 12 வயசா இருந்த ஷர்பத் குலா, அவங்க பேரன்ட்ஸ்கூட பாகிஸ்தான்ல அகதியா தஞ்சமடைஞ்சாங்க. நேஷனல் ஜியோகிராபிக் மேகசின் ஆப்கானிஸ் தான் சிறப்பிதழைக் கொண்டு வந்துச்சு. அதுல அட்டைப்படத்துல ஷர்பத் குலாவின் இந்தப் படம் வெளிவந்துச்சு. உலகம் முழுக்க பிரபலமா னாங்க. 35 வருஷமா ஆப்கானிஸ்தானைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் ஷர்பத் குலாவின் படமும் வலம் வந்துகிட்டிருக்கு. இன்னிக்கு அவங்களுக்கு வயசாயிருச்சு... ஆனாலும், அவங்க சிறுமியாவே இந்தப் படம் மூலம் அடையாளப்படுத்தப்படறாங்க. போட்டோ பிரபலமானாலும் சில வருஷங் கள்ல இவங்க எங்கே இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு தெரியாமப் போயிருச்சு. ஆப்கானிஸ்தான்ல அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிஞ்ச பிறகு, இவங்களைப் பாகிஸ்தான்ல தேடிக் கண்டுபிடிச்சாங்க. ஆப்கானிஸ்தான் அரசு ஷர்பத் குலாவை வரவேற்று, காபூல்ல தங்கறதுக்கு வீடும் உதவித் தொகையும் கொடுத்துட்டிருந்துச்சு. இப்ப தாலிபன் ஆட்சி வந்ததும் பலரும் ஷர்பத் குலாவை நினைச்சுக் கவலைப்பட்டாங்க. இத்தாலிய அரசு ஷர்பத் குலாவுக்குக் குடியுரிமை கொடுத்திருக்கு. தாலிபன் அரசும் சம்மதிச்சதால ஷர்பத் குலா இத்தாலியில குடியேறப் போறாங்க.”

“ஓ... ஐம்பது வருஷக் கதையை அழகா சொல்லிட்டே விமல்” என்றார் வித்யா.

“சாத்தூர்லருந்து என் ஃபிரெண்டு இந்தக் காராச்சேவு வாங்கிட்டு வந்தார். உங்களுக்காகத் தான் வச்சிருந்தேன்.”

“நம்ம மேல வினுவுக்கு எவ்வளவு பாசம்...” என்றபடியே, சாப்பிட ஆரம்பித்தாள் விமல்.

“வித்யாக்கா, எதிர்வீடு பூட்டியிருக்கே... அந்தப் பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருச்சா?”

“பெண் குழந்தை பிறந்திருக்கு. ஆறு மாசம் கழிச்சுதான் இங்கே வருவாங்க, தனியா பார்த்துக்கக் கஷ்டமா இருக்கும்.”

“டெலிவரின்னு சொன்னதும் எனக்கு நியூஸிலாந்து நாட்டுல எம்.பி-யா இருக்கற ஜூலி அன்னே ஜெண்டர் நினைவுக்கு வந்துட்டாங்க. அவங்களுக்கு அதிகாலையில பிரசவ வலி வந்திருச்சு. அந்த வலியோட சைக்கிளை ஓட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க. ஒரு மணிநேரத்துல பெண் குழந்தையைப் பெத்து எடுத்திருக்காங்க. இந்த நியூஸ் தீயா பரவிருச்சு. ‘நாங்க சைக்கிள்ல போகணும்னு எல்லாம் திட்டமிடல. ஹாஸ்பிட்டல் பக்கத்துலதான் இருக்கு. வலியும் பொறுத்துக்கற மாதிரி இருந்துச்சு. அதனால நானும் என் ஹஸ்பண்டும் சைக்கிள்ல கிளம்பினோம்’னு சொல்லிருக்காங்க ஜூலி.”

“அட, சூப்பர்! நியூஸிலாந்து பிரதமரும் தானே காரை ஓட்டிட்டுப் போய், கவர்ன் மென்ட் ஹாஸ்பிட்டல்லதான் குழந்தை பெத்துக்கிட்டாங்க. ஆறு வாரத்துல வேலைக் கும் வந்துட்டாங்க. நியூஸிலாந்து பெண்கள் கலக்கறாங்க!”

“நம்ம ஊர்லயும் பெண்கள், தனியாளா ஹாஸ்பிட்டலுக்கு வந்து குழந்தை பெத்துக் கறாங்க. பொன்னேரி கவர்ன்மென்ட் ஹாஸ் பிட்டல் ஹெட் டாக்டர் அனுரத்னா, தன் னோட அனுபவத்தை எழுதியிருந்தாங்க. டெலிவரிக்கு வந்த ஒரு பெண் ரத்தச்சோகை யால பாதிக்கப்பட்டிருந்தாங்களாம். செக்கப் புக்கு வந்தா, சத்து மாத்திரைகளெல்லாம் கொடுத்திருப்பேனேன்னு சொன்னாங்களாம் டாக்டர். அதுக்கு தன்னை அழைச்சிட்டு வர ஆள் இல்லைன்னு சொன்னாங்களாம் அந்தப் பெண். டெலிவரிக்கு மட்டுமில்ல, செக்கப்புக்கு வர்றதுக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவச வாகனங்களை அரசாங்கம் ஏற்பாடு பண்ணி யிருக்கு. 108, 102 எண்களைத் தொடர்பு கொண்டு, இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கிட்டா, ஆரோக்கியமா குழந்தை பெத்துக்க லாம்னு சொல்லிருக்காங்க.”

“ஓ... அப்படி ஒண்ணு இருக்கா? எனக்கே இப்பதான் தெரியுது வினு. ஆமாம்.... டாக்டர் அனுரத்னாவை தலைமைப் பதவியிலேருந்து நீக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே....”

“அதிகாரிக்கும் டாக்டருக்கும் இடையிலான ஒரு பிரச்னையில பதவியைப் பறிச்சாங்க. ஆனா, பொதுமக்களும் சோஷியல் மீடியாவும் கொதிச்சுப் போயிட்டாங்க. உடனே அமைச்சர் வந்து, விசாரணை செஞ்சு, கையோட மீண்டும் பதவியைக் கொடுத்துட்டார். டாக்டர் பணியோட, மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதிட்டு வர்றாங்க. பழங்குடி, ஏழை மக்களுக்காக வேலை செய்யறாங்க. மக்கள் மருத்துவர்னு நம்ம அவள் விகடன்கூட அவார்டு எல்லாம் கொடுத்திருக்கே!” என்ற வினு, “ரொமிலா தாப்பர் பத்தி நவம்பர் 30 அன்னிக்கு நிறைய பேர் எழுதிட்டே இருந் தாங்களே...” என்று கேட்டாள்.

“ஆமா, ரொமிலா தாப்பருக்கு 90 வயசு. அதான் எழுதியிருப்பாங்க. இந்தியாவில இருக்கும் மிக முக்கியமான வரலாற்றாசிரியர். எழுத்தாளர், ஆய்வாளர். அரசு நிறுவனங்கள் கொடுக்கும் எந்த விருதையும் பட்டத்தையும் அவங்க இதுவரை வாங்கினதில்ல. தவறான கொள்கையா இருந்தா, அரசாங்கத்தையும் துணிச்சலா எதிர்த்துட்டு வர்றாங்க. இந்த வயசுலயும் அவங்களோட தேடலோ எழுத்தோ படிப்போ... குறையல. ஜூம் மீட்டிங்லகூட முதுகு வலிக்க, உட்கார்ந்து பொறுமையா கேட்கறாங்க. பேசறாங்க. ரொமிலா எழுதின ‘அசோகா அண்ட் தி டிக்ளைன் ஆஃப் தி மௌரியாஸ்’ (Ashoka and the Decline of the Mauryas) மிக முக்கியமான வரலாற்றுப் புத்தகம். மேடம்க்கு பிலேட்டடு பர்த்டே விஷஸ் சொல்லிடுவோம்!” என்றார் வித்யா.

“அப்படியே டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட்டுக்கும் ஒரு வாழ்த்துச் சொல்லிடுங்க வித்யாக்கா. இவங்க மலையேற்றத்துல ரொம்பவும் பிரபலமானவங்க. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர். அர்ஜுனா விருது வாங்கியிருக்காங்க. இப்போ ‘இந்தியன் மவுன்டனீயரிங் ஃபவுண்டேஷ’னோட தலைவரா நியமிக்கப்பட்டிருக்காங்க. இந்த அமைப்போட முதல் பெண் தலைவர் ஹர்ஷ்வந்திதான். நாற்பது வருஷமா கல்வித் துறையிலயும் மலையேற்றத்துலயும் முக்கிய மான பங்களிப்பைச் செலுத்திட்டு வர்றாங்க!” என்றாள் வினு.

“சரி. நான் ஒரு ஹிந்தி ஹாரர் மூவி பார்த்தேன்... அது பத்தி சொல்லவா” என்றார் வித்யா.

“ஹாரர்னா விமல் அலறுவாளே...”

“மராத்தியில `லப்பாசப்பி’ன்ற பெயர்ல வந்த படம்தான் ஹிந்தியில ‘சோரி’ன்ற பெயர்ல வந்திருக்கு. சாக்‌ஷியும் ஹேமந்தும் நிதிப் பிரச்னையில மாட்டிக்கிறாங்க. எட்டு மாச கர்ப்பிணியா இருக்கிற சாக்‌ஷி மூணு நாள் எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்க விரும்பறாங்க. அவங்க டிரைவர் தன்னோட கிராமத்துக்கு அழைச்சிட்டுப் போறார். கிராமத்துல மொத்தமே அஞ்சு வீடுகள்தான். சாக்‌ஷி தங்கப் போற வீடு, கரும்பு வயலுக்குள்ள இருக்கு. ஹேமந்த், சாக்‌ஷியை டிரைவரின் மனைவி தேவிகிட்ட விட்டுட்டு, சிட்டிக்குப் போயிடுறார். அந்த வீட்டுல சாக்‌ஷிக்கு அமானுஷ்யமான விஷயங்கள் எல்லாம் ஆரம்பிக்குது. தேவியாலயும் சாக்‌ஷி மிரட்டப் படறாங்க. இதுக்கெல்லாம் பின்னணியில சுனைனிங்கற சூனியக்காரி இருக்கறதா சொல்லப்படுது.

வினு விமல் வித்யா: பிரசவவலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்ற எம்.பி...

கடைசியிலதான் இந்த அமானுஷ்யங் களுக்குப் பின்னாடி இந்தச் சமூகமே இருக்கற அதிர்ச்சி விஷயம் தெரியுது. என்னன்னா... சுனைனியோட கருவில இருந்தது பெண்குழந் தைங்கறதால, சிசுக்கொலை செய்யும்படி அவளோட மாமியாரே கட்டாயப்படுத்த றாங்க. சுனைனி எதிர்பாராவிதமா ஒரு விபத்தா தன் கணவனை கத்தியால கொல்ல நேரிடுது. இதனால அவ உயிரோட எரிக்கப் படறா. அப்போ நல்ல அறுவடை கிடைக்க ணும்னு அந்தக் கிராமம் செய்யற சடங்குல சுனைனியின் குழந்தை கிணற்றில வீசப்படுது. முழுக்க எரிஞ்ச நிலையில இருந்த சுனைனி தன் மகளைக் காப்பாத்த கிணத்துல குதிக்கிறா. தேவியோட மூன்று மகன்களும் சுனைனியையும் அந்தக் குழந்தையையும் காப்பாத்த கிணத்துல குதிக்கறாங்க. இதனாலதான் அவங்க எல்லோரும் பேயா மாறியிருக்காங்க. இந்த விஷயம் சாக்‌ஷிக்கு தெரிஞ்ச பிறகுதான் உலகத்துக்கு உண்மை தெரியுது.

ஒரு ஹாரர் மூவியில காமெடி இல்லாம பெண் சிசுக்கொலை, பெண்கள் மீதான வன் கொடுமைகள், ஒரு கிராமமே மூட நம்பிக்கை யோடு செய்யற கொடுமைகள்... எல்லாத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்காங்க. ஹாரர்னா அலர்றவங்ககூட இந்தப் படத்தை அவசியம் பார்க்கணும். லொகேஷன், கேமரா, மியூசிக், ஆக்டிங் எல்லாம் நல்லா இருக்கு...”

“சான்ஸ் கிடைச்சா பார்க்கறேன் வித்யாக்கா. ரொம்ப நேரமாச்சு. நாங்க கிளம்பறோம். அடுத்த மழைக்குள்ளே வீடு போய்ச் சேரணும்” என்று சொல்லிவிட்டு, ரெயின் கோட்டை மாட்டினாள் விமல்.

இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பினாள் வினு.

- அரட்டை அடிப்போம்...

*****

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

உங்கள் வீட்டில் எப்படி?


காய்கறிகள் உட்பட ஆரோக்கிய உணவைச் சாப்பிடும் குழந்தைகளா? சிப்ஸையும் ஃப்ரைடு சிக்கனையும் நொறுக்குத்தீனிகளையும் கொறித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளா?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 14.12.2021

சென்ற இதழ் கேள்வி...

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. இது நடந்தது 110 ஆண்டுகளுக்கு முன்பு. இதுபோன்ற மோசமான நிலை இப்போது மாறிவிட்டதா... பெண் என்ற காரணத்தால் உங்களுக்கான வாய்ப்பு எங்கேனும் மறுக்கப்பட்டிருக்கிறதா... சொல்லுங்களேன் என்றதற்கு வாசகிகளின் பதில்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

* 20 வருடங்களுக்கு முன்பு வேலைக்கான இன்டர் வியூவில் கலந்துகொண்டேன். அனைத்து ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண் பார்மசிஸ்ட்டாக என்னைத் தேர்ந்தெடுத்தனர். அத்தனை ஆண்களுக்கும் ஆச்சர்யம். எனக்குண்டான வேலையைத் திறம்பட செய்து அதிக வருவாயை ஈட்ட, எம்.டி-க்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதன் பிறகு என்னைப் பார்த்து வேலைக்காக நிறைய பெண் களை பணியில் அமர்த்தினர். காலம் மாறிவிட்டது. ஆணுக்கு சளைத்தவர்கள் இல்லை, பெண்கள் என்று புரிந்துகொண்டனர் அலுவலகத்தில்.

- அ.வள்ளி, விழுப்புரம்

* 40 வருடங்களுக்கு முன் சிண்டிகேட் பேங்கில் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நேர்முகத்தேர்வில் என்னிடம் அவர்கள் கேட்ட கடைசி கேள்வி, “ஒருவேளை, வேறு ஊரில் பணிபுரிபவரை மணந்து, அவர் வேலையை விடச் சொன்னால் திருமணத்துக்குப்பின் விட்டு விடுவீர்களா?’’

அவர்களின் கேள்விக்கு அந்த இளம் வயதில் பதில் தெரியாததால் எனக்கு வங்கிப்பணி அமைய வில்லை. ஆனால், சுதாமூர்த்திக்கு அக்கேள்விக்கான பதில் தெரிந்திருந்தது.

`சில நூறு ரூபாய் கூடுதல் சம்பளத்துக்காகப் பயிற்சிபெற்ற பல ஆண்கள் பணிமாறிச் செல்வ தில்லையா?’ என ஜே.ஆர்.டியை அவர் மடக்கியதால் டாடா டெல்கோவில் பணியில் அமர்த்தப்பட்டார்.

பெண்களுக்குத் தேவை, சுதாமூர்த்தியின் தெளிவும், தீர்க்கமும். இன்று க்ரெச், பேபி சிட்டர், வீட்டிலிருந்தே பணி போன்ற வசதிகள் பெருகிவிட்டன.இன்னும் இயற்கையைக் காரணம் காட்டி பெண்களின் திறமைகளை மறுதலிப்பதில் நியாயமில்லை.

- ஜனனி ராம், சென்னை-78

வினுவின் வித்தியாசமான தகவல்!

இந்தியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த ஆண்டு 1950. அமெரிக்காவில் 1920-ல் இந்த உரிமை பெரும் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது.